உங்க அம்மா பாவமில்ல…!! (மகளிர் பக்கம்)
என்ன செய்வது தோழி?
அன்புடன் தோழிக்கு,
எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. தயக்கமாக இருக்கிறது. ஆனால் தீர்வு தெரியாமல் தவிக்கும் எனக்கு தங்களிடம் கேட்பதை தவிர வேறு வழியில்லை. அதனால் தங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான், கணவர், 3 குழந்தைகள். அவர் அரசு அதிகாரி. வருவாய்க்கு குறைவில்லை. எங்களுக்கு மூன்றும் பெண் பிள்ளைகள். பிள்ளைகள் மூவரும் நன்றாக படிப்பார்கள். திறமைசாலிகள். கணவருக்கு பெரிய வீடு கட்டி வாழ வேண்டும் என்ற விருப்பம். அதனால் வேலைக்கு சென்று வர வசதியாக இல்லை என்று சொல்லி வெளியூரில் பெரிதாக வீடு கட்டி தனிக்குடித்தனம் அழைத்து வந்து விட்டார். என் மாமனார், மாமியார் என கணவரின் உறவினர்கள் அடிக்கடி வருவார்கள். அப்படி வருபவர்களை இவரும் நன்றாக கவனிப்பார். அதனால் உறவினர்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும். ஊருக்கு, விசேஷங்களுக்கு போகும் போது, ‘இவர் கவனிப்பை சொல்லியே எல்லோரும் புகழுவார்கள்.
உறவினர்களை மதிக்க வேண்டும், வீட்டுக்கு வருபவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பது சிறு வயது முதலே என் அம்மா சொல்லி தந்தது. ஒரே மகளாக வளர்ந்த எனக்கு உறவுகளுடன், கூட்டமாக இருப்பது பிடிக்கும். அதனால் இவர் தற்பெருமைகளில் எனக்கு பிரச்னையில்லை. இப்படி உறவினர்கள் வந்தாலும் என் அம்மா மட்டும் அவ்வளவாக எங்கள் வீட்டுக்கு வருவதில்லை. வற்புறுத்தி கூப்பிட்டால், விசேஷம் என்றால், வருவார். வந்தாலும் காலையில் வந்து மாலையில் திரும்பி விடுவார். எவ்வளவு வற்புறுத்தினாலும் இரவு தங்கமாட்டார். வந்து போகும் தொலைவு என்பதால் நாங்கள் கூப்பிடும் போதும் வந்து போவார். இத்தனைக்கும் அவர் தனியாள்தான். என்னுடன் பிறந்தவர்கள் யாருமில்லை. எனக்கு அப்பாவும் இல்லை. ஆனாலும் எங்களுடன் வந்து தங்க மாட்டார்.
ஆரம்பத்தில் நாங்க மாமியார் வீட்டில் கூட்டுக் குடித்தனமாக வசித்த போது அப்படி வந்திருக்கிறார். ஆனால் நாங்கள் தனிக்குடித்தனம் வந்த பிறகு அவ்வளவாக வருவதில்லை. அவர் தனி ரகம். யாரையும் அலட்சியப்படுத்தி பேச மாட்டார். அதேபோல் மற்றவர்களை புறம் சொல்லி பேசுவதையும் விரும்ப மாட்டார். கிசுகிசுக்கும் இடங்களில் அவர் இருக்கவே மாட்டார். சத்தமாகவோ, அதிர்ந்தோ பேச மாட்டார். எல்லோரிடமும் அன்பாக, என்பதைவிட மரியாதையாக நடந்து கொள்வார். ஏன் தன் பேத்திகளான, என் மகள்களை கூட ‘ங்க’ என்று மரியாதையாகதான் அழைப்பார்.
அம்மா பள்ளிப்படிப்பை முடித்ததும் வீட்டை விட்டு ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்டவர். திருமணமாகி நான் பிறக்கும் வரை எந்த பிரச்னையும் இல்லையாம். அதன்பிறகுதான் அப்பாவுக்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்தது. அதனை கேட்டதால், அம்மாவுக்கு, அடியும் உதையும்தான் பதிலாக கிடைத்திருக்கிறது. ஆனால் என் அப்பாவுக்கு மரணம்தான் பரிசாக கிடைத்தது. ஆம் அவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார். அதன்பிறகு 19 வயதில், கைக் குழந்தையான என்னுடன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருடைய பெற்றோர்கள் அவரை வீட்டில் சேர்க்கவில்லை. ஆனால் பக்கத்து ஊரில் இருந்த வீடு, நிலத்தை அம்மாவுக்கு கொடுத்து விட்டனர். அதில் கிடைத்த வருவாயில் படித்து அரசு வேலைக்கு போனார். என்னையும் நன்றாக படிக்க வைத்து திருமணமும் செய்து கொடுத்தார். யாரும் நம்மை குற்றம் சொல்லக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.
