ஓடி விளையாடு பாப்பா!(மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 47 Second

“மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா” என பாப்பாக்களை ஓடி விளையாடச் சொன்னான் பாரதி. ஆனால் பாப்பாக்கள்  தன் வீட்டருகில் கூட விளையாட முடியாத  நிலையினை தமிழகம் அடைந்திருக்கிறது. கடந்த  ஆண்டு அரியலூர் சிறுமி நந்தினி, ஆத்தூர் சிறுமி  ராஜலெட்சுமி, சென்னை சிறுமி ஹாசினி என சிறுமிகள் தொடர்ந்து பாலியல் கொலைக்கு ஆளானார்கள். கடந்த மாதம் பொள்ளாச்சி சம்பவம்  தமிழகத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள பன்னிமடை என்ற பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி கொடூர மான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கு தமிழகத்தில் மிகப் பெரும்  அதிர்வலைகளை மீண்டும் ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே வசிக்கும் தம்பதிக்கு 5 மற்றும் 7 வயதில் இரண்டு பெண் குழந்தைகள். இதில் ஏழு வயது பெண்குழந்தை  அருகில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய  குழந்தை தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் காணாமல் போயிருக்கிறார். பெற்றோர் எங்கு தேடியும் குழந்தை கிடைக்காத  நிலையில், தடாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசாரும் உறவினர்களுமாகச் சேர்ந்து, சிறுமியை அன்றைய இரவு  ஊர் முழுவதுமாகத் தேடியுள்ளனர். சிறுமி கிடைக்காத நிலையில், மறுநாள் காலை 26-ம் தேதி, சிறுமியின் முகம் டி-ஷர்ட் ஒன்றால் சுற்றப்பட்டு,  கைகள் கட்டப்பட்ட நிலையில் ரத்தக் காயங்களுடன் உடல் அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டிருக்கிறது.

மீட்கப்பட்ட சிறுமியின் உடலை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உடற்  கூறாய்வு அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொடூரமான முறையில் கொல்லப்பட்டது உறுதியானது. இதனால் கொலை  வழக்குடன் சேர்த்து, போக்ஸோ சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, துடியலூர் பகுதியில் பொது மக்களும், சிறுமியின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குற்றவாளிகளைப்  பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை நாங்கள் சிறுமியின் சடலத்தை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்து சாலை  மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால்,  காவல்துறையினர் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுமியின் வீட்டுக்கு மிக அருகில் வசித்து  வந்தவர்களான சந்தோஷ், துரைராஜ், சதீஷ், விஜயகுமார், வசந்த் ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி  வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் மறுநாள் மாலை 3 மணிக்குள் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், குற்றவாளி  தொடர்பாக தகவல் கொடுப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் துப்புக் கொடுப்போர் விபரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும்  காவல்துறையினர் துண்டு பிரசுரங்களை நகர் முழுவதும் ஒட்டியும், பொது இடங்களில் விநியோகித்து வந்ததாகவும் தெரிகிறது. சிறுமியின்  முழுமையான உடற் கூறாய்வு வெள்ளிக்கிழமை வெளியாக இருந்த நிலையில், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த  மாநிலக் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் மோகன், சிறுமிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை வைத்து பார்க்கும்போது சிறுமி கூட்டுப் பாலியல்  வன்முறைக்கு ஆளாகி இருக்கலாம் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், உடற்கூறாய்வு செய்த மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த கோவை  மாவட்டக் காவல் துறையினர், சிறுமி காணாமல் போன 25ம் தேதியிட்டு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில். சிறுமியின் வாய் மற்றும்  மூக்கை துணியால் அழுத்தியும், கத்தி அல்லது ஏதோ ஒரு பொருளால் இறுக்கியும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் எனக்  குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சிறுமி காணாமல் போய் இறந்த 6 நாட்களுக்குப் பிறகு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த வழக்கில் 15 பேரிடம் தொடர்ந்து  விசாரணை செய்ததில், 34 வயதுடைய சந்தோஷ்குமார் எனும் நபர் அச்சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக  தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதோடு, அவர் கோவை மத்திய  சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் மேலும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும்  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.சந்தோஷ்குமார் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவன். இவனது தாத்தாவின்  வீடு, சிறுமியின் வீட்டுக்கு மிக அருகில் இருக்கிறது. அங்கு அவர் அடிக்கடி வந்து சென்றதோடு, தனது பாட்டியுடன் இரண்டு மாதங்களாக தங்கி  இருந்ததாகவும் தெரிய வருகிறது. சிறுமி காணாமல் போன மார்ச் 25 அன்று மாலையில் தன் வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கிச்  சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதோடு, தகவல் வெளியில் தெரியாமல் இருக்க சிறுமியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து  தனது பாட்டியின் வீட்டிற்குள்ளேயே உடலை மறைத்து வைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அன்றைய தினம் இரவே சந்தோஷ்குமாரின் பாட்டியும் இறந்துள்ளார். பாட்டி இறந்ததால் சோகமாக இருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டு, அடுத்த  நாள் அதிகாலை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில், தனது டீ-ஷர்ட் மூலம் சிறுமியின் சடலத்தை மறைத்து, சிறுமியின் வீடு இருந்த  பகுதியில் போட்டுவிட்டு வந்திருக்கிறான். சிறுமி வசித்த பன்னிமடைப் பகுதியில் தெரு முழுவதும் வீடுகள் அருகருகே இருக்கும் நிலையில், சிறுமி  மாயமான இரவுதான் சந்தோஷ்குமாரின் பாட்டியும் இறந்திருந்திருக்கிறார்.

