அக்கா கடை – பாட்டி சொல்லிக் கொடுத்த கருப்பட்டி பணியாரம்! (மகளிர் பக்கம்)
மதுரை என்றாலே விடிய விடிய உணவு கடைகள் தான் நினைவுக்கு வரும். தூங்கா நகரம் என்ற பெயருக்கு ஏற்ப சுடச்சுட இட்லி முதல் முட்டை பரோட்டா எல்லாம் இங்க ஃபேமஸ். அதில் மிகவும் முக்கியமானது பணியாரம். முன்பெல்லாம் இங்கு தெருவீதியில் பாட்டிக்கள் இட்லி மற்றும் பணியாரம் சுட்டு விற்பனை செய்வது வழக்கம். ஆனால் காலப்போக்கில் பாட்டிக்கள் பணியாரம் சுடுவதை நிறுத்திவிட்டார்கள். மக்களும் பாரம்பரிய உணவினை தவிர்த்து ஃபாஸ்ட் புட் உணவுகளுக்கு மாறிவிட்டார்கள். இந்த எண்ணத்தை மாற்றி அனைவருக்கும் ஆரோக்கியமான உணவினை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மதுரையை சேர்ந்த சக்திமாய் மற்றும் குமார் தம்பதியினர் காலை சிற்றுண்டி பணியாரம் மற்றும் ஆப்பக்கடையினை நடத்தி வருகிறார்கள்.
‘‘ஏழு வருஷம் முன்பு நானும் என் கணவரும் சேர்ந்து சாதாரண சிற்றுண்டி உணவகத்தினை நடத்தி வந்தோம். பெரிய ஓட்டல் எல்லாம் இல்லாமல், எங்க வீட்டு வாசலிலேயே சிறிய அளவில் இட்லி, சப்பாத்தி, பூரி போன்றவற்றைக் கொடுத்து வந்தோம். ஆனால் அதை தொடர்ந்து எங்களால் நடத்த முடியவில்லை. காரணம் அப்போது என் இரண்டு மகன்களும் ஒருவர் பத்தாவதும் மற்ெறாருவர் பன்னிரெண்டாம் வகுப்பும் படிச்சிட்டு இருந்தாங்க. அவங்களை சரியாக கவனிக்க முடியல என்பதால், அந்த சிற்றுண்டி உணவகத்தை நடத்தல’’ என்று பேசத் துவங்கினார் சக்திமாய். ‘‘நான் தையல் கலைக்கு படிச்சிருக்கேன்.
வீட்டில் இருந்தபடியே சுடிதார், பிளவுஸ் எல்லாம் தைத்துக் கொடுப்பேன். என் கணவர் பினாயில், பிளிச்சிங் பவுடர் போன்ற ெபாருட்களை விற்பனை செய்து வந்தார். ஓரளவு வருமானம் இருந்தது. அதே சமயம் பசங்க வளர்றாங்க. அவங்களின் படிப்பு செலவிற்கு தேவை அதிகமா இருந்தது. என்ன செய்யலாம்ன்னு புரியல. மேலும் என் கணவருக்கு மீண்டும் ஒரு உணவகம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதுவும் அவர் பாட்டி அவருக்கு கற்றுக்கொடுத்த கருப்பட்டி பணியாரம் மற்றும் ஆப்பம். அதற்கு முக்கிய காரணம் இந்த காலத்து தலைமுறையினருக்கு துரித உணவினை தவிர்த்து ஆரோக்கிய உணவினை கொடுக்க வேண்டும்.
காலை சிற்றுண்டியாவது அவர்கள் நல்ல உணவினை சாப்பிட வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மறுபடியும் இந்த கடையை துவங்கினோம். எண்ணம் நன்றாக இருந்தால்… அதை அரங்கேற்றம் செய்வதற்கான வழி தன்னால் அமையும். அப்படித்தான் என் கணவரின் சிறுவயது தோழி ஹேமா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் தான் மீண்டும் நீங்க உணவு கடையை ஆரம்பிக்கணும்ன்னு எங்களுக்கு ஊக்கம் அளித்தது மட்டுமில்லாமல் எங்களின் நிலை அறிந்து, முதலீட்டிற்கு பணஉதவியும் செய்தார். அப்படித்தான் எஸ்.கே.ஆர்.ஜி என்ற பெயரில் பணியாரக்கடையை ஆரம்பிச்சோம்’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் கணவர் குமார்.
‘‘என் மனைவி நல்லா ெடய்லரிங் வேலைப்பாடு செய்வாங்க. இந்த கடையை ஆரம்பிச்சதால அவங்க அதை முழு நேரமா செய்ய முடியவில்லை என்றாலும், கிடைக்கும் நேரத்தில் செய்து தராங்க. காரணம் சாப்பாட்டுக்கடை ஆரம்பிச்சா… கண்டிப்பா அதில் முழு கவனத்தினை செலுத்த வேண்டும். அப்பதான் உணவின் சுவை என்றும் மாறாமல் இருக்கும். இங்க நாங்க நிறைய உணவுகள் எல்லாம் கொடுப்பதில்லை. கருப்பட்டி பணியாரம், ஆப்பம் மற்றும் கார பணியாரம் மட்டும் தான் தருகிறோம். காலை ஆறரை மணி முதல் ஒன்பது மணி வரைதான் கடை இருக்கும். அந்த நேரத்தில் தான் பள்ளிக்கு செல்லும் பசங்க மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சாப்பிட வருவார்கள்.
