எனக்கு விசிலடிச்சு கை தட்டுவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை-AGENT TINA!! (மகளிர் பக்கம்)
கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என மிகப் பெரிய நடிகர்கள் கூட்டத்திற்குள் ஒரே பெண்ணாய் “பேட்ஜ் 1987 ஏஜென்ட் டீனா” எனத் திரையில் அதகளம் செய்து பட்டையைக் கிளப்பியவர் டான்ஸ் அசிஸ்டென்ட் வசந்தி. சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், திடீரென முகம் மாற்றி.. கைகளை மடக்கி.. விரல்களை மடித்து.. முகத்தை விரைப்பாக்கி.. எட்டி உதைத்து.. குபீரெனப் பாய்ந்து.. ரவுடிகளை துவஷம் செய்த வசந்தி, நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் குரூப்பில் டான்ஸ் அசிஸ்டென்டாக இருக்கிறாராம். மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய வசந்தியிடம் பேசியபோது..
‘‘மக்கள் என்னை இந்த அளவு ஏத்துப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கலை. குறிப்பிட்ட சண்டைக் காட்சி வரும்போது எல்லோரும் பயங்கரமா கைதட்டி விசிலடிக்கிறாங்க. இன்டஸ்டிரிக்குள்ள மட்டுமே தெரிஞ்ச என்னை இன்று மக்களுக்கும் தெரிஞ்சுருச்சு. ரசிகர்கள் அடையாளம் கண்டுபிடிச்சு நீங்கதான டீனான்னு கேக்குறாங்க. இது எனக்கு வேற லெவல் ஹேப்பி. இதுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சாருக்கு நன்றி என்றவர், விக்ரம் படம் வெளியான முதல் நாளில் இருந்தே போன் கால்தான். காலை 4 மணி ஷோ முடிந்ததுமே ‘அக்கா உங்க கேரக்டர் வேற லெவல்கான்னு’ பாராட்ட ஆரம்பிச்சு போன் கால்ஸ் வர ஆரம்பித்து இப்ப வரை தொடருது.
“வசந்தி, நல்ல ரோல் ஒன்னு இருக்கு. நடிப்பியான்னு டைரக்டர் லோகேஷ் கனகராஜ் சார் கேட்குறாரு. நடிக்கப் போறியா?” என தினேஷ் மாஸ்டர் என்னிடம் கேட்டபோது சட்டுன்னு ஓ.கே.ன்னு சொல்லீட்டு, என்ன படம் சார்னு கேட்டேன். கமல்சாரோட விக்ரம் படம் என அவர் சொன்ன அடுத்த செகன்ட்.. கமல் சார் படமான்னு சத்தமாகக் கத்திட்டேன். அப்பவே மனசு ரெக்கை கட்டி பறக்க ஆரம்பிச்சுறுச்சு என்றவர், நான் சினிமாவுக்குள் வந்து 25 வருடத்திற்கு மேல ஆச்சு. ஆனால் கேமராவுக்கு பின்னாடி மட்டுமே இருந்தேன். ‘மாஸ்டர்’ படத்தில் நான் ஆன்ட்டிரியா மேடத்துக்கு நடனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்ததை கவனித்த இயக்குநர், டினா கேரக்டருக்கு நான் சரியாக இருப்பேன்னு முடிவு செஞ்சுருக்கார். ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி, உங்களுக்கு இதுல நல்ல ரோல். நீங்க பைட் எல்லாம் பண்ணணும்னு சொல்லியேதான் கூட்டீட்டுப் போனாங்க.
பைட் சீனுக்கு எனக்கு இரண்டு நாள் ரிகர்சல் இருந்தது. ஃபீல்டு பற்றி நல்லாத் தெரிஞ்சு, டான்ஸ் மூவ்மென்ட்ஸ் தெரிஞ்சதால், டக்குன்னு பிக்கப் பண்ணிக்கிட்டேன். அன்பறிவு மாஸ்டர் ரொம்பவே ஸ்வீட். அவங்களோட வேலை செஞ்சது எனக்கு ஜாலியா இருந்தது. சீன் வர்றவரை விடவே மாட்டாங்க. எப்படின்னாலும் நம்மக்கிட்ட நடிப்பை கொண்டு வந்துருவாங்க என்றவர், என்னோட பைட் மூவ்மென்ட்ஸ் பார்த்து ரெண்டுபேரும் சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்க்கான்னு பாராட்டிக்கிட்டே இருந்தாங்க. எத்தனை டேக் போனாலும் பரவாயில்லக்கா, நாம பண்றோம்க்கான்னு இயக்குநரும் என்னை விடாமல் ஊக்கப்படுத்திக்கிட்டே இருந்தாரு.
