இதய நோயாளிகளுக்கும் உண்டு உடற்பயிற்சி!(மருத்துவம்)

Read Time:11 Minute, 23 Second

‘‘ஆரோக்கியத்தைப் பெறவும், கட்டுடலைப் பராமரிக்கவும் மட்டுமே உடற்பயிற்சிகள் இருக்கின்றன என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், தீவிரமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டவருக்கும் கூட உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் இதய நோயாளிகளுக்கும் கூட உடற்பயிற்சிகள் உண்டு. இது நோயின் தீவிரத்தைக் குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும்’’ என்கிறார் இயன்முறை மருத்துவரான ரோஸ்மேரி.

‘‘இதயநோயாளிகள் என்றால் எப்போதும் படுத்த படுக்கையாக இருப்பது அல்லது வீட்டிலேயே ஓய்வில் இருப்பது ஆகியவை இதய நோயை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும். அதனால் அவர்களுக்கு அறுவைசிகிச்சைக்கு முன்னும் பின்னும் முறையான உடற்பயிற்சி அளித்து அவர்களையும் மற்றவர்கள் போல் ஆரோக்கியமாக வாழ வைக்க முடியும். இதயநோய் என்றாலே ஓய்வுதான் நல்லது என்று தவறான கருத்து நிலவுகிறது.

இதயநோய் என்பது இதயத்தின் அமைப்பிலும் அதன் செயல்பாட்டிலும் ஏற்படுகிற பிரச்னையாகும். இது Coronary artery disease, Valvular Disease, Aortic Aneurysm, Congenital heart disease, Cardiomyopathy என்று பல வகைகளில் ஏற்படுகிறது. மேற்கண்ட நோய்கள் ஒருவருக்கு வந்தால் மருத்துவ சிகிச்சை(Medical management), அறுவை சிகிச்சை(Surgical management) என இரண்டு வித சிகிச்சைமுறை வழங்கப்படுகிறது.

இவற்றுடன் முறையான உடற்பயிற்சிகளும் அளிப்பது நோய் குணமாவதற்குப் பெரிதும் உதவுகிறது. இன்னும் சொல்லப் போனால் இதய நோயிலிருந்து இயல்பான வாழ்க்கைமுறைக்குத் திரும்புவதற்குப் பெரிதும் உதவுகிறது’’ என்கிற மருத்துவர் ரோஸ்மேரி அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் செய்ய வேண்டிய பயிற்சிகள் பற்றி விளக்குகிறார். ‘‘இதய அறுவைசிகிச்சைக்கு முன் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, இருமுவதற்கான உத்திகள் தேவை.

இது நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்றுவதற்குத் தகுந்தாற்போல் இருமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்துடன் இன்சென்டிவ் ஸ்பைரோமெட்ரி என்கிற ஊதுதல் பயிற்சி மேற்கொள்ளும்போது நுரையீரலை வலுவடையச் செய்யும். இதய அறுவை கிசிச்சைக்குப்பின் இயன்முறை மருத்துவர்கள் 4 கட்டப் பயிற்சிகள் அளிக்கிறார்கள்.

முதலாம் கட்டம்


செயலற்ற உடற்பயிற்சி

இது நோயாளி மருத்துவமனையில் இருக்கும்போது அவர்களின் கை, காலை அசைப்பது கொடுக்கப்படுகிற பயிற்சி ஆகும். இது இயன்முறை மருத்துவர்கள் நோயாளியின் முயற்சி இல்லாமல் கொடுக்கப்படுகிற உடற்பயிற்சி ஆகும். இது அறுவை சிகிச்சை நாளன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சுயநினைவின்றி இருக்கும் நிலையில் செய்யப்படுகிற பயிற்சியாகும்.

செயல் உடற்பயிற்சி

இது நோயாளி சுயநினைவு திரும்பிய பின் செய்யப்படுகிற பயிற்சியாகும். இது உடல் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.

ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி

இது நுரையீரலின் செயல்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. சளி கட்டுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. 4 நொடிகள் மூக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். 8 நொடிகளுக்கு வாயின் வழியாக இதழ்கள் குவித்த நிலையில் சுவாசத்தை வெளியிட வேண்டும். ஒவ்வோர் ஆழ்ந்த மூச்சுக்கு இடையில் தையல் பகுதியை பிடித்துக்கொண்டு மூச்சுவிடுவது நல்லது.

இருமும் பயிற்சி

இருமும்போது தையல் பகுதியை பிடித்துக்கொண்டு இருமுவது பாதுகாப்பானது. மேலும் இருமும் போது கே ஒலியில் இரும வேண்டும். இது நுரையீரல் வலுவாக  இருக்க உதவி செய்கிறது. சளியை தன்னைத்தானே வெளியேற்றும் திறனை அதிகரிக்கிறது. இவற்றுடன் இன்சென்டிவ் ஸ்பைரோமெட்ரி (Incentive spirometry) பயிற்சியும் உண்டு.

இன்சென்டிவ் ஸ்பைரோமெட்ரி என்பது 3 பந்துகளைக் கொண்ட ஒரு கருவியாகும். இதை நேராக வைத்துக்கொண்டு இதன் வாய்ப்பகுதியில் காற்றை ஊத வேண்டும். இதை 15 முறை, இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை செய்ய வேண்டியது அவசியம். இது நுரையீரல் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல குழு உடற்பயிற்சி என்பதும் இதில் உண்டு.

