அக்கிராசன உரையும் முஸ்லிம்களும்!! (கட்டுரை)
எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிக்கு வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய அக்கிராசன உரை, அதிக கவனிப்பைப் பெற்றுள்ளது.
ஒருபுறத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி சட்டத்தை ஏவி விடுவதற்கான அதிரடி நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றமைக்காக விமாச்சிக்கப்படுகின்ற ஜனாதிபதி, மறுபுறத்தில், இதுபோன்ற உரைகள், அரசியல், பொருளாதார நகர்வுகளுக்காக சிலாகித்துப் பேசப்படவும் செய்கின்றார்.
அக்கிராசன உரையை நிகழ்த்திய ரணில் விக்கிரமசிங்க, எல்லோருக்குமான ஜனாதிபதியாகத் தன்னை முன்னிறுத்தினார். அவர் பல விடயங்களைத் தொட்டுப் பேசினார். இலங்கையின் இன, மத, கலாசார பன்மைத்துவத்தை அங்கிகரிக்கும் வகையிலாக அவ்வுரை அமைந்திருந்தது. அனைவருக்குமான நல்லதோர் ஆட்சியை உறுதிப்படுத்துவதாகக் கூறினார்.
தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்குமாறு மீண்டும் அழைப்பு விடுத்த ரணில், அரசியலமைப்பு மறுசீரமைப்பு, கூட்டிணைந்த வேலைத்திட்டம், தேசிய சபை அமைத்தல், ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பதில் தனக்குள்ள ஈடுபாடு பற்றியெல்லாம் பேசினார்.
சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகின்றமையால் இந்தியா, இலங்கை மீது அதிருப்தி அடைந்துள்ளது. இந்தப் பின்னணியில், இந்தியாவை ‘குளிர்விக்கும்’ வகையில், இந்திய உதவிகள் பற்றியும் ஜனாதிபதி சிலாகித்துப் பேசத் தவறவில்லை.
குறிப்பாக, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி, தனது அக்கிராசன உரையில் முக்கிய இடத்தை கொடுத்திருந்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிப் பேசினார். தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
புலம்பெயர் தமிழர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான விருப்பத்தையும் அவரது உரையில் அவதானிக்க முடிந்தது. அத்துடன் மலையக மக்கள் பற்றியும் அவர் பேசுவதற்கு மறக்கவில்லை.
கடந்த காலத்தில், மொட்டுக் கட்சி சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக கடுமையான அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருந்தது. ஆனால், அதே மொட்டுவின் ஆதரவால், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ரணில், இவ்விதம் உரையாற்றியமை, நல்லதொரு சமிக்கையாக நோக்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவின் நீண்டகால அரசியல் அனுபவம், இலங்கையில் புரையோடிப் போயுள்ள அனைத்துப் பிரச்சினைகளும் பற்றிய பின்புல அறிவு, இராஜதந்திர போக்கு, மூலோபாய அணுகுமுறை ஆகியவற்றின் வெளிப்பாடாக அக்கிராசன உரையை நோக்கலாம்.
இப்படியான ஓர் உரையை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நிகழ்த்தி இருக்கவில்லை. இந்த நாட்டின் பல்லினத்தன்மை, அம்மக்களின் பிரச்சினைகள் பற்றிய விரிவான பார்வையை அவர் கொண்டிருக்கின்றார் என்பதை, அவரது உரைகளில் காணக் கிடைக்கவில்லை.
மிக முக்கியமாக, நீண்டகால யுத்தம் முடிவடைந்த பிறகும் தமிழ் மக்கள் தங்களுக்கான தீர்வொன்றை வேண்டி நிற்கின்றனர். ஆனால், கோட்டபாய பதவியேற்ற பின்னர் ஆற்றிய முக்கியமான உரைகளில், தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது என்பதையும், அதைத் தீர்த்து வைப்பதற்கான தேவைப்பாடு பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கவில்லை.
இது தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், பெரும் விமர்சனத்தை அப்போது ஏற்படுத்தியிருந்தது. இப்போது, புதிய ஜனாதிபதி ரணில் அது பற்றிப் பேசியிருப்பதால், தமிழர்கள் முழுமையாகத் திருப்திப்படும் விதத்திலான தீர்வு, தங்கத்தட்டில் வைத்து வழங்கப்படும் என்று கனவிலும் நினைக்கத் தேவையில்லை.
