வாழ்க்கை + வங்கி=வளம்! (மகளிர் பக்கம்)
கடந்த இதழில் வீட்டுக்கடனாக எவ்வளவு பணம் கிடைக்கும், திருப்பச் செலுத்தும் தவணைக்காலம், தவணைத் தொகை, விண்ணப்பிக்கும் முறை, வட்டி மற்றும் கட்டணங்கள் குறித்து பார்த்தோம். வீட்டுக்கடன் பெறலாம், குறிப்பிட்ட காலத்தில் கடன் தொகையை வங்கியில் திருப்பச் செலுத்தி கடன் கணக்கை முடித்துவிடலாம். ஆனால் நமக்கான உரிமையாகும் வீடு நூற்றாண்டையும் கடந்து எந்த வில்லங்கமும் இல்லாமல் ‘நமக்கே நமக்கேதான்’ என்றுதான் இருக்க வேண்டும்.
இதற்கு சட்ட ரீதியாக வீட்டை / வீட்டு மனையை வாங்குவதற்குமுன் யாருக்கு சொத்தில் உரிமையுள்ளது என்பதிலிருந்து துவங்கி அந்த சொத்து நமக்கு உரிமையானதை உறுதி செய்யும்வரை நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்துப் பார்ப்போம். வீட்டுக்கடனுக்காக வங்கியில் நாம் வாங்கும் வீட்டு மனை / வீடு / அடுக்குமாடி குடியிருப்பு என்னும் சொத்தினைத்தான் அடமானமாக வைக்கவேண்டும் என்பது கடன் வழங்கும் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பொதுவிதி.
அந்தச் சொத்தின் உரிமை மட்டுமல்லாமல் அதன் மதிப்பும்தான் வீட்டுக்கடன் வழங்குவதைத் தீர்மானிக்கும். ஒருவரின் வருமானம், கடனைத் திருப்பச் செலுத்தும் திறன் ஆகியவை வீட்டுக்கடனின் அடித்தளம் என்றால் வாங்கும் சொத்தின் உரிமையும் அதன் மதிப்பும் தூண்களோடுகூடிய கட்டுமானமாகும். கடன் நிலுவைத்தொகை முழுவதும் கடனாளி கட்டி முடித்தபின் நிம்மதியாக வீட்டின் உரிமையாளர்தான் என்று உணர்வது அந்த வீட்டுக்கான அனைத்துக் கதவுகளின் பூட்டு, சாவிகளும் முழுவதுமாக வீட்டு உரிமையாளருக்கு ஒப்படைக்கும் நிலையாகும்.
வீட்டின் உரிமைப் பத்திரங்களும் வில்லங்கச் சான்றும்
வில்லங்கச் சான்று என்பது அரசுத்துறையான சொத்துப் பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பதிவுகளிலிருந்து குறிப்பிட்ட சர்வே / புல எண்ணில் உள்ள மனை / வீடு / நிலத்திற்கு உரிமையாளர் யார் என்று எழுத்துமூலம் தெரிவிப்பது. அந்த உரிமை எப்போது எந்த ஆவணத்தின்படி பதிவு அலுவலகத்தில் எந்த தேதி, வருடம், எவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது, பிறகு எவரெவர்க்கு உரிமை மாற்றப்பட்டது என்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
இணையம் வழியாகவும் வில்லங்கச் சான்றிதழைப் பெறலாம். நாம் வாங்கும் சொத்தின் இடம் எந்த பத்திரப்பதிவு அலுவலகத்தின் வரையறைக்குள் வருகின்றதோ அந்த அலுவலகத்தை இணையத்தில் தேர்ந்தெடுத்து தேவையான விவரங்களைத் தளத்தில் பதிவுசெய்தும் வில்லங்கச் சான்றிதழ் பெறமுடியும். https://tnreginet.gov.in/portal இணைய முகவரி பெயர், தொலைபேசி எண்கள், பதிவு மண்டலம், பதிவு மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், சொத்து அமைந்துள்ள கிராமம் / இடம், சர்வே எண், தேதி மற்றும் மாதம் உட்பட எத்தனை வருடங்களுக்கு வில்லங்கச் சான்றிதழ் தேவை என்ற விவரங்களைப் பதிவிட்டு அரசின் பதிவின்படி உரிமையாளர் யார் என்பதைத் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல் வில்லங்கச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
*அனைத்துச் சொத்துக்களுக்கும் தாய்பத்திரம் இருக்கும். இது பதிவு அலுவலகத்தில் பதிவான முதல் பத்திரம். மூலப்பத்திரத்தில் பாட்டனார் பெயரில் உள்ள சொத்து பிறகு பாகப்பிரிவினைப் பத்திரம் மூலம் மூன்று பிள்ளைகளுக்குப் பிரியலாம். அவர்களுக்குள் ஒரு பிள்ளை அவருக்கு உரிமையுள்ள சொத்தை அவரின் பாகப்பிரிவினை பத்திரத்தின் மூலம் விற்கலாம். அவர் பாட்டனாருக்கு இரண்டாவது மகன் என்றால் முதல் மகனிடம் அதாவது அவரது அண்ணனிடம் மூலப்பத்திரத்தின் மூல ஆவணம் (Original Document) இருக்கும்.
