இவர்கள் சிரிப்பில் என் பெற்றோரை பார்க்கிறேன்!(மகளிர் பக்கம்)
‘‘எனக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் சின்ன வயசில் இருந்தே இருந்தது. அப்ப நான் +2 தேர்வு எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த நேரம். அந்த சமயத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் பர்சனல் அசிஸ்டென்டா வேலை பார்த்து வந்தேன். அப்போது சிகிச்சைக்காக தினசரி தமிழ் பத்திரிகையின் உரிமையாளர் வந்திருந்தார். அவருக்கு என்னை ரொம்பவே பிடிச்சிருந்தது. ஒரு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க சொல்லிக் கேட்டுக் கொண்டார். அப்படித்தான் அந்த பத்திரிகை சார்பாக நடிகர் விஜய் அவர்களின் பேட்டியை தூர்தர்ஷனில் தொகுத்து வழங்கினேன். அதைப் பார்த்து எனக்கு மாடலிங் துறையில் வாய்ப்பு வர ஆரம்பிச்சது’’ என்று தான் சின்னத்திரையில் கடந்து வந்த பாதையைப் பற்றி விவரித்தார் சின்னத்திரை நடிகையான பானு பரத்வராஜ்.
‘‘மாடலிங் தான் நடிப்புத் துறைக்கான முதல் படி. அப்படி மாடலிங் செய்து வந்த எனக்கு தொலைக்காட்சி சீரியலிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ‘மால்குடி டேஸ்’ ‘காத்து கருப்பு’ போன்ற புகழ்பெற்ற சீரியல்களில் நடித்தேன். இப்படியாக ெதாடர்ந்து எனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ஆனால் திருமணமானபிறகு நான் நடிப்பில் இருந்து முற்றிலும் விலகிட்டேன். ஆனால் அந்த விலகல் தான் என்னை பெரிய மன உளைச்சலுக்கு தள்ளியதுன்னு சொல்லணும்.
காதல் திருமணம். ஆனால் திருமணமான சில நாட்களிலேயே என் பெற்றோரை ஒரு விபத்தில் இழந்தேன். அது எனக்குள் பெரிய இடியை ஏற்படுத்தியது. ரொம்பவே நொடிஞ்சு போயிட்டேன். யாருமே இல்லாத அனாதையா உணர்ந்தேன். காரணம் நான் சின்ன வயசில் இருந்தே தனியாக தான் வளர்ந்தேன். என் அப்பா அம்மா இருவருமே வேலை காரணமா வெளியூர் பயணம் செய்வாங்க. நான் ஹாஸ்டலில் தான் படிச்சேன். அதனால் நான் குடும்பமா ரொம்ப பெருசா வாழ்ந்தது கிடையாது. அதனால் தான் காதலித்து திருமணம் செய்தேன். ஆனால் அந்த திருமணமும் ஒரு வருடம் தான் நீடித்தது. என் கணவர் என்னையும் கைக்குழந்தையும் நிர்கதியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
அவர் ஏன் எங்களை அப்படியே விட்டு சென்றார்ன்னு எனக்கு இன்றும் விடை தெரியல. ஒரு பக்கம் அப்பா அம்மா இல்லை. இப்போது கணவரும் இல்லை. கையில் என் மகன் மட்டுமே இருந்தான். அந்த நேரத்தில் நான் ரொம்பவே உடைஞ்சிட்டேன். என்ன செய்றதுன்னே தெரியல. என் மகனுக்காக வாழ வேண்டும். அவனுக்கு ஒரு குடும்பமா நான் இருக்கணும்ன்னு மட்டும் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. எனக்கு தெரிந்த ஒரே விஷயம் நடிப்பு மட்டும் தான். அதனால் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு தேடி போனேன். சன் டிவியில் ஒளிபரப்பான ‘பிரியமானவள்’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது.
அதில் வில்லியாகத்தான் நடிச்சேன். அதன் பிறகு பல சீரியல்களில் நடிச்சிருக்கேன். எல்லாமே நெகட்டிவ் ரோல் தான். அதற்காக நான் வருத்தப்படல. காரணம், நிஜ வாழ்க்கையில் கூட நடிக்காதவர்கள் என்று யாரும் இல்லை. என் கணவன் மேல் இருக்கும் கோபம் தான் என்னுடைய வில்லி கதாபாத்திரத்தில் வெளிப்படுகிறது’’ என்றவர் தன் வாழ்க்கையில் சந்தித்த இக்கட்டான நிலைப் பற்றி விவரித்தார்.
‘‘ஒரு முறை பிரியமானவளே சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன். நான் ஷூட்டிங் போகும் போது, என் மகனை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு செல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான் விட்டு சென்றிருந்தேன். பக்கத்து வீட்டில் இருந்து போன் வந்தது. அவர்கள் என் மகனுக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாக கூறி, சீக்கிரம் வரச் சொன்னார். அன்றைக்கு இரவு 9 மணிவரை ஷூட்டிங் இருந்தது. சீரியலில் கதைப்படி பிரிந்து இருந்த குடும்பம் பல நாட்களுக்கு பின் சேர்வது போலவும், அன்று நாள் முழுதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் காட்சி. என் மகனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாத நிலை.
அப்படிப்பட்ட நிலையில் சிரித்துக் கொண்டே நடிக்கணும். எப்போது ஷூட் முடியும் என்று தவிப்பு மனதை அழுத்த ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்தேன். அலுவலக வேலை என்றாலும் ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்கலாம். இங்கு அப்படியும் செய்ய முடியாது. அன்று என்னுடைய நடிப்பு அனுபவத்தை இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது’’ என்றவர் பெண்களுக்காகவே அழகு நிலையம் மற்றும் பொட்டிக் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.
‘‘வாழ்க்கையில் இனிமேல் வாழவே முடியாத நிலையில் இருக்கும் பெண்களுக்காகவே பொட்டிக் மற்றும் அழகு நிலையம் ஒன்றை ஆரம்பித்தேன். இங்கு வேலை செய்யும் பெண்கள் அனைவருமே ஏதாவது ஒரு காரணத்தால் வாழ்க்கை இழந்து நிற்பவர்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவே இதனை நடத்தி வருகிறேன். சமூக சேவை செய்ய எனக்கு பிடிக்கும்.
ஒவ்வொரு மாதமும் முதியோர் அல்லது அனாதை இல்லங்களுக்கு அரிசி, ஹார்லிக்ஸ், சோப்பு, பேஸ்ட் போன்றவற்றை வாங்கி தருவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். அடுத்து முதியோர் இல்லம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தாய் தந்தையை இழந்த எனக்கு தான் அவர்களின் அருமை தெரியும். என்னுடைய கடைசி காலத்தில், இவர்களுடன் சிரித்து பேசி, ஒன்றாக சாப்பிட்டு நிம்மதியாக கழிக்க வேண்டும். இவங்க சிரிப்பில் என் பெற்றோரை பார்க்கிறேன்’’ என்றார் பானு பரத்வாஜ்.