முதுமையிலும் இனிமை காண்போம்! (மருத்துவம்)
முதுமையை இரண்டாவது பால்யம் என்பார்கள். முதியவர்கள் அனுபவ ஞானத்தின் அற்புத விளைச்சல்கள். அவர்களைப் போற்றிப் பாதுகாப்பது நம் வாழ்வை அர்த்தப்படுத்துவதோடு நம்மைப் பக்குவமானவர்களாகவும் மாற்றும். ஆனால், போன தலைமுறை முதியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை இந்தத் தலைமுறை முதியவர்களுக்குக் கொடுக்கப்படுகிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே கசப்பான உண்மை. புறக்கணிப்பு, அவமானம், தனிமை, தள்ளாமை, நோய் என பலபக்கத் தாக்குதல்களால் முதியவர்கள் உடலும் மனமும் சுருங்கிப்போய் ஆரோக்கியமற்ற வாழ்வை வாழ்கிறார்கள். முதியோரைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டியவை என்னென்ன… முதியோருக்கு ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன, அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று பார்ப்போம்.
முதுமைக் கால நோய்கள்
மனிதர்களுக்கு வயதாவதால் சில பிரச்னைகள் இயல்பாகவே ஏற்படும். கண்பார்வை மங்குதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தூக்கமின்மை, மலச்சிக்கல், காது மந்தம், சோர்வு, கை, கால்கள் நடுங்குதல் போன்ற பிரச்னைகள் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும். இந்தப் பிரச்னைகள் ஏற்படும்போது இதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பிரச்னையைக் குணமாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உதாரணமாக பார்வை மங்குதல் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரை அணுகி பார்வையை மேம்படுத்த கண்ணாடி அணிய வேண்டும். காது மந்தம் ஏற்பட்டால் காது கேட்கும் கருவி பொருத்திக்கொள்ள வேண்டும். இந்த முதுமையால் ஏற்படும் இயல்பான பிரச்னைகளைக் கவனிக்காமல் விடும்போது, முதியவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுவதோடு அவர்களின் தன்னம்பிக்கை குறைந்து தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது.
டிமென்ஷியா எனும் மறதிநோய், பார்க்கின்சன் எனும் உதறுவாதம், சிறுநீர் அடக்கவியலாமை (Urinary incontinency), புற்றுநோய், ஃபால்ஸ் எனும் அடிக்கடி கீழே விழுதல் பிரச்னை, எலும்புத் தேய்மானம், ப்ராஸ்டேட் பிரச்னைகள் போன்றவை முதுமையில் ஏற்படக்கூடிய நோய்களில் குறிப்பிடத்தக்கன. இவற்றைத் தவிர உயர் ரத்த அழுத்தம், இதயநோய்கள், சர்க்கரை நோய் போன்ற மத்திய வயதில் ஏற்பட்டு, முதுமையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் நோய்களும் உள்ளன. இவற்றைப் பெரும்பாலும் குணமாக்க இயலாது என்றாலும் தேவையான சிகிச்சைகள், பயிற்சிகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இவற்றின் பாதிப்பின் கடுமையில் இருந்து தப்பலாம்.
முதியோர் தடுப்பூசி
முதுமையில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகவே இருக்கும் என்பதால் முதியவர்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது மிகவும் நல்லது. சின்னம்மை, மணல்வாரி, அம்மைக்கட்டு, ருபெல்லா, ஃப்ளூ, நிமோனியா, கர்ப்பப்பைவாய் நோய்கள், மஞ்சள் காமாலை, டெட்டனஸ், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல் போன்ற நோய்களைத் தடுக்க முதியோருக்கான பிரத்யேகத் தடுப்பூசிகள் தற்போது உள்ளன. மருத்துவரை அணுகி அவரின் பரிந்துரையின் பேரில் தேவையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது வருமுன் காக்கும் நடவடிக்கையாக இருக்கும்.
டாக்டர் கவுன்சலிங் அவசியம்
முதியவர்கள் குறித்த இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து உரிய ஆலோசனைகள், மெடிக்கல் செக்அப் செய்ய வேண்டியது அவசியம். குறிப்பாக, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்றவற்றை அடிக்கடி பரிசோதித்துகொண்டு அவசியப்பட்டால் அதற்கான மாத்திரை, மருந்துகள், ஊசிகள் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதுபோலவே ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதும் மிகவும் நல்லது.
உணவு
பொதுவாக, முதுமையில் செரிமானம் மெதுவாகவே நடக்கும். அதிலும் சிலருக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் இருக்கும். எனவே, செரிமானத்துக்கு எளிய உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவை ஐந்து அல்லது ஆறு வேளையாகப் பிரித்து உண்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் சிலவகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அவர்கள் அந்த உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும். உடலுக்கு ஊட்டம் தரும் பல வண்ண காய்கறிகள், கீரைகள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி
முதுமை வந்துவிட்டது. ரிட்டயர்டு ஆகிவிட்டோம் என்று சோர்ந்து இருக்கக் கூடாது. முதியவர்கள் தினமும் 15-20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்வது, எளிமையான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்வது போன்றவற்றை மருத்துவர் பரிந்துரையின் பேரில் கட்டாயம் செய்ய வேண்டும். இது உடலையும் மனதையும் ஃபிட்டாக வைத்திருக்க உதவும்.