கற்றுக் கொண்டதை தொழிலாக மாற்றினால் சக்சஸ் நிச்சயம்! (மகளிர் பக்கம்)
குளிர்காலம் வந்துவிட்டால்… உடனே நம் அலமாரியில் இருக்கும் ஸ்வெட்டரை எடுத்து போட்டுக் கொள்வோம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் உல்லன் இழைகளை ஸ்வெட்டருக்கு மட்டுமில்லாமல் அதன் மூலம் எண்ணற்ற பொருட்களை உருவாக்கலாம் என்கிறார் சென்னையை சேர்ந்த தேவிகா வருண். இவர் உல்லன் இழைக் கொண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடைகள், கம்மல், குழந்தைகளுக்கான பொம்மைகள், அலங்கார பொருட்கள், மேட்கள் என பலவற்றை தன் கைவண்ணத்தில் பின்னி விற்பனை செய்து வருகிறார். மேலும் ‘ஷேட்ஸ் ஆப் கிரியேட்டிவிட்டி’ என்ற பெயரில் சமூக வலைத்தளம் மூலம் இதை எவ்வாறு பின்னலாம் என்பது குறித்து ஆன்லைன் முறையில் பயிற்சியும் அளித்து வருகிறார்.
‘‘நான் முழுக்க முழுக்க சென்னை பொண்ணு. பள்ளி படிக்கும் போது ஆர்ட்ஸ் கிளாசுன்னு இருக்கும். அதில் ஒரு பகுதி நீடில் கிளாஸ் எடுப்பாங்க. அதில் குரோஷேட் பின்னுவது குறித்து சொல்லிக் கொடுப்பாங்க. இது சும்மா ஓரிரு வருடம் தான் இருக்கும். அந்த சமயத்தில் ஆர்ட் கிளாசுக்காக நான் குரோஷே நீடில் வாங்கினேன். அதன் பிறகு அது குறித்து மறந்தேவிட்டேன். கல்லூரி முடித்து திருமணமாகி நான் கருவுற்ற நிலையில் வீட்டில் இருக்கும் போது, ஒரு நாள் அலமாரியை சுத்தம் செய்த போது தான் இந்த குரோஷே நீடில் மீண்டும் என் கண்ணில் பட்டது. பள்ளியில் படிக்கும் காலம் இருந்தே, எனக்கு குரோஷேவில் பின்னுவது ரொம்ப பிடிக்கும். அதனால் மறுபடியும் பின்னலாம்ன்னு முடிவு செய்தேன். எப்படி பின்னுவதுன்னு மறந்துவிட்டது. யுடியூபில் இது குறித்த பயிற்சி இருப்பதை தெரிந்து கொண்டு அதன் மூலம் கற்றுக் கொள்ள ஆரம்பிச்சேன்.
முதலில் பேசிக்தான் கற்றுக் கொண்டேன். நான் கற்றுக் கொள்ளும் போது, எல்லாமே ஆங்கிலம் அல்லது வேறு மொழியில் இருக்கும். தமிழில் இது குறித்த வீடியோ இல்லை. நான் அவங்க பேசறதை கேட்காமல், அவங்க எப்படி செய்றாங்கன்னு பார்த்து அதன் படி நானே பின்னுவேன்’’ என்றவர் இதனை ஒரு தொழிலாக ஆரம்பிக்க அவரின் மகள் தான் காரணமாம். ‘‘எனக்கு கைவினைப் பொருட்கள் செய்ய பிடிக்கும். அந்த விருப்பத்தில் தான் இதை கற்றுக் கொள்ள ஆரம்பிச்சேன்.
நான் பின்னுவதைப் பார்த்து என் மகள் அவளுடைய ெபாம்மைக்கு சின்னதா ஒரு பேக் வேணும்ன்னு கேட்டா. செய்து கொடுத்தேன். ரொம்பவே பிடிச்சு இருந்தது. அதன் பிறகு என்னுடைய வீட்டை அலங்கரிக்க தோரணம், டேபிள் மேட், என் கணவருக்கு லேப்டாப் பேக்ன்னு ஒவ்வொன்னா பின்னினேன். அதைப் பார்த்த என் ஃபிரண்ட்ஸ் அவங்களுக்கும் வேணும்ன்னு கேட்டாங்க. செய்து தந்தேன். அவங்க மூலமா சிலர் கேட்க, செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். சிலர் தனக்கும் சொல்லித் தரச்சொல்லி கேட்டாங்க.
