பள்ளியில் தினமும் தோப்புக்கரணம் போடணும்! (மகளிர் பக்கம்)
பள்ளிகளில் குழந்தைகள் வீட்டுப்பாடம் முடிக்காமல் குறும்பு செய்தால், ஆசிரியர் அந்த குழந்தைகளை காதைப்பிடித்து தோப்புக்கரணம் போட சொல்வார். அதே போல, கோவில்களிலும் விநாயகரை வழிபடும் போது, கைகளை குறுக்காக எடுத்துச்சென்று, வலதுகையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்து, மூன்று முறை லேசாக அமர்ந்து எழுவது வழக்கம். இதைத்தான் தோப்புக்கரணம் என்று நாம் சொல்கிறோம். பல ஆண்டுகளாக நாம் செய்து வரும் இந்த தோப்புக்கரணம்தான், ‘Super Brain Yoga’ என்ற பெயரில், வெளிநாடுகளில் பிரபலமாகியுள்ளது.
தோப்புக்கரணம் செய்வதன் மூலம், மூளைக்கு நல்ல வளர்ச்சி திறன் அதிகமாகும் என வல்லுனர்கள் சொல்ல, பல நாடுகளில் மக்கள் கூட்டமாக இணைந்து, தோப்புக்கரணம் போட்டபடி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, ஹரியானா பள்ளிக் கல்வி துறையின் செயலாளர் ராஜீவ் பர்ஷட், ஹரியானா பள்ளி ஒன்றில் இந்த திட்டத்தை ஆரம்ப சோதனையாக அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் குழந்தைகளை தொடர் கண்காணிப்பில் வைத்து, இந்த பயிற்சி அவர்கள் படிப்பிலும், ஒழுக்கத்திலும் மாற்றம் கொண்டு வருகிறதா என்று கூர்ந்து கவனிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த மூளைக்கான சிறப்பு பயிற்சி பற்றி, யோகா பயிற்சியாளர் ஷிவானி பஜாஜ்யிடம் பேசியபோது, ‘‘யோகா ஆசனங்கள் அனைத்துமே உடலுக்கும் மனதுக்கும் சிறந்ததுதான். குறிப்பாக சிறு வயதிலிருந்தே யோகா போன்ற உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு மிகவும் நல்லது. தோப்புக்கரணம் முறை யோகாவில் வராது. ஆனால் அதே போல ‘உட்கடா’ என்னும் யோகாசனம் வருகிறது. இப்போது குழந்தைகள் வெளியில் சென்று விளையாட நேரமும், சூழலும் இருப்பதில்லை. பள்ளியிலேயே பல மணி நேரம் செலவாகி போகிறது. வீட்டிற்கு வந்ததும் டியூஷன், வீட்டுப்பாடம், வீடியோ கேம்ஸ் என அவர்களும் உடற்பயிற்சி
இல்லாமலே வளர்கின்றனர். அதனால் பள்ளியிலேயே யோகா செய்வது சிறந்த திட்டம்தான்.
மாணவர்கள் தினமும் ஒரே உடற்பயிற்சி செய்தால், அதில் விரைவிலேயே ஆர்வம் குறைந்துவிடும். தினமும் ஒரு யோகா ஆசனம் செய்ய சொன்னால் அவர்களுக்கு யோகா செய்வதில் ஈடுபாடு அதிகமாகும். யோகாவால் எந்த பக்கவிளைவுகளும் வராது. பல நன்மைகள் உண்டாகும். ரத்தவோட்டம் அதிகமாகி, சுறுசுறுப்பாக இருக்க உதவும். குறிப்பாக, தோப்புக்கரணம் பற்றி சொல்லவேண்டும் என்றால், தினமும் மூன்று நிமிடங்கள் செய்தாலே போதும். முதலில் நேராக நின்று கால்களை கொஞ்சம் அகற்றி வைத்து, இடது கையால், வலது காதையும், வலது கையால் இடது காதையும் குறுக்காக பிடிக்கவேண்டும்.
காதை பிடிக்கும் போது, நம் கட்டை விரல், காதுகளின் முன் பக்கத்தில் இருக்க வேண்டும். இதே நிலையில் மெல்ல நின்றபடியே உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும் போது மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து, அப்படியே எழும்போது, மூச்சை வெளியேற்ற வேண்டும். உட்காரும் போது கணுக்காலுக்கு கீழ் போகவேண்டாம். இந்த பயிற்சி செய்து முடிக்கும்வரை, முதுகெலும்பை நேராக வைத்திருக்க வேண்டும். முதலில் இரண்டு நிமிடம் அல்லது சோர்வடையும்வரை செய்து, நன்றாக பழகிய பின், மூன்றிலிருந்து ஐந்து நிமிடம் வரை கூடச் செய்யலாம்” என்கிறார்.
குழந்தைகள் தொடர்ந்து ஒரு ஐந்து நிமிடம் உடற் பயிற்சி செய்தாலே, நியாபகத்திறன், கூர்ந்து கவனித்தல், சுய நம்பிக்கை போன்ற அனைத்தும் அதிகமாகி, திறமைகள் தானாகவே வெளிப்படும். பீகாரில் முதலில் ஒரு பள்ளியில் பயிலும் 500 மாணவர்களுக்கு இந்த பயிற்சி மூலம் கிடைக்கும் நன்மைகள் சோதனை
செய்யப்பட்டு, அடுத்தகட்டமாகப் பீகாரின் அனைத்து பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.