அதன் நகல் இரண்டாவது மகனிடம் அதாவது தம்பியிடம் இருக்கும். இரண்டாவது மகனிடமிருந்து நாம் சொத்தை, அதாவது அவரின் பாகத்தை, வாங்குகின்றோம் என்றால் நாம் மூலப்பத்திரத்தின் நகலைப் பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அதன் அசலையும் வங்கியின் வழக்கறிஞரின் மூலம் படித்துப் பார்த்து விற்பவரின் உரிமையை உறுதி செய்துகொள்ளவேண்டும். அதேநேரத்தில் விற்பவருக்கு சொத்தில் உரிமையை வழங்கிய பாகப்பிரிவினைப் பத்திரம் மிக முக்கிய ஆவணமாகும்.
*ஒரு சொத்தினை வாங்கியபிறகு அதன் உரிமையை நீதிமன்றம் மூலம் தடைசெய்யலாம். வீட்டுமனையின் உரிமையாளரான முதியவர் இறந்துவிட்டார். பாகப்பிரிவினையோ அல்லது பதிவு செய்யப்பட்ட உயிலோ (Registered Will) இல்லை. அவர்களின் இருமகன்கள் தாங்கள் இருவர்தான் வாரிசு என்னும் வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்று அந்த வீட்டு மனையை விற்க வந்தனர். அதனை வாங்க முன்வந்தவர் வாரிசு சான்றிதழ் மற்றும் மனையின் மூலப்பத்திரத்தின் உரிமை நிலையை வக்கீல் மூலம் ஆராய்ந்தார்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்று நபர்கள் வாரிசுதாரர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. விசாரித்த போது கடைசி தம்பி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இந்த நிலையை மறைத்து அண்ணன், தம்பி இருவரும், சொத்துக்கு தாம் இருவர் மட்டுமே வாரிசு என்று விற்க வந்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து மீண்டுவிட்டால் அவர் அந்த சொத்தின் தன் பாகத்திற்கு சட்ட ரீதியாக உரிமை கொண்டாட முடியும். எனவேதான் நாம் வாங்கும் சொத்தின் உரிமையாளர் யார் என்பதை 30 ஆண்டு கால வில்லங்கச் சான்றிதழை பார்த்து வாங்க வேண்டும். புதுச்சேரியில் 13 வருடங்களுக்கான வில்லங்கச் சான்றிதழே போதுமானது.
*மூலப்பத்திரம் மற்றும் விற்பவரின் உரிமையை நிலைநாட்டும் பத்திரம் எத்தனைப் பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது என்பது அதன் இரண்டாம் பக்கம் முதல் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு மொத்தம் 14 பக்கங்கள் என்றால் வரிசையாக அந்தந்த தாள்களில் 1/14, 2/14, 3/14, 4/14… என்று அதன் பக்க எண் எழுதப்பட்டிருக்கும். அனைத்துப் பக்கங்களும் இருக்கின்றதா என்பதையும். பத்திரத்தின் இறுதியில் பகுதிவாரியாக சொத்தின் விவர அட்டவணை இடம்பெற்றுள்ளதா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்
*பத்திரம் ரூ.100, ரூ.500, ரூ.1000, ரூ.5000, ரூ.10000 ஆகிய மதிப்பு பொறிக்கப்பட்ட முத்திரைத்தாள்களில் எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு தாளிலும் இரண்டு வரிசை எண்கள் இருப்பது அவசியம். ஒன்று அந்த முத்திரைத்தாளின் வரிசை எண், இரண்டாவது முத்திரைத்தாள் விற்பவர் அவரின் நோட்டுப்பதிவின்படி எழுதும் வரிசை எண். ஒரே மதிப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, அதாவது ரூ.5000 மதிப்பு பொறிக்கப்பட்ட முத்திரைத்தாள்கள் இருந்தால் அவற்றின் வரிசை எண்கள் வரிசைப்படி உள்ளதா என கவனிக்கவேண்டும்.