முதலில் என் அம்மாவைப் பற்றி கேள்விப்பட்டு என் மாமியார் வீட்டில் தயங்கினார்கள். ஆனால் என் கணவர்தான் அவர்களை சமாதானம் செய்தார். அம்மாவை ‘அக்கா’ என்றுதான் இவர் அழைப்பார். என் கணவர் பேசினால்தான் என் அம்மா பதில் சொல்வார். அவராக எதுவும் பேச மாட்டார். ஆரம்பத்தில் ‘வாங்க தம்பி, எப்படியிருக்கீங்க தம்பி… சாப்பிடுங்க தம்பி…’ என்று நன்றாகத்தான் பேசினார். ஆனால் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக என் கணவர் பேசினால்தான் பேசுவார். அதிலும் பெரும்பான்மையான நேரம் தலையை தான் ஆட்டுவார்.
என் கணவர் எப்போதும் ஜாலியாக பேசுபவர். ஒரு முறை அவர் என்னிடம், ‘உங்க அம்மாவுக்கு வயசே ஆகாதா… இன்னும் சின்ன பெண்ணு மாதிரியே இருக்காங்க’ என்பார். திருமணம் ஆன புதிதில், ‘உனக்கும் உங்க அம்மாவுக்கு வித்தியாசமே தெரியல.. ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்க…. என்னைக்குனு தெரியல ஆள் தெரியாம கட்டி பிடிச்சிடப்போறேன்’ என்று கிண்டல் செய்வார். நானும் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் அவர் அதையே அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்.
சில சமயம், அம்மா வீட்டுக்கு வராததற்கும், என் கணவர் அப்படி சொல்வதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று சில நேரங்களில் தோன்ற ஆரம்பித்தது. அதனால் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ‘ஏன் வீட்டுக்கு சரியாக வருவதில்லை… என் கணவரிடம் ஏன் முகம் கொடுத்து பேசுவதில்லை’ என்று அம்மாவிடம் கேட்டேன். ஆனால் அவர் பதில் சொல்லவில்லை. ஒருநாள் கோவிலுக்கு சென்ற போது என் அம்மாவின் தோழியை பார்த்தேன்.
இருவரும் ஒன்றாக படித்தவர்கள். எங்க இருவரின் நலனில் அக்கறை உள்ளவர். அவரிடம் அம்மாவின் செயலைப் பற்றி தெரிவித்ததேன். அம்மா வீட்டுக்கு சரியாக வருவதில்லை என்றும், அவர் அங்கே தனியாக இருப்பதற்கு… இங்கு வந்து எங்களுடன் இருக்கலாமே… நாங்க தனிக்குடித்தனம் தானே இருக்கோம்… நீங்களாவது சொல்லக் கூடாதா’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘அவளாக விரும்பினாள் வருவாள்’ என்றார். உடனே நான், ‘இங்கே வந்து விட்டால் வேலைக்கு போகக் கூட வசதியாக இருக்கும்…. இவர் வேலைக்கு போகும் போது அப்படியே அவங்களையும் டிராப் பண்ணிட்டு போய்டுவாரு’ என்றேன்.
அதைக் கேட்டதும், அவரின் முகமே மாறிவிட்டது. ‘சரி வேறு பேசு’ என்றார். ஆனால் விடாமல் அதை பேசவே, ‘உங்க அம்மா மனதை புரிந்து கொள்ள பாரு… அவ வர விரும்பலனா, ஏதாவது காரணம் இருக்கலாம்’ என்று சொல்லிவிட்டு சென்றவரை, நான் விடாமல் ‘ என்ன காரணம்’ என்று கேட்டு நச்சரித்தேன். என் வற்புறுத்தலினால் அவர் சொன்ன விஷயங்களை கேட்டு எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.