என்னோட கேரக்டர் குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாதுன்னு இயக்குநர் சொல்லியிருந்ததால், நானும் படம் வெளியாகும்வரை யாரிடமும் மூச்சே விடலை. படம் ரிலீஸ் ஆனதும், இயக்குநர் லோகேஷ் சார் எனக்கு போன் செய்து “ஏஜென்ட் டீனா இருக்காங்களா” என என்னிடமே கேட்டார் எனச் சிரித்தவர், இப்ப என் அக்கா, தம்பி, ஃப்ரெண்ட்ஸ், தெரிஞ்சவுங்க, செட்டுலன்னு எல்லோருமே டீனா இருக்காங்களான்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. வசந்தி என்கிற பெயர் இப்ப டீனாவா மாறீருச்சு மீண்டும் சிரிக்கிறார்.
இதற்கு முன்னாடியே கமல் சாரோடு ‘காதலா காதலா’ படத்தில் அவருடன் சேர்ந்து குரூப்பில் டான்ஸ் ஆடியிருக்கேன். ஆனால் கண்டிப்பா அவருக்கு என் முகம் நினைவிருக்காது. விக்ரம் படத்தில் நான் நடிச்சு முடிச்சதும், உலக நாயகனே என்னிடம் வந்து “நீங்க ரொம்பவே நல்லா நடிச்சுருக்கீங்க” ன்னு சொன்னார். அவர் வாயால் இந்த வார்த்தைகளைக் கேட்டது எனக்கு வானத்தில் பறந்த மாதிரி இருந்தது. சொல்றதுக்கு வார்த்தைகளே இல்லை, தமிழில் ரஜினி சார், கமல் சார், விஜய் சார், அஜீத் சார், கார்த்திக் சார், தனுஷ், சிவகார்த்திகேயன், விமல், ஜெகன், உதயநிதி, சூரி, சங்கீதா கிருஷ், ஹிந்தியில் ஷாருக்கான் சார், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தின்னு எல்லா பெரிய பெரிய ஆர்டிஸ்டோடும் பல ஹிட் படங்களில் டான்ஸ் ஆடியாச்சு. நான் டான்ஸ் ஆடின படத்தை எல்லாம் சொல்றதுக்கு என்னிடம் கணக்கே இல்லை.
ஹீரோயின்ஸ்ல நயன்தாரா, திரிஷா, சமந்தா, தமன்னா, ஹன்சிதா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், ஆன்ட்ரியா, எமி ஜாக்சன்னு எல்லா முன்னணி நடிகைகளுக்கும் 1..2..3.. டெர்ன் 1..2..3.. லுக் 4..5..6.. ன்னு ஸ்டெப் சொல்லிக் கொடுத்து ஆட வச்சு பார்த்தாச்சு என்றவர், இப்போது நடிக்க வருபவர்கள், சொல்லிக் கொடுக்கிறதை சட்டுன்னு புடிச்சுக்கிறாங்க. வேலையும் சுலபமா இருக்கு என்கிறார். சினிமாவைப் பொறுத்தவரை டான்ஸ் மூவ்மென்டிற்கு லாங்வேஜ் தேவையில்லை. எல்லாமே கவுண்டிங்தான். மாஸ்டர் எங்களுக்கு சொல்லித் தருவதை நான் ஹீரோயின்ஸ் மற்றும் குரூப்பில் உள்ளவர்களுக்கு ஸ்டெப்ஸாக சொல்லிக் கொடுத்து ஆட வைத்துவிடுவேன்.
எனக்கு படிப்பு சரியா வரலை. ஆனால் டான்ஸ் நல்லா வந்துச்சு. ஆறாவது படிக்கும்போதே அக்கா மூலம் குரூப் டான்ஸில் சினிமாவுக்குள் நுழைந்து டான்ஸராகவே பயணத்தை ஆரம்பித்தேன். கிட்டதட்ட 25 வருடத்திற்கு மேல ஆச்சு. ஆரம்பிக்கும்போது செட்டில் நான் குட்டிப் பொண்ணு. முதலில் ராஜு மாஸ்டர் குரூப்பில் இருந்து, இப்ப தினேஷ் மாஸ்டர் குரூப்பில் இருக்கிறேன். என் கூடப் பிறந்தது இரண்டு அக்காவுமே டான்ஸ் குரூப்பில் இருந்தவுங்கதான்.
எப்பவும் நான் துறுதுறுன்னு இந்தப் பக்கமும் அந்த பக்கமுமாக ஓடி ஓடி, எல்லோரையும் கலாட்டா பண்ணிக்கிட்டேதான் செட்டில் ரகளையாக இருப்பேன். அதனால் எல்லா பிரபலங்களுக்கும் என்னைத் தெரியும். எல்லோருக்குமே என்னைப் பிடிக்கும். என்னோட டான்ஸ் அசிஸ்டென்ட் வேலையை நான் ரொம்பவே நேசிப்பதால், எப்பவும் நான் சரியான நேரத்திற்கு செட்டில் இருப்பதுடன், கொஞ்சம் நேரம் தவறினாலும் பதறிவிடுவேன் என்றவர், மறுபடியும் நடிக்க வாய்ப்பு வந்தால் விடமாட்டேன். விக்ரம் படத்தில் என்னை சாகடிக்கலைன்னா பார்ட் 3ல் மீண்டும் வந்து நடித்திருப்பேன். விடைபெற்றார் விக்ரம் படத்தின் இந்த அதிரடி ஃபைட்டர்.