எந்த லென்ஸ் பொருத்தமானது? (மருத்துவம்)
சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்தக் கேள்வியை நான் எதிர் கொள்கிறேன். ‘நான் கண்புரை ஆபரேஷன் செஞ்சுக்கப் போறேன் டாக்டர். கண்ணுக்குள்ளே வைக்குற லென்ஸ்களில் நிறைய வகைகள் இருக்கிறதா சொல்றாங்களே.. எந்த லென்ஸ் வச்சுக்கலாம் டாக்டர்?’ என்ற கேள்விதான் அது.
பண்டைய காலங்களில் உலகின் பல பகுதிகளில் முதுமையில் ஒரு மனிதனுக்குக் கண் பார்வை தெரியாமல் போவதற்குக் காரணம் அவன் செய்த பாவம், கடவுளின் சாபம் என்று நம்பப்பட்டது. நாளடைவில் கண் பார்வையற்ற நபரின் கருவிழிக்குப் பின்புறம் வெள்ளையாக ஏதோ இருப்பதை கவனித்திருக்கிறார்கள். அதை நீக்கினால் பார்வை தெரியும் என்ற தெளிவு அந்தக் கால மருத்துவர்களிடம் இருந்திருக்கிறது. இருந்தாலும் நோயாளி செய்த பாவம் தான் பார்வையின்மைக்குக் காரணம் என்ற எண்ணம் போகவில்லை.
அதனால் அந்த நோயாளியை மண்டியிடச் செய்து தடிமனான பைபிளால் கண்களில் ஓங்கி அடிப்பார்களாம். ஏற்கனவே முதுமை காரணமாக வலுவிழந்திருந்த லென்ஸ் கண்ணின் பின்பகுதியில் (விழிப் படிம நீர்மம்- vitreous) விழுந்துவிடும். இதனால் கொஞ்சம் ஒளி கிடைக்கும். லேசாக கண் தெரிந்தவுடன் பாவம் போய்விட்டது என்று நினைப்பார்களாம். இந்த முறைக்கு Couching என்று பெயர். இது பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.
அதன் பின்பே முதுமையின் காரணமாக வருவதே அந்த ‘வெள்ளைத் தன்மை’ என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதை அகற்ற அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் நாட்டில் புரையால் பாதிக்கப்பட்ட லென்ஸை நீக்குவதுடன் அறுவை சிகிச்சையை முடித்துக் கொள்வார்கள். பின் தடிமனான +10D பவரை உடைய கண்ணாடியைக் கொடுப்பார்கள். இன்றும் கூட பல முதியவர்கள் தடிமனான கண்ணாடியை அணிந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
அவர்களுக்கு கண்களுக்குள் லென்ஸ் வைக்கப்பட்டிருக்காது. அந்த லென்ஸின் வேலையை ஈடுகட்டும் விதமாகவே வெளியே கண்ணாடி அணிந்திருப்பார்கள். கண்ணுக்குள் செயற்கை லென்ஸைப் பொருத்தலாம் என்ற கண்டுபிடிப்பு 1795லேயே நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அப்போது தயாரிக்கப்பட்ட லென்ஸ் கனமானதாக இருந்ததால் தன்னுடைய இடத்தில் சரியாகப் பொருந்தாமல் கீழே விழுந்திருக்கிறது.தற்போதைய லென்ஸ்களின் முன்னோடியான லென்ஸ் கண்டுபிடிக்கப்பட்டதே ஒரு எதேச்சையான நிகழ்வினால்தான்.
இரண்டாம் உலகப்போரின்போது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு காயமடைந்த விமானிகளுக்கு சிகிச்சை அளித்த சர் ஹரோல்ட் ரிட்லி என்ற மருத்துவர், உடைந்து போன விமானத்தின் பாகங்கள் விமானிகளின் கண்களுக்குள் புகுந்தபோது எந்தவித பின் விளைவையும்(Reaction) ஏற்படுத்தவில்லை என்பதை கவனித்திருக்கிறார். விமான உதிரிபாகங்கள் தயாரிக்க பயன்படும் வேதிப்பொருளான PMMA வால் (polymethyl methacrylate) கண்ணுக்குள் வைக்கும் லென்ஸைத் தயாரித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. எந்த ஒரு சிறந்த கண்டுபிடிப்புக்கும் எதிர்ப்புகள் இருக்கத்தானே செய்யும்? அவருடைய கண்டுபிடிப்பை சக மருத்துவர்களே எதிர்த்திருக்கின்றனர்.
