காதல் சொல்ல வந்தேன்!! (மகளிர் பக்கம்)
“ஜீவா… பொண்ணோட ஃபோட்டோ அனுப்பியிருக்காங்க பார்க்கிறியா?” அம்மா கையில் அலைபேசியுடன் வந்தபோது நேற்று வகுப்பில் வைத்த பரீட்சைக்கான விடைத்தாளைத் திருத்திக் கொண்டிருந்த ஜீவா விடைத்தாளிலிருந்து தலையை நிமிர்த்தாமலேயே சொன்னான்.“வேண்டாம்மா…”“ஏம்ப்பா…. பொண்ணைப் பார்க்கணும்னு உனக்கு ஆசையில்லையா?”“ இருக்கும்மா. ஆனா…இப்படி ஃபோட்டோவ்ல பார்க்கறது எனக்கு பிடிக்கலைன்னு சொல்றதைவிட நம்பிக்கையில்லைன்னுதான் சொல்லுவேன்.”“ஏம்பா அப்படி சொல்றே?”“என் ஃபிரண்ட் ஒருத்தன் ஃபாரின்ல இருக்கான்.
அவனுக்கு இங்க ஊர்ல பொண்ணுப் பார்த்தாங்க. இப்படித்தான் ஃபோட்டோவைப் பார்த்து ஓகே சொல்லிட்டான். நிச்சயம் பண்ண நேர்ல வர்றதுக்கு அவனுக்கு லீவுக் கிடைக்கலை.அதனால வீட்ல உள்ளவங்கக்கிட்ட நீங்களே நிச்சயம் பண்ணிடுங்க. நான் நேரா கல்யாணத்துக்கு வந்திடறேன்னு சொன்னான். அவங்களும் எல்லா ஏற்பாட்டையும் செய்துட்டாங்க. இவன் கல்யாணம் வரைக்கும் அந்தப் பொண்ணோட வீடியோ கால்ல பேசிக்கிட்டிருந்தான். கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சது அவன் பார்த்த பொண்ணு அது இல்லைன்னு.”“கடவுளே……பொண்ணைப் மாத்திட்டாங்களா?”
“பொண்ணையெல்லாம் மாத்தலை. அதேப் பொண்ணுதான். ஆனா… அனுப்பின ஃபோட்டோவ்ல இருந்த மாதிரி, வீடியோக்கால்ல பேசின மாதிரியெல்லாம் பொண்ணு இல்லை. எல்லாம் கேமரா ட்ரிக். ஏதேதோ… மேக்கப். பேரழகியா தெரிஞ்ச அந்த பொண்ணு ஒரே நாள்ல வேற முகமா தெரிஞ்சா. பாவம் அவன் இடிஞ்சுப் போய்ட்டான். அதான்….இந்தக் காலத்துல பொண்ணை ஃபோட்டோவ்ல பார்த்து ஏமாறக் கூடாது. நேர்ல பார்த்தாத்தான் ஒரிஜினல் முகம் தெரியும். கேமரா ட்ரிக்ஸ், ஃபோட்டோ ஷாப்புன்னு ஒவ்வொருத்தியும் இப்ப உலக அழகி ரேஞ்சுல இருக்காளுங்க. நாமதான் எச்சரிக்கையா இருக்கணும்.” சொல்லிவிட்டு ஜீவா பெரிதாக சிரித்தான். அம்மாவும் கூட சேர்ந்து சிரித்தாள்.
“சரிப்பா… நாளைக்குப் பொண்ணுப் பார்க்கப் போகும்போதே நீ பொண்ணைப் பார்த்துக்க. ஆனா…நீ ஓகே சொல்லியே ஆகணும்”“இதென்னமா கன்டிஷன்? பிடிச்சிருந்தாத்தான் ஓகே சொல்ல முடியும்.”“ ம்…கிட்டத்தட்ட முப்பது பொண்ணுக்கு மேலப் பார்த்தாச்சு. எல்லாப் பொண்ணுங்களும் அழகாத்தானே இருந்தாங்க. உனக்குப் பிடிக்கலையே. இப்படியே தட்டிக் கழிச்சு கழிச்சு முப்பதைத் தாண்டியாச்சு.