கருப்பட்டி உடலுக்கு நல்லது. குளிர்ச்சியும் கூட என்பதால் பலர் விரும்பி சாப்பிடறாங்க. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இதனை ஸ்னாக்சாகவும் வாங்கி செல்கிறார்கள். இதில் முக்கிய அம்சமே வீட்டில் தயாரிப்பது போல் தான் இருக்கும். அதாவது எங்க வீட்டு பசங்களுக்கு எப்படி தயார் செய்கிறோமோ அப்படித்தான் இங்கும் சமைத்து தருகிறோம். ஆப்பம் மற்றும் பணியாரம் நன்கு உப்பி வர சிலர் ஆப்பசோடா சேர்ப்பாங்க. நாங்க அது சேர்ப்பதில்லை.
கருப்பட்டி பணியாரத்தில் சுக்கு, ஏலக்காய் இருக்கும். அதேபோல் காரப்பணியாரத்தில் மிளகு, சீரகம், வெங்காயம் எல்லாம் இருக்கும். இவை அனைத்தும் உடலுக்கு நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி சாப்பிடுறாங்க. ஆப்பம் மற்றும் பணியாரத்தை நல்லெண்ணை மற்றும் நெய் கலந்து தான் சுடுகிறோம். கருப்பட்டியில் செய்வதால், இதற்கு தொட்டுக் கொள்ள எதுவும் அவசியமில்லை. அப்படியே சாப்பிடலாம். ஆனால் நாங்க ஊத்துக்குளி வெண்ணை தருகிறோம். இனிப்புடன் கொஞ்சமா வெண்ணை தொட்டு சாப்பிடும் போது அதன் சுவை வித்தியாசமாக இருக்கும். மேலும் இந்த மாவினை என் மனைவி வீட்டில் தயார் செய்கிறார். பணியாரத்திற்கும் ஆப்பத்திற்கும் மாவு ஒன்று தான். ஆனால் பணியாரத்திற்கு மாவு கொஞ்சம் கெட்டியா இருக்கணும். ஆப்பத்திற்கு தண்ணியா இருக்கணும். அவ்வளவுதான்’’ என்றார்.
‘‘எங்களுக்கு கடை வாடகை கொடுத்து நடத்த பெரிய அளவில் வசதி எல்லாம் இல்லை. அதனால்தான் எங்க வீட்டு வாசல் முன்பு சின்னதா ஒரு கடைபோல அமைத்து அதில் செய்து வருகிறோம். இங்கு நான் பார்த்துக் கொள்வேன். மற்றொரு தள்ளுவண்டி கடை. அது வேறு இடத்தில் வைத்திருக்கோம். அதை என் கணவர் பார்த்துக் கொள்கிறார். இரண்டு இடத்தில் கடை நடத்தும் போது ஓரளவிற்கு வருமானம் பார்க்க முடிகிறது. மேலும் என் இரண்டு மகன்களும் நான் இல்லாத நேரத்தில் கடையை பார்த்துக் கொள்வாங்க. திங்கள் முதல் சனி வாரத்தில் ஆறு நாட்கள் கருப்பட்டி பணியாரம் மற்றும் ஆப்பம் தருகிறோம். ஞாயிறு மட்டும் இதனுடன் காரப்பணியாரம் சேர்த்து தருகிறோம்.
அன்று விடுமுறை என்பதால், பலர் காலை சிற்றுண்டிக்காக வருகிறார்கள். அந்த சமயத்தில் இனிப்புடன் சேர்த்து காரப்பணியாரம் கொடுக்கும் போது மக்கள் ரொம்பவே விரும்பி சாப்பிடுறாங்க. ஆரம்பிச்ச போது பெரிய அளவில் வியாபாரம் இல்லை. காரணம் எங்களுடைய கடை ஒரு சின்ன சந்தில் தான் இருக்கு. அந்த சந்தில் உள்ளவர்கள் தான் வாங்க வருவாங்க. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கடையில் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிச்சது. இங்கே வாங்கியவங்க மற்றவர்களிடம் சொல்ல அப்படியே பலர் வாங்க ஆரம்பிச்சாங்க. நான்கு பணியாரம் பத்து ரூபாய் என்பதால் பலரும் வாங்கி செல்கிறார்கள்.
எங்களின் நோக்கம் ஆரோக்கியமான உணவினை கொடுக்க வேண்டும். அதுவும் அனைவரும் சாப்பிடக்கூடிய விலையில் தரணும். கடையை நானும் என் கணவரும் மட்டுமே பார்ப்பதால், காலை ஒன்பது மணி வரை தான் நடத்த முடியும். மேலும் எங்களின் கடை இருக்கும் சந்து பஜார். கடைகள் குறிப்பா பாத்திரக்கடைகள் நிறைந்த சந்து. ஒன்பது மணிக்கு மேல் இரவு வரை இங்கு நிக்க கூட இடம் இருக்காது. சாப்பிட வருபவர்கள் ரிலாக்சா வாங்கி செல்ல காலை நேரம் தான் உகந்தது.
அதனால் காலை மட்டுமே தான் நாங்க கடை போடுறோம். மேலும் இது போன்ற கடைகள் பல இடங்களில் போட்டால் தான் எல்லா மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க முடியும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் பார்க் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் கொண்டு வரணும்னு எண்ணம் உள்ளது’’ என்றார் சக்திமாய்.