கடல் கடந்து வந்த நகைச்சுவை நாயகி!(மகளிர் பக்கம்)
மாதவி
அவர் சிரித்தால் கண்களும் சேர்ந்தே சிரிக்கும். அப்படியான முக அமைப்பு அவருக்கு. ஒரு நடன மணிக்குத் தேவையான மெலிந்த உடல் வாகு, அழகான புன்னகை, தெளிவான தமிழ் உச்சரிப்பு. பெரும்பாலான திரைப்படங்களில் நகைச்சுவையை அள்ளி வழங்கிய நாயகி. ஆனால், அவர் திரையுலகில் அறிமுகமானது என்னவோ வில்லியாகத்தான் (Vamp Charecter). திரையில் தோன்ற வேண்டும் என்பதை விட, அவரது ஆத்மார்த்தமான லட்சியம் என்பது இந்தியாவுக்கு வந்து பரத நாட்டியம் அத்துடன் மேலும் பல சாஸ்திரீய நடனங்களையும் கற்றுத் தேர்வது என்பதாகவே இருந்தது. இதற்காகவே அவர், தான் பிறந்த மண்ணான சிங்கப்பூரை விடுத்து கடல் கடந்து இந்தியாவுக்கு, அதிலும் தங்கள் முன்னோர்களின் பூர்வீக பூமியான தமிழகத்துக்கு வந்து சேர்ந்தவர் சிங்கப்பூர் மாதவி என அழைக்கப்படும் நடிகை மாதவி.
மாதவி என்றவுடன் மிக அழகிய விரிந்த கண்களும் அசாத்திய அழகும் கொண்டு, 80களில் ரசிகர்களைத் தன் நடிப்பால் கட்டிப் போட்ட ‘மரோசரித்ரா’, ‘ராஜ பார்வை’, ‘தில்லுமுல்லு’, ‘ஏக் துஜே கேலியே’ படங்களின் பிரதான வேடமேற்று நடித்த அந்த மாதவி அல்ல இவர். இந்த மாதவியின் தமிழ்த் திரைப்பயணம் 1963ல் ‘ஆயிரங்காலத்துப் பயிரு’ படத்தின் வழியாகத் துவங்கியது. 60 – 70 காலகட்டங்களில் தமிழ்த் திரைப்படங்கள் அவருடைய நகைச்சுவையால் மிளிர்ந்தன. அப்போதைய முன்னணி நகைச்சுவை நடிகைகளில் அவரும் ஒருவராகத் திகழ்ந்தார்.
ஒரு கதாநாயகிக்கு உரிய தோற்றத்தில் மாதவி இருந்தபோதும், நகைச்சுவை நடிப்பையே பிரதானமாகத் தேர்ந்து கொண்டார். இவர் நடிக்க வந்த காலத்தில் மனோரமா, சச்சு, ரமா பிரபா, ‘அம்முக்குட்டி’ புஷ்பமாலா இவர்களுடன் டி.பி.முத்துலட்சுமி, அங்கமுத்து, எம்.எஸ்.எஸ்.பாக்கியம் போன்ற முந்தைய தலைமுறை நடிகைகளும் கூட தங்கள் நகைச்சுவைப் பங்களிப்பைத் திரையில் வழங்கி வந்த 1960களின் முற்பகுதியில் மாதவியும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டார். தமிழ்த்திரை வரலாற்றில் ஒவ்வொரு பத்தாண்டுகள் இடைவெளியிலும் நகைச்சுவை நடிகர்களும் நடிகைகளும் முதன்மை இடத்தைப் பிடித்ததுடன் திரையில் கோலோச்சி ரசிகர்களை விலா நோகச் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
நகைச்சுவையைப் பொறுத்தவரை எவர் ஒருவர் வருகையாலும் அடுத்தவர்களின் இடம் முழுமையாக எப்போதும் இங்கு பறி போனதில்லை என்பதையும் திரை வரலாறு நமக்குச் சொல்கிறது. வளமான நகைச்சுவையின் தொடர்ச்சிவேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் இந்த அளவுக்கு வளமான நகைச்சுவை இருந்ததில்லை என்று சொல்லும் அளவுக்குத் தமிழ்த் திரையுலகில் ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடிகைகளும் கோலோச்சியிருக்கிறார்கள்.
