கோதுமை டிலைட்ஸ்!! (மகளிர் பக்கம்)
கோதுமை மாவில் சப்பாத்தி, பரோட்டா மட்டும்தான் செய்யலாம் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். மேலும் இது ஒரு டயட் சார்ந்த உணவு என்பதால் சுக்கா ரொட்டிக்காக மட்டுமே கோதுமையினை பயன்படுத்தி வருகிறார்கள். இதே கோதுமையில் பல சுவையான உணவுகளை தயாரிக்கலாம் என்கிறார் சமையல் கலைஞர் மீனாட்சி. இவர் தோழியருக்காக கோதுமையில் பல சுவையான உணவுகளை எவ்வாறு தயாரிக்கலாம் என்று விவரித்துள்ளார்.
கோதுமை ஜீரா பிஸ்கெட்
தேவையானவை:
கோதுமை மாவு – 250 கிராம்,
அவல் – 100 கிராம்,
ரவை – 100 கிராம்,
உப்பு – சிட்டிகை,
சர்க்கரை – 1/4 கிலோ,
ஏலக்காய் – 4,
எண்ணெய் – 1/2 கிலோ,
வெள்ளை எள் – 4 டீஸ்பூன்,
பால் – 200 மிலி.
செய்முறை:
கோதுமை மாவில், ரவை, வெள்ளை எள், உப்பு சேர்த்து பால் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக்கொள்ளவும். கனமான பாத்திரத்தில், சர்க்கரை 1/2 கிலோ 300 மிலி தண்ணீர் சேர்த்து, ஏலப்பொடி சேர்த்து கம்பி பதத்தில் காய்ச்சி ஆற விடவும். வாணலியில் எண்ணெய் வைத்து பிசைந்து வைத்த கோதுமை மாவை சப்பாத்தியாய் இட்டு, மெல்லிய வட்ட வடிவத்தில் கட் செய்து எண்ணெயில் பொன்னிறமாய் பொரித்து ஆறிய ஜீராவில் முக்கி எடுத்து வைக்கவும். சுவையான கோதுமை ஜீரா பிஸ்கெட் தயார். இது 10 நாட்கள் வரை கெடாது.
கோதுமை பாதுஷா
தேவையானவை:
கோதுமை மாவு – 250 கிராம்,
பால் – 200 மிலி,
ஏலப்பொடி – 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை – 300 கிராம்,
எண்ணெய் – 1/2 கிலோ.
செய்முறை:
பாத்திரத்தில் சர்க்கரை, 300 மிலி தண்ணீர் விட்டு கம்பி பதத்தில் காய்ச்சி, ஏலப்பொடி சேர்த்து இறக்கி வைக்கவும். கனமான கடாயில் பால் விட்டு சூடானதும் கோதுமை மாவை சிறிது சிறிதாய் சேர்த்து கிளறி இறக்கிக்கொள்ளவும். பின்பு அதனை நன்கு பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாய் திரட்டி அதனை மெல்லியதாய் உருட்டி திரும்பவும் ரவுண்டாக சுற்றி, நடுவில் கட்டை விரலால் அமுக்கி எண்ணெயில் பொரித்து ஜீராவில் சேர்த்து விடவும். திடீர் பாதுஷா தயார்.
கோதுமை வாழைப்பழ குழிப்பணியாரம்
தேவையானவை:
கோதுமை மாவு – 150 கிராம்,
பச்சரிசி மாவு – 50 கிராம்,
வாழைப்பழம் – 2,
வெல்லம் – 150 கிராம்,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்,
சுக்குப் பொடி – 1/2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 1/2 கப்,
நெய் (or) எண்ணெய் – 100 கிராம்.
