நம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி!(மருத்துவம்)
கொரோனா கொடுமைக்கு எப்போது முடிவு என்ற ஏக்கம் எல்லோரின் மனதிலும் அலையடிக்கத் தொடங்கிவிட்டது. எத்தனை நாட்களுக்குத்தான் லாக் டவுன் செய்ய முடியும் என்று அரசுகள் குழம்பிக் கொண்டிருக்கின்றன. எத்தனை நாட்களுக்குத்தான் இருக்கிற நிமோனியா போன்ற சிகிச்சைகளை வைத்து சமாளிக்க முடியும் என்று மருத்துவ உலகமும் தவித்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு என்று தனிப்பட்ட சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டாலும், தடுப்பூசி கண்டுபிடிப்புதான் வரும் முன் காக்கும் வரப்பிரசாதமாக இருக்கும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.
கோவிட் 19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி ஒன்றுதான் தற்போதைய அவசிய, அவரசரத் தேவை. இந்த தடுப்பூசி மக்களுக்கு எப்போது கிடைக்கும்? இந்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் வேலை எந்த வேகத்தில் நடக்கிறது? அப்படியே கண்டுபிடித்தாலும், கோடிக்கணக்கான மக்களுக்கு கிடைக்கும் வகையில் உற்பத்தி செய்ய முடியுமா? இப்படி பல குழப்பங்கள் இருந்தாலும் பல நம்பிக்கையூட்டும் செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.
கொரோனா தடுப்பூசி எப்போது அமலுக்கு வரும் என்று நுண்ணுயிரி நிபுணர் விஜியிடம் கேட்டோம்…
‘‘வழக்கமாக ஒரு நோய்க்கான தடுப்பூசி அமலுக்கு வர 18 மாதங்கள் ஆகும். ஏனெனில், ஒரு தடுப்பூசி மனித பயன்பாட்டிற்கு வருவதற்கு முன், ஆய்வு நிலை(Exploratory stage), விலங்குகளிடம் மேற்கொள்ளப்படும் முன்கூட்டிய மருத்துவ சோதனை(Pre-Clinical trial), மனிதர்களிடத்தில் சோதனை செய்யப்படும் மருத்துவ முன்னேற்றம் (Clinical Development) என பல நிலைகள் உள்ளன. முதல் கட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களிடத்தில் செலுத்தி சோதிப்பார்கள். அடுத்து, குறிப்பிட்ட வயதுக் குழுவினருக்கு குறிப்பிட்ட வகையினருக்கு என குழுக்களாக சோதனை செய்வார்கள். 3-ம் கட்டத்தில் 1000, 2000 என அதிகப்படியான எண்ணிக்கையில் சோதனை செய்வார்கள். அதன்பிறகு, ஒப்புதல்(Approval) வாங்கிய பின்னர் 4-ம் கட்டமாக மனிதரிடத்தில் எப்படி வேலை செய்கிறது என கண்காணிக்கப்பட்டு தடுப்பூசி அமலுக்கு கொண்டு வருவார்கள்.
இந்த நடைமுறைகள் எல்லாம் முடிந்த பின்னர், உற்பத்தி செய்து தரம் சோதிக்கப்படும். பின்னர் பெருமளவு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு, தரசோதனைக்குப் பின்னர் பயன்பாட்டுக்கு வரும். இப்படி கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசிக்கு ஒப்புதல் வாங்கவும் பல ஆண்டுகள் ஆகும். ஆனால், கொரோனா தடுப்பூசி விஷயத்தில் இத்தனை பெரிய கால அவகாசம் தேவைப்படாது என்றே மருத்துவ உலகம் நம்புகிறது. இதற்கு முன்பு ஏற்பட்டிருக்கும் நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் குறிப்பிட்ட நாடுகளில், குறிப்பிட்ட பருவத்தில், குறிப்பிட்ட வயதினரிடம் ஏற்பட்டவை. ஆனால், கொரோனா சர்வதேச பிரச்னையாக, இந்த பூமியில் வாழும் ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் அதிவிரைவாக தடுப்பூசி நடைமுறைக்கு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
சர்வதேச வரலாற்றில் இதற்கு முன்பு, ஒரு நோய்த்தொற்றுக்காக உலகம் இந்த அளவுக்கு முடங்கியதில்லை. பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. உயிர் அச்சமும் இந்த அளவுக்கு முன்பு இல்லை. ஆனால், கொரோனா இந்த எல்லா தீங்குகளையும் செய்திருக்கிறது. அதனால் தடுப்பூசி அவசரத் தேவையாக இருக்கிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கிறவர்களுக்கு பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கப் போகிறது.மே மாத இறுதி நிலவரப்படி ஆய்வகங்களில் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் 182 சிகிச்சைகள் மற்றும் 99 தடுப்பூசி திட்டங்கள் உள்ளன.
சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் Reverse vaccinology ஆராய்ச்சி முதல் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ChAdOx1 nCoV-19 Vaccine வரை உலகமெங்கும் அசுர வேகத்தில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உலகின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்கள், உலக சுகாதார அதிகாரிகள் ஆகியோர் நம்பிக்கையான காலக்கெடுவை கணித்துள்ளனர். சமீபத்தில் கோவிட் 19 தொற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பிற்காக பெருந்தொகையை நன்கொடை அளித்திருக்கும் பில்கேட்ஸ், நம் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் காணொளிக்காட்சியில் தடுப்பூசி தொடர்பாகப் பேசியதையும் பார்த்தோம். RNA தடுப்பூசி விரைவில் பயனுக்கு வருவதோடு, உலகின் எளிய மக்களும் பயன்பெறும் வகையில் இதன் விலை இருக்க வேண்டும் என்பதற்காக பில்கேட்ஸ் பெரும் பங்கினை அளித்திருக்கிறார். இந்த தடுப்பூசி நம் உடலை ஒரு நோய் எதிர்ப்பு மையமாக மாற்றும் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முன் இதுபோன்ற முயற்சிகள் செய்யப்படவில்லை.