நடிகைகளைப் பொறுத்தவரை அங்கமுத்து, டி.ஏ. மதுரம், பி.ஆர்.மங்களம், கே.ஆர். செல்லம், சி.டி.ராஜகாந்தம், எம்.எஸ். சுந்தரிபாய், எம்.எஸ்.எஸ். பாக்கியம், டி.பி. முத்துலட்சுமி, எம்.சரோஜா, ஜி.சகுந்தலா, மனோரமா, காந்திமதி, சச்சு, ரமா பிரபா, ‘அம்முக்குட்டி’ புஷ்பமாலா, எஸ்.என்.லட்சுமி, காந்திமதி, எஸ்.என்.பார்வதி, ‘பசி’ சத்யா, பிந்து கோஷ், கோவை சரளா, வனிதா, கல்பனா, ஆர்த்தி, மதுமிதா, வித்யுலேகா, தேவதர்ஷினி என மிக நீண்ட வரிசையில் நகைச்சுவை நடிகைகள் தங்கள் பங்கினைத் தமிழ்த் திரைக்கு அளித்திருக்கிறார்கள். இந்த அற்புதமானதொரு பட்டியலில் மாதவிக்கும் தவறாமல் ஓர் இடம் உண்டு.
இவர்களையும் தவிர நகைச்சுவை நடிகைகள் என்ற வரிசையில், ‘நாங்களும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல…’ என்று கதாநாயகி நடிகைகளும் களத்தில் குதித்து சாதித்த முழு நீள நகைச்சுவைப் படங்களும் ஏராளம் உண்டு. அப்படியான நடிகைகளின் வரிசையும் மிக நீண்டது. பத்மினி, அஞ்சலி தேவி, ராகினி, சாவித்திரி, பானுமதி, சுகுமாரி, ராஜ சுலோசனா, காஞ்சனா, ராஜ, ஜெயந்தி, சௌகார் ஜானகி, பானுப்ரியா, ரேவதி, ரோகிணி, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் என நகைச்சுவை வடிவத்தைச் சளைக்காமல் கையிலேந்திக் களமாடியவர்கள் இவர்கள் அனைவரும்.
ஆரம்பமே ஆளை மயக்கும் வில்லியாக…
நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லத்தனமான பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றிருந்த அனுபவம் மிக்க மூத்த நடிகரான டி.எஸ். துரைராஜ், அவரே தயாரித்து இயக்கிய ‘ஆயிரம் காலத்துப் பயிரு’ படத்தில் வில்லி என்பதே வெளியில் தெரியாதவாறு ஒரு வில்லத்தனம் (Vamp Charecter) மிக்க பாத்திரத்தில் மாதவியை அறிமுகப்படுத்தினார். ஒரு நடன நிகழ்ச்சியில் அவரைப் பார்த்து கவரப்பட்டதன் பின்னர்தான் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் மாதவிக்கு வழங்கியிருந்தார் டி.எஸ்.துரைராஜ்.
வசதி படைத்தவர்களிடமிருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த நகைகளைப் பறிமுதல் செய்யும் ஒரு கொள்ளை, திருட்டுக் கும்பலில் ஒருவராகவும், தங்களிடம் சிக்கிக் கொள்பவர்களிடம் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு, பேசி, ஆடிப்பாடி, ஆளை மயக்கிக் காரியம் சாதித்துக் கொள்ளும் சரசா என்ற பாத்திரம் மாதவிக்கு. ஊரை விட்டு நகரத்துக்கு ஓடி வந்து விட்ட தன் மகளைத் தேடி சென்னைப் பட்டணத்துக்கு வரும் ஊர்ப் பெருந்தனக்காரரைப் (டி.எஸ்.துரைராஜ்) பார்த்து,
‘தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவேயில்லை…
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவேயில்லை…’
என்று ஆடிப் பாடுவாள் சரசா (மாதவி).
