தடாகத்தில் ஜொலிக்கும் நீச்சல் தாரகை! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 24 Second

மதுமிதா ஸ்ரீராம்! வளர்ந்து வரும் இளம் நீச்சல் வீராங்கனைகளில் குறிப்பிடத்தகுந்தவர். 3 வயதில் நீச்சல் கற்க தொடங்கிய இவர், சிறுமியருக்கான பிரிவு-8 போட்டிகளில் பங்கேற்று, தேசிய அளவிலான கேல் இந்தியா போட்டிகள் வரையில் சாதனை புரிந்து வருகிறார். பிரபல கல்லூரியில் பி.காம். மார்க்கெட்டிங் இரண்டாமாண்டு படித்து வரும் இவருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் பெல்ப்ஸ், ரைய்ன் லாக்டே ஆகிய நீச்சல் வீரர்கள் தான் ரோல் மாடலாம். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பயிற்சி மையத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த இவரை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தோம். தடாகத்தில் ஜாலம் நிகழ்த்தி, பதக்கங்கள் வென்று வருவதை நம்முடன் பகிர்ந்து கொண்டார்…

‘‘என்னுடைய பெற்றோர் ராம்-வித்யா. எனக்கு ஒரு அக்கா மானசா ராம். அம்மா – அப்பா அக்கா வைத்தான் முதலில் நீச்சலில் சேர்த்து விட்டார்கள். அக்கா நீச்சல் பயிற்சி செய்வதைப் பார்த்து எனக்கும் அதில் ஆர்வம் வந்தது. மூணு வயதிலே இருந்து நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். வீரபத்ரன் என்பவரிடம் தான் பயிற்சி பெற்றேன். ஆரம்பத்துல சும்மாதான் பயிற்சி செய்து வந்தேன். என் கூட பிராக்டீஸ் செய்றவங்களைப் பார்த்து ஆர்வம் அதிகமாகி மும்முரமாக நானும் பயிற்சி செய்ய ஆரம்பிச்சேன்.

எட்டு வயசில் இருந்து (இரண்டாவது படிக்கும்போது) போட்டிகளில் பங்கேற்க தொடங்கினேன். அந்த சமயத்தில் முகுந்தன் என்பவர் தான் எனக்கு கோச்சாக இருந்தார். சிறு வயதில் போட்டிகளில் பங்கேற்பவர்களை குருப்-8 என அழைப்பார்கள். அதன் அடிப்படையில், நானும் சிறுமியருக்கான 25 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், பிரீஸ்டைல் மற்றும் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் ஆகிய பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டியில் முதன் முதலாகப் பங்கேற்றேன்.

ஆர்வத்தில் போட்டியில் கலந்து கொண்டாலும், சக போட்டியாளர்களைப் பார்த்து கொஞ்சம் பயந்து தான் போனேன். அதனாலேயே என்னவோ பிராக்டீஸ் செய்த அளவிற்கு என்னால் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. பயம் நம்மை எந்த விதத்திலும் முன்னேற விடாது என்பதை நான் புரிந்து கொண்டேன். அந்த பயத்தைப் போக்க மாநில, தேசிய அளவிலான போட்டிகள், கேல் இந்தியா போட்டிகள் என அனைத்திலும் பங்கு பெற ஆரம்பிச்சேன். அதுதான் நான் இந்தளவிற்கு வளரவும் காரணமாக அமைந்திருக்கிறதுன்னு சொல்லணும். மேலும் பெற்றோர், அக்கா, பயிற்சியாளர் ஆகியோர் தந்த ஊக்கமும் ஒரு முக்கிய காரணம்’’ என்றவர் இதற்காக அவர் எடுத்துக் கொண்ட பயிற்சி முறைகள் பற்றி விவரித்தார்.

‘‘வாரத்தில் 8 முதல் 9 சீசன் செய்வேன். கோச் அரவிந்த் நய்னார் அமெரிக்க முறையில் பயிற்சி தருகிறார். ஒரு சீசனுக்கு 4-லிருந்து, 5 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்த வேண்டும். 4 சீசன் ஜிம் வொர்க் – அவுட் இருக்கும். அதில் ஸ்கொட், பென்ச்பிரஸ் செய்வேன். கார்டியோ தனியா பண்ணுவேன். தினமும் காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணி நேரம் என பயிற்சி செய்வேன். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பயிற்சி முறைகள் இருக்காது. அவரவர் தகுதிக்கு ஏற்ப பயிற்சி முறைகள் வேறுபடும். போட்டி நெருங்கும் சமயங்களில், பயிற்சி நேரம் குறையும். 5 கிலோ மீட்டர் நீந்துவதற்குப் பதிலாக, இரண்டு முதல் இரண்டரை கிலோ மீட்டர் மட்டும் நீந்துவேன்.

