சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு…!! (மருத்துவம்)
நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க எடை கட்டுப்பாடு மிக முக்கியம். ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் ஆகியவை வரம்பு மீறாமல் இருக்க எடையும் வரம்புக்குள் வர வேண்டும். இந்தச் சங்கிலித் தொடர் அறுந்து போகாமல் இருந்தால்தான், நீரிழிவாளரின் ஆரோக்கியம் சிறக்கும்.
‘காலையில் சாப்பிடாவிட்டால் எடை குறையும்’ என்பது உலகின் மிக முக்கிய மூடநம்பிக்கைகளில் ஒன்று. உண்மையில் காலை உணவைத் தவிர்க்காமல் இருப்பவர்களே எடைக் கட்டுப்பாட்டுக்குள் வருகிறார்கள் என்பது மருத்துவ ஆய்வின் முடிவு. ‘காலை உணவை புறக்கணிப்பவர்களுக்கு, அவர்கள் அறியாமலே, இழந்த கலோரிகளை மீட்கும் வேட்கை ஏற்படுகிறது. இதனால் தேவையில்லாத நொறுக்குத்தீனிகளை உள்ளே தள்ளுகிறார்கள் அல்லது அடுத்த வேளை உணவை அதிக அளவில் உட்கொள்கிறார்கள். இதனால் குறையவேண்டிய எடை கூடிக்கொண்டேதான் போகிறது’ என்கிறார் வெர்ஜினியாவை சேர்ந்த நீரிழிவு உணவு ஆராய்ச்சியாளர் ஜில் வெய்சன்பெர்கர்.
காலை உணவு எடுத்துக்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு நிலை பெறுகிறது. வளர்சிதை மாற்றமும் சிறப்பாக நடைபெறுகிறது. இதனால் பசி வயிற்றைக் கிள்ளி, கண்ட நொறுக்குத்தீனிகளை தின்ன வேண்டிய தேவை இல்லாமல் போகிறது. அதேபோல், உணவைக் குறைத்துவிட்டாலே எடையைக் குறைத்து விடலாம் என்றும் பலர் நம்புகின்றனர். உண்மையில் முறையான உடற்பயிற்சி இன்றி தேவையற்ற எடையை இழக்க முடியாது. உணவை மட்டும் குறைத்து ஒல்லிபெல்லி ஆவது எல்லாம் நிரந்தர விளைவைத் தராது. அது ஆரோக்கியமானதும் அல்ல. எடை குறைப்பு, ரத்த சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான இலக்குகளை எட்ட, குறைந்தபட்சம் வாரம் 150 நிமிடங்கள் மிதமான – செறிவான உடற்பயிற்சி தேவை என்கிறது அமெரிக்கன் டயாபடீஸ் அசோசியேஷன். இத்தோடு, தசைகளை வலுப்படுத்தக்கூடிய ரெசிஸ்டன்ஸ் பயிற்சியும் வாரம் 3 முறை தேவை.எடை குறைப்பு மேற்கொள்ள விரும்புகிறவர்கள் மோசடி விளம்பரங்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியம். மாத்திரைகள் மூலமாக எடையைக் குறைத்து விட முடியும் என்பதுபோன்ற விளம்பரங்களின் நம்பகத்தன்மை பெரும் சந்தேகத்துக்குரியவை.
போலி விளம்பரங்கள் வார்த்தைகளில் வெண்ணெய் தடவி இனிப்பாகச் சொன்னாலும் கூட, மாத்திரைகளாலோ,சப்ளிமென்டுகளாலோ எடையை குறைக்க முடியும் என்பதை மருத்துவ அறிவியல் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதனால், கடற்கரை முதல் கடைத்தெரு வரை விதவிதமான வண்ணப் பதாகைகளோடு வசீகரிக்கும் வார்த்தைகள் கூறும் எடை குறைப்பு விற்பனையாளர்களை நம்பி ஏமாறாதீர்கள்!
அடிக்கடி எடையை
பரிசோதிக்காதீர்கள்!
எடை குறைப்பு முயற்சியில் இருக்கும்போது, எடை எந்திரத்தின் முள் நம்மை மிரட்டிக்கொண்டேதான் இருக்கும். தினம் எடை பார்க்கிற பலருக்கு தன்னம்பிக்கை குறைவு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். நாம் எண்ணுவதும், எடை எந்திரம் காட்டும் எண்ணும் முரணாக இருந்தால் சோர்வாகத்தானே இருக்கும்? தினம் தினம் பார்க்கிற எடையில் துல்லியத்தைப் பெற இயலாது என்பதுதான் உண்மை. உடலின் நீர் இருப்பைப் பொறுத்தும் எடை வேறுபாடு ஏற்படக்கூடும்.‘அதனால் எடை பார்க்கவே கூடாது என அர்த்தம் அல்ல. குறிப்பிட்ட இடைவெளிகளில் எடை பார்த்தால்தானே, நாம் மேற்கொள்கிற உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் பலன் தருகிறதா என அறிய முடியும்? அதனால் வாரம் ஒருமுறை எடை பார்ப்பதே நல்லது’ என்கிறார் லிசா மெரில்.