எஸ்,எம். சுப்பையா நாயுடுவின் தேர்ந்த இசையில், பி.சுசீலாவின் தேனினும் இனிய குரலில் அமைந்த அந்தப் பாடல் காட்சியின் முடிவில் டி.எஸ்.துரைராஜ் அவரைப் பார்த்துச் சொல்லுவார், ‘உன் ஆட்டத்துக்கு முன்னால் ரம்பை, ஊர்வசி எல்லாம் பிச்சை எடுக்க வேண்டும்’ என்று. இது மாதவிக்காகவே எழுதப்பட்ட வசனமோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. உண்மைதான் அவ்வளவு அற்புதமாக, மிக நளினமாக இந்தக் காட்சியில் நடனம் ஆடியிருப்பார் மாதவி. அடிப்படையில் நன்கு நடனம் கற்றுத் தேர்ந்த ஒரு நடனமணிக்கு, அவர் நடித்த படங்களிலேயே இந்தப் படம் தவிர வேறு எந்தப் படத்திலும் அவருக்கென்று தனியாக நடனக் காட்சிகள் அமைந்ததில்லை. அறிமுகப் படத்திலேயே தனக்கு நடனம் ஆடுவதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பை மாதவியும் மிக நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்.
இப்படம் தொடர்பாக வேறு சில சுவாரசியத் தகவல்களும் உண்டு. மாதவியைத் தவிர மேலும் சிலரும் இப்படத்தில் அறிமுகமானார்கள். அவர்களில் ஒருவர் ராஜா பி.ஏ. என்னும் பெயரில் கதாநாயகனாக அறிமுகமானவர். ஆனால், அவர் நடித்த மற்றொரு படமான ‘நானும் ஒரு பெண்’ முன்னதாக வெளி வரவே, அப்படத்தைத் தயாரித்த நிறுவனத்தின் பெயரிலேயே தன் பெயரையும் அவர் ஏ.வி.எம். ராஜன் என்று மாற்றிக் கொண்டார். மிகுந்த புகழையும் அறுவடை செய்தார். (பின்னாட்களில் நிகழ்ந்தது வேறு கதை)மற்றொரு கதாநாயகனாக அறிமுகமானவர் சந்திரன். இவர் புகழ் மிக்க பின்னணிப் பாடகரான திருச்சி லோகநாதன் அவர்களின் தமக்கை மகன். இவரும் பின்னர் டி.கே.எஸ். சந்திரன் என்ற பெயரில் பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தவர்.
கலையைக் கற்பதற்கு எல்லை ஏது?
சிறு வயதிலிருந்தே ஓரளவுக்கு ஆடத் தெரிந்திருந்த மாதவி தன் 8 வயதிலேயே சிங்கப்பூரில் அரங்கேற்றத்தை முடித்தவர். நடனத்தை மேலும் சிறப்பாக அதன் நுணுக்கங்களையும் நுட்பங்களையும் கற்றுத் தேற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 15 வயதில் 1956 ஆம் ஆண்டில் மாதவி சென்னைக்கு வந்தார். நட்டுவனார் டி.வி. சௌந்தரராஜனிடம் பரத நாட்டியத்தை விரிவாகக் கற்றார். அதே வேளையில் கதகளியை அவருக்குக் கற்பித்த குரு கோபிநாத். அத்துடன் மோகினியாட்டத்தையும் தங்கமணியிடமிருந்து பயின்றார். இவற்றுக்கெல்லாம் இடையில்தான் திரைப்பட நடிப்பையும் மாதவி விடாமல் தொடர்ந்தார்.