ஸ்டார்ட் டர்ன் (திரும்புதல்) எப்படி பண்ணுவது என்பதில் கவனம் செலுத்துவேன். இது தவிர வாட்டர் கார்ட், டெம்போ டிரெயினர் பயன்படுத்துவேன். முக்கியமாக வாட்டர் பவரை மையின்டென் செய்வேன். நிறைய நேரம் ஓய்வு எடுப்பதோடு, டயட்டீஷியன் அறிவுரைப்படி, புரோட்டீன், கார்போ நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவேன். எனக்கு படிப்பு, நீச்சல் இரண்டும் முக்கியம். பன்னிரெண்டாம் வகுப்பில் 96% மார்க் எடுத்தேன். படிப்புக்காக விளையாட்டை விடக்கூடாது. விளையாட்டுக்காக படிப்பை விடக்கூடாது. இரண்டையும் நாமதான் பேலன்ஸ் செய்ய வேண்டும். நீச்சல் போட்டிகளில் பங்கேற்பதோடு, ஐ.ஏ.எஸ் தேர்வுக்கும் படித்து வருகிறேன்.

நீச்சல் விளையாட்டு பொறுத்தவரை ஒருத்தரே பல பிரிவுகளிலும் பங்கேற்க முடியும். நான் 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 4×100 மீட்டர் பிரிஸ்டைல் ரிலே, 4×100 மீட்டர் மெட்லி ரிலே, 4×200 மீட்டர் பிரிஸ்டைல் ரிலே ஆகியவற்றில் கலந்து கொண்டு வருகிறேன். பேக்ஸ்ட் ரோக் என்னுடைய மெயின் ஈவன்ட். இதில் பக்கத்தில் இருப்பவரை அவ்வளவாக பார்க்க முடியாது. பார்த்தால் வேகம் குறையும். எனவே பிளைன்டாகத்தான் நீந்த முடியும்.

2012-ல் குஜராத்தில் நடந்த நேஷனல் போட்டிதான் மறக்க முடியாத போட்டியாகும். அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அதில் 4×50 மீட்டர் பிரீஸ்டைல் ரிலே, 4×50 மீட்டர் மெட்லி ரிலே ஆகியவற்றில் கலந்து கொண்டேன். இவற்றில் லாஸ்ட் ஸ்டார்ட்டராக பங்கேற்று, 2 கோல்டு மெடல் வாங்கினேன். அந்த போட்டியில் மகாராஷ்டிரா வீராங்
கனையை மைக்ரோ செகன்ட் வித்தியாசத்தில் தோற்கடித்ததை என்றைக்கும் மறக்க முடியாது. மாநில, தேசிய மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் எனப் பல போட்டிகளில் கலந்து கொண்டு 500 பதக்கங்கள் வென்றுள்ளேன். அவற்றில் 100 தங்கம், 200 வெள்ளி, 200 வெண்கலம் அடங்கும்.

கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூரில் நடந்த கேலோ இந்தியா யூனிவர்சிட்டி போட்டியில், 4×200 மீட்டர் ஸ்டைல் ரிலே, 4×100 மீட்டர் மெட்லி ரிலே ஆகியவற்றில் தங்கமும், 4×100 மீட்டர் பிரிவில் வெள்ளியும் வென்றது சமீபத்திய சாதனையாகும். 5 முதல் 6 மணி நேரம் வரை நீரில் இருப்பதால் சளி பிடிக்கும் என்பது கற்பனை. வீசிங் உள்ளவர்கள் நீச்சலில் சேருவார்கள். ஏனென்றால் இவ்
விளையாட்டு நுரையீரல் திறனை அதிகரிக்கும். தண்ணீர் ஜில்லுன்னு இருந்தா, அதிக கெமிக்கல்ஸ் சேர்க்கப்பட்டிருந்தால் சளி பிடிக்கும். ஆனால் தானாகவே
அது சரியாகிவிடும்.

போட்டி என்றால் அதில் வெற்றி தோல்வி கண்டிப்பாக இருக்கும். எதையும் ஏற்றுக் கொள்வது தான் ஒரு விளையாட்டு வீரனின் அழகு. போட்டிகளில் நீங்கள் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை. போன போட்டியை விட இப்போட்டியில் சிறப்பாக செய்துள்ளோம் என்பதுதான் முக்கியம். ஆனால் பலர் வெற்றிப் பெற வேண்டும் என்று ஊக்க மருந்தினை எடுக்கிறார்கள். அதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டு, உடல் நலம் பாதிக்கும். எனவே திறமையால் வெற்றி பெறுவதுதான் சிறந்தது. NADA(National Anti- Doping Ass0ciation), WADA(World Anti-Doping Association) ஆகிய அமைப்புகள் ஊக்கமருந்து சோதனையை கடுமையாக மேற்கொண்டு வருகின்றன.

என்னுடைய இந்த வெற்றிகளுக்குப் பின்னால், பெற்றோர், கோச் அரவிந்த் நய்னார், பி.டி. மேடம் அமுதா, கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள் உள்ளனர். அவர்களுடைய ஒத்துழைப்பு, ஊக்கம் ஆகியவற்றால்தான் இந்த அளவிற்கு வந்து உள்ளேன். இந்தியாவிற்காக சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் இலக்கு என்றார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பலாப்பழ பாஸ்தா… கேக்… சாக்லெட்!(மகளிர் பக்கம்)
Next post கடல் கடந்து வந்த நகைச்சுவை நாயகி!(மகளிர் பக்கம்)