வெரிகோஸ் வெயினை வெல்ல 5 வழிகள்!(மருத்துவம்)
வெரிகோஸ் வெயின் என்பது என்ன?
வெரிகோஸ் வெயின் என்பது கால்களில் உள்ள ரத்தக் குழாய்கள் அல்லது சிரைகள் அதன் அளவிலிருந்து வீங்குவது, பெரிதாவது அல்லது சுருண்டுகொள்வதால் உருவாகும் பிரச்சனை. வெரிக்கோஸ் வெயின் இருப்பவர்களுக்கு தோலுக்குக் கீழே அது வீங்கிச் சுருண்டிருப்பதைப் பார்க்கவும் தொட்டு உணரவும் முடியும். நீல நிறம் அல்லது கத்தரிப்பூ நிறத்தில் காலிலும், பாதத்திலும் இதுபோன்று இருப்பதைப் பார்க்கலாம். ரத்தம் தவறான திசையில் செல்வதன் வெளிப்பாடு இது.
அறிகுறிகள்: வெரிகோஸ் வெயினின் வெளிப்படையான அறிகுறி தோலுக்குக் கீழே சுருண்ட நீல நிற/கத்தரிப்பூ நிறத்தில் சிரைகள் சுருண்டிருப்பதுதான்.
மற்ற அறிகுறிகள் : வீங்கிய சிரைகள்: சுருண்ட, வீங்கிய, சுருள்சுருளான சிரைகள் நீல நிறம் அல்லது கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். கால், கணுக்கால், பாதத்தில் தோலுக்குக் கீழே இப்படித் திரண்டிருப்பதைப் பார்க்கலாம்.
அரிப்பும் வலியும்: சிரைகள் இப்படிச் சுருண்டிருக்கும் இடத்தில் அரிப்பு, வலி ஏற்படலாம். குறிப்பாக இரவில் இப்படி ஏற்படுவது தூக்கத்தை பாதிக்கும். பொதுவாக முழங்காலுக்குக் கீழே வலி, சிலருக்குத் தசைப்பிடிப்பு போன்றவையும்கூட ஏற்படலாம்.
கனமான / வீங்கிய கால்கள்: கால் தசைகள் கனமாகவோ, மந்தமாகவோ காணப்படலாம். சோர்வாகவும் மயக்கமாகவும் வரலாம். பாதம், கணுக்காலில் வீக்கம் காணப்படலாம். அதிலும் குறிப்பாக, ஏதாவது உடல் வேலை செய்த பிறகு.
வெரிகோஸ் வெயினை வெல்ல 5 உடற்பயிற்சிகள்
வெரிகோஸ் வெயினை முற்றிலுமாகத் தடுக்க எந்த வழியும் இல்லை. ஆனால் வழக்கமான உடற்பயிற்சி சுருள் சிரைகள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்க உதவும். உடலை இயக்குவது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கால்களில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை பம்ப் செய்யும் உடலின் திறனை உடற்பயிற்சியின் மூலம் அதிகரிக்க முடியும். வெரிகோஸ் வெயின் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கவும் இது உதவுகிறது.
நடைபயிற்சி: நடைபயிற்சி காலின் பின் பகுதியிலுள்ள கெண்டைக்கால் தசைகளின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். இது எளிமையான உடற்பயிற்சியாகும். ஒருவர் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள், வாரத்தில் 5 நாட்கள் நடப்பதன் மூலம் நல்ல ஆரோக்கிய பலன்களைப் பெறலாம். வழக்கமான நடைப்பயிற்சி உடல் எடையை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை ஆரோக்கியமாகப் பராமரிக்கவும், எலும்புகள் – தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பது போன்ற மற்ற நன்மைகளையும் இது கொண்டுள்ளது.
சைக்கிள் ஓட்டுதல்: சைக்கிள் ஓட்டுதல் கால்களின் வலிமையை அதிகரிப்பதோடு, ரத்த ஓட்டம் சீரடையவும் உதவுகிறது. அதே நேரம் கைகளைக் கைப்பிடிகளிலும், கால்களை பெடலிலும் நீண்ட நேரம் வைத்திருப்பது ரத்த ஓட்டத்தைக் குறைக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
கால்களைத் தூக்குதல்: கால்களைத் தூக்குதல் என்பது எந்த சிறப்புக் கருவிகளும் தேவைப்படாத ஒரு எளிய உடற்பயிற்சி. மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு நேரத்தில் ஒரு காலை உயர்த்தி, சில வினாடிகள் கால்களை அப்படியே வைத்திருங்கள். பிறகு கால்களை மாற்றிச்செய்யுங்கள். இந்த உடற்பயிற்சி கால் தசைகளை நீட்டி மடக்குவதற்கு உதவும்.
யோகா: யோகாவில், சில ஆசனங்கள் இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன, மன அழுத்தத்தை குறைக்கின்றன. இது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நவாசனம், சர்வாங்க ஆசனம் போன்ற ஆசனங்கள் வெரிகோஸ் வெயினை கட்டுப்படுத்த உதவுகின்றன விபரீத கரணி ஆசனம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், காலின் மீதான அழுத்தத்தை திறம்பட குறைக்கவும் உதவும் சிறந்த ஆசனம்.
நீட்டி மடக்குதல்: அனைத்து வகையான நீட்டி மடக்கும் பயிற்சிகளும் ரத்தஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் அடிப்படை வலிமையை ஏற்படுத்துவதற்கும் உதவுகின்றன. தரை விரிப்பு அல்லது மென்மையான கம்பளத்தின் உதவியுடன், மற்ற பயிற்சிகளுடன் சேர்த்து நீட்டி மடக்கும் பயிற்சிகளைச் செய்வது வெரிகோஸ் வெயின் அறிகுறிகளைக் குறைக்க உதவும். அனைத்து வகையான நீட்டி மடக்கும் பயிற்சிகளும் உடலை வலுப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சிரைகளுக்கு உதவியான தசைகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
இந்தப் பயிற்சிகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், வெரிகோஸ் வெயின் சார்ந்த வலியைப் போக்குவதற்கும் உதவுபவை. ஆனால் ஒருவர் தாங்க முடியாத வலியால் அவதிப்பட்டால், மருத்துவரை அணுகுவது அவசியம். உடலைக் கிழிக்காத அறுவை சிகிச்சை நுட்பங்கள், மருத்துவமனையில் அதிக நாட்கள் இருக்கத் தேவையில்லாத நிரந்தர சிகிச்சையைப் பெறுவதும் அவசியம். வெரிகோஸ் வெயினுக்கான அறுவைசிகிச்சை ஆப த்து குறைந்தது, உத்தரவாதமான தீர்வளிப்பது.