சென்னைக்கு வந்துவிட்டது லிப்பான் கலை!(மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 33 Second

ஆர்ட்பீட் பை வி (artbeat.by.v) எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான தமிழ் பெயர் பலகைகள், தமிழ் டைப்போகிராஃபி போஸ்டர்கள் மூலம் ஃபாலோவர்ஸை அள்ளி வருகிறார் சென்னையைச் சேர்ந்த வர்ஷா உமாசந்தர். கைகளாலேயே இந்த பரிசுப் பொருட்களை உருவாக்கும் இவர், இப்போது குஜராத்தில் மட்டுமே பிரபலமான லிப்பான் கலையை சென்னையிலும் செய்து வருகிறார்.

‘‘நான் படித்தது பொறியியல். திருமணமாகி, பெங்களூர் சென்றேன். அங்கு போனதும் கொரோனா நோய் தொற்று அதிகமாகி, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த கொரோனா ஊரடங்கு பலரை மாற்றியது. அதுவரை வேலை, குடும்பம் என ஓடிக்கொண்டே இருந்தவர்களுக்கு கொஞ்சம் நிதானமாக நின்று யோசிக்க நேரம் கிடைத்தது. பலருக்கும் முதல் முறையாக தங்களின் 24 மணி நேரமும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எப்போதுமே ஆசை இருந்தும் அதை செய்ய நேரமில்லாத விஷயங்களை மக்கள் செய்யத் தொடங்கினர். பேக்கிங், சமையல், ஓவியம், தோட்டக்கலை என பலரும் சுயமாக தொழில் செய்ய ஆரம்பித்தனர்.

நான் சரியாக கொரோனா முதல் அலையின் போது பெங்களூருக்கு சென்றதால், அங்கு ஊரடங்கு அறிவிப்பு வெளியானது தெரியாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் சூழ்நிலை உருவானது. அந்த சமயம், புதிய வீட்டை அலங்கரிக்கலாமே என சுவரில் தொங்கும் அலங்காரங்களைதான் நான் முதலில் செய்ய ஆரம்பித்தேன். அப்படியே நான் உருவாக்கிய சில கலைப் பொருட்களை என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தேன்.

இன்ஸ்டாகிராமில் ஆர்ட்பீட் பை வி (artbeat by.V) எனும் பக்கத்தை தொடங்கும் போது, அதை நான் உருவாக்கும் கலைப் பொருட்களை சேமித்து வைத்து எதிர்காலத்தில் பார்த்து ரசிக்கலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், அதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் கலைப் பொருட்களை வாங்க விரும்புவதாக கூறி, சில ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. தொடர்ந்து பல அமைப்புகள் வந்ததால், என் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை முறையான வணிக பக்கமாக மாற்றியமைத்தேன்.

90ஸ் கிட்ஸ், பொதுவாகவே யாருக்காவது பரிசு கொடுக்க வேண்டுமென்றால், அதை தங்கள் கைப்பட உருவாக்கித்தான் கொடுப்பார்கள். நான் என்ன படித்தாலும், வேறு எந்த பொழுதுப்போக்கில் என்னுடைய கவனம் இருந்திருந்தாலும், இந்த கைவினைக் கலை மட்டும் என்றுமே என்னுடன் இருந்து வந்தது. இப்போது அதில் தொழில் ரீதியாக இறங்கும் போதுதான், எனக்கு கலை மீது இருந்த ஆர்வத்தை உணர முடிந்தது. அது வரை என்னுடைய கைவினைக் கலையை நான் ஒரு திறமையாகவோ, வருமானம் ஈட்டித்தரக்கூடிய துறையாகவோ பார்த்ததே இல்லை.

நான் உருவாக்கும் பரிசுப் பொருட்கள் எல்லாமே என் கைகளால் உருவாக்குவதுதான். தமிழ் மற்றும் ஆங்கில மொழியில், வீட்டிற்கு வெளியே மாட்ட, அழகான பெயர் பலகைகளை செய்து கொடுக்கிறேன். வீட்டுக்குள் சுவரில் மாட்டும் அலங்காரப் பொருட்களையும் செய்து கொடுக்கிறேன். தமிழில் வடிவேலு காமெடிகளை அழகிய டைப்போகிராஃபி கலையில் எழுதிக் கொடுக்கிறேன்.

லிப்பான் ஆர்ட் எனப்படும் புதிய வகை கலையையும் செய்து வருகிறேன். இந்த லிப்பான் கலை, குஜராத் மாநிலத்தில்தான் பிரபலம். குஜராத்தின் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த லிப்பான் கலை மூலம் செய்த பொருட்களை வைத்து தங்கள் இல்லங்களை அலங்கரிப்பார்கள். எனக்கு எப்போதுமே நான் என் கைகளால் செய்த பொருட்களை மற்றவர் பயன்படுத்துவது அல்லது அவர்களுக்கு மனதிற்கு நெருங்கிய பொருளாக பத்திரப்படுத்தி வைப்பது ரொம்ப பிடிக்கும்.

வெகு சிலர் மட்டுமே இது மாதிரியான கஸ்டமைஸ்ட் பரிசுப் பொருட்களை விரும்பி வாங்குகின்றனர். ஆனால் ஒரு கஸ்டமைஸ்ட் பொருளை, பரிசாக யாருக்கு கொடுத்தாலுமே அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஒருவருக்காக நேரம் ஒதுக்கி அவருக்கு என்ன பிடிக்கும் என்பதை நிதானமாக யோசித்து அதை கைப்பட உருவாக்கி பரிசளிக்கும் போது, அளவில்லா ஆனந்தத்தை அவருக்கு நாம் கொடுக்கிறோம்.

பலர் இன்ஸ்டாகிராமில் இருக்கும் கலைஞர்கள் சுலபமாக சம்பாதித்துவிடுவதாக நினைக்கிறார்கள். இன்றைய சமூக வலைத்தளம் நமக்கு பெரிய பலம் என்றாலுமே, அதில் நிலைத்து நிற்க விடா முயற்சியும் கடின உழைப்பும் தேவை. அதிக பொறுமையும் கலைஞர்களுக்கு மிகவும் அவசியம். தினமும் நம் பயிற்சியை கைவிடாமல் புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்” என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கலை வடிவங்களுக்கும் பாடத்திட்டங்கள் வரவேண்டும்!(மகளிர் பக்கம்)
Next post ஆண்களின் செக்ஸ் பிரச்னைகள்!!(அவ்வப்போது கிளாமர்)