ஆனால், தமிழர்கள், மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றிய ஒரு தெளிவான பார்வையை, ரணில் விக்கிரமசிங்க கொண்டிருக்கின்றார் என்பதையும், இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லா மக்களின் தனித்துவங்களையும் மதிக்கின்றார் என்பதையும் இந்த உரை எடுத்துக் காட்டியுள்ளது.
ஆனாலும், ஒரு விடயம் இங்கு கவனிக்கப்பட வேண்டியுள்ளது. அதாவது, இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் பற்றி, அக்கிராசன உரையில் பிரத்தியேக கவனம் செலுத்தப்படவில்லை என்பதாகும்.
முஸ்லிம் சமூகத்தைப் பற்றி, அவர் கொஞ்சம்கூட பேசவில்லை என்று கூற முடியாது. பல்லின, பல்மத தன்மையை அங்கிகரிக்கும் வகையில் உரையாற்றியதே நல்லதோர் ஆரம்பம்தான். அதுமட்டுமன்றி, ஜனாதிபதி தனதுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
“இன, மத மொழி, சமய ரீதியாக நாம் பிரிந்துள்ளோம். சில தரப்பினர் இந்தப் பிரிவை மேலும் விஸ்தரித்தனர். அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இப்பிளவை பயன்படுத்தினர். பிரித்தாளுவதன் அனுகூலத்தை அனுபவித்தனர். முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர். தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர். இவ்வாறான பிளவுகளைப் பயன்படுத்தி, தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்தனர்” என்று கூறியுள்ளார்.
இது மறைமுகமாக பல விடயங்களைக் குறிப்பிடுகின்றது. முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் அவர் அறிந்தவராக இருக்கின்றார் என்பதற்கான குறிப்புணர்த்தலாக இதனை எடுத்துக் கொள்ளலாம். அத்துடன், மக்களிடையே பிரிவுகளை உண்டுபண்ணியது ஆட்சியாளர்கள்தான் என்பதையும், அவர் போட்டு உடைத்துள்ளார்.
முஸ்லிம்கள் பெரும் இன, மத நெருக்கடியைச் சந்தித்த போதும் குறிப்பாக, கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இனவாதம் தடையாக நின்றபோதும், கோட்டபாய ராஜபக்சவோ, ஏனைய ராஜபக்சர்களோ ஓர் ஆறுதலான வார்த்தையைக் கூட கூறவில்லை.
2019 இற்கு முன்னரான மைத்திரி-ரணில், மஹிந்த ஆட்சிக் காலங்களிலும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இதே நிலைமைதான் காணப்பட்டது என்பதை மறுக்க முடியாது. அதனுடன், ஒப்பிட்டுப் பார்க்கையில் புதிய ஜனாதிபதியின் உரை பாராட்டப்பட வேண்டியது என்பதில் இரு நிலைப்பாடுகள் இல்லை.
இலங்கையைப் பொறுத்தவரையில், இது ஒரு தீர்க்கமான தருணமாகும். இனம், மதம் எனத் தனித்தனியாக சிந்திப்பதற்கு இது பொருத்தமான காலம் அல்ல. எல்லோரும் இலங்கையராக, ஒரு குடையின் கீழ் நின்று போராட வேண்டிய கட்டத்தில் இருக்கின்றோம் என்பது அடிப்படையானது.
ஆயினும், தனது அக்கிராசன உரையில் பல விடயங்களைப் பற்றி தனித்தனியாக பேசிய ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிய தனது மனவோட்டத்தை வெளிப்படுதிய ஜனாதிபதி, இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை பிரத்தியேகமாக குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக்காட்டாமல் விடமுடியாது.
முஸ்லிம்களுக்கு நீண்டகாலமாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன. காணிப் பிரச்சினைகள் இவற்றுள் முக்கியமானவை. முஸ்லிம்கள் மீது, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்கள் என ஏராளம் உள்ளன.
அத்துடன், கடந்த 10 வருடங்களுக்குள் மேலெழுந்த இனவாத நெருக்குதல்கள், அளுத்கம, திகண, அம்பாறை, வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைகள், பௌதீக மற்றும் உளவியல் தாக்கத்தையும் இன முரண்பாட்டையும் கணிசமான அளவில் தோற்றுவித்துள்ளன.