*எனவே நமக்கு வழங்கப்படும் மூலப்பத்திரம் / உரிமை ஆவணம் அசலா அல்லது வண்ண நகலா என்பதைக் கண்டறிய வழிகள் உள்ளன. முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், அத்துறைப் பணியில் உள்ள வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள் ஆகியோர் முத்திரைத்தாளைத் தொட்டு அதன் வடிவம், எடை ஆகியவற்றை உணர்ந்து பார்த்தே அசலா அல்லது நகலா என்று கூறிவிடுவார். மேலும் பதிவு செய்யப்பட்ட முத்திரைத்தாளின் இரண்டாம் பக்கத்தில் பென்சிலினால் ஆவணப் பதிவு எண்கள் எழுதப்பட்டு அதன்கீழே ஒரு கோடு போட்டிருப்பர். அந்தக்கோட்டின் சிறு பகுதியை அழிப்பினால் அழித்துப் பார்த்தால் பத்திரம் அசலானதா அல்லது வண்ண நகலா என்பது தெரியும்.
*பதிவான பத்திரத்தின் இறுதிப் பக்கங்களுக்குப் பிறகு பத்திரத்தில் கையெழுத் திட்டவர்களின் புகைப்பட அடையாள சான்றின் நகல் இணைக்கப்பட்டிருக்கும். அதனை அசல் ஆவணத்துடன் ஒப்பிட்டும் நாம் பதிவை உறுதி செய்துகொள்ளலாம்.
*வீட்டு மனை (Plot) / அடுக்ககம் (Flat) / வீடு வாங்குவதற்கான நமது விளிம்புத்தொகை மற்றும் வங்கியால் செலுத்தப்படும் வீட்டுக்கடன்தொகை ஆகியவற்றை செலுத்தியவுடன் வாங்கும் சொத்து நமது பெயரில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவானவுடன் வில்லங்கச் சான்றுக்கு அந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வில்லங்கச் சான்று கிடைத்தவுடன் அதில் நாம் பத்திரப்பதிவு செய்த தேதி, பத்திர எண் விற்றவரின் பெயர் மற்றும் வாங்குபவரின் பெயர் ஆகியவை சரியாக உள்ளனவா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.
*வங்கியின் மூலம் வீட்டுக்கடன் பெற்று வீட்டுமனை / அடுக்ககம் / வீடு வாங்குவதால் அந்தச் சொத்து வங்கியில் அடமானமாக வைக்கப்படுகிறது. சொத்து நமது பெயருக்கு வந்தவுடன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உரிமையாளரான நாமும் வீட்டுக்கடன் வழங்கிய வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரும் அதற்குரிய மதிப்பிட்ட முத்திரைத்தாளில் வங்கி வழங்கிய வீட்டுக் கடனுக்காக வாங்கும் அதே சொத்தை அடமானம் வைப்பதாக கையொப்பமிட அந்த ஆவணம் கடனுக்கான சொத்து அடமானம் என்று பதியப்படும். பதியப்பட்ட அசல் ஆவணம் வங்கியிடமும் அதன் சான்றொப்பமிட்ட நகல் ஆவணம் கடனாளிக்கும் பத்திரப்பதிவு அலுவலகத்தால் வழங்கப்படும்.
இந்தப் பதிவிற்குப்பிறகு இன்னொரு வில்லங்கச் சான்றுக்கு விண்ணப்பித்துப் பெறவேண்டும். அந்தச் சான்றில் குறிப்பிட்ட சொத்து வங்கியில் வீட்டுக்கடனுக்காக அடமானம் வைத்துள்ளது தெரியவரும். கடன் நிலுவைத்தொகை முழுவதும் செலுத்தி முடித்தவுடன் வங்கி பத்திரப்பதிவு அலுவலகத்தின் மூலம் அடமானம் நீக்கப்பட்ட ஆவணம் மற்றும் வீட்டு உரிமையாளரின் அசல் ஆவணம் ஆகியவற்றை உரிமையாளருக்கு வழங்கிவிடும். மீண்டும் வில்லங்கச் சான்றிதழைப் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பெற்றால் அதில் வங்கி பெற்ற அடமானம் நீக்கப்பட்டிருக்கும்.
மேற்கூறிய அனைத்தும் நாம் வாங்கும் சொத்தில் நமது உரிமையை நிலைநாட்டுவதற்கான உறுதியான வழித்தடங்களும், செயலாக்க முறைகளாகும்.