இனிமேயும் நீ பொண்ணை தேர்ந்தெடுக்கலைன்னா… அப்பறம் அவங்க உன்னோட வயசைக்காட்டி உன்னை தட்டிக் கழிப்பாங்க. எனக்கும் உனக்குப் பொண்ணுப் பார்த்துப் பொண்ணுப் பார்த்தே உடம்பு இளைச்சுடுச்சு. மனசிலேயும் பலம் இல்லை. இந்தப்பொண்ணுதான் நாம பார்க்கற கடைசிப் பொண்ணு. பார்த்து ஓகே சொல்லிட்டு வந்திடனும். மளமளன்னு கல்யாண வேலைகளை ஆரம்பிச்சிடனும். ஆமா… சொல்லிட்டேன்.” அம்மா கட்டளைப் போல் சொல்ல ஜீவா அம்மாவைப் பார்த்து சிரித்தான். “அம்மா… பொண்ணு எனக்கு ஒத்து வந்தா ஓகே சொல்லப் போறேன். இதிலென்ன இருக்கு?” என்றான்.
“டேய்… இந்தப் பொண்ணை நீ எதை சொல்லியும் தட்டிக் கழிக்க முடியாது. ஏன்னா… பொண்ணு நல்லாப் படிச்சிருக்கா. நல்ல வேலைப் பார்க்குறா. பார்க்க அழகாவும் இருக்கா.” “அப்பறம் என்ன ஓகே சொல்லிடறேன்” என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டான். அம்மாவுக்கும் நம்பிக்கை வந்தது. மறுநாள் மாலை மூன்று மணிக்கு பெண் பார்க்க கிளம்பினர்.கூட்டத்தைக் கூட்டக் கூடாது என ஜீவா கண்டித்து சொல்லியிருந்ததால் தூரத்து அத்தை முறைக் கொண்ட பெண்மணியையும், அவருடைய கணவரையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றனர்.
பெண்ணின் தாயும் தந்தையும் வாசலுக்கே வந்து அழைத்து சென்றனர். வீடு மிகவும் அழகாக இருந்தது. புதிதாக கட்டிய வீட்டைப் போலிருந்தது. அது உண்மைதான் என எடுத்த எடுப்பிலேயே இப்பதான் நாலு மாசத்துக்கு முன்னாடி வீடு கிரகப்பிரவேசம் செய்தோம் என்று சொல்லி சொந்த வீடுதான் எனப் பெருமைப் பட்டுக் கொண்டார் பெண்ணின் தந்தை. “என் பொண்ணுக்கு கலைப் பொருட்கள் செய்யறதுல ரொம்ப ஈடுபாடு” என்று அறைவாசலில் தோரணமாய் தொங்கி கிணுகிணுத்துக் கொண்டிருந்த மணிச்சரங்களையும்… தொலைக்காட்சியின் மீது வைத்திருந்த அலங்காரமான ப்ளாஸ்டிக் மலர்களையும் தன் மகள் செய்தது எனக் காட்டி தன் மகளின் திறமையை பறைசாற்றினார் தந்தை.
பசியைத் தூண்டும் ருசி மிக்க பலகாரங்கள் பரிமாறப்பட்டப் பின் “ பாப்பாக்கிட்ட காபி கொடுத்து அனுப்பு” என தந்தை இட்ட கட்டளைக்கு வந்து நின்ற பாப்பாவைப் பார்த்து தூக்கி வாரிப்போட அதிர்ந்தான் ஜீவா.“பாப்பா பேரு…பிரபா. பிரபாவதி. செல்லமா பாப்பான்னு கூப்பிடுவோம்.” அவர்கள் சொன்னது எதுவும் ஜீவாவின் காதில் விழவில்லை. ‘பிரபா… பிரபாவதி.. பிரபாவதியா இது?’ அவனால் நம்ப முடியவில்லை. கண்கள் விரிய பார்த்துக் கொண்டேயிருந்தான். அவன் கனவிலும் எதிர்பாராத ஒன்று. கண்ணெதிரே இப்படி ஒரு நிகழ்வாய் நிகழும் என நினைக்கவில்லை. அவளை மறுபடியும் வாழ்க்கையில் சந்திப்போம் என நினைக்கவில்லை. சந்தித்துவிடக் கூடாதென்றுதானே ஓடினான். ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்.
