6 முதல் 60 வரை மகளிர் ஹெல்த் கைடு!(மருத்துவம்)
பெண் என்பவள் மானுட உயிர் வளர்க்கும் மாபெரும் சக்தி. பூ ஒன்று முகையாய் அரும்பி மொட்டாகி, பூவாகி, காய்த்து, கனிந்து விதையாக உயிர் பெருக்குவது போல் பெண் உடல் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாற்றத்தை சந்தித்துக்கொண்டேயிருப்பது. உடல் மட்டும் அல்ல உடலோடு சேர்ந்து மனமும் காலத்துக்குத் தகுந்தது போல் கோலம் கொள்ளும் இயல்புடையதுதான். ஆறு முதல் அறுபது வரை நீளும் இந்த பல்வேறு உடல் மற்றும் மனம்சார் மாற்றங்களுக்கு இடையே பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகள், சவால்கள் என்னென்ன? அதை எப்படி எதிர்கொள்வது?
0 – 6 வயது
இந்தப் பருவத்தில் ஆணோ பெண்ணோ எந்தக் குழந்தையாய் இருந்தாலும் தடுப்பூசிகளைத் தவறாமல் போட்டுவிட வேண்டும். பெண் குழந்தைகளைக் குளிப்பாட்டும்போதும், மலம் கழித்த பிறகு சுத்தம் செய்யும்போதும் முன்புறம் கழுவிவிட்ட பிறகுதான் பின்புறம் கழுவிவிட வேண்டும். இதனால், மலக்குடலில் உள்ள கிருமிகள் மூலம் யூரினரி இன்பக்ஷன் போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். பெண் சிசு பராமரிப்பில் இது முக்கியமான விஷயம். குழந்தைகளுக்கு குறைந்தது ஒரு வருடமாவது கட்டாயம் தாய்ப்பால்
தர வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு பருப்பு போன்ற புரதச்சத்தும் ஊட்டச்சத்தும் மிக்க உணவுகளைக் கொடுக்கத் தொடங்கலாம். கார்ப்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புகள், நுண்ணூட்டச்சத்துகள், நார்ச்சத்து ஆகிய அனைத்தும் நிறைந்த சமவிகித உணவுகளையே கொடுக்க வேண்டும்.
தேவையான சத்துள்ள உணவுகளை குழந்தைப் பருவத்திலிருந்தே கொடுக்க வேண்டும். சிறுவயதிலேயே ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலம் உருவாகுவது பின்னாட்களில் ரத்தசோகை, எலும்புத் தேய்மானம் உட்பட பல்வேறு பிரச்சனைகளைத் தடுப்பதற்கு உதவும். ஜங்க் ஃபுட்ஸ், கார்போனேட்டட் பானங்கள், சாக்லேட் போன்றவற்றைச் சாப்பிடுவதை ஊக்குவிக்கக் கூடாது. இதனால் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். இளம் வயதிலேயே சொத்தைப் பல், கண்ணாடி அணிதல் போன்ற குறைபாடுகள் உண்டாகும். இந்த வயதில் குழந்தையை நன்றாக விளையாடவிட வேண்டும். குழந்தைக்கு உடற்பயிற்சி என்பது விளையாட்டுதான். எனவே தினசரி குறிப்பிட்ட நேரம் ஓடியாடி விளையாட அனுமதிப்பது நல்லது. இதனால் உடல் வலுவாகும், குழுவாகச் செயல்படுதல், முடிவு எடுத்தல் போன்ற திறன்களும் மேம்படும்.
7 – 12 வயது
பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜன் போன்றவை மெல்ல சுரக்கத் தொடங்கும் காலம் இது என்பதால் அவளின் உடல் குறித்த இயல்பைப் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும். பத்து வயதைக் கடக்கும்போதே பூப்பெய்துதல் குறித்து தெளிவாகவும் அன்பாகவும் புரியும்படியும் பெண் குழந்தைகளிடம் சொல்லிவிடுவது நல்லது. இதனால், பள்ளியிலோ வேறு எங்காவது வெளியிலோ பூய்பெய்தினால் அதைப் பதற்றமின்றி எதிர்கொள்ள முடியும்.
பெண் குழந்தைகளுக்கு இந்தப் பருவத்தில் குட் டச் மற்றும் பேட் டச் (Good touch & Bad touch) பற்றி சொல்லித் தர வேண்டியது அவசியம். கையைப் பிடிப்பது, தலையை வருடுவது குட் டச். இதைத் தவிர முகத்தை வருடுவது, கிள்ளுவது, தோளை இறுகப் பிடிப்பது, முதுகில் வருடுவது, மார்பு, தொடையைத் தொடுவது போன்ற செயல்கல் எல்லாம் பேட் டச். இதை எல்லாம் யார் செய்தாலும் உடனடியாக அங்கிருந்து விலகி வந்து பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்பதைக் கற்றுத் தர வேண்டும்.