ஆரம்பம் முதலே அம்மா தனியாக இருக்கும் போது அவரிடம், என் கணவர் இரட்டை அர்த்தத்தில் கிண்டல், கேலி செய்துள்ளார். அம்மா விலகிப்போனாலும் இவர் கிட்டபோய் பேசுவாராம்… வர்ணிப்பாராம். நாங்கள் தனிக்குடித்தனம் வந்த பிறகு இது அதிகமாகி விட்டதாம். ஐந்தாண்டுகளுக்கு முன் தோழி வீட்டு விசேஷத்திற்காக, நான் வெளியூர் சென்றேன். அம்மா தான் என் குழந்தைகளை பார்த்துக் கொண்டார். இரவு குழந்தைகள் தூங்கியதும்… இவர், அம்மாவிடம் தவறாக நடக்க முயன்று இருக்கிறார். இவரிடம் தப்பித்து மொட்டை மாடிக்கு சென்றவர், பயந்து மாடி கதவை சாத்திக் கொண்டு அங்கேயே இரவெல்லாம் பனியில் உட்கார்ந்திருக்கிறார்.
காலையில் பொழுது விடிந்ததும், குழந்தைகளிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் ஊருக்கு கிளம்பிவிட்டார். என் கணவரோ, அவரிடம் ‘இந்த விஷயம் உன் மகளுக்கு தெரிந்தால், அவளை வாழா வெட்டியா உன் வீட்டுக்கு அனுப்பிடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். அந்தப் பிரச்னையில் இருந்துதான் எங்கள் வீட்டுக்கு வர, அவர் பயப்படுகிறார் என்று புரிந்து கொண்டேன். மேலும் அம்மாவின் தோழியோ, இந்த விஷயம் எனக்கு தெரிந்தது போல் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டார்.
அதன்பிறகு எனக்கு நிம்மதியில்லாமல் போய்விட்டது. இதை எப்படி என் கணவரிடம் கேட்பது… அவரை எப்படி திருத்துவது என்று புரியாமல் தவித்தேன். ஒருநாள் என் தோழியின் கணவர் அப்படி நடந்து கொள்வது போல் அவரிடம் சொல்லி, ‘இந்த ஜென்மங்கள போலீசில் சொல்லி முட்டிக்கு முட்டி தட்டணும்’ என்று சொன்னேன். அதற்கு இவரோ, ‘அப்படி செஞ்சா உன் தோழி வாழ்க்கைதான் வீணாகும். ஆதரவில்லாத மாமியாருக்கு ஆதரவா இருக்கணும்ன்னு நெனச்சிருக்கான்’ என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அப்படியே திகைத்துப்போய் உட்கார்ந்து விட்டேன். கூடவே இவர், ‘உனக்கு தெரியுமா… மாமியார வச்சிகிட்டா மாடு கண்ணு சேருமாம்’ என்று சீரியசாக சொன்னார்.
பல ஆண்டுகளாக வாழ்க்கையில் சந்தோஷத்தையே பார்க்காத என் அம்மாவுக்கு பேரக்குழந்தைகள்தான் ஆதரவு. அவர்களை கூட பார்க்க முடியாத அவல நிலையில் இருப்பது புரிந்தது. அதன் பிறகு நானும் அவரை வற்புறுத்தவில்லை. இன்று இல்லாவிட்டாலும் வயதான பிறகு ஒரே மகளான என்னுடன் தான் அம்மா இருக்க வேண்டியிருக்கும். அதற்குள் என் கணவரை திருத்த முடியுமா? அம்மாவாக கருத வேண்டிய மாமியாரிடம் தவறாக நடந்து கொள்ள துடிக்கும் என் கணவரை மாற்ற முடியுமா? ஊர், உறவுகளிடம் நல்லவர் என்று பெயர் எடுத்தவர் ஏன் அம்மாவிடம் மட்டும் அப்படி நடக்க வேண்டும்?
தான் செய்யும் பாவங்கள் தன் குழந்தைகளை பாதிக்கும் என்ற அறிவுக்கூட இல்லாதவரை இயல்பான நிலைமைக்கு கொண்டு வர முடியுமா? பாவப்பட்ட என் அம்மாவின் வாழ்க்கை மற்ற அம்மாக்களை போன்று, மற்ற பாட்டிகளை போன்று எப்போது இயல்பாக மாறும்? இந்த விஷயங்களை சொல்லாமல் அவரை இயல்பான நிலைமைக்கு கொண்டு வர முடியுமா? இந்த பிரச்னையால் மனம் குழம்பிப்போய் எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை? குழந்தைகளை கூட சரியாக கவனிக்க முடியவில்லை. இதெல்லாம் சரியாக எனக்கு ஒரு வழி காட்டுங்கள் தோழி.
இப்படிக்கு பெயர் சொல்ல விரும்பாத வாசகி.