மாதவியின் குறிப்பிடத்தக்க திரைப் பங்களிப்பு
ஒரு சில படங்களில் மட்டும் வில்லத்தனம் காட்டியவர். ’அன்பே வா’ போன்ற படங்களில் தலையை மட்டும் காட்டி விட்டுப் போனார். சிம்லாவுக்கு வரும் கதாநாயகி (சரோஜாதேவி), அவளின் தந்தை பெங்களூர் புண்ணாக்கு வியாபாரி (டி.ஆர்.ராமச்சந்திரன்), தாயார் (டி.பி.முத்துலட்சுமி) இருவரையும் கவனித்துக் கொள்ளும் செவிலியராக வந்து போவார். பெரும்பாலான படங்களில் நாகேஷுடன் மட்டுமே இணைந்து நடித்தார் மாதவி. இந்த நகைச்சுவை ஜோடி ஏறக்குறைய 18 படங்களுக்கு மேல் தொடர்ந்து இணைந்து நடித்துத் திரையைக் கலக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் பூவும் தேனும் சேர்ந்து வருவதாக நாகேஷ் எம்.ஜி.ஆரிடம் குறிப்பிடுவார். பூ என்பது பூங்கொடி (ஜெயலலிதா), தேன் என்பது தேன்மொழி (மாதவி). கன்னித்தீவின் இளவரசி பூங்கொடி; அவளின் உற்ற தோழி தேன்மொழி. அந்தத் தீவுக்குக் கொண்டு வந்து விற்கப்பட்ட அடிமைகள் (எம்.ஜி.ஆர், நாகேஷ்) மணிமாறனும் அவனது எடுபிடியும். அந்த அடிமைகளை இரு பெண்களும் காதலிக்கிறார்கள். இப்படம் மிகவும் பிரசித்தி பெற்ற பிரம்மாண்டமான வெற்றியை ஈட்டிய படம். எம்.ஜி.ரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம். இதில் மாதவியின் பாத்திரப் படைப்பு மிக அழகானது.
இளவரசி செல்லும் இடங்களுக்கெல்லாம் உடன் செல்லும் ஆத்மார்த்தமான பணிப்பெண் மட்டுமல்லாமல், உற்ற தோழியும் கூட. கன்னித்தீவின் இளவரசியே அடிமைப் பெண்ணாக விற்கப்படும் சூழ்நிலை வரும்போதும், அவளை ஏலத்தில் விலை கூறுவதற்கு முன்பாக கசையடித்து கொடுத்து ஆடச் சொல்லும்போது துடித்துப் போய் செய்வதறியாமல், அதைப் பரிதவிப்புடன் பார்த்துப் பதைபதைக்கும் வேடம். குறைவில்லாமல் அதைச் செய்திருப்பார் மாதவி. நாகேஷுடன் இணைந்து நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத காட்சிகளும் ஏராளம் உண்டு.
1966 ஆம் ஆண்டில் வெளியான ‘குமரிப்பெண்’ படத்திலும் கதாநாயகி ஜெயலலிதாவின் உற்ற தோழிகளில் ஒருவர். படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே, ரயில் பயணத்தில் குறுக்கிடும் கட்டுக்குடுமி வைத்த கிராமத்து இளைஞனை (கதாநாயகன் ரவிச்சந்திரன்) கதாநாயகி ஜெயலலிதா தன் தோழிகளுடன் (எம்.பானுமதி, சாதனா, மாதவி) இணைந்து கலாய்த்து கலாட்டா செய்து பாடுவார். அந்தத் தோழிகளில் முதன்மையானவர் மாதவி. படம் நெடுக கதாநாயகியுடனே வருபவர். இதைத் தவிர நடிப்பதற்கான வாய்ப்புகள் பெரிதாக இல்லாத இந்தப் படம், 1966 ஆம் ஆண்டில் வெளியானது என்பதை நினைவூட்டும் விதமாக அவர்கள் பாடும் பாடலும் அமைந்தது. ‘வருஷத்தப் பாரு அறுவத்தியாறு… உருவத்தப் பாரு இருவத்தியாறு’ என்று அவ்வளவு அழகாகப் பாடல் எழுதியிருப்பார் கண்ணதாசன்.
’பறக்கும் பாவை’ படத்தின் கதைக்களம் ஒரு சர்க்கஸ் கம்பெனி. நேஷனல் சர்க்கஸ் கம்பெனியின் முதலாளி (கே.ஏ.தங்கவேலு) அவர் மனைவி ரீடா (மாதவி) வாக கொச்சைத் தமிழ் பேசி நடித்திருப்பார். சர்க்கஸ் கம்பெனியில் உள்ள பிற , கலைஞர்களின் துயரங்களைக் கேட்டு உருகுவதும் அவர்களுக்கு உதவி செய்வதுமாக இந்தப் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். தமிழ் அறியாத பெண்ணாக அவர் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவதும் ரசிக்கும்படியாக இருக்கும். அவருக்குச் சற்றும் சளைக்காமல் ரூபா (மனோரமா) வும் அவ்வாறே பேசி நடித்தார். இப்படி இருவருமே வசனங்களைக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவது ரசிக்கும்படியான நகைச்சுவையாகவே இருந்தது. இவர்களுடன் கூடவே ரப்பர் (சந்திரபாபு) மற்றும் தங்கவேலுவும் சேர்ந்து கொள்ள கேட்க வேண்டுமா என்ன?
