மேக்கப் பாக்ஸ்-பிரைமர்!!(மகளிர் பக்கம்)
மேக்கப் போட்டுக்கொள்ள பிடிக்குமா எனில் நிச்சயம் உங்கள் மேக்கப் கிட்டில் இருக்க வேண்டிய மற்றுமொரு முக்கிய அம்சம் இந்த மேக்கப் பிரைமர்தான். குறைந்தபட்சம் ஃபவுண்டேஷன் கிரீம் போடுவதாக இருந்தாலும் இந்த மேக்கப் பிரைமர் அவசியம் என்கிறார் மேக்கோவர் ஆர்டிஸ்ட் வைஷு. எந்த சருமத்திற்கு எந்த பிரைமர், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்தார் வைஷு. சன் ஸ்கிரீன் அல்லது மாய்ஸ்சரைசர் மட்டுமே போட்டுக் கொள்வேன் எனில் அவர்களுக்கு பிரைமர் அவ்வளவு தேவையாக இருக்காது. குறைந்த பட்சம் ஃபவுண்டேஷன், பவுடர், காம்பாக்ட் பவுடர் என பயன்படுத்துவோர் நிச்சயம் பிரைமர் பயன்படுத்த வேண்டும்.
முதலில் பிரைமரின் வேலை என்ன?
ஒரு கட்டடத்திற்கு எப்படி அடித்தளம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மேக்கப் போடுவதற்கு முன்பு இந்த மேக்கப் பிரைமர் அவ்வளவு அவசியம். மேக்கப் போடுவதற்கு முன் மேக்கப் அடித்தளமாக மட்டுமின்றி, முகத்திற்கு ஒரு பாதுகாப்பு கவசம் போலவும் செயல்படுவதுதான் பிரைமரின் வேலை. ஒருவேளை சிலருக்கு காஸ்மெடிக்ஸ் அலர்ஜி இருக்கலாம், அல்லது பருக்கள் இருக்கலாம். அவர்களுக்கு மேற்கொண்டு மேக்கப் பொருட்களை பயன்படுத்தினால், எந்த ஒரு அலர்ஜியோ அல்லது பிரச்னையோ ஏற்படாதபடி இந்த பிரைமர் பார்த்துக்கொள்ளும்.
எந்த சருமத்திற்கு என்ன பிரைமர் தேர்வு செய்ய வேண்டும்?
வறண்ட சருமத்தைப் பொறுத்தவரை சரும சுருக்கங்களும், சருமத்தில் இறந்த செல்களும் இருக்கும். இதனை சரி செய்கிற மாதிரி மாய்ஸ்சரைசர் அடிப்படையிலான மேக்கப் பிரைமர்களை பயன்படுத்தலாம். அடுத்து எண்ணை சருமம், இவர்களுக்குப் பெரும்பாலும் சருமத்தில் துவாரங்கள் அதிகமாக இருக்கும். மேலும் இவர்களுக்கு முகத்தில் எண்ைண பசை தன்மை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதை கட்டுப்படுத்தும் வகையிலான பிரைமர்களும் மார்க்கெட்டில் உள்ளன. அதில் தரமானதை தேர்வு செய்து பயன்படுத்தலாம். குறிப்பாக சருமத் துவாரங்களை மறைக்க செய்யும்படியான பிரைமர்கள் மார்க்கெட்டில் இப்போது கிடைக்கிறது.
அதை தேர்வு செய்து பயன்படுத்தலாம். இந்த பிரைமர் முகத்திலுள்ள எண்ணை பசை தன்மையை கட்டுப்படுத்தி மேட் லுக், அதாவது வழுவழுப்பான மற்றும் பிரகாசமான தோற்றத்தை கொடுக்கும். தண்ணீர் தன்மை அடிப்படைக் கொண்ட பிரைமர்களும் ஆயில் சருமத்திற்கு பயன்படுத்தலாம். சிலருக்கு முகத்தில் சுருக்கங்களும் இருக்கும். மேலும் சரும துவாரங்களும் கூட அதிகமாக தென்படும். இதை காம்பினேஷன் சருமம் என்போம். இவர்கள் சிலிக்கான் அடிப்படையிலான பிரைமர்களை பயன்படுத்தலாம்.
பிரைமர்களை எப்படி பயன்படுத்த வேண்டும்?
எந்த பிரைமர் ஆக இருந்தாலும் பயன்படுத்துவதற்கு முன்பு சருமத்தை அவரவர் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதேபோல் எண்ணை பசை சருமம் உள்ளவர்கள் தவிர்த்து மற்ற சருமம் கொண்டவர்கள் பிரைமர் பயன்படுத்துவதற்கு முன்பு சிறிது மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொரு பிராண்டுகளுக்கு ஏற்ப இதன் விலை ரூ.200ல் துவங்கி ரூ.5000 வரை மாறுபடும் என்பதால், அவரவரின் தன்மைக்கு ஏற்ப இதனை தேர்வு செய்து கொள்ளலாம்.
எந்த பிரைமர் பயன்படுத்துவதாக இருப்பினும் அதற்கு முன் நம் சருமத்தின் தன்மையை அறிந்து அதற்கான பிரைமர்கள் தேர்வு செய்வது அவசியம். சரியாக தேர்வு செய்ய முடியாத பட்சத்தில் அழகுக் கலை நிபுணர் மற்றும் காஸ்மெட்டாலஜிஸ்ட் ஆலோசனை பெற்று பயன்படுத்தலாம்.