திர்ப்பதம் கற்கலாம் வாங்க! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 24 Second

மெலிட்டா ஜோயல். மதுரையில் பிறந்து வளர்ந்தவர். பொறியியல் பட்டதாரி, மதுரையிலேயே ஒரு ஐ.டி கம்பெனியில் கிராஃபிக் டிசைனிங் துறையில் வேலை செய்தார். கிராஃபிக் டிசைனிங், வெப் டிசைனிங் தான் மெலிட்டாவின் பேஷன். அதே துறையில் வேலையும் அமைந்ததால், திருமணமாகி குழந்தை பிறக்கும் வரை பதினைந்து ஆண்டுகள் இந்த துறையில்தான் பணி செய்து வந்துள்ளார். குழந்தை பிறந்ததும், தன்னுடைய முழு கவனமும் குழந்தை வளர்ப்பில்தான் இருக்க வேண்டும் என்று விரும்பவே வேலையை விட்டுள்ளார்.

தன் மகனுடன் பேசி பழகும் போது தான், ஒரு தாயாகவும் தொழில்முனைவராகவும் மெலிட்டா வளர்ந்துள்ளார். தன் குழந்தைக்கு சின்னச் சின்ன பாடங்களை வார்த்தைகளை சொல்லிக் கொடுக்கும்போது, குழந்தைக்கு என்ன தேவை… குழந்தைக்கு புரியும்படி எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் போன்ற முக்கிய அனுபவங்களை பெற்றுள்ளார். தன் கணவருக்கு பெங்களூரில் வேலை என்பதால், குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வரும் மெலிட்டாவுக்கு தன்னுடைய மகன் தங்களுடைய தாய் மொழியான தமிழ் மொழியை அதிகம் கேட்க முடியாமல் அதை படிக்க முடியாமல் திண்டாடுவதை கவனித்துள்ளார்.

‘‘என்னுடைய வீட்டில் என் குழந்தைக்கு நான் மாண்டசரி முறையில் தான் கல்வி கற்பித்து வந்தேன். நானும் என் கணவரும் குழந்தையிடம் தமிழ்-ஆங்கிலம் என இரண்டு மொழியிலுமே சரளமாக பேசுவோம். ஆங்கிலம் கற்பது எவ்வளவு முக்கியமோ அதே போல என் குழந்தைக்கு தமிழ் மொழியிலும் ஈடுபாடு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. ஆனால் தமிழ்நாட்டை விட்டு வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் மொழியை சரியாக கற்கமுடியாமல் கடைசி வரை அதை ஒரு கடினமான மொழி என்று நினைத்து நமக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத மொழிகளையெல்லாம் கூட கற்பது புரிந்தது.

இது போன்று தமிழகத்திற்கு வெளியே வசிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் தமிழகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் தமிழை இன்னும் எளிதாக ஆர்வமுடன் கற்க வேண்டும் என்பதற்காக எளிய தமிழ் புத்தகங்களை வடிவமைத்து கொடுக்கலாம்ன்னு திட்டமிட்டேன். அதன் ஆரம்பம்தான் இந்த ‘தாத்தாஸ் டேல்ஸ்’ (Thatha’s tales). நம் குடும்பத்தில் இருக்கும் ஒரு உறுப்பினர் குழந்தைக்கு தமிழ் எழுத்துக்களையும் வார்த்தையையும் கற்றுக்கொடுத்தால் அது எவ்வளவு எளிதாக இருக்குமோ அதே மாதிரி தான், நான் இந்த புத்தகங்களையும் எளிதாக உருவாக்கினேன்.
தாத்தாஸ் டேல்ஸ் என்ற பதிப்பகத்தை ஆரம்பித்து அதில் எளிதான தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்றல் அட்டைகளை வெளியிட ஆரம்பித்தேன்.