‘அரச கட்டளை’ படத்திலோ கானகத்தில் வாழும் துணிச்சல் மிக்க ஆதிவாசிப் பெண் வேடம் மாதவிக்கு. தன் காதலனைத் தேடி ஆண் வேடமிட்டுக் காட்டு வழியில் நடந்துவரும் இளம் பெண்ணை (ஜெயலலிதா) ஆண் என்று நினைத்து அவர் மீது காதல் கொள்வதும், அவரையே திருமணம் செய்து கொள்ள நினைப்பதுமாக மாதவி செய்யும் அலப்பரைகள் விலா நோகச் சிரிக்க வைப்பவை. கூடவே நாகேஷின் துணையும் உண்டு.
‘அதே கண்கள்’ படத்தின் ஆங்கிலோ – இந்தியப் பெண் ஜூலி, அவர் வீட்டில் இளம் தம்பதிகள் என்று பொய் சொல்லிக் குடியேறுகிறார்கள் ரவிச்சந்திரனும் நாகேஷும் (நாகேஷ் பெண் வேடமிட்டவர்). வீட்டின் சொந்தக்காரரான ஆங்கிலோ – இந்தியக் கிழவர் மாத்யூஸுக்கு (பி.டி.சம்பந்தம்) மாடியில் குடி வந்திருக்கும் ‘இளம் பெண்’ ரோஸி மீது ஒரு கண். ‘ரோஸி’ பெண் வேடமிடாமல் இளைஞனாக இருப்பதைப் பார்க்கும்போது வீட்டுக்காரரின் மகள் ஜூலிக்கு (மாதவி) அந்த இளைஞன் மீது காதல் பிறக்கிறது. பிறகென்ன? நாகேஷ் பெண் வேடமிட்டு கிழவரை ஏமாற்றுவது, அசல் இளைஞனாய் ஜூலியைக் காதலிப்பது என சிரிப்புக்குப் பஞ்சமில்லாத நகைச்சுவையை இந்தக் கூட்டணி வாரி வழங்கியது.
எம்.ஜி.ஆர் படங்களில்தான் தொடர்ந்து நடித்தார் மாதவி. நகைச்சுவை நடிகர்கள் அனைவருடனும் நடித்திருந்தாலும் நாகேஷுடன் மட்டுமே அதிகப் படங்களில் ஜோடியாக நடித்தார். அறிமுகப் படத்தின் வில்லி வேடத்துக்கும் ‘நான்’ படத்தில் ஏற்ற வில்லி வேடத்துக்கும் இடையில் மலையளவு வேறுபாடு. ‘நான்’ பட வில்லி கொள்ளைக்கூட்டத்தில் இணைந்து செயல்படுபவளாக இருந்தாலும், அதிலும் நகைச்சுவையே பிரதானமாக இருந்தது.
மாதவியின் முதன்மை நோக்கம் நடனம் கற்பது. அதற்கு இடையூறு இல்லாத வகையில் படங்களில் பங்கேற்பது. பெரும்பாலும் கதாநாயகியரின் தோழியாகவே திரையில் தோன்றியிருக்கிறார். தோழிகளுடன் ஆடிப் பாடுவது என்பதாகவே இவருக்கு வாய்த்த பாத்திரங்கள் பெரும்பாலும் இருந்தன. இங்குள்ள திரைக்கலைஞர்கள் அனைவருடன் நல்ல நட்பையும் பேணினார். லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது, நிகழ்ந்த இந்திய – பாகிஸ்தான் போருக்கான பிரதமர் நிவாரண நிதி அளிப்பது தொடங்கி அனைத்திலும் இந்நாட்டவராகவே அவர் செயல்பட்டார். வந்தார்… கற்றார்… சென்றார்.
