பிங்க் நிற வானத்தை படம் பிடிக்க விடியற்காலை காத்திருந்தோம்!(மகளிர் பக்கம்)
‘‘இது என்னுடைய முதல் படம். என் ஸ்ட்ரென்த் டாக்குமென்டரி படங்கள்தான். நீ இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளரா இருக்கியான்னு இயக்குனர் கேட்ட போது… அது நாள் வரை நான் பிக்ஷன் படங்கள் செய்ததில்லை. அதனால் செய்து பார்க்கலாம்ன்னு தான் களம் இறங்கினேன். அந்த அனுபவமே ரொம்ப வித்தியாசமா இருந்தது’’ என்கிறார் கார்கி படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரையந்தி.
‘‘நான் சென்னை பொண்ணு. இங்கு தான் படிச்சேன். விஸ்காம் படிச்சி முடிச்சிட்டு என்ன செய்றதுன்னு முதல்ல தெரியல. இந்த துறையைப் பொறுத்தவரை நிறைய வாய்ப்புகள் இருக்கு. எதை தேர்வு செய்யணும்ன்னு முதல்ல புரியல. டிசைனரா வேலை செய்யலாம்ன்னு நினைச்சேன். ஆனால் எனக்கு டிசைனிங்விட போட்டோகிராபி பிடிச்சிருந்தது. அதனால் அது குறித்து தனிப்பட்ட பயிற்சி எடுத்து படிச்சேன். அதன் பிறகு பெங்களூரில் வேலை. அங்க நிறைய கத்துக்கிட்டேன். போட்டோகிராபியில் உள்ள நுணுக்கங்கள் எல்லாம் புரிந்தது.
அங்க வேலைப் பார்க்கும் போது விளம்பர படங்கள், டாக்குமென்டரி படங்கள் எல்லாம் செய்ய ஆரம்பிச்சேன். அதற்காக ஆப்கானிஸ்தான், காஷ்மீர் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள எல்லா இடங்களுக்கும் பயணம் செய்திருக்கேன். பெங்களூரில் நான் வேலைப் பார்த்த இடத்தில் தான் எனக்கு பிரேமுடைய அறிமுகம் கிடைச்சது. ஒருத்தரை பார்த்தவுடனே நமக்கு இவர் செட்டாவார்ன்னு தோணும்ல… அப்படித்தான் எனக்கும் பிரேமுக்கான வேவ்லெந்த் இருந்தது.
நாங்க இரண்டு பேரும் சேர்ந்து வேலையில் ஈடுபட ஆரம்பிச்சோம். ஒரு கட்டத்திற்கு பிறகு நாங்க இருவருமே வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தனியாக செயல்பட ஆரம்பிச்சோம். கேமரா பொறுத்தவரை ஒரு ஷூட் போகும் போது மற்ற கேமராமேனுடன் நல்ல வேவ்லெந்த் இருந்தா தான் வேலை செய்ய முடியும். நான் என்ன யோசிப்பேன்னு பிரேமுக்கு நல்லாவே தெரியும். எனக்கும் அப்படித்தான்.
அதனாலேயே நாங்க இருவரும் டிவின்கேமரா கான்செப்ட்டில் தான் வேலைப் பார்ப்போம். அதாவது நான் ஒரு ஷாட் வைட் ஆங்கிளில் வச்சா, அவன் க்ளோசப் ஷாட் வைப்பான். அப்பதான் இரண்டு விதமான எமோஷன்களும் கேப்சர் செய்ய முடியும். இல்லைன்னா மறுபடியும் ஷூட் செய்யணும். மேலும் எப்ப க்ளோசப் வைக்கணும்ன்னு எல்லாம் நாங்க பேசிக்கலைன்னாலும், எங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது’’ என்றவர் கார்கி படத்தில் கிடைத்த வாய்ப்பினைப் பற்றி பகிர்ந்தார்.
‘‘இந்தப் படத்திலேயும் நானும் பிரேமும் சேர்ந்து தான் ஷூட் செய்திருக்கோம். எனக்கு கார்கி படத்தின் இயக்குனர் கவுதம் சாரை ரொம்ப நல்லாவே தெரியும். நான் என் டாக்குமென்டரி படம் ஷூட் செய்தாலும், அதை அவருக்கு அனுப்புவேன். அவரும் அதைப் பார்த்து அதில் உள்ள நிறை குறைகளைப் பற்றி சொல்வார். ஒரு முறை பரத் பாலா சாருக்காக ஒரு டாக்குமென்டரி செய்திருந்தேன். அதையும் கவுதம் சாருக்கு அனுப்பி வச்சிருந்தேன்.