யாரை சந்திக்கக் கூடாதென்று ஓடினானோ அவளையே தேடிவந்து பெண் பார்க்கிறான். இதுதான் விதியா?இதுதான் விதி என்பதைப் போல் அவள் பார்த்தாள். அவளுடைய கண்களிலும் அதே அதிர்ச்சி. அவளும் இப்படி ஒரு நிகழ்வை நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள் என்பதை அவளுடைய முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும் காபி தட்டைப் பிடித்திருந்த கைகளின் லேசான நடுக்கமும் உணர்த்தியது.ஆனால்… ஆனால்…. அந்த அதிர்ச்சியை அவள் ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டது மலரைப் போல் இலகுவாக விரிந்த புன்னகையில் தெரிந்தது.
அந்தப் புன்னகையில் சினேகம் மட்டும் தெரியவில்லை. ஒருவித வெற்றி. ஒருவித திமிர் கூடத் தெரிவதாகப்பட்டது.‘பார்த்தியா? என் காதல் உண்மையானது. அதான் என்னிடம் உன்னைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது’ என்று சொல்வதாக அவனுக்குத் தோன்றியது. காபியைக் கொடுத்துவிட்டு உள்ளே போய்விட்டாள். அறைக்குள் நுழையும் போது கூட திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டுப் போனாள்.தலையை குனிந்து கொண்டான் ஜீவா. அம்மா அவனுடைய வேலை, குடும்ப வசதிப்பற்றி பெருமை பேசத் தொடங்க ஜீவாவின் மண்டைக்குள் காலம் கடந்து மறந்து போன காட்சிகள் புதுப்பொலிவுடன் திரைப்படமாய் தெரிந்தன.
அந்த திரைப்படத்தில் பிரபாவதி அலைகள் ஓய்வதில்லை ராதா வயதில் மார்போடணைத்த புத்தகங்களுடனும் முன்னால் விழுந்த இரட்டை சடை ஒற்றை ரோஜா, தாவணியில் சிரித்தாள். “சார்…” ஆசிரியர்களுக்கான ஓய்வறையில் அமர்ந்து மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களைத் திருத்திக் கொண்டிருந்த ஜீவா நிமர்ந்தான்.பிரபாவதி அவனை ஆசையாகப் பார்த்தபடி குழந்தைத்தனமான முகத்துடனும், குறும்புத்தனமான விழிகளுடனும் நின்றிருந்தாள்.
“என்ன பிரபா?” “என்னோட ரெக்கார்டு நோட்.”“ம்…வச்சுட்டுப் போ.” சொல்லிவிட்டு பழையபடி திருத்துவதில் ஈடுபட்டான். போய்விட்டாள். பக்கத்தில் திருத்துவதற்காக அடுக்கி வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தில் அவன் அடுத்து திருத்த எடுத்தது அவளுடைய நோட்டுப் புத்தகம். தாமதமாக கொண்டு வந்து வைத்தாலும் மேலேயே இருந்ததால் திருத்துவதற்கு முன்னிலையில் இருந்தது.
எடுத்து திருத்திக் கொண்டே வந்தவன் அடுத்தடுத்தப் பக்கங்களைப் புரட்டும்போது அந்த காகிதம் இருந்தது. அதை எடுத்தவன் ஏதோ குறிப்பு எழுதிய காகிதம் என எடுத்து வேறொரு பக்கத்தில் வைக்கப்போக அதன் மேற்புறம் அவன் பெயர் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டு சுற்றிலும் பேனாவால் பூ வரையப்பட்டிருப்பதைப் பார்த்ததும் துணுக்குற்றான். எடுத்து பிரித்தான். அதிர்ந்தான்.
அன்புள்ள ஜீவா சார். நான் உங்களைக் காதலிக்கிறேன். ஐ லவ் யூ.தூக்கிவாரிப் போட அதிர்ந்தான். குபீரென வியர்த்தது. படபடப்பாக இருந்தது. சட்டென அக்கம் பக்கம் பார்த்தான். மற்ற ஆசிரியர்களும் அவனைப் போலவே எழுதுவதும், திருத்துவதும். படிப்பதுமாகயிருந்தனர். சுவாசத்தை சீராக்கிக் கொண்டு அதைக் கிழித்து மேஜைக்கடியில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டான்.
