சுவையான கொத்தவரை! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 28 Second

கொத்தவரை… இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் அதிகமாக உள்ளன. உடல் எடையை குறைத்து, ரத்த சோகை பிரச்னையை போக்கும். இதில் நார்ச்சத்து உள்ளதால், உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. புரதசத்துகள், கார்போஹைட்ரேட் மற்றும் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் திறன்  கொண்ட  கொத்தவரையில் சுவையான சமையலை தோழியருக்காக செய்துள்ளார் சமையல் கலைஞர் நாகலட்சுமி.

கொத்தவரைப் பொரியல்

தேவையானவை:

கொத்தவரங்காய் நறுக்கியது- 1 கப்,
பாசிப்பருப்பு – 4 ஸ்பூன்,
தேங்காய்- ½ மூடி.

தாளிக்க:  

எண்ணெய்- 2 ஸ்பூன்,
கடுகு- 1 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்,
கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்,
மிளகாய் வற்றல்- 1,
பெருங்காயம்- 1 சிட்டிகை,
மஞ்சள் தூள்- 2 சிட்டிகை,
உப்பு- திட்டமாக.

செய்முறை:

முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவைகளைத் தாளித்து, பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய், பாதியாக வேகவைத்துள்ள பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நீர் தெளித்து வதக்க வேண்டும். காயும், பருப்பும் உப்பு சேர்த்து வெந்ததும், தேங்காய் துருவலைப் போட்டு ஒரு தடவைப் பிரட்டி எடுக்க வேண்டும். இதுவே கொத்தவரைப் பொரியல்.

கொத்தவரங்காய் சாம்பார்

தேவையானவை :

இரண்டாக நறுக்கிய கொத்தவரங்காய் – 1 கைப்பிடி,
புளி – நெல்லிக்காயளவு,
சாம்பார்பொடி – 3 ஸ்பூன்,
உப்பு- திட்டமாக,
பருப்பு – 1 கைப்பிடி.
தாளிக்க:

எண்ணெய்- 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல்- 1,
வெந்தயம்- ½ டீஸ்பூன்,
பெருங்காயம்- 1 சிட்டிகை.

செய்முறை:

முதலில் புளியைத் திட்டமாக தண்ணீர் ஊற்றிக் கரைத்து, உப்பு, காரம் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். துவரம் பருப்பை நன்கு குழைய வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கொத்தவரையை தனியாக வேகவைக்கவும். கொதிக்கும் குழம்பில் வெந்த கொத்தவரங்காயை போட்டு மேலும் இரண்டு கொதி விட்டு பச்சை வாசனை போன பின் வெந்த பருப்பைப் போட்டு மேலும் இரண்டு கொதி விட்டு இறக்கி, தாளிக்க வேண்டும். இதுவே கொத்தவரங்காய் சாம்பார்.

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

தேவையானவை :

பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய்- 1 கப்,
துவரம்பருப்பு- 1 கப்,
கடலைப் பருப்பு- ¼ கப்,
பாசிப்பருப்பு- 4 ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்,
உப்பு- திட்டமாக,
மிளகாய் வற்றல் – 8.

தாளிக்க:

எண்ணெய்- 50 மிலி,
கடுகு- 2 ஸ்பூன்,
கறிவேப்பிலை- 4 இலைகள்,
பெருங்காயம்- ½ ஸ்பூன்.

செய்முறை:

முதலில் பருப்புகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறியதும், உப்பு, மிளகாய் சேர்த்து கெட்டியாக கொர கொரப்பாக அரைக்க வேண்டும். கொத்தவரங்காய்ச் சிறிது, உப்பு சேர்த்துத் தனியாக வேகவைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இருந்தால் வடித்துக் கொள்ள வேண்டும். அரைத்த பருப்பு விழுதை ஆவியில் வேக வைத்து ஆறியதும், கட்டியின்றி உதிர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் தாளித்துக் கொண்டு, வெந்த கொத்தவரங்காயை நீர் பிழிந்து போட்டு அதோடு பருப்பையும் சேர்த்துக் கிளறி எண்ணெய் ஊற்றி பிரட்டி எடுத்தால் இதுவே சுவையான கொத்தவரங்காய் பருப்பு உசிலி.
கொத்தவரங்காய் பொரிச்ச கூட்டு

