தீபாவளி பலகாரங்கள்!! (மகளிர் பக்கம்)
தீபாவளி… பண்டிகையின் ராணி என்றுதான் சொல்ல வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு பத்து நாட்களுக்கு முன்பே என்ன டிரஸ் வாங்கலாம்… என்ன பட்சணம் வித்தியாசமாக செய்யலாம்னு யோசிக்க ஆரம்பிச்சிடுவோம். இன்னும் நான்கு நாட்களே இருப்பதால், தோழி வாசகிகளுக்காக சுவையான பலகாரங்களை படைத்துள்ளார் சமையல் கலைஞர் அன்னம்.
ராகி தட்டை
தேவையானவை:
ராகி மாவு- 1 கப்,
அரிசி மாவு- ¼ கப்,
உளுந்து மாவு- ¼ கப்,
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் – ½ டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
ஊறவைத்த கடலைப்பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் – பொரிக்க.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, உளுந்து மாவு, வெண்ணெய், பெருங்காயம், உப்பு, ஊறவைத்த கடலைப் பருப்பு போட்டு, தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து கொள்ளவும். மாவை சிறிய எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி அதன் மேல் வைத்து மேலே ஒரு பிளாஸ்டிக் பேப்பரால் மூடி ஒரு டபராவால் அழுத்தி விடவும். இவ்வாறு அழுத்தி வைத்துள்ள தட்டைகளை சூடான எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்கு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: உளுந்து மாவை வெறும் வாணலியில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். காரம் தேவை என்றால் மிளகாய் பொடி அல்லது மிளகு பொடி சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
ஓட்ஸ் ரிப்பன் பக்கோடா
தேவையானவை:
ஓட்ஸ் மாவு- ½ கப்,
கடலை மாவு- ½ கப்,
அரிசி மாவு- ½ கப்,
மிளகாய் பொடி- 1 டீஸ்பூன்,
எள்- 1 டீஸ்பூன்,
பெருங்காயம்- ½ டீஸ்பூன்,
வெண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய்- பொரிக்க.
செய்முறை:
ஓட்ஸை வெறும் வாணலியில் மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மாவு, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் பொடி, எள், பெருங்காயம், வெண்ணெய், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். முறுக்கு பிழியும் அச்சில் ரிப்பன் பக்கோடா அச்சைப் போட்டு மாவை நிரப்பி சூடான எண்ணெயில் பிழிந்து விடவும். எல்லா பக்கமும் நன்றாக வெந்தவுடன் எடுக்கவும். ஆறியவுடன் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு 7 முதல் 10 நாட்கள் வரை சாப்பிடலாம்.
லோட்டஸ் சீட் புட்டிங் (தாமரை விதை கீர்)
தேவையானவை:
பால்- ½ லிட்டர்,
தாமரை விதை- ½ கப்,
சர்க்கரை- ½ கப்,
நெய்- 1 டேபிள் ஸ்பூன்,
கிஸ்மிஸ்- 10, பிஸ்தா,
பாதாம்,
முந்திரி- தலா 8,
குங்குமப்பூ- சிறிது,
ஏலக்காய் பொடி- ½ டீஸ்பூன்,
ஜாதிப்பூ- 1 சிட்டிகை,
ஜாதிக்காய்- 1 சிட்டிகை.
செய்முறை: ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கி அதில் தாமரை விதைகளைப் போட்டு வறுக்கவும். அடுப்பை குறைத்து வைத்து மிதமான தீயில் தாமரை விதை மொறு மொறுப்பாகும் வரை, அதாவது 5 நிமிடம் வறுக்கவும். கையில் எடுத்து அழுத்திப் பார்த்தால் உடைய வேண்டும். அது வரை வறுக்கவும். பாதாம், பிஸ்தா, முந்திரி முதலியவற்றில் சிறிது அலங்கரிக்க எடுத்துக் கொண்டு மீதியுள்ளவற்றை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, பொடித்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி பொடி, ஏலக்காய் பொடி, ஜாதிப்பூ, ஜாதிக்காய்ப் பொடி சேர்த்து நன்றாக காய்ச்சவும். பின் வறுத்து வைத்துள்ள தாமரை விதையை (மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கலாம்) சேர்த்து வேக விடவும். நன்றாக வெந்தவுடன் குங்குமப்பூ மற்றும் பருப்புகளை மேலே தூவி அலங்கரித்து சூடாகவோ அல்லது குளிர்வித்து பரிமாறவும். திக்காக வேண்டுமென்றால் கன்டன்ஸ்டு மில்க் சேர்க்கலாம்.
