மாற்றுத்திறனாளிகளுக்காகவே இந்த டூர் அண்ட் டிராவல்!! (மகளிர் பக்கம்)
நான் கண்ட முதல் கனவு கடற்கரைக்குச் சென்று கால் நனைக்க வேண்டும் என்பதே. அந்தக் கனவு, நான் டிராவல் ஒன்றினை ஆரம்பித்து புதுச்சேரியை சுற்றிப்பார்க்கச் சென்றபோதே நிறைவேறியது என்கிறார் “யாதுமாகி” என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கி ‘இன்குளூசிவ் டூர் அண்ட் டிராவல்’ நிறுவனத்தை நடத்தி வரும் மாலதி ராஜா. இவரும் ஒரு வீல்சேர் யூஸர் என்பதே இதில் சிறப்பு.
சுற்றுலா தலங்களை முடிவு செய்வதற்கு முன்பு நான் குறிப்பிட்ட இடங்களுக்கு நேரடியாகவே பயணித்து, மாற்றுத் திறனாளிகள் செல்ல ஏற்ற வசதிகள், தங்குமிடம் போன்றவை எந்த அளவில் உள்ளது என்பதை ஆய்வு செய்த பின்னரே இடங்களை முடிவு செய்வேன் என்றவர், இதற்காகவே டெல்லி, ஜெய்பூர், உதய்பூர், அஜ்மீர், ராஜஸ்தான் போன்ற இடங்களுக்குச் சென்று வந்தேன் என்கிறார். தனது டிராவல் நிறுவனத்தில் தன்னோடு இணைந்து, பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிப் பெண்கள் ஏழு பேர் வேலை செய்கிறார்கள் என்றவர், வீல்சேர் ப்ரெண்ட்லி ஸ்பெஷல் வெகிக்கிள், வீல்சேர் ப்ரெண்ட்லி தங்குமிட வசதி, ஸ்பெஷல் கேர் டேக்கர் என அனைத்தையும் நானே முன்னின்று ஏற்பாடு செய்து தருகிறேன் என்கிறார் புன்னகைத்து. அவரிடம் மேலும் பேசியபோது..
எனக்கு ஊர் சென்னை. பெற்றோருக்கு நான் முதல் பெண். எங்களது மிகப் பெரிய கூட்டுக் குடும்பம். 1982 முதல் 1985 வரை பிறந்த குழந்தைகள் போலியோ அட்டாக்கில் அதிகம் பாதிக்கப்பட்ட நேரம் அது. அதில் நானும் ஒருத்தியானேன். போலியோ பாதிப்பில் என் இரண்டு கால்கள், இரண்டு கை மற்றும் வாயும் சேர்த்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அம்மா தன் வாழ்வை முழுமையாக எனக்கே செலவிட வேண்டிய சூழல். என்னை விடுதியில் விடச் சொல்லி அப்பா மற்றும் அவரின் உறவினர்கள் அம்மாவை கட்டாயப்படுத்தத் தொடங்கினர். அம்மா மறுக்கவே, அப்பாவுக்கு இரண்டாவது திருமணத்திற்கான வேலைகளில் குடும்பம் இறங்கியது. வேறு வழி தெரியாத அம்மா என்னை சென்னை பாலவாக்கத்தில் இருந்த மாற்றுத் திறனாளி குழந்தைகளை பராமரிக்கும் இல்லம் ஒன்றில் சேர்த்தார். அப்போது எனக்கு வயது 5 மட்டுமே.
விடுதியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உடல் இயக்கப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, மருத்துவக் கண்காணிப்பு, உதவியாட்கள் என அனைத்தும் இருந்தது. மாதம் எனக்காகும் செலவை தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நிறுவனர் ஒருவர் ஏற்றுக் கொண்டார். அம்மா மட்டுமே என்னைப் பார்ப்பதற்காக அந்த இல்லத்திற்கு வருவார். அப்பா என்னை கண்டுகொள்ளவே இல்லை. அம்மா, அப்பாவின் அன்பு, அவர்களின் அருகாமை, அம்மா மடியில் படுக்க வேண்டும் என்கிற ஆசை என எதுவுமே எனக்கு அந்த வயதில் நடக்கவில்லை. என்னை தூக்கிக் கொண்டு சென்றால், பிறர் கேலி செய்வார்கள் என குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைத்துச் செல்வதையும் தவிர்த்தனர். நான் விடுதியில் இருந்தபோது, எனக்கு ஒரு தம்பி மற்றும் தங்கை பிறந்தனர்.
