உங்கள் கர்ப்பப்பையின் அளவு என்ன?(மருத்துவம்)
‘‘பெண் உடலின் ஆதாரமே கர்ப்பப்பைதான். ஒரு பெண்ணின் வாழ்வில் சகலத்தையும் தீர்மானிப்பதில் அதன் பங்கு மகத்தானது. கர்ப்பப்பையில் ஏற்படுகிற பிரச்னைகள் பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிவதும் உண்டு. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பான கர்ப்பப் பையின் அளவில் ஏற்படுகிற மாறுதல்கள்கூட அவளது ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் கெடுக்கலாம்’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா. கர்ப்பப்பை அளவு எப்படியெல்லாம் பிரச்னைகளைக் கொடுக்கும் என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் அவர்.
“பொதுவாக 18 முதல் 25 வயது வரைக்குமான பெண்களின் கர்ப்பப்பை 7 முதல் 7.5 செ.மீ அளவில் இருக்கும். மாதவிலக்கின் போது புரொஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் சுரந்து கர்ப்பப்பையை வளரச் செய்யும். மாதவிலக்கு சுழற்சியில் சில கோளாறுகள் ஏற்படும்போது, கர்ப்பப் பையின் வளர்ச்சியும் தடைப்பட்டு, கர்ப்பப்பை சுருங்கும். இந்த நிலையை எதிர்கொள்கிறவர்களுக்கு புரொஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களை செயற்கையாக கொடுத்தால்தான் மாதவிலக்கு வரும்.
இயற்கையாகவே சில பெண்களுக்கு கர்ப்பப் பையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கலாம். சினைப்பையில் பிரச்னை இருந்து மாதவிலக்கு சுழற்சி பாதிக்கப்பட்டு, அதன் காரணமாகவும் கர்ப்பப்பை வளர்ச்சி பாதிக்கப்படும். சினைப்பை பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்து ஹார்மோன் மருந்துகள் கொடுத்தால், மாதவிலக்கு சுழற்சியும் முறைப்படும். கர்ப்பப்பையும் சாதாரண அளவுக்கு வரும். மெனோபாஸ் காலத்திலும் கர்ப்பப்பையானது தன்னுடைய அளவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சிறியதாக ஆரம்பிக்கும்.
அதாவது மெனோபாஸுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கர்ப்பப்பை, அவள் பூப்பெய்துவதற்கு முன்பு இருந்த மாதிரி சின்ன அளவுக்குத் திரும்பும். கர்ப்பப்பை வளர்ச்சி இல்லாதது எப்படி பிரச்னைக்குரிய விஷயமோ, அதே மாதிரிதான் கர்ப்பப்பை வீக்கமும் பிரச்னைக்குரியது. கர்ப்பப்பை வளர்ச்சி சீராக உள்ள பெண்ணுக்கு மாதத்தில் 2 முதல் 3 நாட்களுக்கு மாதவிலக்கு இருக்கும். மாதவிலக்கின் போது வெளியேறும் ரத்தத்தின் அளவு 50 முதல் 100 மி.லி அளவு இருக்கும். 100 மி.லியை தாண்டினாலே பிரச்னைதான்.
அதன் தொடர்ச்சியாக ரத்தசோகை வரும். ரத்தசோகை பிரச்னை சாதாரணமானதாக நினைத்து அலட்சியப்படுத்தக் கூடியதில்லை. அதனால் இதயம், சிறுநீரகம், நுரையீரல் என்று உடலின் ஒட்டுமொத்த உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகும். தவிர, மாதவிலக்கின்போது அதீதமான ரத்தப்போக்கு ஏற்பட்டு, கூடவே வயிற்றுவலி, களைப்பு, வேலையே செய்ய முடியாத நிலை என்று மற்ற அறிகுறிகளும் இருந்தால், அவர்களுடைய கர்ப்பப்பை வீக்கமாக இருக்கலாம் என்று சந்தேகப்படலாம். இந்தப் பிரச்னைகளை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தலாம். ஒரேயடியாக பிரச்னையே இல்லாத நிலை சாத்தியமில்லை.
ஹார்மோன் மருந்துகள் உள்ள காப்பர்டி மாதிரியான சாதனங்களைப் பொருத்தியோ, ஹிஸ்ட்ரோஸ்கோப்பி மூலம் கர்ப்பப்பை தோலை அகற்றக்கூடிய லேசர் சிகிச்சை மூலமும் இதற்கு தீர்வு காணலாம். மாதவிலக்கு சுழற்சி சரியில்லாத பெண்களும், கர்ப்பம் தரிக்காத பெண்களும், அதிக ரத்தப்போக்கை சந்திக்கிற பெண்களும் ஸ்கேன் மூலமாக கர்ப்பப் பை அளவைத் தெரிது கொள்ள வேண்டியது அவசியம். அதற்கேற்ற சிகிச்சைகளையும் காலத்துக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.’’