வீட்டின் சந்தை மதிப்பும் சான்றிதழும்:
வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட சொத்து மதிப்பீட்டாளர் நாம் வாங்கும் வீடு / மனை / அடுக்ககத்தை நேரில் பார்த்து, அதன் வரைபடம், அரசுத்துறையால் வழங்கப்பட்ட அங்கீகார ஆவணங்கள் ஆகியவற்றை பரிசீலித்து, அந்தப்பகுதியில் உள்ள சந்தை மதிப்பு, குறுகிய காலத்தில் சொத்தை விற்க நேரிட்டால் அதன் விற்பனை மதிப்பு, கட்டாய விற்பனை மதிப்பு உள்ளிட்ட அனைத்தையும் வடிவமைக்கப்பட்ட படிவத்தில் சான்றொப்பமிட்டு சொத்து மதிப்பீட்டு அறிக்கையாக வங்கிக்கு வழங்குவார்.
கடன் வழங்குவதைத் தீர்மானிக்கும் முன்பு வங்கி இந்தச் சான்றிதழைப் பெற்று வீட்டுக்கடன் தொகையை நிர்ணயிக்கும். மதிப்பீட்டுத் தொகை குறைவாக அல்லது அதிகமாக இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறொரு சொத்து மதிப்பீட்டாளரிடம் மதிப்புச் சான்றிதழை வங்கி பெறலாம். மேலும் குறிப்பிட்ட இடத்தின் புகைப்படங்கள் மதிப்பீட்டாளரின் அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும். பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் சொத்தின் மதிப்பிற்கும், மதிப்பீட்டாளர் தமது அறிக்கையில் குறிப்பிடும் சொத்து மதிப்பிற்கும் மிக அதிக வேறுபாடு இருக்கக்கூடாது என்பது இன்னொரு விதியாகும். முத்திரைத்தாள் மற்றும் சொத்து பதிவுக் கட்டணம் சொத்தின் மதிப்பையொட்டித்தான் இருக்கும்.
வீட்டு மனையை வாங்கும்போது மதிப்பீட்டு அறிக்கை ஒருமுறை மட்டும் வங்கியால் பெறப்படும். ஆனால் வீடு கட்டும்போது அல்லது அடுக்ககம் கட்டும்போது கட்டி முடிக்கப்பட்ட ஒவ்வொரு நிலையிலும் அங்கீகரிக்கப்பட்ட சொத்து மதிப்பீட்டாளர் சான்றறிக்கை வழங்கவேண்டும். அந்த அறிக்கையில் வீடு கட்டிமுடிக்கப்பட்ட நிலை (புகைப்படங்களுடன்), அதற்கான செலவு, பயன்படுத்திய கட்டுமானப்பொருட்களின் தரம் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கும்.
கட்டிமுடிக்கப்பட்ட அந்த நிலைவரைக்கான செலவில் கடனாளி செலுத்தவேண்டிய விளிம்புத்தொகை போக மீதியை வீட்டுக்கடனின் ஒரு பகுதியாக வங்கி வழங்கும். கடனாளி தானே முன்னின்று உரிய ஆட்களை நியமித்து கட்டுமானப்பொருட்கள் வாங்கி வீட்டைக் கட்டுகின்றார் என்றால் கடன் தொகை கடனாளியின் ஒப்புதலுடன் அவரின் சேமிப்புக்கணக்கில் வரவு வைக்கப்படும். அடுக்ககமாக வேறு கட்டுமான நிறுவனம் அந்தக் கட்டிடத்தைக் கட்டுகின்றனர் என்றால் கடனாளியின் ஒப்புதலோடு கட்டுமான நிறுவனத்தின் வங்கிக்கணக்கிற்கு கடன்தொகை செலுத்தப்படும்.
அதாவது பழைய வீட்டை வாங்குகின்றோம் என்றால் மதிப்பீட்டாளர்கள் அந்த வீட்டின் வயது, பயன்படுத்தப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்களை ஆராய்ந்தும், பட்டியலிட்டும், இன்னும் எத்தனை வருடங்கள் அந்த வீடு தரமுள்ளதாக, வலிமையுள்ளதாக இருக்கும் என்பதையும் பரிசீலித்து மதிப்பீட்டு அறிக்கை என்னும் விலைச் சான்றிதழ் வழங்குவர்.
வீடு வாங்குவதற்கு / கட்டுவதற்கு வங்கியில் கடன் வாங்கவேண்டுமென்றால் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் நிறைய உள்ளன. மேலும் இந்தத் துறையில் அரசும், ரிசர்வ் வங்கியும், வங்கிகளும் வீட்டுக்கடன் வழிமுறைகளில் அவ்வப்போது பல மாற்றங்களை அறிமுகப்படுத்துகின்றன. நாம் அவற்றைக் குறித்து மேலும் விரிவாகப் பேசலாம்.