அப்படித்தான் 2019ம் ஆண்டு ‘ஷேட்ஸ் ஆப் கிரியேட்டிவிட்டி’ யுடியூப் சேனல் ஆரம்பிச்சேன்’’ என்றவர் தனக்கு வந்த முதல் ஆர்டர் குறித்து விவரித்தார்.‘‘எப்போதுமே நான் வீட்டில் ஏதாவது ஒரு அலங்கார பொருள் செய்தா அதை முதலில் என்னுடைய வாட்ஸ்சப் ஸ்டேட்டஸ் அல்லது ஃபேஸ்புக்கிலே போடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். நான் முகநூலில் போட்ட பதிவைப் பார்த்து தான் எனக்கு முதல் முறையா பல்க் ஆர்டர் வந்தது. அவங்க ஐ.டி நிறுவனத்தில் எச்.ஆரா வேலை பார்த்து வந்தாங்க. அவங்க நிறுவன ஊழியர்களுக்கு ரிட்டர்ன் கிப்ட் கொடுக்க கீசெயின் செய்து தர முடியுமான்னு என்னை அணுகினாங்க. நானும் செய்து கொடுத்தேன்.
அவங்க கேட்ட நேரத்தில் செய்து கொடுத்ததால், அடுத்து கம்மல் ஆர்டர் கொடுத்தாங்க. அதன் பிறகு தொடர்ச்சியா ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆர்டர் கொடுப்பது மட்டுமில்லாமல் அவங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு என்னை அறிமுகம் செய்தாங்க. இது ஒரு பக்கம் இருக்க, சமூக வலைத்தளத்தில் என் பதிவைப் பார்த்தும் பலர் ஆர்டர் ெகாடுத்தாங்க. சிலர் சொல்லித் தரச்சொல்லி கேட்டாங்க. அப்படித்தான் இந்த சேனலை ஆரம்பிச்சேன். இதில் குரோஷேவிற்கு தேவையான நூல், எங்கு வாங்கணும், ஊசி எப்படி பிடிக்கணும், நூல் எப்படி சுற்றணும்ன்னு… அடிப்படை பயிற்சி முதல் ஒரு உடை எவ்வாறு பின்ன வேண்டும் என்பது வரை என்னுடைய சேனலில் பதிவு செய்திருக்கேன்.
இவை அனைத்தும் தமிழில் சொல்வதால், பலர் எளிதாக புரிகிறது என்றும், இதைப் பார்த்து அவர்கள் கற்றுக் கொண்டு விற்பனை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர். சிலர் வீடியோ பார்த்தாலும் நேரடியாக பயிற்சி வேண்டும்ன்னு கேட்டாங்க. அவங்களுக்கு ஆன்லைன் முறையில் பயிற்சி அளிக்கிறேன். இந்த கோவிட் காலம் முடிந்த பிறகு நேரடியாக பயிற்சி எடுக்கும் எண்ணம் இருக்கிறது’’ என்ற தேவிகா குழந்தை பிறப்பது குறித்த முறையினை குரோஷேயில் வடிவமைத்துள்ளார்.
‘‘என்னுடைய இன்ஸ்டா பக்கத்தை பார்த்த மருத்துவர் ஒருவர் என்னை அணுகினாங்க. அவங்க டாக்டர் மட்டுமில்லாமல் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராகவும் இருக்காங்க. அவங்க குழந்தை கர்ப்பப்பையில் இருப்பது மற்றும் அது பிறக்கும் முறை குறித்து இதில் செய்து தரச்சொல்லி கேட்டாங்க. நானும் அவங்க சொல்ல சொல்ல அதை வரைந்து அதற்கு ஏற்ப வடிவமைத்துக் கொடுத்தேன். அதன் பிறகு அவங்களே குழந்தை பிறந்த பிறகு பல பெண்களுக்கு எவ்வாறு பால் புகட்ட வேண்டும் என்று தெரியவில்லை என்றும் அதன் விளக்க முறையும் செய்து தரச்சொன்னாங்க. அதுவும் செய்து கொடுத்தேன்.
