சேமிக்கலாம் வாங்க!(மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 18 Second

‘‘ஒவ்வொரு வருடமும் விலைவாசி ஏறிக்கொண்டேதான் போகிறது. நடுத்தர மக்களுக்கு இந்த விலை ஏற்றம் என்பது பெரிய இடியாப்ப சிக்கல் தான். அந்த சிக்கல் முடிச்சை அவிழ்ப் பதே பெரிய வேலையாக இருக்கும் போது, எங்கு சேமிப்பது என்ற கேள்வி அவர்கள் மனதில் எழுவது நியாயம்தான். ஆனால் தனிநபர் ஒவ்வொருவரும் அவர்களின் மாத வருமானத்தில் குறைந்தபட்சம் ஐந்து சதவிகிதமாவது சேமிக்க வேண்டும்’’ என்கிறார் நிதி ஆலோசகர் பவித்ரா.

‘‘சேமிப்பை பொறுத்தவரை நிறைய திட்டங்கள் உள்ளது. அதில் நமக்கு எது சரியாக இருக்குமோ அதற்கு ஏற்ப நம்முடைய நிதியினை திட்டமிடலாம். ஒருவருக்கு மாத சம்பளம் 20 ஆயிரம் என்றால் அதில் இருந்து மாதம் 500 ரூபாயினை சேமிக்கலாம். இதை வங்கிக் கணக்கிலோ அல்லது நகை சீட்டிலோ இன்வெஸ்ட் செய்யலாம். இது பொதுவாக சேமிக்கும் திட்டங்கள். இதையும் தாண்டி ஷேர் மார்க்கெட், மியூச்வல் பண்ட், இன்சூரன்ஸ் பாலிசி, மருத்துவ காப்பீட்டு திட்டம், தங்கம், வெள்ளி போன்ற கமாடிட்டிகளிலும் சேமிக்கலாம். சேமிப்பினை பொறுத்தவரை ஒரே திட்டத்தில் போடாமல் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் பிரித்து போடலாம். காரணம் ஒன்றை இழந்தாலும் மற்றொன்று கைகொடுக்கும். இவை அனைத்தும் தனிநபரின் வருமானத்திற்கு ஏற்ப சேமிப்பு செய்யலாம்.

பொதுவாக சேமிப்பு என்று வரும் போது பெண்கள் தங்கம் அல்லது ரியல் எஸ்டேட்டில் இன்வெஸ்ட் செய்ய விரும்புவார்கள். காரணம் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக சேமிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதுவே வயதானவர்கள் வங்கி சேமிப்பில் கவனம் செலுத்துவார்கள். அதாவது பிக்செட் டெபாசிட், அஞ்சல் அலுவலகம்… வயதான காலத்தில் தங்களின் பணத்தை இழக்க பயப்படுவார்கள். அவர்களின் பணத்திற்கு குறைந்த அளவு வட்டிக் கிடைத்தாலும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. பொதுவாக 25 -45 வயதுள்ளவர்கள் ஷேர், மியூச்வல் பண்ட்களில் சேமிக்க விரும்புவார்கள். அவர்கள் ரிஸ்க் எடுத்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள்.

ஷேரில் சேமிக்கும் போது ரிஸ்க் அதிகம் தான் என்றாலும், அதை முறையாக புரோக்கர் மூலம் கையாள வேண்டும். இப்போது ஷேர் குறித்த விவரங்களை நாம் நேரடியாக போய் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாமே டிஜிட்டல் முறையில் இருப்பதால், அது பற்றிய முழு விவரங்களை உடனடியாக இணையத்தில் தெரிந்து கொண்டு பிறகு முதலீடு செய்யலாம். இப்போது எல்லாமே டிரான்ஸ்பெரன்ட் என்பதால், ஏமாற்ற வாய்ப்பில்லை.

ஷேர் பொறுத்தவரை ஈக்விட்டி (Equity) மற்றும் எஃப் அண்ட் ஓ (F&O – Future and Options) என இரண்டு முறையில் முதலீடு செய்யலாம். ஈக்விட்டி என்றால் ஒன்று முதல் லட்சக்கணக்கு வரை ஷேர் வாங்கலாம். அதாவது ஒரு நிறுவனத்தின் ஒரு ஷேர் 5 ரூபாய் என்றால் அந்த நிறுவனத்தில் ஒரு ஷேரோ அல்லது எவ்வளவு வேண்டும் என்றாலும் வாங்கலாம். இதில் 100 ஷேர் வாங்கினால் 100*5 என கணக்கிட்டு ரூ.500 செலுத்தி வாங்கலாம். பிறகு அதை லாபம் பார்த்து விற்கலாம். எஃப் அண்ட் ஓ வினை மொத்தமாக தான் வாங்க முடியும். அதாவது ஒரு நிறுவனத்தில் 1500 ஷேர்கள் என மொத்தமாகத்தான் விற்பனையில் இருக்கும்.

