அலுவலகத்திற்கு திரும்பும் ஐ.டி. ஊழியர்கள், மனதளவில் தயாராவது எப்படி?(மகளிர் பக்கம்)
இத்தனை நாட்களாக ஐ.டி ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய சொல்லிய அலுவலகங்கள், இப்போது தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஏப்ரல் இறுதியில் பெரும்பாலான நிறுவனங்களின் அலுவலகம் திறக்கப்பட்டு இனி மக்கள் ஆபீஸுக்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது. சிலர் இந்த செய்தியைக் கேட்டு சந்தோஷமடைந்தாலும், குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு இது கசப்பான செய்தியாகவே இருக்கிறது. சுமார் இரண்டாண்டுகளாக வீட்டிலிருந்தே வேலை செய்து பழகியவர்களுக்கு இப்போது மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் அந்த மாற்றம் கொஞ்சம் அமைதிஇன்மையை கொடுக்கும்.
சமீபத்தில் ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூல் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில், வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, வேலையின் பளு அதிகரிப்பதுடன், அதிகப்படியான சோர்வையும் குழப்பத்தையும் தருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நிறுவனங்களும் ஊழியர்களுக்கு அதிகப்படியான வேலையை தருவதாக தெரிய வந்துள்ளது. அலுவலக நேரத்தையும் தாண்டி பல ஊழியர்கள் வெளிநாட்டில் இருக்கும் உயர் அதிகாரிகள்/ வாடிக்கையாளர்களின் நேரத்திற்கேற்ப இரவு 12-2 மணி வேலை பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக பல அம்மாக்கள் இந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். அவர்கள் வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தை பராமரிப்பு என தங்கள் பொறுப்புகளுக்கு மத்தியில் எந்த இடைவெளியும் இல்லாமல் சோர்ந்து போய் இருக்கிறார்கள். கோவிட் லாக்டவுனில், பல அம்மாக்கள் மன அழுத்தம், நோய்த் தொற்று தாக்கிவிடுமோ என்ற கவலை எனப் பலவிதமான உளவியல் ரீதியான பிரச்சனையை சந்தித்தனர். முதலில் வீட்டிலிருந்து வேலை செய்வது பதட்டத்தை கொடுத்தாலும், இப்போது பலருக்கும் அதுவே வழக்கமாகிவிட்டதால், அவர்களுக்கு மீண்டும் அலுவலகம் போகும் போதும், பல மனிதர்களுக்கு நடுவே கூட்டத்தில் அமர்ந்து வேலை செய்யும் போதும் மனதளவில் அமைதியை இழக்க நேரிடலாம்.
பல வருடங்களாக நாம் அலுவலகத்திற்கு சென்று தான் வேலை செய்து வந்திருக்கிறோம். இப்போது இரண்டாண்டுகளாகத்தான் வீட்டிலிருந்து வேலைச் செய்யும் பழக்கம் உருவானது. ஆனால் சிலர் காலேஜ் முடிந்து உடனே வர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரத்தில் தான் வேலையில் சேர்ந்துள்ளனர். சிலர் அவர்களது சொந்த ஊரில் வேலை செய்து வந்தனர். கோவிட் சமயத்தில் குழந்தைப் பெற்ற அம்மாக்கள் பலர் இது நாள் வரை தங்கள் குழந்தையைவிட்டு பிரியாமல், வீட்டிலிருந்தே வேலைச் செய்து வந்திருக்கின்றனர். ஆனால் இப்போது மீண்டும் இவர்கள் எல்லோரும் அலுவலகம் திரும்ப வேண்டும் என்ற சூழல் ஏற்படுத்தும் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை எப்படி சமாளிக்கலாம் என மனநல மற்றும் குழந்தை நல மருத்துவரும், மூத்த உதவிப் பேராசிரியருமான டாக்டர் நீலகண்டன் கூறுகிறார்.
‘‘பெண்கள் வீட்டிலிருந்து வேலை செய்தாலும், வீட்டிலிருக்கும் மற்ற வேலைகளையும் அவர்கள்தான் செய்கிறார்கள். இதனால் அவர்கள் வர்க்-லைஃப் பேலன்ஸ் எனப்படும் தனிப்பட்ட வாழ்க்கையையும், அலுவலக வேலையையும் சமாளிக்க முடியாமல், ஒவ்வொரு நாளும் அவசரமாக சாப்பிட்டு, அவசரமாக சமைத்து, நல்ல ஓய்வும் சரியான பொழுதுப்போக்கும் இல்லாமல், உடற்பயிற்சியும் இல்லாமல் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் மீண்டும் அலுவலகம் செல்லும் போது வேலை, வீடு, பொழுதுபோக்கு என ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்க முடியும் என்பதை நினைத்து சந்தோஷப்பட வேண்டும்.