நடக்க முடியாதவர்களும், தவழ்ந்து செல்பவர்கள் என மாற்றுத்திறனாளிகள் மட்டுமே என்னைச் சூழ்ந்திருக்க, விடுதியே என் உலகமானது. லீவுக்கு வீட்டுக்குச் சென்றாலும் பாட்டி தாத்தா வீட்டுக்குத்தான் நான் சென்று வந்தேன். நான் +2 முடித்ததும் அந்த இல்லத்தில் தொடர முடியாத நிலை ஏற்பட வீட்டுக்கு அழைத்துவரப்பட்டேன். அப்போது என் தம்பி 7ம் வகுப்பும் தங்கை 5ம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தனர். என் வாழ்க்கை அஞ்சலி படத்தில் வந்த அஞ்சலி பாப்பாவின் நிலையானது. என் தம்பி என் அருகில் வரத் தயங்கினான். அவன் என்னை அக்காவாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்கை மட்டுமே அன்பு காட்டினாள். விடுதியிலே வளர்ந்ததால் என்னாலும் குடும்பத்தில் பெரிதாக ஒட்ட முடியவில்லை. என்றாலும், நான் மட்டும் விடுதிக்குப் போகவில்லை எனில் வெளி உலகம் தெரியாமல் வீட்டுக்குள் முடங்கிப் போயிருப்பேன் என்பது புரிய ஆரம்பித்தது.
எனக்கு படிப்பில் ஆர்வம் இருந்தும், எந்த ஒரு கல்லூரி நிர்வாகமும் என்னை போன்ற மாற்றுத் திறனாளியை சேர்த்துக்கொள்ள முன்வரவில்லை. சென்னை பல்கலைக் கழகம் வாயிலாக பி.காம் படித்தபடியே, வேலை தேடத் தொடங்கினேன். கிட்டதட்ட 65 நிறுவனங்களுக்கு மேலாக வேலை தேடி ஏறி இறங்கி இருப்பேன். எல்லோரும் என்னை மாற்றுத் திறனாளியாகத்தான் பார்த்தார்களே தவிர, என் எபிளிட்டி அவர்களுக்குத் தெரியவில்லை. நிராகரிப்புகள் தொடரவே.. அத்தனையும் எனக்கு வலியாக மாறத் தொடங்கியது. ‘நான் செத்துறவா’ என கண்ணாடி முன் நின்று என்னிடம் நானே பேச ஆரம்பித்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் என்னை நிராகரிக்க இவர்கள் யார்..? நிராகரிப்பவர்கள் முன் வாழ்ந்து காட்டுவோம் என்ற எண்ணம் வர ஆரம்பித்தது.
மாற்றுத்திறனாளி என்ற காரணத்திற்காக என்னை நிராகரிக்காதீர்கள். என்னை வெளி உலகோடு தொடர்புப்படுத்திக் கொள்வதற்காகவாவது எனக்கு வேலை வேண்டும் என, ஏ.பி.என் ஆம்ரோ வங்கியில் நடந்த நேர்காணலில் குறிப்பிட்டேன். மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் டெலிகாலர் வேலை எனக்கு அங்கு கிடைத்தது. பேச்சுத் திறமையை வளர்த்துக் கொண்டபின், போலாரிஸ் நிறுவனத்தில் முயற்சித்ததில் அடுத்து 8000 சம்பளத்தில் வேலை கிடைத்தது. அங்கு பணியாற்றிய நிலையில் சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சிகளில் இறங்கினேன்.
வேலை வாய்ப்புகளை பெற்றுத்தரும் கன்சல்டென்ஸி ஒன்றை ஆரம்பித்து, அரசாங்கத்தில் முறையாகப் பதிவு செய்து, என்னை ஒதுக்கிய அத்தனை நிறுவனத்திலும் என் கன்சல்டென்ஸி மூலம் ஊழியர்களை வேலைக்கு அனுப்பத் தொடங்கினேன். இந்த நிலையில் அப்பா உடல் நலம் சரியில்லாமல் நினைவாற்றலை இழந்தார். அம்மாவுக்கும் உடல் நலம் கொஞ்சமாகப் பாதித்திருந்தது. தம்பி தங்கைகள் திருமணமாகி அவரவர் குடும்பம் குழந்தை என்று இருந்தனர். எனவே நான் பெற்றோரை கவனிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி நிறுவனத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. சோர்ந்து போனேன்.