அப்படி மொத்தமாக இருக்கும் ஷேர்களை நீங்க எவ்வளவு வேண்டும் என்றாலும் வாங்கலாம். இதன் மொத்த ஷேர்களின் விலை ரூ.200 என்று வைத்துக் கொள்ளலாம். நீங்க 10 ஷேர் வாங்க விரும்பினால் 200*10… 2000 ரூபாய் செலுத்தி பெறலாம். எந்த ஷேர் வாங்கினாலும் டீமாட் மற்றும் சேமிப்புக் கணக்கினை துவங்க வேண்டும். மேலும் உங்களுக்கு என ஒரு எண் கொடுக்கப்படும். அதன் மூலம் நீங்க வாங்கி இருக்கும் ஷேரின் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ஷேர்களை பற்றி நன்றாக தெரிந்திருந்தாலும் புரோக்கர் மூலமாக பதிவு செய்துவிட்டு பின் இணையத்தில் பரிவர்த்தனை செய்யலாம். உங்களுக்கு நேரம் இல்லாத பட்சத்தில் புரோக்கர்கள் உதவி செய்வாங்க. அதே சமயம் அவங்க எல்லாவற்றையும் பார்த்துப்பாங்கன்னு அலட்சியமா இருக்கக்கூடாது. உங்களின் ஷேரின் நிலவரம் என்ன என்பதை நீங்களும் அவ்வப்போது கண்காணித்துக் கொள்வது அவசியம். புரோக்கரால் உங்களின் லாபத்தில் இருந்து எதுவுமே எடுக்க முடியாது. எந்த ஷேர் வாங்கினாலும் விற்றாலும் அதற்கான காண்ட்ராக்ட் நோட் கொடுக்கப்படும். இதில் உங்க ஷேர்களைப் பற்றிய முழு விவரங்கள் இருக்கும். சிலர் புரோக்கர்களை நம்பி அவர்களுக்கு ஷேர்களை வாங்கவோ விற்கவோ முழு அதிகாரம் கொடுத்திருப்பாங்க. அது தவறு. ஷேரின் இன்னொரு விதம் மியூச்வல் பண்ட். இதற்கும் ஷேருக்கும் என்ன வித்தியாசம் என்றால், ஷேரினை நேரடியாக வாங்குவோம்.

மியூச்வல் பண்ட் என்பது பல பேரிடம் பணத்தைப் பெற்று முதலீடு செய்து அதன் மூலம் லாபம் பெறுவது. இதில் ரிஸ்க் கொஞ்சம் குறைவு. எந்த ஒரு முதலீடாக இருந்தாலும், அது குறித்து முழு விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். அதில் முக்கியமாக டிரேடிங் குறித்த ஆவணங்களை முழுமையாக படிக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சட்டத்திட்டங்களை புரிந்து கொள்ளணும். அதை யாரும் பார்ப்பதில்லை. நஷ்டம் வரும் போது மட்டும் தான் அதில் கவனம் செலுத்துகிறார்கள். ஷேர் ரிஸ்க் என்று நினைப்பவர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம்.

கொரோனா காலத்தில் ரியல் எஸ்டேட் மார்க்கெட் ரொம்பவே டவுனா இருந்தது. இப்ப அந்த சூழல் மாறியிருக்கு. அப்படி நிலத்தில் முதலீடு செய்யும் முன்பு முறையான ஆவணம் உள்ளதா? வாரிசுகள் எத்தனை பேர்? பட்டா உள்ளதா? அங்கீகரிக்கப்பட்ட நிலமா? சொத்து பிரச்னை உள்ளதா? அதன் கைட்லைன் மதிப்பு என்ன? என அனைத்தும் ஆராய்ந்து அதன் பிறகு முதலீடு செய்யலாம். சில இடங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து வரும். அப்படிப்பட்ட இடத்தில் நிலத்தினை வாங்கலாம். முன்னேற்றம் அடையாத இடங்களில் பார்த்து முதலீடு செய்ய வேண்டும்.
நிலத்தை அடுத்து தபால் துறை மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் உள்ளது.

இதற்கான திட்டங்கள் பல உள்ளன. அதனை வயதிற்கு ஏற்ப தேர்வு செய்து சேமிப்பு செய்யலாம். கொரோனாவிற்கு பிறகு மருத்துவ காப்பீடு திட்டம் மேல் மக்கள் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. பிறந்த குழந்தை முதல் 75 வயதுள்ளவர்கள் ஒரு லட்சம் முதல் ஒரு கோடி வரை முதலீடு செய்யலாம். வயது மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படும். நீங்கள் எடுத்திருக்கும் தொகைக்கு ஏற்ப வருடா வருடம் காப்பீட்டு திட்டத்தினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

புதுப்பிக்க தவறினால் காப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்ட காலக்கெடு அளிக்கும், அதையும் தவறினால் உங்கள் காப்பீட்டு திட்டம் முற்றிலும் காலாவதியாகிவிடும். மருத்துவ காப்பீடு பொறுத்தவரை காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடும். அதனால் அதை எடுப்பதற்கு முன் அதில் உள்ள சிறப்பம்சங்களை தெரிந்து கொண்டு சிறப்பானதை ேதர்வு செய்ய வேண்டும்.
கடைசியாக எல்லாரும் விரும்பி முதலீடு செய்வது வெள்ளி மற்றும் தங்கம். இதனை கமாடிட்டி முறையில் வாங்கலாம் விற்கலாம். இது பற்றி தெரியாதவர்கள் முதலீட்டில் ஈடுபடாமல் நகையாகவோ தங்கம் அல்லது வெள்ளி காசாகவோ வாங்கலாம்.

முதலீடு செய்வதற்கான நிறைய திட்டங்கள் உள்ளது. அதே சமயம் பேண்டமிக் மற்றும் உள்நாட்டு போர் காலங்களில் ஷேர்களில் சரிவு ஏற்படலாம். அந்த நேரத்தில்பொறுமையாக கையாள வேண்டும்’’ என்று ஆலோசனை அளித்தார் நிதி ஆலோசகர் பவித்ரா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . !(அவ்வப்போது கிளாமர்)
Next post ஃப்ரீடம் ஃபைட் !! (மகளிர் பக்கம்)