குணமான மற்ற நோயாளிகளுடன் கலந்து இந்த உடற்பயற்சி செய்யப்படுவதால் இது நல்ல உத்வேகத்தை தருகிறது. விரைவாக குணமடைய உதவியாக இருக்கிறது. மேலே குறிப்பிட்ட பயிற்சிகள் நோயாளி மருத்துவமனையில் இருக்கும்போது அளிக்கப்படுகிற பயிற்சிகளாகும். இது அதிகப்பட்சம் 15 நாட்கள் அவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இரண்டாம் கட்டம்

இது மருத்துவமனையில் வெளிநோயாளி பிரிவில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தில் நடைபெறுகிற பயிற்சியாகும். இதில் Telemetry என்ற கருவி உதவியுடன் நோயாளிகள் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சியின் போது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை நோயாளியின் இதயத் துடிப்பும் ரத்தக்கொதிப்பின் அளவும் கணக்கிடப்படுகிறது. இது சரியான அளவில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. இதில் மூன்று பிரிவுகளாக உடற்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

1. Warm up Exercise 2 முதல் 10 நிமிடம், 2. Intensity Exercise 30 முதல் 60 நிமிடம், 3. Cool down Exercise 5 முதல் 10 நிமிடம்.
இந்த உடற்பயிற்சிகள் இதய செயல்திறன் மேம்படுவதற்கு செய்யப்படுகிறது. இதன்மூலம் இதயத்துக்குச் செல்கிற ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும், சீராகவும் இருக்க உதவுகிறது. இது அறுவை சிகிச்சைக்குப் பின் 15 நாட்களுக்கு பின் ஆரம்பித்து 3 மாதங்கள் வரை நடைபெறும்.

மூன்றாம் கட்டம்

இது மேற்பார்வை உடற்பயிற்சியின் பிந்தைய நிலையாகும். இதில் (Telemety) கருவியின் உதவி வெகுவாகக் குறைக்கப்படுகிறது. உடற்பயிற்சிகள் இரண்டாவது கட்டத்தை விட அதிகரிக்கப்படுகிறது. இது 3-வது மாதத்திலிருந்து 6-வது மாதம்வரை நடைபெறுகிற நிகழ்வுகள் ஆகும்.

நான்காம் கட்டம்

இந்த நிலையில் நோயாளிகள் மற்ற சாதாரண மக்களின் உடற்பயிற்சி அளவில் உடற்பயிற்சி செய்கிறார்கள். இதை அவர்கள் வாழ்நாள் முழுக்க தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில் எந்தவித மேற்பார்வையும் இல்லை’’ என்கிறார். இதய அறுவை சிகிச்சை நிபுணர் அனந்தராமனிடம் இந்த உடற்பயிற்சிகளின் தன்மை பற்றி கேட்டோம்…‘‘இதய நோயாளிகளுக்கான உடற்பயிற்சி விஷயத்தில் மேலைநாடுகளை ஒப்பிட்டால் நம்
நாட்டில் இதனுடைய விழிப்புணர்வு குறைவாகத்தான் இருக்கிறது.

இதய அறுவை  கிசிச்சைக்கு முன்னும் பின்னும் உடற்பயிற்சி என்பது அவசியம். ஆரம்ப கட்ட இதய நோயாளிகளுக்கான பிரச்சனைகளை இதுபோன்று உடற்பயிற்சிகள் மூலம் அறுவைசிகிச்சைக்கு செல்லாமல் தடுத்துவிட முடியும். அதனால் மருத்துவரின் ஆலோசனையின்படி அவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. அறுவைசிகிச்சை முடிந்த நோயாளிகள் ஒரு நாளைக்கு 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர்களுக்குத் தொடர்ந்து இதுபோன்ற உடற்பயிற்சியால் அவர்களுக்கு அடுத்தடுத்து தரக்கூடிய மருந்துகளும் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. தொடர் உடற்பயிற்சியால் அவர்களின், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவை கட்டுப்பாட்டில் இருக்கும். அறுவை சிகிச்சைக்கு முன் அவர்களுடைய இயல்பான வேலைகளை செய்வதற்கு இந்த பயிற்சி உதவும்.  அதேபோல இதய மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கு இந்த உடற்பயிற்சிகள் சற்று மாறுபடும்.

அவரின் உடல் வேறு இதயத்தை ஏற்றுக் கொள்வதற்கு கொஞ்ச காலமாகும். அதற்கு ஏற்றார்போல் அவர்களுக்கும் உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோன்ற உடற்பயிற்சி நிலையம் அறுவை சிகிச்சை ேமற்கொள்கிற மருத்துமனையிலேயே இருப்பது நல்லது. இதன்மூலம் அவர்கள் இயல்பான நிலைக்குத் திரும்புவார்கள். இதனுடைய நோக்கமே மருந்து, மாத்திரைகளை குறைத்துக்கொண்டு அவர்களை இயல்பான நிலைக்கு திரும்புவதே ஆகும்’’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இதயத்தை வலிமையாக்கும் நடைபயிற்சி!!(மருத்துவம்)
Next post 6 முதல் 60 வரை மகளிர் ஹெல்த் கைடு!(மருத்துவம்)