தேவையானவை :

கொத்தவரங்காய் பொடியாக நறுக்கியது – 1 கப்,
பாசிப்பருப்பு – 1 கைப்பிடி,
மிளகு – 1 ஸ்பூன்,
சீரகம் – 1 ஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 1,
தேங்காய் துருவல் – ¼ மூடி,
உப்பு – திட்டமாக,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.

தாளிக்க:

எண்ணெய் – 2 ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்,
பெருங்காயம் – 1 சிட்டிகை,
கறிவேப்பிலை – 4 இலைகள்.

செய்முறை:

முதலில் வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், மிளகாய் வற்றலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் கொத்தவரங்காய் போட்டு பிரட்டி எடுத்து அதன் பிறகு, உப்பு, மஞ்சள்தூள், பாசிப் பருப்பு சேர்த்து நன்கு வேக விடவும். வெந்ததும் வறுத்த பொருளுடன் தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து விட்டுக் கொதிக்க விட்டு இறக்கவும். கூட்டு நீர்த்து இருந்தால் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சிறிது நீர் விட்டுக் கரைத்து ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும். பின் தாளித்துப் போடவும். இதுவே கொத்தவரைப் பொரித்த கூட்டு.

கொத்தவரங்காய் வற்றல் குழம்பு

தேவையானவை:

கொத்தவரை வற்றல் – 1 கைப்பிடி அளவு,
புளி – எலுமிச்சையளவு,
சாம்பார்பொடி – காரத் தேவைக்கு,
உப்பு- திட்டமாக.

தாளிக்க:

எண்ணெய்- 4 ஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 2,
பெருங்காயம் – ½ ஸ்பூன்,
கறிவேப்பிலை – 8 இலைகள்,
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்,
வெந்தயம் – ½ ஸ்பூன்.

செய்முறை:

முதலில் திட்டமாக நீர் ஊற்றிப் புளியை சுமாரான கெட்டியாகக் கரைத்துக் கொண்டு உப்பு, சாம்பார் பொடி சேர்த்து, அடுப்பிலேற்றவும். பக்கத்திலேயே வாணலியைப் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றித் தாளித்து, அதை கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். மீண்டும் அதே வாணலியில் எண்ணை சேர்த்து கொத்தவரை வற்றலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். குழம்பு கொதித்த பச்சை வாசனை போன பிறகு வறுத்த வற்றலை சேர்த்து நன்கு கிளறவும். குழம்பு கொதித்து கெட்டியானதும் இறக்கவும். சிலர் தேங்காய் வறுத்தோ, பச்சையாகவோ அரைத்துச் சேர்ப்பார்கள். அது அவரவர் சுவையின் விருப்பம்.

கொத்தவரங்காய் புளிக்கூட்டு

தேவையானவை :

கொத்தவரங்காய் பொடியாக அரிந்தது- 1 கப்,
கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்,
சாம்பார் பொடி – 1 ஸ்பூன்,
உப்பு திட்டமாக,
புளி – கொட்டைப்பாக்களவு.

வறுத்து அரைக்க :

தனியா – 1 ஸ்பூன்,
கடலைப்பருப்பு – ½ ஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 1,
மஞ்சள் தூள்,
பெருங்காயம் – தலா 1 சிட்டிகை,
தேங்காய் துருவல் – 4 ஸ்பூன்,
எண்ணெய் – திட்டமாக.

தாளிக்க:

கடுகு – 1 ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்,
எண்ணெய் – 2 ஸ்பூன்.