குறிப்பு: தாமரை விதை சத்துக்கள் நிறைந்தது. வட மாநிலங்களில் நவராத்திரி மற்றும் தீபாவளியன்று இந்த கீர் செய்து சாப்பிடுவார்கள்.
பூந்தி லட்டு
தேவையானவை:
கடலை மாவு- 1 கப்,
சர்க்கரை- 1 கப்,
தண்ணீர்- தேவையான அளவு,
முந்திரி,
கிஸ்மிஸ்- 10,
கிராம்பு- 5,
ஏலக்காய்- 2,
பச்சைக் கற்பூரம்- சிறிது,
மஞ்சள்பொடி- சிறிது.
செய்முறை:
கடலை மாவுடன் ¾ கப் தண்ணீர், மஞ்சள் பொடி சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். கரைத்த மாவை எண்ணெயில் பூந்திகளாக பொரித்து எடுக்கவும். (ரொம்ப கிரிஸ்பா வேக விடக் கூடாது). முந்திரி, திராட்சை, கிராம்பை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். 1 கப் சர்க்கரைக்கு ½ கப் தண்ணீர் ஊற்றி ஒரு கம்பிப் பாகு பதம் வைக்கவும். அதில் ஏலக்காய் சேர்த்து கொள்ளவும். சர்க்கரைப் பாகில் பொரித்து வைத்துள்ள பூந்திகளைப் போடவும். கடைசியாக வறுத்து வைத்துள்ள பருப்பு, பச்சைக்கற்பூரம் சேர்த்து நன்றாக கலந்து பாத்திரத்தை ஒரு மூடியால் மூடவும். சிறிது நேரம் கழித்து உருண்டைகளாக பிடிக்கவும்.
உடனடி தேங்காய் லட்டு
தேவையானவை:
டெசிகேட்டட் தேங்காய் – 100 கிராம்,
கன்டென்ஸ்ட் மில்க் – 125 மில்லி,
நெய்- 1 டீஸ்பூன்,
ஏலக்காய் பொடி- ¼ டீஸ்பூன்.
செய்முறை:
ஃப்ரஷ் தேங்காயாக இருந்தால் துருவி ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, அதில் டெசிகேட்டட் தேங்காய் போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து வறுக்கவும். இதனுடன் கன்டென்ஸ்ட் மில்க், ஏலக்காய் பொடி சேர்த்து இரண்டு நிமிடம் சுருள கிளறவும். ஆறியதும் உருண்டைகளாக பிடித்து டெசிகேட்டட் தேங்காயில் புரட்டி எடுக்கவும். தேங்காய் லட்டு ரெடி. இதில் தேவை என்றால் பாதாம், முந்தரி சேர்த்துக்கொள்ளலாம்.
ஆக்ரா பேடா
தேவையானவை:
பூசணிக்காய்- ½ கிலோ,
சர்க்கரை – 300 கிராம்,
சுண்ணாம்பு – ½ டீஸ்பூன்,
ஏலக்காய் – ¼ டீஸ்பூன்,
சர்க்கரை பொடி – 2 டீஸ்பூன்.
