பெண்களும் பணியாற்றும் விமான தொழிற்சாலை! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 30 Second

மேகக் கூட்டங்களுக்கு நடுவே வெள்ளை நிற சிறகை விரித்து பறவைபோல் சீராய் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்து வியந்த பெண்கள், இன்று விமானத்தை இயக்குபவர்களாகவும், கட்டுப்படுத்துபவர்களாகவும், தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்பவர்களாகவும், விமான பாகங்களை தயாரிக்கும் டிசைனிங் துறைகளிலும் கால் பதித்திருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கிராமம் பேளகொண்டப்பள்ளி. இங்குதான் விமானங்களைத் தயாரிக்கும் தனியார் நிறுவனமான டால் (TAAL – Taneja Aerosapace and Aviation Limited) செயல்படுகிறது. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் தனியார் ஏர்கிராஃப்ட் கம்பெனி இதுவாகும்.

இங்கு பெரிய ரக பயணிகள் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், உளவு விமானங்கள் வந்து செல்ல வசதியாய் 7,200 அடி நீள விசாலமான ஓடுதளத்தோடு கூடிய விமானநிலையம் அமைந்துள்ளது. இங்கு விமான பாகங்கள் தயாரிப்பு மற்றும் விமான பராமரிப்பு பணி சார்ந்து பணியாற்றும் சில பெண்களை சந்தித்துப் பேசியபோது…ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் என்பது வேறு, ஏரோ ஸ்பேஷ் இஞ்சினியரிங் என்பது வேறு என நம்மிடம் முதலில் பேசத் தொடங்கியவர் அஸ்வினி. சுனிதா வில்லியம்ஸை பார்த்து எனக்கும் ஸ்பேஸ் போகும் ஆர்வம் வந்தது. அவரின் செயல்களை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன் என்றவரின் சொந்த ஊர் கரூர். பள்ளிப் படிப்பை முடித்து, ஓசூரில் இருக்கும் அதியமான் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் முடித்தேன். பயிற்சிக்குப் பிறகே ‘டால்’ ஏர்கிராஃப்ட் நிறுவன பணியில் இருக்கிறேன்.

இரு சக்கர வாகனம் அல்லது காருக்கு எந்த மாதிரியான பாகங்கள் தேவைப்படும், அதை எப்படி டிசைன் செய்கிறார்கள், தயாரிக்கிறார்கள், எப்படி இயக்குகிறார்கள் என்பது மாதிரியான அதே கான்செப்ட்தான் ஏர்கிராஃப்ட்டிலும். ஆனால் புதிது புதிதாய் நாம் கேட்காத பல வார்த்தைகள், கேள்விப்படாத விசயங்கள் ஆரம்பத்தில் எங்களுக்கு தடுமாற்றத்தைக் கொடுத்தாலும், தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகள் படிக்க படிக்க பழக்கமாகிவிட்டது.

மற்ற பொறியியல் பாடங்களை எடுத்துப் படிக்கும் மாணவர்கள், செயல்முறை கல்வியில் நேரடி அனுபவத்தைப் பெறுவார்கள். ஆனால் ஏர்கிராஃப்ட் பாடத்திட்டத்தில் வேலைக்கு வந்த பிறகே பாகங்கள் பற்றியும் அதன் இயக்கம் பற்றியும் நேரடி அனுபவம் கிடைக்கும். அதுவரை எல்லாமே தியரிதான். விமானத்தை நேரடியாக பயன்படுத்தும்போதே எங்களால் உணர முடிகிறது என்கிறார் இவர்.

என்னோடு ஏரோநாட்டிக்கல் படித்த கவிதா புரொடக்ஷன் இன்ஜினியராகவும், மோகனப்ரியா மெத்தெட்ஸ் இஞ்சினியராகவும் இங்கு பணியில் இருக்கின்றனர். இன்னும் சில பெண்களும் வெவ்வேறு துறை சார்ந்த பணிகளில் இருக்கின்றனர் என தொழில் நுட்பக் கோளாறுகளை சரி செய்து கொண்டிருந்த சிலரை நோக்கி விரல் நீட்டினார்.

