பிரசவத்தை எளிதாக்கும் பிஸியோதெரபி பயிற்சிகள்!!(மருத்துவம்)
மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்துவிட்டாலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள், வலிகள், பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள் இவற்றையெல்லாம் சந்திப்பது, பெண்களைப் பொருத்தவரை இன்றளவும் சவாலான விஷயங்களாகத்தான் இருக்கின்றன. தற்போது கர்ப்ப காலத்தில் செய்யும் யோகா, தியானம், பிஸியோ தெரபி பயிற்சிகள் போன்றவை பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்களுக்கு சில மருத்துவமனைகளில் பேக்கேஜாக கொடுக்கப்படுகிறது.
ஆனால், அது வசதி படைத்தவர்களுக்குத்தான் சாத்தியமாகிறது. சாதாரண மக்களுக்கும் சென்றடையும் வகையில், இப்போது பிஸியோதெரபி பயின்ற சில பெண் மருத்துவர்கள் வீடு தேடி வந்தும் கற்றுத் தர ஆரம்பித்திருக்கிறார்கள். கர்ப்பிணிகளுக்காக இதுபோல் சிறப்பு பிஸியோதெரபிகளை அளித்து வரும் பயிற்சியாளரான வசந்தி ரஞ்சித், அதன் முக்கியத்துவத்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்…
‘‘கர்ப்பம் தரித்த முதல் மாதத்திலிருந்தே பெண்களுக்கு உடலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். கர்ப்பத்தோடு தொடர்புடைய உடற்கூறு மாற்றங்களானது உடலின் வளர்ச்சி, நீரை தக்க வைத்து, பிரசவத்திற்குத் துணை புரியும் கட்டமைப்புகளை தளர்வடையச் செய்தல் போன்றவை அடங்கும். இந்த மாற்றங்கள் முதுகெலும்பு மற்றும் உடலின் எடையைத் தாங்கக்கூடிய மூட்டுகளில் மேலும் சுமையை அதிகரிக்கும்.
கருவின் வளர்ச்சிக்கேற்ப ஒரு பெண்ணின் அடிவயிறு, இடுப்பு போன்ற பகுதிகளில் தசைகளில் இறுக்கம் ஏற்படும். ஏனெனில், எடை அதிகரிக்க, அதிகரிக்க அப்பகுதிகளில் அழுத்தம் ஏற்படுவதால் தசைகள் வலுவிழந்து இறுக்கமடைகின்றன. தசைகள் வலுவடைவதற்கான இறுக்கமாக இதை எடுத்துக் கொள்ளக்கூடாது. எலும்பு மூட்டுகளை இணைப்பவையாகவும், மூட்டுகளில் முக்கிய ஆதரவாகவும் விளங்கும் தசை நார்கள் மென்மை அடைந்துவிடும்.
தசைகளில் ஏற்படும் இந்த இறுக்கம் மற்றும் தசை நார்கள் வலுவின்மையால், 2-வது ட்ரைமெஸ்டர் காலங்களில் தோள் பட்டை மற்றும் கழுத்து வலி, கீழ் முதுகுவலி, இடுப்பு வலி, கணுக்கால்களில் வலி மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை என பல்வேறு பிரச்னைகளுக்கு மூல காரணமாகிறது. கர்ப்பம் ஒரு பெண்ணின் உடலில் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது. மேலும், பிரசவ நேரத்தில் குழந்தையின் தலை திரும்பும்போது ஏற்படும் அழுத்தத்தை தாங்குவதற்கேற்றவாறு இடுப்பு தசைகள் விரிந்து கொடுப்பதும், பிறப்புறுப்பின் தசைகள் தளர்வடைவதும் அவசியம்.
பிஸியோதெரபி மருத்துவர் உதவியோடு கருவுற்ற தாயின் சிறுநீர்ப்பை, கருப்பை மற்றும் குடல் ஆகியவற்றை ஆதரிக்கும் முக்கிய தசைகளுக்கான பயிற்சிகளை செய்வதன் மூலம், கர்ப்ப காலத்திலும், அதற்குப் பின்னரும் ஏற்படும் வலிகளைத் தடுக்க முடியும். கர்ப்ப காலத்திலேயே தசைகளுக்கு வலுவூட்டுவதன் மூலம் பிரசவ வலி மற்றும் பிரசவத்திற்குத் தயாராகும் தசைகளை (வயிறு, இடுப்பு மற்றும் பின்புற தசைகள்) கட்டுப்படுத்துவதற்கான திறனைப் பெற முடியும். பிரசவ நேரத்தில், எப்படி இடுப்புப்பகுதியில் (Pelvic floor) திறம்பட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இயன்முறை மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.
சரியான அழுத்தம் கொடுப்பதால் Pelvic floor-ல் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் பிரச்னைகளின் வாய்ப்பை குறைக்கும். ஏனெனில், பிரசவ நேரத்தில் இடுப்பில் ஏற்படும் அதிர்ச்சி, ஒரு பெண்ணுக்கு உடலுறவின்போது வலி, சிறுநீர் வெளியேற்றம் கட்டுப்படுத்துவதில் சிரமம் (Urine incontinence) மற்றும் இடுப்பு உறுப்பு பிறழ்வு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
இடுப்பு மண்டலத்தில் உள்ள தசைகள், இணைப்பு திசுக்கள் மற்றும் நரம்புகளை மதிப்பிடுவதற்கு இயன்முறை மருத்துவத்தில் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் உள்ளன. ஒரு இயன்முறை மருத்துவர் உதவியோடு இந்தப் பயிற்சிகளை செய்வதால் பிரசவ நேரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை கர்ப்பிணிப்பெண் எளிதில் சமாளித்துவிடலாம்.
கர்ப்ப காலத்திலும், பிரசவத்திற்குப் பின்னரும், இடுப்பு மற்றும் வயிற்று தசைகள் உள்ளிட்ட இடுப்பு உறுப்புகளை ஆதரிக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் ஒரு பெண் எந்த அளவிற்கு, விரைவாக தன் உடல் செயல்பாட்டை துவங்க ஆரம்பிக்கிறாள் என்பதைப் பொறுத்தே பிரசவத்திற்குப்பின் அவளது முந்தைய உடலமைப்பை விரைவில் மீட்டெடுக்க முடியும்.
குழந்தை பிறந்த பிறகு பிரசவத்தின் போது இழந்த ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உங்கள் உடல் மீட்டெடுக்கும். முதல் மாதத்தில், ஒரு நாற்காலியிலிருந்து எழுவது, தொட்டிலிலிருந்து குழந்தையை தூக்குவது, தாய்ப்பால் கொடுப்பது, குளிப்பது போன்ற வழக்கமான தினசரி பணிகளைச் செய்வதற்கு ஏதுவானதாக உங்கள் உடல் இருந்தாலே போதுமானது.
2, 3-வது மாதங்களில் உங்கள் உடல் கொஞ்சம் தேறிய பின்னர், 10 நிமிடங்கள் வரை செய்யக்கூடிய மிதமான பயிற்சிகளிலிருந்து ஆரம்பிக்கலாம். அதுவும் உங்கள் மருத்துவரின் ஆலோசனை மற்றும் பிஸியோதெரபிஸ்ட்டின் உதவியோடு செய்வது நல்லது. 4, 5 மாதங்களுக்குப்பிறகு, வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை படிப்படியாக அதிகரித்து செய்யலாம்.