ஆனால், தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பின்பாக 1947ல் முதன் முறையாக ஒரு பெண்ணின் கண்களுக்கு இதனை வெற்றிகரமாக பொருத்தி யிருக்கிறார் சர் ரிட்லி. இது நடந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்துத்தான் இவற்றின் பயன்பாட்டுக்கு முறையான உரிமம் கிடைத்திருக்கிறது. அதன்பின் Intraocular lensகளின் வளர்ச்சியில் எப்போதும் ஏறுமுகம்தான்.
மேலைநாடுகளில் பிரபலமான பின்னரும் இந்தியாவுக்கு இந்த லென்சுகள் பயன்பாட்டிற்கு வருவதற்குத் தாமதமாகவே ஆனது. இப்போது கண்ணினுள்ளே பொருத்தப்படும் லென்ஸ்களின் தயாரிப்பு அசுர வளர்ச்சியை எட்டியிருக்கிறது. நாள்தோறும் ஒரு புதிய லென்ஸ் வகை நவீன அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் உங்களுக்கு பொருத்தமான லென்ஸ் எது என்ற கேள்விக்கு வருவோம்.
*உங்களுக்கு தூரப்பார்வைதான் முக்கியமாகத் தேவைப்படுகிறது; அதிகமாகப் பயணம் செய்கிறீர்கள், வெளியிடங்களில் அலைய வேண்டியிருக்கிறது; விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கிறீர்கள் எப்போதாவதுதான் வாசிப்பீர்கள் என்ற நிலை இருந்தால் உங்களது மோனோ ஃபோக்கல் லென்சுகள்(Monofocal) பொருத்தமாக இருக்கும். இவை தூரப் பார்வைக்கு மட்டுமே உரியன.
*வெளிவேலையும் இருக்கிறது.. புத்தகம் படிக்க வேண்டும், எழுத வேண்டும், கணினித் திரையை நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டுமென்றால் மோனோ ஃபோக்கல் லென்ஸ் பொருத்திய பின்னும் அவர்கள் கூடுதலாக கண்ணாடியையும் அணிய வேண்டிய அவசியம் இருக்கும். இதைத்தான் பெரும்பாலான மக்கள் இப்போது செய்துவருகிறார்கள்.
*நான் வெளியில் அவ்வளவாகச் செல்வதில்லை; வீட்டில் அமர்ந்து தையல்வேலை, எம்பிராய்டரி செய்கிறேன். என் பணியிடத்தில் போய் நெசவுத்தொழில், நகைத் தயாரிப்பில் ஈடுபடுகிறேன் என்று கூறுபவர்களுக்கு மல்டி ஃபோக்கல் (multifocal lens) என்று கூறப்படும் லென்சுகள் பொருத்தமாக இருக்கக்கூடும். இந்த மல்டி ஃபோக்கல் லென்ஸில் தூரப்பார்வை, கிட்டப்பார்வை, நடுத்தரப் பார்வை மூன்றுக்கும் பொருந்தும் விதமாக வட்டங்கள்(Concentric rings) அமைக்கப்பட்டிருக்கும்.
அதனால் பல நபர்களுக்குக் கண்ணாடி தேவை இருக்காது. ஆனால், மல்டி ஃபோக்கல் லென்ஸ்கள் எல்லா நபர்களுக்கும் பொருந்துவதில்லை. இரவில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வெயிலில் வெளியே செல்லவேண்டிய வேலை பார்ப்பவர்களுக்கும் மல்டி ஃபோகல் லென்ஸினால் கண் கூச்சம் (Glare) ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். படித்தல், எழுதுதல் போன்ற பக்கத்துப் பார்வை Near vision எப்போதாவது தான் தேவைப்படும். ஆனால் மேஜையில் வைக்கப்பட்ட கணினியில் தான் என்னுடைய பெரும்பாலான நேரங்களில் வேலை செய்வேன் என்று கூறுபவர்களுக்கு ஒற்றை வட்டத்தை உடைய மல்டி ஃபோகல்(Single ringed) லென்சைப் பரிந்துரைக்கலாம்
*சர்க்கரை நோயாளிகள், கண் கருவிழியில் பிரச்னை உள்ளவர்கள், ஏற்கனவே கண் அழற்சி பாதிப்பு உள்ளவர்கள் இவர்களுக்கு இன்னும் விசேஷ கவனம் எடுத்து லென்சை தேர்வு செய்ய வேண்டும். உள்ளே பொருத்தப்படும் லென்ஸால் ஏற்கனவே இருக்கும் நோய்கள் தீவிரமடைந்து விடாத வகையில் லென்ஸ் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.