செய்முறை:
வெல்லத்தை நறுக்கி, 300 மிலி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி கொஞ்சம் ஆறியதும் அதில் கோதுமை மாவு, அரிசி மாவு, ஏலப்பொடி, சுக்குப்பொடி, மசித்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கலந்து இட்லி மாவு பதத்தில் வைக்கவும். பின்பு குழிப் பணியாரத் தட்டில் எண்ணெய் (or) நெய் விட்டு டீஸ்பூனால் மாவை விட்டு பொன்னிறமாய் பொரித்து எடுத்தால் சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம் ரெடி.
கோதுமை ரவை கிச்சடி
தேவையானவை:
சம்பா கோதுமை ரவை – 250 கிராம்,
கேரட், பீன்ஸ்,
கோஸ்,
குடைமிளகாய்,
பட்டாணி,
உருளைக்கிழங்கு பொடியாக அரிந்தது சேர்த்து – 200 கிராம்,
வெங்காயம் – 50 கிராம்,
இஞ்சி,
பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்,
கீரிய பச்சை மிளகாய் – 4,
பிரிஞ்சி இலை – 2,
ஏலக்காய் – 2,
லவங்கம் – 2,
பட்டை – சிறுதுண்டு,
புதினா – 1 கைப்பிடி,
எண்ணெய்,
நெய் கலந்து – 50 கிராம்,
எலுமிச்சை பழம் – 1,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் / நெய் கலவையை விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு பின்பு கீரிய பச்சை மிளகாய், அரிந்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அதில் நறுக்கிய காற்கறி கலவைகளை போட்டு வதக்கவும். பாதி வதங்கியவுடன் இரண்டு டம்ளர் (400 ml) தண்ணீர் விட்டு கொதித்தவுடன் கோதுமை ரவை சேர்த்து கிளறி, அரிந்த புதினா தூவி 7 முதல் 10 நிமிடம் சிம்மில் வைத்து மூடி வைக்கவும். பின்பு எடுத்து பரிமாறவும். சுவையான கோதுமை ரவை கிச்சடி தயார்.
கோதுமை ரவை இனிப்பு கொழுக்கட்டை
தேவையானவை:
கோதுமை ரவை – 1/4 கிலோ,
சர்க்கரை (or) வெல்லம் – 200 கிராம்,
தேங்காய்த்துருவல் – 1/2 மூடி.
ஏலப்பொடி – 1/2 டீஸ்பூன்,
முந்திரி – 10 (உடைத்தது),
கடலைமாவு வறுத்தது – 1 கைப்பிடி,
உப்பு – 1 சிட்டிகை,
நெய் – 1 டீஸ்பூன்.
செய்முறை:
கனமான பாத்திரத்தில் 300 மிலி தண்ணீர் விட்டு, பொடித்த வெல்லம் (or) சர்க்கரை சேர்த்து நன்கு கரைந்ததும், வறுத்த முந்திரி, கடலைமாவு, தேங்காய், ஏலப்பொடி, நெய் சேர்த்து கொதிக்கும்போது கோதுமை ரவை சேர்த்து நன்கு கிளறி, மூடி, 5 நிமிடம் கழித்து நிறுத்தி விடவும். பின்பு அதனை ஆறியவுடன் சிறு சிறு கொழுக்கட்டைகளாய் பிடித்து இட்லி தட்டில் 5 முதல் 7 நிமிடம் வேக வைத்தால் சுவையான இனிப்பு கோதுமை ரவை கொழுக்கட்டை தயார்.
கோதுமை ரவை உப்பு உருண்டை
தேவையானவை:
கோதுமை ரவை – 1/4 கிலோ,
உப்பு – தேவைக்கு.
அரைக்க:
வறுத்து ஊற வைத்த கடலைப்பருப்பு – 50 கிராம்,
தேங்காய்த்துருவல் – 1/2 கப்,
இஞ்சி – 1 துண்டு,
பச்சை மிளகாய் – 3,
ஊற வைத்த உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன்.
தாளிக்க :
கடுகு – 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – 1 கொத்து,
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்.