இந்த கற்றல் அட்டைகள் எழுத்துக்களை படிக்க தெரியாத குழந்தைகளுக்கு படங்களை பார்த்து அதை பெற்றோர்கள் சொல்லி கேட்க உதவியாய் இருக்கும். என்னுடைய பதிப்பகத்தின் கான்செப்ட்டே மினிமலிசம் தான். குழந்தைகளுக்கு எளிமையான வடிவத்தில். எளிமையான முறையில் மொழிகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாக கொண்டு இந்த பதிப்பகத்தை ஆரம்பித்தேன். புத்தகத்தை எழுதி அதை வடிவமைத்து, அதை முதலில் என் மகனிடம்தான் கொடுத்து சோதனை செய்வேன்.

அவனுக்கு அந்த புத்தகத்தை புரிந்து கொள்வதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதில் கொஞ்சம் மாற்றம் செய்வேன். அல்லது கூடுதலான விவரங்கள் ஏதாவது தேவைப்பட்டால், அதையும் சேர்த்து இந்த புத்தகங்களை நேர்த்தியாக்கினேன். என்னுடைய புத்தகத்தின் வழியாக என் மகன் ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் சரளமாக பேச ஆரம்பித்தான். அப்போது தான், குழந்தைகளால் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளையும் கற்க முடியும் என்றும், நாம் நினைப்பது போல அது அவர்களுக்கு எந்த குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தாது என்று புரிந்து கொண்டேன்.

தாத்தா டேல்ஸ் பதிப்பகத்தில் மற்றுமொறு படைப்பு ‘‘தமிழ் கற்கலாம் வாங்க” தொடர். அதில் ‘எதிர்ப்பதம் கற்கலாம் வாங்க’ எனும் புத்தகத்தை 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டேன். அதன் இரண்டாம் பாகத்தை அடுத்த மாதம் ஏப்ரலிலேயே வெளியிட்டேன். இந்த புத்தகங்களில் எதிர்ப்பதங்கள், எதிர்ப்பதங்கள் அடங்கிய மூன்று அல்லது ஐந்து வரிகளில் படங்களுடன் என எளிமையான முறையில் குழந்தைகளுக்குத் தமிழை கற்றுக்கொடுக்கும் முறையில் வடிவமைத்திருக்கிறேன். ஒரு வாடிக்கையாளர் இதே போன்ற கற்றல் அட்டைகளை தெலுங்கில் செய்து கொடுங்கள் என்றார்.

அதனால் தெலுங்கு மொழியிலும் கற்றல் அட்டைகள் செய்துள்ளேன். தமிழ் என்ற அமுதான மொழியை நம் குழந்தைகள் உச்சரிக்கும் போது கிடைக்கின்ற சுகத்திற்கு இணை ஏது! ஒரு குழந்தை தன் தாய்மொழியில் பேசவும் உரையாடவும் கற்றுக் கொள்வது அவர்களுக்கான ஒரு அடையாளத்தை கொடுக்கின்றது. வெளிநாடுகளில் வசிப்பதால் குழந்தைகளுக்கு தாய்மொழியை கற்றுக்கொடுக்க நேரமில்லை என என்ன காரணம் சொல்லினாலும், பிற்காலத்தில் அவர்கள் வளர்ந்தபின் அவர்களுடைய தாய்மொழி அடையாளத்தை இழந்து தவிப்பார்கள் என்பதே உண்மை.

அதனால் தாய்மொழியின் அடிப்படையை ஒவ்வொரு குழந்தையும் கற்பது மிகவும் அவசியம்’’ என்கிறார் மெலிட்டா ஜோயல். தாத்தாஸ் டேல்ஸ் பதிப்பகத்தின் புத்தகத்தை தற்சமயம் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் வாங்கிக்கொள்ளலாம். விரைவிலேயே இந்த புத்தகங்கள் இணையத்திலும், புத்தகக் கடைகளிலும் வர
விருக்கிறது. ‘‘தமிழ் கற்கலாம் வாங்க” எனும் தொடரின் தொடர்ச்சியாக மேலும் பல சுவாரஸ்யமான குழந்தைகளுக்கு எளிமையான புத்தகங்களை மெலிட்டா உருவாக்கி வெளியிட இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தைகள் தலையில் பூக்கும் மலர்கள்!! (மகளிர் பக்கம்)
Next post இது பெண்களின் தாண்டவ் !! (மகளிர் பக்கம்)