செய்முறை:
பூசணிக்காயின் விதைகளை நீக்கிவிடவும். இளசாக உள்ள பகுதிகளையும் எடுத்து விட்டு, கல்லு போல உள்ள சதைப் பகுதியை மட்டும் தோலை நீக்கி விட்டு எடுத்துக் கொள்ளவும். பூசணிக்காயை முள்கரண்டி(Fork)யால் எல்லாப் பக்கமும் குத்தி விடவும்.
ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் சுண்ணாம்புப் பொடியை சேர்த்து நன்கு கலக்கவும். அதில் பூசணிக்காய் துண்டுகளைப் போட்டு நன்றாகக் கலந்து விடவும். அப்படியே அந்த பாத்திரத்தை மூடி 12 முதல் 24 மணி நேரம் வரை ஊற விடவும். பின்னர் பூசணிக்காய் துண்டுகளை சுண்ணாம்புத் தண்ணீரில் இருந்து எடுத்து நன்றாக இரண்டு அல்லது மூன்று முறை கழுவவும். ஒரு பாத்திரத்தில் பூசணிக்காய் மூழ்கும் அளவு தண்ணீர் எடுத்து அடுப்பில் வைக்கவும்.
அதில் பூசணிக்காய் துண்டுகளைப் போட்டு குழையாமல் பதமாக வேக வைத்து எடுக்கவும். அதாவது 10 முதல் 12 நிமிடம் வேக விடவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, ஏலக்காய் பொடி, 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அதில் வேகவைத்துள்ள பூசணிக்காயை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும். சர்க்கரை பூத்து வரும் போது அடுப்பில் இருந்து எடுத்து ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். சிறிது ஆறியதும் சர்க்கரை பொடியில் பிரட்டி எடுக்கவும்.
குறிப்பு: வாசனைக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எசென்ஸ் அல்லது புட் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.. ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் நன்றாக இருக்கும். வெளியே வைத்தால் ஒரு வாரத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டும்.
பொட்டேட்டோ முறுக்கு
தேவையானவை:
அரிசி மாவு (அ) இடியாப்ப மாவு- 1 கப்,
உருளைக்கிழங்கு மீடியம் சைஸ்-
வெண்ணெய்- 1½ டீஸ்பூன்,
சீரகம்- 1 டீஸ்பூன்,
பெருங்காயம்- ¼ டீஸ்பூன்,
உப்பு,
தண்ணீர்- தேவையான அளவு,
எண்ணெய் – பொரிக்க.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும் அல்லது மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த உருளைக்கிழங்கு, வெண்ணெய், சீரகம், பெருங்காயம், உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும். பின் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ெணயை சூடாக்கவும். முறுக்கு அச்சில் தேன்குழல் சில்லைப் போட்டு பிசைந்த மாவை வைத்து எண்ணெயில் முறுக்குகளாக பிழிந்து விடவும். முறுக்கு இருபுறமும் நன்றாக வெந்து எண்ணெயின் ஓசை அடங்கியவுடன் எடுத்து எண்ணெய் வடிய விடவும். ஆறியவுடன் காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
குறிப்பு: முறுக்கு அச்சில் எந்த சில்லை வேண்டும் என்றாலும் போட்டு முறுக்குப் பிழியலாம்.
ராஜ்கிரா பர்ஃபி
தேவையானவை:
ராஜ்கிரா பொரி- 1½ கப்,
நெய்- 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு- 1 சிட்டிகை,
துருவிய வெல்லம்- 1 கப்,
முந்திரி- ¼ கப்(தேவை என்றால்),
ஏலக்காய் பொடி- ½ டீஸ்பூன்.
செய்முறை:
ராஜ்கிரா விதையை (1 கப்) வெறும் வாணலியில் வறுத்தால் அது நன்கு பொரியும். எல்லா விதைகளையும் பொரித்துக் கொண்டு பெரிய கண்ணுள்ள சல்லடையில் சலித்தால் பொரி மேலே நிற்கும். விதை கீழே விழும். ராஜ்கிரா பொரி கிடைக்காதவர்கள் இவ்வாறு செய்து கொள்ளலாம். கடாயில் நெய், வெல்லம், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும். பாகு நுரைத்து நூல் கம்பிப் பதம் வந்தவுடன் ராஜ்கிரா பொரி, உடைத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி துண்டுகள் போடவும். பர்ஃபி வட்டமாக வேண்டுமென்றால் சிறிய டப்பா மூடி அல்லது குக்கி கட்டரில் கட் செய்து எடுக்கவும்.