நாங்கள் டிசைனர். ஏர் க்ராஃப்ட் டிசைனிங் மற்றும் அதன் பாகங்களை டிசைன் பண்ணும் பிரிவில் இருக்கிறோம். ஆட்டோகேட். கேட்டையா, ப்ரோ-இ போன்ற டிசைனிங் சாஃப்ட்வேர்கள் இதற்கென பிரத்யேகமாக உள்ளது எனப் பேசத் தொடங்கியவர் ஏர்கிராஃப்ட் பொறியாளர் கவிதா. நாங்கள் மைநூட் லெவல், மைக்ரான் லெவல் குவாலிட்டி பார்த்து பாகங்களை தயார் செய்து தருகிறோம். 100 சதவிகிதமும் குவாலிட்டி எங்கள் கம்பெனி. விமானம் பறக்கும்போது எந்த தொழில்நுட்ப பிரச்சனையும் வராத மாதிரியான பாகங்களாகப் பார்த்துப் பார்த்து நூறுசதவிகிதமும் குவாலிட்டியாகவே கொடுக்க வேண்டும். பாகங்களை எந்த லெவலில் கொடுக்க வேண்டும் என்பதையும் நாங்களே முடிவு செய்வோம். நாங்கள் கொடுப்பதைத்தான் தயாரிப்பார்கள்.

T68C என்கிற ஏர்கிராஃப்ட் விமானத்தை நாங்களே தயார் செய்தோம் எனப் புன்னகைக்கிறார் கவிதா.அவரைத் தொடர்ந்து பேசிய மோகனப் பிரியா இஸ்ரோ மற்றும் சந்திராயனுக்கு தேவையான பாகங்கள், ராக்கெட்டின் பாகங்கள், ராக்கெட் பூஸ்டர்ஸ், ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் விமானங்கள், குட்டி ரக இலகு விமானங்கள், யூஏவிஸ் என அழைக்கப்படும் அன்வான்டெட் ஏரியா வெகிக்கிளான மிலிட்டரிக்குத் தேவையான சிறிய ரக பாம் டிடெக்டெட் ரிமோட் கண்ட்ரோல் விமானங்கள் மற்றும் மனிதர்களால் செல்ல முடியாத இடங்களுக்கும் செல்லும் ஆளில்லாத சிறியரக விமானங்களும் இங்கு தயாராகிறது.

அரசின் திட்டங்களான சி.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி ஸ்கின், ராக்கெட் பாகங்கள், அரசு நிறுவனமான எச்.ஏ.எல்.(Hindustan Aeronatical Limited) செயல் திட்டங்களான ஏ.எல்.எச்,
எல்.சி.எச் ஹெலிகாப்டர்களுடைய பாகங்களும் இங்கு தயாராகிறது. தயாரிப்பு தவிர பராமரிப்பிற்காகவும் பெயிண்டிங் வேலைக்காகவும் சில விமானங்கள் எங்கள் நிறுவனத்திற்கு வந்து செல்லும். நம் பாரதப் பிரதமரின் விமானம்கூட சில நேரங்களில் இங்கு வந்து பராமரிப்பு பணிகளை முடித்துச் செல்லும். அந்த நேரத்தில் 10 முதல் 15 தினங்களுக்கு எங்கள் நிறுவனத்தை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டிருக்கும். தனிநபர் உபயோகிக்கும் விமானங்களும் பரமாரிப்பிற்காக (maintenance) இங்கு வருகின்றன. விமானத்திற்கான பராமரிப்பை காலதாமதம் செய்யாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்துவிட வேண்டும் என்கின்றனர் இவர்கள்.

500 பேர் வேலை செய்யும் எங்கள் கம்பெனியில் 6 மற்றும் 7 பெண்களே பணியில் உள்ளோம். இந்தத் துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையெனத் தவறாக நினைத்து, பெண்கள் வரத் தயங்குகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. பெண்களும் தைரியமாக இந்தத் துறையை தேர்ந்தெடுக்கலாம் என்கின்றனர் அழுத்தமாகவே.

அடுத்து நம்மிடம் பேசியவர் ஏர் டிராபிக் கண்ட்ரோலர் சிந்து. எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் பொறியியல் முடித்து, ஏர் டிராபிக் கண்ட்ரோல் தொடர்பான RTRI தேர்வெழுதிய பிறகே இந்தப் பணியில் இருக்கிறேன். என் வேலை ரிசிவ் அண்ட் டாக் ப்ரிக்கொயன்ஸி எனப்படும் விமானக் கட்டுப்பாடு தொடர்பான வேலை. கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்தவாறே என் முன்னால் இருக்கும் புஸ் டாக் மூலமாக பைலட்டோடு தொடர்புகொண்டு, வெளியில் நிலவும் தட்ப வெப்ப நிலை (weather information), காற்று வீசும் திசை (wind direction) காற்றின் வேகம் மற்றும் அழுத்தம் (wind pressure), விமான ஓடு பாதையின் நிலை (runway condition) போன்றவற்றைக் கவனித்து டைரக் ஷன் (tansmit) கொடுக்க வேண்டும் என்றவாறு பைலட்டோடு பேச ஆரம்பித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அம்மா-குழந்தைகளுக்கான ஸ்பெஷல் பயணங்கள்!(மகளிர் பக்கம்)
Next post குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா?(மருத்துவம்)