நட்புடன் தோழிக்கு,
உங்களின் கடிதம் கண்டேன். உங்கள் நிலை புரிகிறது தோழி. நீங்கள் கூறியதை வைத்து பார்க்கும் பொழுது, உங்கள் கணவரைப் பற்றி நீங்கள் வைத்திருந்த பிம்பம் உடைந்து போனதாக தெரிகிறது. பொதுவாக பெரும்பான்மையான பெண்கள் கணவனை புரிந்து கொள்வதில் தவறிவிடுகின்றனர். மனைவியிடம் நன்கு பழகுவதாலும் மனைவியை அன்பாக பார்த்துக் கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சிறந்த கணவனாக இருந்துவிட முடியாது. நாம் அப்படித்தான் ஒரு அளவுகோல் வைத்திருக்கிறோம். ஒருவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும், தங்களிடம் நன்றாக நடந்து கொண்டால் போதும் ‘அவன் நல்லவன்’ என்று சான்றிதழ் கொடுத்து விடுகிறோம்.
பொதுவாக ஒருவர் மனைவிக்கு சமமான உரிமை கொடுப்பவரா, மனைவியை மதிப்பவரா, பெண்களைப்பற்றி அவருடைய மதிப்பீடு என்ன, மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்பவரா, பெண்களை தனக்கு நிகராக நடத்தாமல், அடிமைப்படுத்தும் எண்ணம் கொண்டவரா என்பதையெல்லாம் பொருத்தே அவரின் செய்கைகளும் அமையும். உங்கள் கணவர் உங்களை பொறுத்தவரை இவ்வளவு நாள் நல்லவராக இருந்தார் என்று கருதுகிறீர்கள். ஒரு ஆணாக அவர் எத்தகைய குணம் கொண்டவர் என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். அவர் நல்லவர் போல் நடித்ததால் தான், இந்த சிக்கல்கள் உங்களுக்கு புரியாமலே இருந்திருக்கின்றன.
மனைவி என்பவள் கணவனுக்கு அடிமை அவள் கணவன் எந்த செயல் செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கணவரின் கீழ்படிதான் மனைவி நடக்க வேண்டும். கணவன் என்ன தப்பு செய்தாலும் அதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக மற்ற பெண்களிடம் பழகுவதையும் சகித்துக்கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற கொள்கைப்படி மனைவி இருக்க வேண்டும். அதேபோல் ஒரு பெண் கணவனை இழந்து தவிக்கும் பொழுது அவள் பலவீனமாக இருப்பாள். அவளை ஆண் எளிதாக வசியப்படுத்தலாம் என்றெல்லாம் எண்ணும் குணமுடையவர் உங்கள் கணவர். ஆகையால்தான் மருமகன் என்பதை மறந்து மனைவியின் தாய் தனக்கும் இன்னொரு தாய் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் தான் இழி செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இந்த குணம் அவருக்கு புதிதாய் வந்ததாக தெரியவில்லை. உங்களுக்கு வேண்டுமானால் கணவனாக சமூக கடமைகளை நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் மனைவியின் உணர்வுகளை மதிப்பவராய் தெரியவில்லை. மனநல மருத்துவராக மனசோர்வு, மனக்கவலை மற்றும் மன நோய் ஏற்படும் பொழுது சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் ஒருவரின் அடிப்படை குணத்தை மாற்றுவது இயலாத காரியம். அவராகவே அதைப் புரிந்து கொண்டு மாறினால்தான் தீர்வு உண்டு. என்னை பொறுத்தவரை நீங்கள் இந்த விஷயத்தில் இரண்டு விதமான அணுகுமுறைகளை பின்பற்றலாம். முதலாவது நீங்கள் இந்த பிரச்னை குறித்து அவரிடம் நேரடியாக விவாதம் செய்து அவருக்கு புரிய வைக்க முயற்சித்து தீர்வு காணலாம்.
இரண்டாவது அவர் செய்வதை ஏற்க முடியவில்லை எனில் அவரை விட்டு ஒதுங்கி விடுவது… ஆனால் அவரை விட்டு விலகி வரும் போது ஏற்படும் பிரச்சனைகளை என்னால் சமாளிக்க முடியாது சமுதாய ரீதியாக அது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் எண்ணினால் அவருடன் இருந்து கொண்டே இந்தப் பிரச்சனையை போராடி தீர்க்க முயற்சி செய்யலாம். நேரில் உங்களையும் உங்கள் கணவரையும் பார்த்துப்பேசினால் மட்டுமே ஒரு சரியான தீர்வை கூற இயலும். உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலையும், கஷ்டங்களையும் சரி செய்ய நல்ல மனநல மருத்துவரை நேரில் அணுகி சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.