‘லூசு…” என முணுமுணுத்தான். கொஞ்ச நாட்களாகவே அவன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். பிரபாவதி அவனைப் பார்க்கும் பார்வையில் வித்தியாசம் இருந்தது. பேசுவதில் ஒரு கொஞ்சல் இருந்தது. கெஞ்சல் இருந்தது. அது அவளுடைய குழந்தைத்தனமான சுபாவம் என நினைத்தான். ஆனால்…இப்படி!அடுத்த வகுப்பிற்கான மணி ஒலித்ததும் ஓய்வறையைவிட்டு வெளியே வந்தபோது பிரபாவதியின் வகுப்பு மாணவிகள் நூலகத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
வாத்தியாருக்கு லவ் லட்டர் கொடுத்திருக்கிறோமே என எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் சக தோழிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டே வந்த பிரபாவதி அவனைப் பார்த்ததும் ‘இருடி’ என தோழிகளிடம் சொல்லிவிட்டு அவனிடம் ஓடிவந்தாள்.“சார்… என் நோட்டை திருத்திட்டீங்களா?” அவள் ஏன் கேட்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. “திருத்திட்டேன். ”“தப்பு ஒண்ணுமில்லையே. நோட்ஸையெல்லாம் சரியா எழுதியிருக்கேனா சார்?”கண்களில் காதல் மின்ன அவள் கேட்க பற்களைக் கடித்தான்.
“கண்றாவியா எழுதியிருக்கே. கிழிச்சு குப்பைத் தொட்டியில போட்டுட்டேன்.”“சார்….”“‘லூசா நீ? வாத்தியாருக்கே லவ் லட்டர் எழுதறியே. அறிவு மழுங்கிடுச்சா? இதெல்லாம் தப்புன்னு உனக்குத் தோணலையா?”“காதலிக்கறது தப்பா சார்?”“தப்புதான். இந்த வயசுல காதலிக்கறது தப்புதான். அதிலும் சொல்லிக் கொடுக்கற வாத்தியாரை காதலிக்கிறது தப்புதான். ”“டீச்சரைக் காதலிக்கறது தப்புன்னா…
கோடிக்கணக்குல செலவு பண்ணி ஏன் சார் ஸ்டுடன்ட் டீச்சரை காதலிக்கிற மாதிரி படம் எடுக்கறாங்க.?”“ சினிமாப் பார்த்து கெட்டுப் போயிருக்கே நீ. இப்பவெல்லாம் காசு சம்பாதிக்கறதுக்காக அப்படி படம் எடுக்கறாங்க.”“இப்ப மட்டும் இல்லை சார். பழைய படத்திலும் இப்படித்தான் சார் இருக்கு. சாரதான்னு ஒரு படம். அதுல கதாநாயகி வாத்தியாரைத்தான் காதலிச்சு கல்யாணம் பண்ணிப்பா. நூத்துக்கு நூறுன்னு ஒருபடம். அதிலேயும் தனக்கு சொல்லிக்கொடுக்கற வாத்தியாரை மாணவி காதலிப்பாங்க.”“அதெல்லாம் காலேஜ்ல… ”“காலேஜ்ல படிச்சா மட்டும் லெக்சரரைக் காதலிக்கலாமா சார்…” அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
“சார்… நான் உங்க மேல உயிரையே வச்சிருக்கேன். நீங்க மட்டும் என்னை காதலிக்கலைன்னா நான் செத்துப் போய்டுவேன்.” சொல்லிவிட்டு ஓடிப் போய்விட்டாள். ஜீவாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கல்லூரிப் படிப்பு முடித்து பி. எட் முடித்த கையோடு இந்த தனியார் பள்ளியில் வேலைக்கு வந்துவிட்டான். குறைந்த சம்பளமாகயிருந்தாலும் நிறைவான ஆசிரியப் பணி. பள்ளியிலேயே மிகவும் இளமையான ஆசிரியர் . சினிமா ஹீரோவைப் போன்ற தோற்றம். அவனுடைய சொல்லிக் கொடுக்கும் திறமையிலும், தொடர்ந்து சில வருடங்களாக அவன் காட்டும் மாணவர் தேர்ச்சியின் விகிதத்திலும் நிர்வாகம் அவன் மேல் கொண்டிருக்கும் மதிப்பும், மரியாதையும் இந்த மாதிரியான காதல் விஷயங்கள் தெரியவந்தால் என்னாகும்?