இருப்பினும், முன்னைய ஜனாதிபதிகளைப் போலவே புதிய ஜனாதிபதியும் முஸ்லிம்களுக்கு இந்தப் பிரச்சினைகள உள்ளன; அவற்றுக்கும் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.
ஏனெனில், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களைத் தமது பிரதிநிதிகளாக வரிந்து கொண்டுள்ள முஸ்லிம் மக்களும்தான் இந்த நிலைமைக்கு மறைமுகமான உண்மைக் காரணிகளாவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்’ என்பார்கள். தமிழ் மக்கள் 70 வருடங்களாக தொடர்ச்சியாக ‘அழுது’ வருகின்றார்கள். தமது உரிமைக்காக, விடுதலைக்காக, பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இன்று வரை போராடி வருகின்றார்கள். ஆயுதம் போராட்டம் என்பது இதில் ஓர் அங்கம் மாத்திரம்தான்.
தமிழ் தேசிய அரசியல்வாதிகள், தமிழர்களின் நீண்டகால பிரச்சினைகளை, அபிலாசைகளை சரியாக அரசாங்கங்களிடம் முன்வைத்துள்ளனர். சர்வதேச மயப்படுத்தியுள்ளனர். தமிழரின் பிரச்சினை என்னவென்பதை, உலகின் கடைக்கோடியில் வாழும் மனிதனும் அறியக்கூடிய வகை செய்துள்ளனர்.
எனவே, இவ்விவகாரத்தை தவிர்த்து, ரணில் விக்கிரமசிங்கவினால் பேச முடியாது. அவர் விரும்பாவிட்டாலும், அதைப் பற்றி குறிப்பிட்டேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தை, தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் ஏற்படுத்தியுள்ளளர்.
இந்நிலைமை முஸ்லிம் சமூகத்துக்குள் இல்லை. முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள், இன ஒதுக்கீட்டில் காட்டப்படும் பாரபட்சம், அரசியல் எதிர்பார்ப்புகள் பற்றிய விடயங்கள் அரசாங்கங்களிடம் சரியாக, முறையாக ஆவணப்படுத்தி முன்வைக்கவில்லை. எந்த முஸ்லிம் தலைவரும் எம்.பியும் இதைச் செய்யவில்லை.
அவ்வாறில்லாவிடின், மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுமாறு மனோ கணேசன் எம்.பி., ஜனாதிபதிக்கு முன்னமே நினைவுபடுத்தியது போன்றதொரு வேலையாவது, எந்த முஸ்லிம் எம்.பியும் செய்யவில்லை.
முஸ்லிம்கள் மீது ஆயுதக் குழுக்கள் நடத்திய படுகொலைகள். இனவாத வன்முறைகள் உள்ளிட்ட உரிமை மீறல்கள் பற்றிய விவரங்களை, முஸ்லிம் அரசியல்வாதிகளோ புத்திஜீவிகளோ சர்வதேசமயப்படுத்தவில்லை; சமூகத்துக்காகப் போராடவில்லை.
தங்களுக்கு என்ன அமைச்சு வேண்டும்? எத்தனை பிரதி அமைச்சுகள் வேண்டும்? எவ்வளவு வெகுமதி வேண்டும்? என்ன கைமாறு வேண்டும் என்பதோடு, முஸ்லிம் அரசியல்வாதிகளின் பேரம்பேசல்கள் முடிவடைந்து போகின்றன. இணக்க அரசியல் என்ற பெயரில், எல்லா உணர்வுகளையும் அடகு வைத்து விட்டு, முட்டுக்கொடுக்கின்ற வேலை மட்டுமே நடக்கின்றது.
எனவே, எல்லாத் தவறுகளும் முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்களிடத்தில் இருக்கின்ற போது, ‘ஜனாதிபதி முஸ்லிம்களைப் பற்றிப் பேசவில்லை’ என்றோ, ‘அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தை பெரிதாக கணக்கெடுக்கவில்லை’ என்றோ குற்றம் சொல்வதில் நியாமில்லை.
ஹக்கீம்களும் ரிஷாட்களும் அதாவுல்லாக்களும் ஹரீஸ்களும் நஸீர்களும் சப்ரிகளும் முசாரப்களும் விட்ட தவறுகளுக்கு, ரணில்கள், ராஜபக்ஷர்கள், சிறிசேனாக்கள் ஆகியோர் மீது எப்படி பழிசுமக்க முடியும்?