சிலர் கொரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டு மீண்டு இருப்பார்கள், சிலர் அவர்களது உற்றார், உறவினர் அல்லது நண்பரை கொரோனாவிற்கு பலி கொடுத்திருப்பார்கள். அவர்களுக்கு மீண்டும் வெளியில் வருவதே அச்சத்தைக் கொடுக்கலாம். குறிப்பிட்ட சிலர் இந்த இரண்டாண்டுகளாகவே வெளியில் வராமல், வீட்டிலேயே கொரோனா பயத்தால் அடைந்து கிடக்கின்றனர். அவர்களுக்கு மீண்டும் அலுவலகத்திற்கு திரும்புகிறோம் என்ற பதட்டத்தைவிட, கொரோனா தாக்குமா என்ற பயமே அதிகமாக இருக்கும். அப்படி இருக்கும் போது அவர்கள் தங்கள் சக ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
சில நாட்கள், தங்கள் பதட்டம் குறையும் வரை அலுவலகத்திற்கு தனிப்பட்ட போக்குவரத்தை பயன்படுத்தி, நண்பர்களுடன் ஒன்றாக ப்ரேக் எடுத்துக்கொள்வதைதவிர்க்கலாம். கொரோனா தாக்கிவிடுமோ என்ற பயம் குறைந்ததும், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பலாம். வேலைக்குச் செல்லுவதற்கு ஒரு வாரம் முன்பே, உங்களுடைய அலுவலக நேரப்படி, உங்களது நாளையும் மாற்றிக்கொள்ளுங்கள். அலுவலகம் செல்லும் போது எந்த நேரத்தில் எழுந்து தயாராகுவீர்களோ அதே போல உங்களது நேரத்தையும் பிரித்துக்கொண்டு வேலை செய்யுங்கள். மதிய உணவையும் அலுவலக ப்ரேக் நேரத்தில் சாப்பிடுங்கள்.
நீங்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்லும் முன்பு, வாரம் ஒரு முறை அல்லது இரு முறை உங்களுடைய அலுவலகத்துக்குச் சென்று வாருங்கள். பல நிறுவனங்கள் முதலில் வாரம் ஒரு முறை/இரு முறை அலுவலகத்துக்கு வரச் சொல்லி, சில நாட்களுக்குப் பின்னர் தான் தொடர்ந்து வரச் சொல்கிறார்கள். இது ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்துக்குப் பழக உதவியாக இருக்கும்.
இது தவிர, உங்களுடைய குழந்தைகளையும் இதற்கு தயார்படுத்துவது முக்கியம். அவர்களுடைய வேலையை அவர்களே செய்து பள்ளிக்கு கிளம்ப வேண்டும். அவர்களை பார்த்துக் கொள்ளவும், பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்வது அவசியம். இதனால் வீட்டில் என்ன நடக்கிறது என்ற பதட்டம் இல்லாமல், வேலையில் கவனம் செலுத்த முடியும். வீட்டில் நீங்கள் வேலை செய்த போது சரியான உடற்பயிற்சி இல்லாமல் போயிருக்கலாம். அலுவலக வேலைக்கு நடுவே வீட்டு வேலை என சரியான ஒரு எல்லையை வகுக்காமல் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையையே பலரும் கைபிடித்து வந்தனர். ஆனால் இப்போது உங்களுக்கு மீண்டும் அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து லஞ்ச் ப்ரேக் செல்வது, டீ அருந்துவது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.
அலுவலகத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம். அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பு, உங்களுடைய அலுவலக நண்பர்களிடம் போனில் பேசுங்கள். அவர்கள் எப்படி இந்த புதிய மாற்றத்திற்கு தயாராகுகிறார்கள் எனக் கேளுங்கள். உங்களுடைய உயர் அதிகாரியிடமும் பேசுங்கள். அவர்கள் எந்த மாதிரியான கோவிட் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள். இதெல்லாம் மீண்டும் நீங்கள் அலுவலக வேலைக்குத் திரும்ப உதவியாய் இருக்கும்.
பல மாதங்களாக அலுவலகத்திற்குச் செல்லாததால், ஃபார்மல் உடையை நீங்கள் அணிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பும் சூழ்நிலை உருவாகி வருவதால், முன் கூட்டியே அலுவலகத்திற்கான புதிய உடைகளை வாங்குவது அல்லது பழைய உடைகளை ஐயர்ன் செய்து வைத்துக்கொள்ளலாம். இப்படி வீட்டு பொறுப்புகளையும் அலுவலக பொறுப்புகளையும் முன்கூட்டியே தயாராக வைத்துக்கொள்வதன் மூலம, கடைசி நிமிடப் பதட்டத்தை தவிர்க்க முடியும்.
இதையெல்லாம் தாண்டி நீங்கள் வேலைக்கு திரும்ப பயப்படும் காரணம் என்ன என்பதை நிதானமாக ஆராயுங்கள். உங்கள் கவலைக்கு காரணம் உங்களுடைய மன அழுத்தமா, வேலை பளுவா அல்லது உங்களுடன் வேலைப் பார்க்கும் சக ஊழியர்களா என யோசியுங்கள். சரியான காரணத்தை கண்டுபிடித்து, அதை எப்படி மாற்ற முடியும் என சிந்தியுங்கள்.
அப்படி இருந்தும் உங்களுக்கு மீண்டும் அலுவலகம் செல்வதில் தயக்கம் இருந்தால், ஒரு வார காலம் பொறுத்திருங்கள். அலுவலகம் செல்லத்தொடங்கி சில நாட்கள் ஆகியும் உங்கள் பதட்டம் குறையாத போது, உளவியல் நிபுணரின் உதவியை நாடலாம். அவர்களிடம் உங்கள் பிரச்சனையைக் கூறி அதற்கான தீர்வை கண்டுபிடிக்கலாம்’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் நீலகண்டன்.