அவன் திட்டியதால் அவள் திருந்திவிடுவாள் என எதிர்பார்த்தால் திரும்ப திரும்ப அதே மாதரியான காதல் கடிதங்கள் அவளுடைய நோட்டில் வைக்கப்பட்டு அவனுக்கு வந்து கொண்டேயிருந்தன. கடிதங்கள் கவிதைகளாகவும் மாறியிருந்தன. அழைத்து ஆயிரம் புத்தி சொன்னான் பயனில்லை. அடம்பிடித்தாள். படிப்பில் கவனம் போய் மதிப்பெண்கள் குறைந்து…பள்ளி முதல்வரிடம் சொல்லலாமா? பெற்றோரிடம் சொல்லலாமா? பலவாறாக யோசித்து இறுதியில் சத்தமில்லாமல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டான்.
அதன் பிறகு அதை மறந்தே போனான். ஆனால்…இப்பொழுது அவளையே பெண் பார்க்க வந்திருக்கிறான். “என்னப்பா… பொண்ணை பிடிச்சிருக்கா? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” அம்மா காதோரம் கிசுகிசுத்தாள்.
“அம்மா… நான் பொண்ணுக்கிட்ட கொஞ்சம் பேசனும்”அவர்களின் உதட்டசைவிலேயே காதுகளை வைத்திருந்த பெண்ணின் தகப்பனார் பெரிதாக முகம் மலர்ந்து தன்னை பரந்த மனம் கொண்டவராகக் காட்டிக் கொண்டார். “அதுக்கென்ன தாராளமா பேசுங்களேன். ”இருவரையும் மொட்டை மாடிக்கு அனுப்பினர். புடவை முந்தானையை தன் விரல்களால் சுருட்டியபடியே பிரபாவதி வெட்கமும் ஜொலிப்புமாக நின்றிருந்தாள்.“பிரபா… நான் உன்னை சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை. அதுவும்… இப்படி ஒரு சூழ்நிலையில…” “நானும்தான். ஆனா… விதி வலியது” என்று சிரித்தாள்.
“என்ன விதி?”“விதி உங்களுக்கும் எனக்கும்தான் முடிச்சுப் போட்டிருக்கு. அன்னைக்கு நீங்க என் காதலை ஏத்துக்காம டீச்சர், ஸ்டூடன்ட்ன்னு ஏதேதோ காரணம் சொன்னிங்க. என்கிட்ட கூட சொல்லாம வேலையை ரிசைன் பண்ணிட்டு எங்கயோ போயிட்டீங்க. ஆனா… விதியைப் பார்த்தீங்களா? எப்படியோ உங்களை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்கு. அன்னைக்கு டீச்சர் ஸ்டூடன்ட்ன்னு சொல்லி தப்பிச்சுட்டீங்க. இன்னைக்கு நான் உங்க ஸ்டூடன்ட்டும் இல்லை. நீங்க என் டீச்சரும் இல்லை.” சொல்லிவிட்டு அவள் கலகலவென சிரித்தாள்.
ஒரு நிமிடம் அவளை உற்றுப் பார்த்த ஜீவா சொன்னான்.“பிரபா… நீ இன்னும் பழைய விளையாட்டுப் பெண்ணாவே இருக்கே. அன்னைக்கு டீன் ஏஜ்ல பேசினதுக்கும் இப்ப தெளிவான வயசுல பேசறதுக்கும் எந்த வித்தியாசமும் தெரியலை. இன்னைக்கு உனக்கும் எனக்கும் ஆசிரியர், மாணவிங்கற உறவு இல்லாம இருக்கலாம். ஆனா… என்னைப் பொறுத்தவரை எவ்வளவு வயசானாலும் நீ என்னோட மாணவிதான். நான் உன்னோட டீச்சர்தான். அந்த புனிதமான உறவை எந்தக் காரணத்தை முன்னிட்டும், எந்தக் காலத்திலேயும் நான் களங்கப்படுத்திக்க விரும்பலை. கல்வியை பாடமா உனக்கு போதிச்ச என்னால காமத்தை போதிக்க முடியாது.
வா கீழேப் போகலாம்” என்று கூறிவிட்டு அவன் படியிறங்கிப் போனான்.அன்றைக்கு அவன் மேல் உண்டாகாத மதிப்பும் மரியாதையும் இன்றைக்கு அவன் மேல் உண்டானது. அன்று தன் காதலை ஏற்காத அவன் மேல் ஏற்பட்ட கோபம் இன்று ஏற்காமல் போனபோது அவளுக்கு இல்லை.