பெண் குழந்தைகளை இந்தப் பருவத்தில் பரதம், பாலே, ஜூம்பா நடனம் போன்ற நடன வகுப்புகளிலும் கராத்தே, குங்ஃபூ, சிலம்பம் போன்ற மார்ஷியல் ஆர்ட் வகுப்புகளிலும் சேர்த்துவிடுவது நல்லது. பொதுவாக, இந்த வயதில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் தொடங்கும் என்பதால் உடல் உழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபடும்போது உடலின் சமநிலை கூடும். இதனால், உடல் வலுவாகும், மனக்குவிப்புத்திறன் மேம்படும். எந்த விஷயத்தையும் பதற்றமின்றி எதிர்கொள்ளும் பக்குவம் மேம்படும்.
பெண்களைத் தாக்கும் நோய்களில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் மோசமானது. சுமார் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வரும் இந்த நோய், ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற நுண் கிருமியால் உண்டாகிறது. இதைத் தடுக்க பெண் குழந்தைகளுக்கு பத்து முதல் பன்னிரண்டு வயதுக்குள்ளாக தடுப்பூசி உள்ளது. இதைத் தவறாமல் போட்டுக்கொள்வது நல்லது.
13 – 19 வயது
டீன் ஏஜ் எனும் தேவதைப் பருவம் இது. பெண் உடலில் ஈஸ்ட்ரோஜன் முதல் பாலியல் ஹார்மோன்கள் வரை அனைத்தும் உச்சத்தில் இருக்கும் காலம். இந்தக் காலகட்டத்தில் பெண்கள் சிலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருப்பார்கள்.
இந்தக் காலகட்டத்தில் பெண் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். போதுமான அன்பு, போதுமான அக்கறை, பாதுகாப்பு அனைத்தும் மிகவும் அவசியம். அறிவை மீறி உணர்வுகள் இயங்கும் காலகட்டம் என்பதால் பக்குவமாக அவர்களை வழிநடத்த வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு அவர்களை மதிக்க வேண்டும். பெண்கள் இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளை வேளை தவறாமல் சாப்பிட வேண்டும்.
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு பெண் குழந்தைகளுக்கே அதிகமாக உள்ளது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ரத்தசோகை போன்ற நோய்கள் ஏழைப் பெண்களுக்கு மட்டும் இல்லாமல் பணக்காரப் பெண்களுக்கும் இருக்கின்றன என்கிறது அந்தத் தகவல். டயட் என்று சின்னஞ்சிறிய டிபன் பாக்ஸில் வெறும் அரிசி சோற்றை மட்டும் உண்பது. ஃபேஷன் என்று பீஸா, பர்கர், ஜங்க் ஃபுட்ஸ், கோலா ஆகியவற்றை மட்டும் அதிகம் உண்பது போன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்தான் இந்த ரத்தசோகைக்கு காரணம். எனவே, சமச்சீரான ஆரோக்கியமான டயட்டை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
20 – 30 வயது
சென்ற பருவத்தின் ஹார்மோன் மாற்றங்கள் யாவும் ஓரளவு நிதானமடைந்து உடலும் அவற்றுக்குக் கொஞ்சம் பழக்கமாகி இருக்கும் காலகட்டம் இது. படிப்பு முடிந்து வேலை, திருமணம் என்று வாழ்வின் அடுத்தடுத்த முக்கியமான கட்டங்களுக்குள் நகரும் பருவமாகவும் இதுதான் உள்ளது. குழந்தைப் பிறப்புக்கு ஏற்ற காலகட்டமும் இதுதான். குழந்தை பிறப்பு என்பது ஒரு தவம்.
ஒரு குழந்தை பிறக்கும்போது தன் அன்னையின் உடலில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அன்னையின் உடலை சக்கையாக்கிவிட்டுத்தான் இந்த பூமிக்கு வருகிறது. எனவே, ஒவ்வொரு பெண்ணும் இந்தப் பருவத்தில் உடலை வலுவாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆரோக்கியமான, சமச்சீரான உணவு, தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், தினசரி ஒரு மணி நேர உடற்பயிற்சி என ஹெல்த்தி லைஃப் ஸ்டைலுக்கு இங்கேயே அஸ்திவாரமிடுங்கள்.
31 – 40 வயது
பெண் வாழ்வின் வசந்த காலம் என்றே இந்தப் பருவத்தைச் சொல்ல வேண்டும். பிரசவத்துக்குப் பிறகான ஹார்மோன் மாற்றங்களுக்கு உடல் பதில் சொல்லும் பருவம் இது. உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதால் சிலருக்கு உடல் பருமன் அதிகரித்திருக்கும். பிரசவ கால சர்க்கரை நோய், பிரசவ கால வெரிகோஸ் வெய்ன், பிரசவ கால மூலப் பிரச்சனை போன்ற சிக்கல்கள் இருந்தவர்கள் இந்தக் காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப் பிரச்சனைகள் இருந்தால் பிரசவத்துக்குப் பிறகு உடனடியாக ஆரோக்கியமான லைஃப் ஸ்டைலுக்குத் திரும்புங்கள். இல்லாவிடில் எதிர்காலத்தில் இவை மீண்டும் வரக்கூடும்.