செய்முறை :
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதித்தவுடன் கோதுமை ரவையை சேர்த்து, உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்தி விடவும். பின்பு ஆறியவுடன் இட்லி தட்டில் சிறு சிறு உருண்டை (or) கொழுக்கட்டையாய் பிடித்து ஆவியில் வேக வைத்து இறக்கவும். சுவையும், சத்தும் நிறைந்த கொழுக்கட்டை தயார்.
திடீர் கோதுமை தோசை
தேவையானவை:
கோதுமை மாவு – 1 டம்ளர்,
அரிசி மாவு – 1 டம்ளர்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
அரிந்த வெங்காயம் – 1,
அரிந்த பச்சை மிளகாய் – 4,
கறிவேப்பிலை – 1 கொத்து.
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், வெங்காயம், எண்ணெய் விட்டு, சீரகம், உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் (or) மோர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சிறு சிறு தோசைகளாய் பொன்னிறமாய் சுட்டு எடுக்கவும். சுவையான தோசை தயார். தொட்டுக்கொள்ள மிளகாய் பொடி, கார சட்னி சுவையாக இருக்கும்.
கோதுமை தேங்காய் பர்பி
தேவையானவை:
கோதுமை மாவு – 100 கிராம்,
சர்க்கரை – 150 கிராம்,
தேங்காய்த்துருவல் – 1 கப் (200 கிராம்),
பால் – 200 மிலி,
நெய் – 50 மிலி.
அலங்கரிக்க:
பாதாம்,
முந்திரி – தலா 10,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு கோதுமை மாவை வறுத்துக்கொள்ளவும். பின்பு 2 டீஸ்பூன் நெய் விட்டு தேங்காய்த்துருவலை வறுத்துக்கொள்ளவும். வாணலியில் 200 மிலி பால் விட்டு சர்க்கரை போட்டு, கரைந்ததும் அதில் வறுத்த கோதுமை மாவு, தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து நன்கு கிளறவும். சுருளும்போது நெய் விட்டு இறுகியதும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். மேலே பாதாம், முந்திரி கொண்டு அலங்கரிக்கவும். சுவையான கோதுமை தேங்காய் பர்பி தயார்.
திடீர் கோதுமை அல்வா
தேவையானவை:
கோதுமை ரவை – 150 கிராம்,
சர்க்கரை – 100 கிராம்,
நெய் – 100 கிராம்,
பாதாம்,
முந்திரி – தலா 20,
ஏலப்பொடி – 1/2 டீஸ்பூன்,
உப்பு – 1 சிட்டிகை,
கேசரி பவுடர் – 1 சிட்டிகை,
பால் – 200 மிலி.
செய்முறை:
கோதுமை மாவை துளி உப்பு சேர்த்து 3 முறை சலித்துக்கொள்ளவும். பின்பு காய்ச்சிய 200 மிலி பாலில் சலித்த கோதுமை மாவை கரைக்கவும். வாணலியில் நெய் விட்டு பாதாம், முந்திரி வறுத்து வைக்கவும். பின்பு அதே வாணலியில் பாலில் கரைத்த கோதுமை மாவை விட்டுக் கிளறவும். இறுகும்போது சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் நெய் சேர்க்கவும். வாணலியில் ஒட்டாத பதம் வரும்போது வறுத்த முந்திரி, பாதாம், ஏலப்பொடி, கேசரி பொடி சேர்த்தால் திடீர் கோதுமை அல்வா தயார்.
கோதுமை சில்லி டைமண்ட்
தேவையானவை:
கோதுமை மாவு – 250 கிராம்,
தனி மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 100 மிலி,
வெண்ணெய் – 50 கிராம்.
செய்முறை:
கோதுமை மாவில் உப்பு, சீரகம், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். பின்பு அதனை சிறு சப்பாத்திகளாய் இட்டு, கத்தியால் ரிப்பன்போல் கட் செய்து, டயமென்ட் வடிவில் கட் செய்து வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்து எடுத்தால் சுவையான கோதுமை சில்லி டைமண்ட் தயார். இது மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட சுவையாக இருக்கும்.