இப்ப அவங்க கல்லூரியில் என்னுடைய குரோஷே கொண்டு தான் விளக்க பாடம் சொல்லித்தராங்க. இவங்கள போல மற்றொருவர் என்னை அணுகினாங்க. அவங்க சமூக சேவை செய்றவங்க. குறிப்பாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு செயற்கை மார்பகம் செய்து தரச்சொல்லி கேட்டாங்க. இவர்களுக்கு மார்பகம் நீக்கப்படுவதால், பல பெண்கள் தங்களின் அடையாளம் நீக்கப்பட்டதாக எண்ணுகிறார்கள். வெளியே செல்லவும் தயங்குகிறார்கள். அவர்களுக்காகவே குரோஷேவில் மார்பகம் போல் செய்து, அதற்குள் காட்டன் துணியினை வைத்து தைத்து கொடுத்தேன்’’ என்றவர் குரோஷேவினை தற்போது பலர் விரும்பி கற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
‘‘இந்த கலை என் பாட்டி காலத்தில் இருந்தது. அதன்பிறகு இரண்டு தலைமுறையினர் இதை முற்றிலும் மறந்துட்டாங்க. இப்ப மறுபடியும், பலர் இதைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இதன் அடிப்படையே நான்கு விதமான தையல்கள் தான். அதைக் கொண்டு தான் பல டிசைன்களை உருவாக்க வேண்டும். சிங்கிள், ஹாஃப் டபில், டபில், டிரிபில்ன்னு பேசிக் தையல்களை கற்றுக்கொண்டால் அதன் மூலம் பல தையல்களை நம் விருப்பம் போல் உருவாக்கலாம்.
இவை எல்லாமே ஊசியில் நூலினை எத்தனை முறை சுற்றுகிறோம் என்பதைப் பொருத்து மாறுபடும். அதேபோல், தையலின் அடர்த்தியும் உடையின் வடிவமைப்புக்கு ஏற்ப மாறுபடும். அதாவது உடைக்கு மேல் ஓவர்கோட் போல் அணியும் உடைக்கு கொஞ்சம் தளர்வான தையல் போட வேண்டும். அதுவே ஸ்வெட்டர் அல்லது மற்ற உடைகளுக்கு கொஞ்சம் ெநருக்கமான தையல் போடணும். இப்ப நிறைய பேர் குழந்தை பிறந்த பிறகு போட்டோ ஷுட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் பெரும்பாலும் தீம் உடைகள் என்பதால், கடல் கன்னி, கடல் ஆமை, தேனி என அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் உடைகளை பின்னித் தருகிறேன்.
என்னைப் பொறுத்தவரை நிறைய பேருக்கு இதை சொல்லித் தரணும். கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வாழ்வாதாரத்தில் பின் தங்கியுள்ள பெண்களுக்கு இலவசமா பயிற்சி அளிக்கிறேன். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருமானம் கிடைக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கும். ஓசூரில் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சின்ன பெண் என் வீடியோவைப் பார்த்து கற்றுக் கொண்டு, வடிவமைத்து விற்பனையும் செய்து வருகிறாள்.
ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதைவிட அதை எவ்வாறு தொழிலாக மாற்றலாம்ன்னு தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்பட்டால் கண்டிப்பாக வீட்டில் இருந்தபடியே பெண்கள் மாதம் கணிசமான ஒரு வருமானம் பெற முடியும். இதற்கான முதலீடு குறைவு. மேலும் தனிப்பட்ட நேரம் என்று ஒதுக்க தேவையில்லை. வீட்டில் டி.வி பார்க்கும் போதோ அல்லது குழந்தைக்கு பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் போதுக்கூட இதை பின்னலாம்’’ என்கிறார் தேவிகா வருண்.