அவருக்கு அதில் நான் பயன்படுத்திய ஷார்ட்ஸ் எல்லாம் ரொம்பவே பிடிச்சிருந்தது. அதில் நான் பயன்படுத்திய லைட்டிங் டாக்குமென்டரி மாதிரி இல்லாமல் சினிமா ஸ்டைலில் இருந்ததாக சொன்னார். இது நடந்து நாலு வருஷத்திற்கு பிறகு கவுதம் சார் ஒரு நாள் என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்து படிக்க சொன்னார். நானும் படிச்சு பார்த்தேன். எனக்கு கதை ரொம்பவே பிடிச்சிருந்தது. அந்த கதையின் டயலாக் எல்லாம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தது.
பெண்களை மையமா வச்சு நடக்கும் படம் தான் என்றாலும், அந்த கதைக்கு ஜஸ்டிஸ் செய்திருந்தார். அதை அவரிடம் சொன்னேன். உடனே அவர் இந்த படத்துக்கு நீ ஒளிப்பதிவாளரா செய்து கொடுன்னு சொன்னார். இது நாள் வரை டாக்குமென்டரி மற்றும் விளம்பரங்கள் தான் செய்து வந்தேன். வெள்ளித்திரையில் இது எனக்கு முதல் அனுபவம். இருந்தாலும் செய்ய முடியுன்னு நம்பிக்கையால் சரின்னு சொன்னேன். உடனே அவர் டாக்குமென்டரி டச் இல்லாமல், ரியலிஸ்டிக்கா இருக்கணும்ன்னு சொன்னார். அப்படித்தான் நானும் பிரேமும் இந்த படத்தில் கமிட்டானோம்.
நாங்க ஷூட் செய்த எல்லா இடங்களும் லைவ் லொகேஷன் என்பதால், ரியலிஸ்டிக் உணர்வினை கொண்டு வர முடிஞ்சது. அதே சமயம் ஷூட்டிங் செய்யும் இடத்தில் 100% சூரிய வெளிச்சத்தை மட்டுமே நம்பி வெளிச்சத்தை கொண்டு வர முடியாது. அதனால் அந்த இடத்தில் சூரிய வெளிச்சம் இருந்தால் எப்படி இருக்கும்ன்னு ரீகிரியேட் செய்தோம். அதாவது ஒரு வீடுன்னா அந்த வீட்டின் ஜன்னல், பால்கனி, வாசல் கதவு வழியாக வெளிச்சம் வரும்.
அந்த வெளிச்சத்தை முதலில் குறிப்பு எடுத்து அங்க நாங்க லைட்டிங் செட் செய்தோம். காரணம் ஒரு காட்சி எடுக்க கொஞ்சம் நேரமாகும். அது வரை அந்த இடத்தில் வெளிச்சம் இருக்கும்ன்னு சொல்ல முடியாது. நாம வானம் எப்போது எப்படி இருக்கும்ன்னு நம்ப முடியாது. ஒரு ஷாட்டில் சாய்பல்லவி வீட்டில் உள்ள ஜன்னல் கதவு எல்லாம் மூடுவாங்க. அப்ப அந்த ஜன்னல் வழியா வெளியே இருந்து வெளிச்சத்தை லைட் மூலமா செட் செய்திருந்தோம். திடீரென்று வானம் நல்லா பளிச்சென்று இருக்கும். அதை மனதில் கொண்டு நாம ஷூட் செய்வோம். அப்படியே அந்த சூழல் மாறிடும்.
அடுத்து சாய்பல்லவி சென்னையில் இருப்பது போல காண்பிக்கணும். நான் ஏற்கனவே டாக்குமென்டரிக்காக சென்னை முழுக்க பயணம் செய்திருந்ததால், எந்த இடத்தை காண்பிச்சா சென்னைன்னு மக்களுக்கு புரியும்ன்னு தெரியும். அந்த இடங்களை எல்லாம் நான் சாய்பல்லவி மற்றும் காளி சார் வச்சு ஷூட் செய்தோம். அதேபோல் எந்த நேரத்தில் எந்த இடத்திற்கு போனா குறிப்பிட்ட சில விஷயங்களை கேப்சர் செய்ய முடியும்ன்னு தெரிந்திருந்ததால் அங்கெல்லாம் சென்று ஷாட்களை எடுத்து வந்தோம். படத்தில் ஒரு சீனில் சூரியன் விடியும் போது பிங்க் நிறத்தில் வானம் இருக்கும். அந்த ஷாட்டுக்காக விடியற்காலை ஐந்து மணிக்கு காத்திருந்து எடுத்தோம்.