*சிறுவயது முதலே கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு கண் புரை அறுவை சிகிச்சையின் போதே அந்தக் குறைபாட்டையும் நேர் செய்யும் விதமாக லென்ஸினைத் தேர்வு செய்வது வழக்கம். இதற்கு A scan என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. கண்ணின் முன்பின் நீளம்(Axial length) மற்றும் கருவிழியின் வளைவுகள்(Corneal curvature) இவற்றை அளவீடு செய்து ஒரு நபருக்கு ஏற்ற லென்ஸின் பவரைக் கணித்துக் கூறுகிறது. ஒரு உதாரணம் கூறுகிறேன்.
இதுவரை கண்ணாடி அணிந்திராத, கண்புரையால் மட்டுமே பாதிக்கப்பட்ட நபருக்கு ஏ ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்கையில் பெரும்பாலும் + 22.0 D என்ற அளவுடைய லென்ஸ் தேவைப்படுவதாகக் காட்டும் (இதுவே சராசரியாக பலருக்குக் காணப்படும் அளவு). ஒரு நபர் சிறுவயதில் -4.0 Dsph பவருடைய கண்ணாடி அணிந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஏ ஸ்கேன் கருவி +18.0 D (22-4) என்ற அளவைக் காட்டும்.
இந்தக் கணக்கீடுகள் ஸ்பெரிக்கல் (குவிவு/குழிவு) லென்சுக்குப் பொருந்தக்கூடியவை (Myopia, Hypermetropia). சில நபர்கள் இயல்பிலேயே சிலிண்டர் லென்ஸுடைய கண்ணாடியை அணிபவர்களாக (Astigmatism) இருப்பார்கள். அதாவது இவர்களது கண் கருவிழியின் வளைவுகளில் ஏற்பட்டிருக்கும் சிறு மாற்றங்களால் இவர்கள் கண்ணாடி அணிந்திருப்பார்கள். இத்தகைய நபருக்கு அறுவை சிகிச்சையின்போது டாரிக் (Toric lenses) வகை லென்சுகள் சரியாக இருக்கும்.
‘சர்க்கரை நோய் இல்லாத என் மனைவிக்கு 10 ஆயிரம் ரூபாய் லென்ஸையும், சர்க்கரை நோய் இருக்கும் எனக்கு இருபதாயிரம் ரூபாய் லென்ஸையும் பரிந்துரைக்கிறார்கள். என்ன செய்யலாம் டாக்டர்? என்று கேட்கிறார் ஒரு நோயாளி. சர்க்கரை நோயாளிகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின் சில மாதங்கள் கழித்து லென்லைச் சுற்றியும், பின்புறமாகவும் ஒட்டடை போல், வெள்ளையாக ஒரு படலம்(Posterior capsular opacity) வளர்ந்து பார்வையை மறைக்கக் கூடும். இந்த தொந்தரவை தவிர்ப்பதற்காக ஒருவேளை கூடுதல் விலையுடைய லென்ஸ் பொருத்துமாறு அறிவுறுத்தியிருக்கலாம்.
*லேசான மஞ்சள் நிறப் பூச்சுடன் தயாரிக்கப்படும் Yellow லென்ஸ்கள் அதிக வெளிச்சத்தால் கண்கூசும்(Glare and chromatic aberrations) பிரச்சினையைத் தவிர்க்க வல்லன. இப்போது சந்தையில் இருக்கும் பல தயாரிப்புக்கள் அல்ட்ரா வயலட் கதிர்களையும், அதிகபட்ச செயற்கை வெளிச்சத்தையும் கண்ணின் விழித்திரையில் விழாமல் தடுக்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன.
*அறுவைசிகிச்சையின் தன்மையும் அதில் பயன்படுத்தப்படும் லென்ஸ் களில் வகையை நிர்ணயிக்கக்கூடும். சிறிய துளை வழியாக செய்யப்படும் சிகிச்சைகளில்(Micro incision) சிரிஞ்சுகளில் அடைக்கப்பட்ட Foldable லென்சுகள் பயன்படுத்தப்படுகின்றன. சற்றே பெரிய துளை என்றால் Rollable லென்ஸ்களையும் பயன்படுத்தலாம். 10 மில்லி மீட்டருக்கு அதிகமான துளை ஏற்படுத்தி செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் சிறிய வட்ட வடிவிலான Rigid லென்சுகள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று இந்தியாவிலேயே, தரமான, விலை குறைந்த, உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தாத பொருட்களின் உதவியுடன் லென்ஸ்கள் சிறந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன. அவையும் மேலைநாடுகளில் தயாராகும் லென்ஸ்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை இல்லை. உங்களுக்குப் பொருத்தமான லென்ஸ் எது என்பதை உங்கள் வயது, உடல்நிலை, வேலையின் தன்மை இவற்றைப் பொறுத்து மருத்துவர் ஆலோசனையுடன், உங்கள் பட்ஜெட்டிற்கும் ஏற்றவாறு நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்!