அப்போதுதான் ஸ்டான்டெர்ட் சார்டெட் வங்கியின் வைஸ் சான்ஸிலர் மாதவி லதா மேம் மூலம் வீல்சேர் பேஸ்கெட்பால் விளையாட்டின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. மாற்றுத் திறனாளிகளால் விளையாட முடியுமா என்கிற தயக்கம் எனக்குள் இருக்க, அந்தத் தயக்கத்தை சுக்குநூறாக உடைத்தார் அவர். அவரும் என்னைப்போலவே ஒரு மாற்றுத் திறனாளி என்பதால் அவரையே என் ரோல்மாடலாய் எடுத்துக் கொண்டேன்.
அவர் தந்த ஊக்கத்தில் தொடர்ந்து பயிற்சிகளில் இறங்கினேன். விளையாட்டு எனக்குள் பல மாற்றங்களை விதைத்தது. மாநில அளவிலான போட்டி மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் இறங்கி சிறப்பாக விளையாடியதில், சர்வதேச அளவிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. நமது தேசியக் கொடி பொறித்த டீசர்ட்டினை அணிந்து, முதல் முறையாக பாங்காங் சென்று இந்தியாவுக்காக விளையாடினேன். அந்த நாட்களை அவ்வளவு எளிதில் என்னால் மறக்க முடியாது. என் குடும்பத்தில் இருந்து வெளிநாடு செல்லும் முதல் நபர் என்கிற பெருமையோடு, நான் மாற்றுத் திறனாளி என்பதையே மறந்து, விளையாட்டு வீராங்கனையாய் வின்னில் சிறகடித்துப் பறந்தேன்.
வீல்சேர் பேஸ்கெட்பால் விளையாட ஆரம்பித்ததுமே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உறுதியானேன். என் திறமையை பாராட்டி நான் பணியாற்றிய அலுவலகத்தில் வீல் சேர் ஒன்றை வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். நாம் ஒரு அடி எடுத்து வைத்தால், நம்மைப் பாராட்டவும், கைதட்டி ஆர்ப்பரித்து ஊக்குவிக்கவும் நிறைபேர் இருக்கிறார்கள் என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. நானும் இந்த சொசைட்டிக்கு திரும்ப எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தேன்.
தொடர்ந்து எனது உடல் நலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி உடல் உறுதிக்காக நீச்சல் பயிற்சியிலும் இறங்கினேன். அங்கிருந்த பயிற்சியாளர், நீச்சலில் தனிநபர் விளையாட்டுக்களில் என்னை விளையாட அறிவுறுத்தினார். குழு விளையாட்டிற்கு வீல்சேர் பேஸ்கெட் பால், தனிநபர் விளையாட்டிற்கு நீச்சல் பயிற்சி என முடிவு செய்து தொடர் பயிற்சிகளில் இறங்கியதில், விளையாடுவதற்காக மாநிலம் விட்டு மாநிலம் மற்றும் தேசம் விட்டு தேசம் என கால் பதித்தபோது சுதந்திர உணர்வு எனக்குள் சூழ்ந்து கொண்டது.
வெளிநாடுகளில் மாற்றுத்திறனாளி தனியாகப் பயணிக்க யார் உதவியும் தேவையில்லை. அந்த அளவுக்கு அங்கே கட்டமைப்பு வசதிகள் வீல்சேர் ப்ரெண்ட்லியாகவே இருந்தது. எனக்கு அவை ஹேப்பி மொமெண்டாக இருந்ததுடன் பயணங்கள் என்னை பக்குவப்படுத்தியது. நான் அனுபவிக்கும் மகிழ்ச்சியை என்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களும் அனுபவிக்க வேண்டும் என நினைக்கத் தொடங்கினேன். எனவே மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய இன்குளூசிவ் டூரிசம் ஏஜென்ஸி எடுத்து நடத்தும் எண்ணம் எனக்குள் வர ஆரம்பித்தது. அதுவே “யாதுமாகி டூர் அண்ட் டிராவல்’’ நிறுவனமாக உருவானது.
மாற்றுத் திறனாளிகள் சாதிக்க முடிவெடுத்து வெளியே வந்துவிட்டால் நம்மை தட்டிக்கொடுக்கவும்.. கை தூக்கிவிடவும் இங்கு நிறையபேர் இருக்கிறார்கள். முயற்சியை நாம்தான் துணிந்து எடுக்க வேண்டும் என்றவர், நமது மனம்தான் ஊனமாக இருக்கக் கூடாது. நம் உடல் ஊனத்தை நாம் நினைத்தால் கண்டிப்பாக வெல்ல முடியும் என்ற நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்து விடைபெற்றார்.