கர்ப்ப கால ரத்தசோகை அலெர்ட் ப்ளீஸ்!(மருத்துவம்)
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டம் கர்ப்பகாலம். சிறிய உடல்நலப் பிரச்சினைகள்கூட தாய்-கருவிலிருக்கும் குழந்தை என இருவருக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் லேசான ரத்தசோகை பொதுவானதுதான் என்றாலும், தீவிர ரத்தசோகை ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் 59% பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர்.
கர்ப்ப காலத்தில் ரத்தசோகைக்கு என்ன காரணம்?
இரும்புச்சத்து குறைபாடு ரத்தசோகை ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம். திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை எடுத்துச் சென்று வழங்குவதற்கு உடலில் போதுமான ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்கள் இல்லாதபோதே இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் என்ற புரதம் உள்ளது, இதுவே உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டுசெல்கிறது. உடலில் உள்ள இரும்புச்சத்திலிருந்தே ஹீமோகுளோபின் தயாரிக்கப்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்களிடையே இரும்புச்சத்து குறைபாடு சார்ந்த ரத்தசோகை மிகவும் பொதுவானது. கர்ப்ப காலத்தில் உடல் அதிக ரத்தத்தை உற்பத்திசெய்வதே இதற்குக் காரணம். இதன் காரணமாக புதிய ரத்த அணுக்களை உருவாக்குவதற்கான இரும்பின் தேவை அதிகரிக்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் குறைந்தபட்சம் 11gm/dl, இரண்டாவது மூன்று மாதங்களில் குறைந்தபட்சம் 10.5 gm/dl ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். 7gm/dlக்கும் குறைவான ஹீமோகுளோபின் இருக்கும் நிலையில் தீவிர ரத்தசோகை ஏற்படுகிறது.
தாய் மற்றும் கருவிலிருக்கும் குழந்தை என இருவருக்குமே கர்ப்ப காலத்தில் ஏற்படும் அபாயங்கள் – சிக்கல்களுக்கு தீவிர ரத்தசோகை காரணமாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் தீவிர இரும்புச்சத்து குறைபாடு பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குகிறது. குறைப்பிரசவம், குழந்தை வளர்ச்சி தாமதமடைதல், குழந்தை ரத்தசோகை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான ஆபத்தை இது அதிகரிக்கிறது. மேலும் மகப்பேறுக்கு முந்தைய மனச்சோர்வு, பிறப்பு எடை குறைதல், பிறக்கும் நேரத்தில் குழந்தைக்கு சுவாச பிரச்சினைகள் போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.
கர்ப்ப காலத்தில் ரத்தசோகையின் விளைவுகள்
கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு சார்ந்த ரத்தசோகை தாய் மற்றும் கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இது கருவிலிருக்கும் குழந்தையின் நோயுற்ற தன்மை மற்றும் கருவின் இறப்பு விகிதங்களுடனும் தொடர்புடையது. தாய்மார்கள் மூச்சுத் திணறல், மயக்கம், சோர்வு, படபடப்பு மற்றும் தூக்கப் பிரச்சினைகள் போன்றவற்றால் பாதிக்கப்படுவது பொதுவானது. கூடுதலாக, ரத்தப்போக்கு, முன்-எக்லாம்ப்சியா மற்றும் குழந்தை பிறந்த உடனேயே நோய்த்தொற்றுகளை பெறுவது போன்றவற்றுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தாய்மார்களிடையே நடத்தை சிக்கல்கள் – பிரசவத்திற்குப் பிந்தைய அறிவாற்றல் சார்ந்த குறைபாடு ஆகியவையும் ரத்தசோகையுடன் தொடர்புடைய பிரச்சினைகள் என்றே கூறப்படுகின்றன.
ஆரம்ப மூன்று மாதங்களில் இரும்புச்சத்து குறைபாடு கருவின் வளர்ச்சியை மிகவும் மோசமாக பாதிக்கிறது. தாய்க்கு இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் தாய்ப்பால் கொடுப்பதும்கூட பாதிக்கப்படும். ஏனெனில் குழந்தையின் ஊட்டச்சத்துக்கான ஒரே ஆதாரம் தாய்தான். குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு கிடைக்காததால், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அக்கறையான கவனிப்பு, போதுமான துணையூட்டப் பொருட்கள் தேவைப்படுகின்றன.
ரத்தசோகையை தடுக்கும் முறைகள்
இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஒருவரது உடலில் இரும்புச்சத்து ஆரோக்கியமாகப் பராமரிக்கப்படுகிறது. வழக்கமான பரிசோதனைகள், அத்துடன் உங்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி குழந்தை பிறப்புக்கு முன் வைட்டமின்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை உட்கொள்வதும் நன்மை பயக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மொத்த இரும்புச்சத்துத் தேவை குறைந்தபட்சம் 1000 மி.கி. சிட்ரஸ் பழங்கள் மற்றும் புதிய, பச்சை காய்கறிகள் போன்ற வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கிறது. அத்துடன் கர்ப்பிணிப் பெண்கள் வெறும் காலில் நடப்பதற்கு முயல வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு ரத்தசோகை ஏற்படுவதைத் தடுக்க இரண்டாவது மூன்று மாதங்களில் 500 மில்லி கிராம் ஃபோலிக் அமிலத்துடன் 100 மில்லி கிராம் இரும்புச்சத்து மாத்திரையை குறைந்தபட்சம் 100 நாட்கள் உட்கொள்ள வேண்டும். அல்பெண்டசோல் 400 மிகி ஒரு டோஸ் எடுப்பது ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது. ரத்தசோகையை எளிய ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள், டானிக் போன்ற இரும்புச்சத்துக்களை உட்கொள்வதன் மூலம் மிதமான ரத்தசோகைக்கு சிகிச்சையளிக்க முடியும். மருத்துவரின் ஆலோசனையின்படி தீவிர ரத்தசோகைக்கு நரம்புவழி (IV) இரும்புச்சத்து சிகிச்சையை அளிக்கலாம்.
தொகுப்பு : ஜாய் சங்கீதா
இரும்புச்சத்து குறைபாடு சார்ந்த ரத்தசோகைக்கு சிகிச்சை
வாய்வழி இரும்புச்சத்து – பெரஸ் ஃபியூமரேட், ஃபெரஸ் குளுகோனேட், ஃபெரஸ் சல்பேட் போன்ற போன்ற இரும்பு உப்புகள் வாய்வழி எடுத்துக்கொள்ளும் இரும்புத் துணைமருந்துகள்.
ஊசிவழி இரும்புச்சத்து – இரும்பு டெக்ஸ்ட்ரான், ஃபெரிக் குளுகோனேட், இரும்பு சுக்ரோஸ் ஆகியவை கர்ப்ப காலத்தில் ஊசிவழி செலுத்தப்படும் இரும்புச்சத்து மருந்துகள்.ரத்தம் ஏற்றுதல் – மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலைக்குச் செல்லும் ரத்தசோகை நோயாளிகளுக்கு அதிகம் பரிந்துரைக்கப்படுவது ரத்த சிவப்பணு (RBC) ரத்தம் ஏற்றும் சிகிச்சை.மறுசீரமைப்பு எரித்ரோபோடின் சிகிச்சை- நாள்பட்ட சிறுநீரக நோயினால் ரத்தசோகை ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை மனிதர்களுக்கான மறுசீரமைப்பு எரித்ரோபோடின் (RHuEPO) முற்றிலும் மாற்றியுள்ளது.