இதனால் அவனது வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை யாரும் தேடவில்லை.  விடியற்காலை நான்கு மணி வரை தேடியும் எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், ஊர் மக்கள் சற்றே அசந்த நேரமாகப் பார்த்து, அதிகாலை நான்கு  மணி முதல் ஆறு மணிக்குள் கிடைத்த சின்ன இடைவெளியில் சிறுமியின் உடல் வீட்டருகில் உள்ள சிறிய சந்துக்குள் கிடத்தப்பட்டு இருக்கிறது.  சிறுமியின் உடலெங்கும் ரத்தக் காயமும் கடித்து வைக்கப்பட்டது போன்ற கீறல்களும் இருந்திருக்கின்றன. தொடரும் இத்தகைய சம்பவங்களால்  பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு இங்கே பெரும் கேள்விக்குறியாகி இருப்பதோடு, துடியலூர் சிறுமியின் பாலியல் கொலை பெற்றோர்கள்  மற்றும் பெண்கள் மத்தியில் மிகப் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

-மகேஸ்வரி நாகராஜன்

ஆறு மாதமாகவே இந்தக் குழந்தை தொடர் வன்புணர்வுக்கு ஆளாகி இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. குழந்தைகளை யாரை நம்பி எங்கே விட்டுச்  செல்வது என யோசிக்கும்போதே கொஞ்சம் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. அதேநேரம் பெற்றோராக நாம் நமது குழந்தைகள் மீது எந்த அளவிற்கு  கவனம் வைக்கிறோம், அக்கறை காட்டுகிறோம் என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்ல முடியாத நிலையில் நம்மிடம் பேசத் தொடங்கினார் கோவை தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராக  பணியாற்றும் முனைவர் எம்.ஜெய்குமார். ‘‘சம்பவத்தின் ஆழத்தைப் பார்க்கும்போது, ஆறு மாதமாகவே இந்தக் குழந்தை தொடர் வன்புணர்வுக்கு ஆளாகி  இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. குழந்தைகளை யாரை நம்பி எங்கே விட்டுச் செல்வது என யோசிக்கும்போதே கொஞ்சம் அச்சுறுத்தலாகவும்  இருக்கிறது. அதேநேரம் பெற்றோராக நாம் நமது குழந்தைகள் மீது எந்த அளவிற்கு கவனம் வைக்கிறோம், அக்கறை காட்டுகிறோம் என்பதையே இந்த  சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்துள்து. இவர்கள் எதையும் செய்யத் துணிகிறார்கள். சமீபத்தில் கோவை  மாவட்டத்தில் மருத்துவமனைகளில் நடைபெறும் மிகப்பெரிய அறுவை சிகிச்சையில் வலி தாங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் போர்ட்வின் ஊசிகளை  (fortwin injection), போதைக்காக மாணவர்கள் நடுநிசி நேரங்களில் மருத்துவமனைக்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் எடுத்துச்  சென்றிருக்கிறார்கள். சிசிடிவி கேமராவின் வழியாக கண்காணிக்கப்பட்டு சில மாணவர்கள் பிடிபட்டார்கள். பிடிபடும் மாணவர்களின் மொபைலில்,  தொடர்பில் இருப்பவர்களின் பரிமாறல்கள் பெரும்பாலும் போதை மற்றும் கஞ்சா பற்றியதாகவே இருக்கிறது.

இதில் பெண்களும் பாதிக்கப்பட்டதாகத் தெரியவருவது அதிர்ச்சிகரமான விசயம். பெரும்பாலும் பணவசதி படைத்த மாணவர்கள், மிகப்பெரிய  கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள். இவர்களை எத்தனை தூரம்தான்  ஆசிரியர்களால் கண்காணிக்க முடியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தை தவறே செய்ய மாட்டார்கள் என கண்ணை மூடிக்கொண்டு நம்பாதீர்கள். உங்கள்  குழந்தைகளை கவனித்துக் கொண்டே இருங்கள். துடியலூர் சிறுமி கொலை வழக்கிலும் பிடிபட்டவன் போதை பழக்கத்திற்கு அடிமையானவன் எனத்  தெரியவருகிறது. போதையில் போர்னோகிராஃபி படங்களை கைபேசியில் பார்த்து தவறாக நடக்க முயற்சித்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளான்.   இவர்களுக்கு தன் கண் முன்னால் இருப்பது குழந்தை என்ற உணர்வெல்லாம் இருப்பதில்லை.

தற்போது கையடக்க மொபைலில் எல்லாம் கிடைத்துவிடுகிறது. இது நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொள்வது மாதிரி. இன்றைய இளைய  தலைமுறை 10 முதல் 15 வயதிற்குள்ளாகவே எல்லாவற்றையும் தெரிந்து கொள்கின்றனர். பொள்ளாச்சி மற்றும் துடியலூர் சம்பவத்தைத் தொடர்ந்து  நாங்கள் இங்குள்ள தன்னார்வ அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம். எல்லா பள்ளி, கல்லூரிகளிலும்  மாணவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்களுக்கு பயிற்சி வழங்கும் முயற்சியில் இருக்கிறோம். இனி இதுமாதிரியான சம்பவங்கள்  நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் மாணவர்களிடம்  நெருங்கிப்பேசி நல்வழிப்படுத்த வேண்டியுள்ளது. இதன் வழியாக தங்களை எப்படி  பாதுகாத்துக்கொள்வது என்பதையாவது மாணவர் உணரட்டும் என்பதே எங்களின் எண்ணம். இதுவரை இந்த அமைப்பில் பல துறைகளில் இருந்து  இருநூறு நபர்கள் வரை இணைந்திருக்கிறார்கள்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிச்சனிலும் தோட்டம் அமைக்கலாம்!(மகளிர் பக்கம்)
Next post இனி ஓராண்டுக்கு கவலை இல்லை!(அவ்வப்போது கிளாமர்)