அப்பாவின் பயிற்சி!அம்மாவின் ஆலோசனை!(மகளிர் பக்கம்)
எந்த ஒரு வேற்றுமையும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக உணர்வது திரையரங்கு, வகுப்பறைகளுக்கு அடுத்து விளையாட்டு மைதானம். உடலினை உறுதி செய்து கொள்ள விளையாட்டுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இன்றைய 2கே தலைமுறை குழந்தைகள் பெரும்பாலும் தங்களது விளையாட்டுகளை டிஜிட்டலிலேயே கழித்து வரும் வேலையில், நேரடியாக குழந்தைகள் மைதானத்தில் விளையாடுவதை ஆக்கப்பூர்வமாக செயல்வடிவமாக்கி வருகிறார் சென்னையை சேர்ந்த ராஜா. தெற்கு ரயில்வே மற்றும் தேசிய அளவிலான கூடைப்பந்து பயிற்சியாளராக இருக்கும் ராஜாவின் வீட்டில் அனைவரும் தேசிய அளவில் கூடைப்பந்து விளையாடக் கூடியவர்கள். அந்த வகையில் ராஜாவின் மகள் தீப்தி கூடைப்பந்து விளையாட்டில் தன் அனுபவத்தை பகிர்கிறார்.
‘‘அப்பா, அம்மா இரண்டு பேருமே பாஸ்கெட் பால் பிளேயர் என்பதால் எனக்கும், தம்பிக்கும் அவ்விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது. பதினாறு ஆண்டுகளுக்கு மேல் அம்மா தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விளையாடி இருக்காங்க. இப்போது தம்பியும், நானும் நேஷ்னலில் விளையாடுகிறோம். ஆறாம் வகுப்பு முடித்து ஏழாம் வகுப்பு போகும் போது SGFIல் (School Games Federation of India) தேர்வானேன். இப்போது நான் படிக்கும் பள்ளியிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். அப்பாதான் என்னுடைய கோச். அம்மா எனக்கு விளையாட்டில் உள்ள நுணுக்கங்களைப் பற்றி ஆலோசனை சொல்வாங்க.
இருவரின் கைடன்சில் ஜூனியர், அண்டர் 16 போன்ற கேட்டகிரியில் மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்றேன்” என்கிற தீப்தி, தேசிய அளவில் நடந்த போட்டியில் ஐந்துக்கும் மேற்பட்ட பதக்கங்கள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். ஏழாம் வகுப்பு படிக்கும் போதே சர்வதேச அளவில் நடைபெற்ற கேம்பில் தேர்வாகி, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து அதில் பங்கெடுத்திருக்கும் தீப்தியின் கனவு மருத்துவர் ஆக வேண்டுமாம்.
‘‘மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான் என் லட்சியம். மருத்துவம் படித்து ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்கணும். அப்பா அவரின் கூடைப் பந்து கோச் அவர்களின் பெயரில் தான் விளையாட்டுக்கான அமைப்பு ஆரம்பித்தார். இதில் இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு அப்பா கூடைப்பந்து விளையாட்டினை கற்றுக் கொடுத்து வருகிறார். நானும் அப்பாவின் கோச் பெயரிலேயே கிளினிக் வைக்க வேண்டும்” என்கிற தீப்தியை தொடர்ந்து, ரயில்வே தொழிற்சங்கத்தில் செயலாளராக இருக்கும் தீப்தியின் தந்தை ராஜா பேச ஆரம்பித்தார்.
‘‘எங்கள் திறமையின் மூலமாக நாங்க விளையாட்டு துறையில் ஓர் இடத்தில் இருந்தாலும் கடவுளுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். எவ்வளவோ பேர் சிறந்தவர்களாக ஒவ்வொரு விளையாட்டில் தங்களின் பங்களிப்பை செலுத்தியிருந்தாலும் எல்லோராலும், வெற்றியாளர்களாக சமூகத்தில் பிரதிபலிக்க முடியவில்லை. அவ்வாறு இருப்பவர்கள் மீது ஏதோ சிறிய ஒளி படும் போது அவர்களது திறமையினால் பெரும் வெளிச்சமாக வருவார்கள் என்கிற நம்பிக்கையில் எங்களால் முடிந்த அளவு பயிற்சி கொடுத்து, அடுத்த நிலைக்கு செல்வதற்கு என்ன வழி என்பதை காட்டி வரும் வழி போக்கனாக இருக்கிறேன்.
சென்னையை பொறுத்தவரை பெரும்பாலும் விளையாட்டில் திறமையானவர்கள் வட சென்னையை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இருந்தாலும் பொருளாதாரத்தில் அவர்களால் மற்றவர்களுடன் போட்டி போட முடிவதில்லை. அதனால் திறமை இருந்தும், அவர்களால் அடுத்த கட்டத்திற்கு நகர முடிவதில்லை. எனவே வட சென்னை பகுதியில் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு, அந்த விளையாட்டின் மூலம் அரசு வேலைகளில் எவ்வாறு இணைவது என்று ஆலோசனைகள் வழங்கி வருகிறோம்.
இப்போது தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷனுக்கு ஆதவா அர்ஜூன் என்கிற இளம் வயதுடையவர் வந்துள்ளார். அவர் தான் கூடைப்பந்து விளையாட்டின் அசோசியேஷனுக்கும் தலைவர். அவர் எந்த ஒரு வேறுபாடுமின்றி இன்று நிறைய திறமையானவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து வருகிறார். படிக்க வைக்க தானே பெற்றோர்களுக்கு வசதி இல்லை. திறமையுள்ள பசங்களை SGFI-ல் சேர்த்துவிட்டால், எந்த பள்ளியில் வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கான விழிப்பு இல்லாமல் நிறைய குழந்தைகள் தவிக்கிறார்கள். அது குறித்து போதிய விழிப்புணர்வு கொடுத்து, தகுதியான குழந்தைகளை தேர்வு செய்ய வேண்டும். விளையாட்டு துறையில் முன்பிருந்த நிலை மாறி இப்போது அதிலும் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருவது வரவேற்கக்கூடிய
விஷயம்.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு விளையாட்டிற்கென தனி கிராமம் ஆரம்பிக்க உள்ளார்கள். இது பெரிய விஷயம். நம் முதல்வரின் கனவும், எங்களை போன்ற விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களின் கனவும் ஒலிம்பிக்கில் நம் பசங்க பதக்கம் பெற வேண்டும் என்பது தான். இவ்வளவு கட்டமைப்பு, வசதிகள் என எல்லாம் இருந்தும் ஏன் ஒலிம்பிக்கில் நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களால் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை?
அசாம், ஹரியானா போன்ற சிறிய மாநிலத்திலிருந்து வருபவர்களால் சாத்தியமாகும் போது நம்மால் ஏன் முடியவில்லை? இந்த கேள்விக்கான விடை நாம் திறமையானவர்களை ஓரம் கட்டிவிடுகிறோம் என்கிற விமர்சனம் தாண்டி, இனி வரும் காலங்களிலும் அதில் மாற்றம் வர வேண்டும் என்பது எங்களை போன்றோரது ஆசை மற்றும் கோரிக்கை” என்கிறார், கொரோனா காலங்களில் பலருக்கு உணவு, மாஸ்க் போன்றவைகள் வழங்கியவரும், விளையாட்டுக்காக வருடத்தில் ஏழை குழந்தைகள் 200 பேருக்கு ஷூக்கள் வாங்கி கொடுத்து அழகு பார்ப்பவருமான பயிற்சியாளர் ராஜா.