உடல் உழைப்பு என்பது கட்டாயம் தேவை. தினசரி ஒரு மணி நேரமாவது ஏதாவது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். நடைப்பயிற்சி, ஜாகிங், நீச்சல், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்ற கார்டியோ வொர்க்அவுட்ஸ்களில் ஏதேனும் ஒன்றை தினசரி அரை மணி நேரமாவது செய்ய வேண்டும். அன்றன்று சாப்பிடும் உணவின் கலோரியை அன்றன்றே எரிக்கும்படியான உடல் உழைப்பில் ஈடுபடுங்கள். இதனால் உடல் பருமன், தொப்பையைத் தவிர்த்து ஃபிட்டாக இருக்கலாம்.
41 – 50 வயது
மனதின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் உடல் தடுமாறும் காலம் இது. பிட்டான உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுகள், போதுமான ஓய்வு இவைதான் உடலையும் மனதையும் ஒரே கோட்டில் பயணிக்கச் செய்ய சுலபமான வழிமுறைகள்.தினசரி யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். உணவின் மீதும் மற்ற விஷயங்கள் மீதும் மனக் கட்டுப்பாடு தேவைப்படும் காலகட்டம் இது. உடலின் வளர்சிதை மாற்றங்கள் வேகமாக மாற்றத்துக்கு உள்ளாகும் காலம். ஹார்மோன்களும் தன் செயல்பாட்டை நிதானமாக்கியிருக்கும். சிலருக்கு இந்த காலகட்டத்தின் பிற்பகுதியில் மெனோபாஸ் எனும் மாதவிலக்கு முடிவுக்கு வருதல் நிகழத் தொடங்கியிருக்கும். இதனால், மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகவும் தடுமாறுவார்கள்.
வருடத்துக்கு ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக்அப் செய்வது என்ற பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இதனால், உங்கள் உடலின் அப்போதைக்கு அப்போதைய நிலவரம் துல்லியமாகத் தெரியவரும்.
51 – 60 வயது
பெரும்பாலான பெண்களுக்கு இந்தப் பருவத்தில் மெனோபாஸ்தான் முக்கியமான உடலியல் மாற்றம். இந்தக் காலகட்டத்தில் சிலருக்கு கடுமையான மனஅழுத்தம் ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இல்லை என்றால் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் சேர்ந்துகொள்ளும். இதனால் எப்போதும் டென்ஷனாக இருப்பார்கள். எதற்கு எடுத்தாலும் எரிந்துவிழுவார்கள். எல்லாவற்றின் மீதும் இனம்புரியாத எரிச்சலும் கோபமும் இருக்கும்.
இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ளவர்கள் இணக்கமாக இருக்க வேண்டும். உடலும் மனமும் ஓய்வுக்கு ஏங்கும் காலம் இது என்பதால் வாய்ப்பு கிடைக்கும்போது ஓய்வெடுங்கள். டயட், உடற்பயிற்சி, ஓய்வு மூன்றையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள். மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க சுற்றுலாக்கள் செல்லலாம். புண்ணியஸ்தலங்கள், குளிர் பிரதேசங்கள் என உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று வாருங்கள். உடற்பயிற்சி, மாஸ்டர் ஹெல்த் செக்கப் என்பன போன்ற ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை உதாசீனப்படுத்தாதீர்கள்.
60 வயதுக்கு மேல்…
முதுமை எனும் கனிவின் காலகட்டம் இது. முதுமை என்பது இன்னொரு பால்யம். இந்தக் காலகட்டத்தில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு சற்று குறையும். இந்தக் காலகட்டத்தில் உண்ணும் உணவை ஆறு வேளையாகப் பிரித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால், செரிமானம் எனும் செயல்பாடு எளிதாகும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வது, அடிக்கடி ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றை பரிசோதனை செய்வது ஆகியவற்றை மறக்காதீர்கள். தினசரி அரை மணி நேரமாவது காலார நடப்பது என்பதைக் கைவிடாதீர்கள். உங்களால் முடிந்த அளவு கைகளுக்கும் கால்களுக்கும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் கொடுக்கத் தவறாதீர்கள். முதுமை அல்ல முடங்குதல்தான் நோய் என்பதை மறவாதீர்கள்.
மறதி, சிறுநீர் அடக்கவியலாமை, மலச்சிக்கல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கை கால் வலி போன்றவை முதுமையின் நோய்களாகும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையால் இந்தப் பிரச்சனைகளை எளிதாகக் கடக்க இயலும். எனவே, மனம் சோர்ந்துவிடாதீர்கள். முதியோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால் தடுப்பூசிகள் அவசியம். குறிப்பாக நிமோனியா, இன்ஃப்ளூயன்சா, ஹெபடைட்டிஸ் பி, டெட்டனஸ், மற்றும் அக்கி நோய்கள், கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் போன்றவற்றுக்கான தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது நல்லது.