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் திட்டமாக எண்ணெய் ஊற்றி, தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் முதலிய வறுக்க வேண்டிய சாமான்களை வறுத்து எடுத்து ஆறியதும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பை சிவக்க வறுத்து எடுத்துக் கொண்டு, பின் பொடியாக அரிந்த கொத்தவரங்காய் போட்டு சிறிது வதக்கிக் கொண்டு அதன் பின் நீரூற்றி கடலைப்பருப்பு, உப்பு, சாம்பார்பொடி சேர்த்து நன்கு வேகவிட்டு, புளியை கெட்டியாக கரைத்துவிட்டு அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு கொதித்ததும் தாளிக்கவும். இதுவே கொத்தவரங்காய் புளிக் கூட்டு.

கொத்தவரை ஜூஸ்

தேவையானவை :

கொத்தவரங்காய்- 1 கைப்பிடி,
எலுமிச்சை – 1 மூடி,
உப்பு – 2 சிட்டிகை.

செய்முறை:

கொத்தவரங்காயை ந்னறாக கழுவி சிறு துண்டுகளாக்கி, எலுமிச்சை மூடியை நறுக்கி உப்பு சேர்த்து அப்படியே சிறிது நீர் சேர்த்து கூழாக அரைத்து, மீண்டும் சிறிது நீர் சேர்த்துக் கலக்கி வடிகட்டி, ஜூஸாகக் குடிக்கவும். இது நரம்பு மண்டலத்துக்கு எனர்ஜியை அளிக்கும். நரம்புப் பிரச்சினை உள்ளவர்கள் குடித்து வரலாம். சுவைக்கேற்ப இஞ்சி தேவை எனில் சேர்க்கலாம்.

கொத்தவரங்காய் கிள்ளுக் கறி

தேவையானவை :

கொத்தவரங்காய் இரண்டிரண்டாகக் கிள்ளியது – 1 கப்,
மிளகாய் வற்றல்- 2,
உப்பு- திட்டமாக.

தாளிக்க :

கடுகு- 1 ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்,
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கு,
பெருங்காயம்,
மஞ்சள் தூள் – தலா ஒரு சிட்டிகை.

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துக் ெகாண்டு, கொத்தவரங்காயையும் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் தண்ணீர் சேர்த்து, உப்பும் போட்டு நன்கு வேகவிட வேண்டும். சிறிது சிறிதாக நீர் சேர்த்து வேகவிட்டுக் குழையாமல் கொத்தவரங்காயை வேக விடவும். பிறகு தேவைப்பட்டால் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
கொத்தவரங்காய் பருப்பில்லா குழம்பு

தேவையானவை :

சாம்பார்பொடி – 2 ஸ்பூன்,
கொத்தவரங்காய் – 1 கப்,
புளி – 1 எலுமிச்சையளவு,
தக்காளி – 2,
சின்ன வெங்காயம் – 10,
உப்பு – திட்டமாக.

பொடி செய்ய :

மிளகாய் வற்றல் – 4,
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்,
தனியா – 2 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்,
வெந்தயம் – 1 ஸ்பூன்.

தாளிக்க:

கடுகு – 1 ஸ்பூன்,
கறிவேப்பிலை – 4 இலைகள்,
எண்ணை – 4 ஸ்பூன்.

செய்முறை:

முதலில் வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி வறுக்க வேண்டியவைகளை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். அதே கடாயில் சிறிது எண்ணை சேர்த்து கொத்தவரங்காயை நன்கு வதக்கி தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும். வெந்ததும் அதிலேயே புளிக் கரைசல், உப்பு, சாம்பார்பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். பாதி கொதிக்கும் போது வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி, வதக்கிச் சேர்க்க வேண்டும். ஒரு கொதிவிட்டு பொடித்தவற்றைப் போட்டு மேலும் ஒரு கொதி விட்டு இறக்க
வேண்டும். பிறகு தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துப் போட்டால் மணமும், ருசியும் பிரமாதமாயிருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விதவிதமான காபி, டீ வகைகள்! (மகளிர் பக்கம்)
Next post தாய்ப்பால் கொடுக்கும் தாய்மாரா நீங்க? இதையெல்லாம் சாப்பிடுங்க!!(மருத்துவம்)