அடுத்து ஒரு சில மூவ்மென்ட் ஷாட்ஸ் கொஞ்சம் ஷேக்கியா எடுத்திருப்போம். அப்பதான் அந்த சூழலுக்கு ஒரு டென்ஷனை கொடுக்க முடியும். சாய்பல்லவி அவங்க அப்பாவ தேடி போலீஸ் ஸ்டேஷனுக்கு போவாங்க. அது வரை எந்த ஒரு சலனமும் இல்லாம பயணித்த அவங்க வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும். அந்த நடுக்கத்தை கேமரா மூலமா உணரச் செய்தோம். அந்த சமயம் கேமராவை ஸ்டாண்டில் வச்சு எடுத்தா… அந்த காட்சியில் நாம் உணர்ச்சிகளை உணர முடியாது.
மனசுக்குள் இருக்கும் பதட்டம் கேமரா மூலமாகவும் வெளியாக வேண்டும். அப்பதான் அந்த சூழலில் நிலவும் டென்ஷன் குறித்து மக்களுக்கு புரிய வைக்க முடியும். அடுத்து சாய்பல்லவியின் அப்பாவை கோர்ட்டிற்கு கொண்டு வருவாங்க. அங்க ஏற்படும் சின்ன சலனத்தினால் அவங்க அப்படியே தலையில் கைய வச்சு கீழே உட்காருவாங்க. இந்த ஷாட் இப்படித்தான் வரணும்னு எல்லாம் நாங்க முன்பே பிளான் செய்யல. ஆனால் சாய்பல்லவி, அந்த சீனுக்கு ஒரு எமோஷனை வெளிப்படுத்த வேண்டும்ன்னு நினைச்சு, அந்த சீனை தன் கையில் எடுத்து நடிச்சாங்க. அவங்க எமோஷனை டிஸ்டர்ப் செய்யாமல், அப்படியே கேப்சர் செய்யணும் என்பதால 360 டிகிரி கோணத்தில் கேமராவை ரன் செய்திருந்தோம்.
முதல்ல பிக்ஷன் படம் செய்யப்போறோம்ன்னு என்னால நம்பவே முடியல. நான் படம் பார்ப்பேன். ஆனால் அந்த துறை எப்படி இயங்கும்ன்னு எனக்கு தெரியாது. முதல் இரண்டு நாள் ரொம்பவே கஷ்டப்பட்டேன். இவங்க வேலைப் பார்க்கும் ஸ்டைல் எல்லாம் ரொம்ப வேகமா இருந்தது. அதனால் நாங்க ஒரு ஷாட் எடுப்பதற்கு முன்பே, எங்க கேமரா இருக்கணும்… எப்படி அந்த ஷாட் போகும்ன்னு எல்லாம் பார்த்து வச்சிடுவோம். அதேபோல் சாய்பல்லவியின் நிறத்தில் ஒருத்தர் எங்க டீமில் இருந்தார்.
அவர வச்சு அவங்களுக்கு ஏற்ப லைட், ஷாட் எல்லாம் தயார் செய்து ரெடியா வச்சிடுவோம். ஆக்ஷன் சொன்னதும் கேமரா ரோலாயிடும். சில சமயம் டைரக்டர் சொல்லாம அவங்களே சீன்ல நடிப்பாங்க. அந்த நேரத்தில் நாம செட் செய்திருக்கிறது சரியாவராது. அதனால் எங்க ேகமரா அவங்கள எல்லா நேரத்திலும் பின்தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இந்த படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச சீன்… சரவணன் சார் வீட்டிற்கு சென்று அங்கு அடி வாங்கிட்டு காளி சாரோட பைக்கில் வருவாங்க.
அந்த ஷாட்டினை நாங்க பின்னாடி காரில் கேமராவை வச்சு எடுத்தோம். அந்த நேரம் அவங்க தலைக்கு பின்னாடி பல வண்ணங்கள் தெரியும். அது எல்லாமே அந்த நேரத்தில் அங்கிருந்த லைட் கொண்டு தான் ஷூட் செய்தோம். நாங்க எந்த லைட்டும் செட் செய்யல. ரொம்பவே நாச்சுரலா இருந்தது. இப்ப டெக்னாலஜி நிறைய மாறிடுச்சு. கேமராவிலும் பல தொழில்நுட்பங்களை புகுத்தி இருக்காங்க.
டாக்குமென்டரியில் எல்லாம் நாங்க இவ்வளவு பயன்படுத்த மாட்டோம் என்பதால், இந்த அனுபவம் எனக்கு நிறைய விஷயத்தை கற்றுக் கொடுத்திருக்கு. இப்ப முதல் படம் முடிச்சிருக்கேன். அடுத்தடுத்து படம் செய்ய முடியும்னு நம்பிக்கையும் தைரியமும் எனக்கு கார்கி கொடுத்திருக்கு. டாக்குமென்டரி படங்கள் ஒரு பக்கம் செய்தாலும், சினிமாக்களிலும் அடுத்து கவனம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றார் ஸ்ரையந்தி.