1963ல் தொடங்கிய திரைப்பயணத்தை 1970ல் முடித்துக் கொண்டு, 7 ஆண்டுகளில் 29 வயதில் மீண்டும் தாய் மண்ணை நோக்கிப் பயணமானார் மாதவி. நடனம் கற்பதற்காக வந்த பணி முற்றிலும் நிறைவேறியதும் அதற்கு முக்கியமான காரணம். மற்றொரு காரணம், நாகேஷின் மைத்துனர் கொலை செய்யப்பட்டார். இந்தப் பழி நாகேஷ் மீது விழுந்ததில், அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
(பின்னர், நாகேஷ் குற்றவாளி அல்ல என்பதும் நிரூபணமானது.) இதில் மாதவியின் பெயரும் அப்போதைய செய்தித்தாள்களில் அடிபட்டது. இந்தப் பிரச்சனைகளில் வீணாகத் தன் பெயர் அடிபட வேண்டாம் என்ற எண்ணத்திலும் தான் வந்த நோக்கம் நிறைவேறியதாலும், மாதவி விரைந்து தாய் நாடு திரும்பினார். அதன் பிறகு அவர் தன் நடிப்பைத் தொடரவில்லை. அவர் கவனம் முழுவதும் நாட்டியத்தின் மீதே நிலை பெற்றது.
நாட்டியம் அளித்த கௌரவங்கள்
1970 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தேசிய நாட்டியப் பயிற்சி நிறுவனம் ஒன்றைத் துவங்கி திறம்பட செயல்பட ஆரம்பித்தார் மாதவி. அந்நிறுவனத்தின் முதல்வராகவும் மாதவி செயல்பட்டு வருகிறார். பெற்றோரின் முழுமையான ஆதரவும் அவருக்கு உறுதுணையாக இருந்தது. அந்த நிறுவனத்தின் வாயிலாக படைப்பூக்கம் மிக்க பல நிகழ்ச்சிகளையும் அவர் நிகழ்த்தினார். ஆஸ்திரேலியா, ரஷ்யா உட்பட பல நாடுகளுக்கும் சென்று நடத்தினார். அதன் மூலம் தன்னை எப்போதும் பிஸியான நபராக மாற்றிக் கொண்டார். மோகினியாட்டத்தை முதன் முதலில் சிங்கப்பூரில் நடத்தியவர் என்ற பெருமையையும் பெற்றார். 1979 ஆம் ஆண்டில் தன் அபாரமான நாட்டியத் திறமையின் பொருட்டு, சிங்கப்பூரின் முதல் சிறந்த நடனக் கலைஞர் மற்றும் சிறந்த நடன அமைப்பாளர் என்ற விருதினையும் முதன்முதலாகப் பெற்றார்.
மாதவியின் கணவர் ராஜலிங்கம்
சின்னையா, சிங்கப்பூர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். இத்தம்பதிகளின் ஒரே மகள் அஞ்சலி சின்னையா. இவர்களின் ஒருமித்த ஆதரவும் மாதவிக்கு எப்போதும் உண்டு. 80 வயதைக் கடந்து விட்ட மாதவி நிறைவான குடும்ப வாழ்க்கை அத்துடன் தன் நாட்டியப் பயிற்சி நிறுவனப் பொறுப்பு என சிங்கப்பூரின் திறம்பட்ட கலைஞராகத் திகழ்கிறார்.
மாதவி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
ஆயிரம் காலத்துப் பயிரு, ஆயிரத்தில் ஒருவன், குமரிப்பெண், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பு வழி, நாம் மூவர், பணக்காரக் குடும்பம், பறக்கும் பாவை, அம்மா எங்கே?, உயிர் மேல் ஆசை, அரசக்கட்டளை, பெண்ணே நீ வாழ்க, அன்பே வா, அதே கண்கள், நான்.
செல்லுலாய்ட் பெண்கள்’ தொடரில் இடம்பெறும் கட்டுரைகள் காப்பிரைட் உரிமை பெற்றவை. இக்கட்டுரைகளிலிருந்து எந்த ஒரு பகுதியும் கட்டுரை ஆசிரியரின் ஒப்புதல் பெறாமல் அச்சு வடிவிலோ, யூ டியூப் சானல்களிலோ எடுத்தாளப்பட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.