குறிப்பு: ராஜ்கிரா என்பது முளைக் கீரை விதை. ஆர்கானிக் கடைகளில் கிடைக்கிறது. இவை பொரியாகவும் விதையாகவும் கிடைக்கிறது.
புதினா ஓமப் பொடி
தேவையானவை:
கடலை மாவு- 1 கப்,
அரிசி மாவு- ¼ கப்,
உப்பு- தேவையான அளவு,
வெண்ணெய்- 1 டீஸ்பூன்,
எண்ணெய்- பொரிக்க,
புதினா- ஒரு கப்,
பச்சை மிளகாய்- 2,
ஓமம்- 1 டீஸ்பூன்,
தண்ணீர்- தேவையான அளவு.
செய்முறை:
புதினா இலைகளாக எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் புதினா, பச்சைமிளகாய், ஓமம், தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்ததை வடிகட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, வெண்ணெய், அரைத்த தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிப் பிசைந்து கொள்ளவும். முறுக்குப் பிழியும் கட்டையில் ஓமப் பொடி அச்சைப் போட்டு பிசைந்த மாவை வைத்து ஓமப் பொடியாக சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும். மிதமான தீயில் ெபாரித்து எடுக்கவும். இல்லை என்றால் ஓமப் பொடி கருகி விடும். ஆறியவுடன் நொறுக்கி காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
குறிப்பு: அரைத்த விழுதை அப்படியே மாவில் பிசைந்தால் அது ஓமப்பொடி அச்சில் மாட்டிக் ெகாண்டு பிழிய வராது. அதனால் அரைத்த விழுதை வடிகட்டிக் கொள்ளவும். ஓமம் சேர்க்காமல் வெறும் புதினா மட்டும் சேர்த்தும் செய்யலாம்.
ஓட்ஸ் ட்ரை ஃப்ரூட்ஸ் மிக்ஸர்
தேவையானவை:
ஓட்ஸ்- 1 கப், பாதாம்,
முந்திரி- தலா 10,
வேர்க்கடலை- 20,
கிஸ்மிஸ்- 20,
கறிவேப்பிலை- 10,
பச்சைமிளகாய்- 2,
கொப்பரைத் தேங்காய்- 2 டேபிள் ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை- 2 டீஸ்பூன்,
மிளகு பொடி- ¼ டீஸ்பூன்,
உப்பு- ½ டீஸ்பூன்,
எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
ஓட்ஸை வெறும் வாணலியில் அடுப்பை குறைத்து வைத்து 5 நிமிடம் வறுத்து எடுக்கவும். 2 டேபிள் ஸ்பூன் எண்ணையை சூடாக்கி அதில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, கிஸ்மிஸ், கொப்பரைத் தேங்காய் என்று இதே வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து எடுக்கவும். வறுத்தவற்றை டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் வடிய விடவும். அதே எண்ணெயில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வறுத்து, பின் மிளகு பொடி, உப்பு போட்டு கிளறவும். பின்னர் வறுத்து வைத்துள்ள பருப்புகள், ஓட்ஸ் எல்லாவற்றையும் போடவும். கடைசியாக பொடித்த சர்க்கரையும் சேர்த்து நன்றாக கிளறவும். அடுப்பை குறைத்து மிதமான தீயில் 5 நிமிடம் கிளறி இறக்கவும்.
குறிப்பு: இதனுடன் தட்டையான அவல் வேண்டும் என்றால் தனியாக வறுத்து சேர்த்துக் கொள்ளலாம். அவரவர் விருப்பத்திற்கேற்ப இனிப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம்.