இந்த ஆய்வுக்கூட்டணியில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள ஜென்னர் நிறுவனம், மாசசூசெட்ஸுடன் இணைந்துள்ள மாடர்னா, ஜெர்மன் கூட்டாளர் பயோஎன்டெக்குடன் இணைந்திருக்கும் ஃபைசர்(Pfizer) மற்றும் சீனாவிலிருந்து சினோவாக் ஆகியவை இணைந்து ஆர்.என்.ஏ கண்டுபிடிப்பில் இறங்கியுள்ளன. இவை அனைத்தும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் உற்பத்தி தொடங்கிவிடும் என்று நம்பகமான செய்திகள் வெளிவருகின்றன.நம் நாட்டில் மட்டுமல்லாது பல நாடுகளிலும் இதற்கான முயற்சிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்கின்றன. தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் முயற்சியில், உலகின் கடைக்கோடியில் இருக்கும் ஏழை மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அனைத்து நாட்டு அரசுகள், அறிவியல் நிபுணர்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் என அனைத்து தரப்பும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் கவனிக்க வேண்டும்.
அமெரிக்க நிறுவனமான Moderna-வின் தடுப்பூசி பக்கவிளைவில்லாமல் இருக்குமா, மனிதனுக்கு பாதுகாப்பானதாக இருக்குமா என்ற இரண்டாம் கட்ட ஆய்வு நிலையில் உள்ளது. நோவாவாக்ஸ் நிறுவனம் குரங்குகளிடத்தில் பரிசோதிக்கும் ஆய்வு கட்டத்தில் இருக்கிறது. கோவிட் 19 தடுப்பூசி ஆய்வில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள நம்நாட்டின், ஐ.சி.எம்.ஆர் மற்றும் சீரம் இன்ஸ்ட்டியூட்டின் ஆய்வும் மருத்துவ சோதனையின் மனிதர்களிடத்தில் மேற்கொள்ளப்படும் 3-ம் கட்டத்தில் உள்ளது. அடுத்தடுத்த கட்டத்திற்கு வேகமாக முன்னேறுவதன் மூலம் தொடக்கத்திலேயே 60 கோடி எண்ணிக்கையிலான டோஸ்களை தங்களால் கொடுக்க முடியும் என்ற உறுதியோடும் இருக்கிறார்கள். எனவே, இந்த சோதனைகளெல்லாம் முடிந்து டிசம்பருக்குள் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்’’ என்கிறார்.
இன்டர்னல் மெடிசன் மருத்துவர் அஸ்வின் கருப்பன் தடுப்பூசியின் அவசியம் பற்றி பதிலளிக்கிறார்.
‘‘நம் நாட்டின் புனே இன்ஸ்டியூட் ஆஃப் வைராலஜியில்(Serum Institute of India) கோவிட் 19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ்களை மனித உடலில் செலுத்தி, நோயை உண்டுபண்ணாமல், அதற்கான எதிர்ப்புத்திறனை உடல் தனக்குத்தானே அதிகரித்துக் கொள்ள வைப்பதுதான் தடுப்பூசியின் வேலை. தடுப்பூசி செலுத்தப்படும்போது, IGM (Immunoglobulin M) மற்றும் IGG (Immunoglobulin G) என இரண்டுவிதமான நோயெதிர்ப்புத்திறன் உருவாகிறது. இதில் IGM என்பது உடனடியாக வினைபுரியும். அதாவது நோய் வந்தவுடன் ஒரு வாரத்திற்குள் அதை எதிர்த்துப் போராடும் சக்தியைப் பெறுவது… IGG என்பது நீண்டகால நோயெதிர்ப்புத்திறன். அதாவது சில காலம் கழித்து 1 வருடத்திற்குப் பின்னரோ, அதற்கும் பிறகோ இந்த தொற்று மீண்டும் தாக்கும்போது மூளையின் செல்கள் நினைவில் வைத்துக்கொண்டு அந்த வைரஸுக்கு எதிராக போராடும். இவைதான் தடுப்பூசியின் வேலை.
சில வைரஸ்களை சாகடித்து, அவற்றை மனித உடலில் செலுத்துவார்கள். சில வாழும் வைரஸ்களை எடுத்துக்காட்டாக போலியோ வைரஸ்களை அழிக்க லைவாக குறைந்த அளவில் வாய்வழியாக செலுத்தி நோயெதிர்ப்புத்திறனை உருவாக்குகிறோம். தற்போது இரண்டுவிதமான தடுப்பூசிகளை உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. உயிருள்ள வைரஸ்களை செலுத்தும்போது அதை கையாள்பவர்களுக்கும் தொற்று ஏற்பட சாத்தியமுண்டு. இதுவே சாகடிக்கப்பட்ட வைரஸின் துகள்களை உடலில் செலுத்தும்போது, அலர்ஜி போன்ற பக்கவிளைவுகளுக்கான சாத்தியமும் உண்டு. ஆனால், இது மிகமிகக் குறைவு. இதனால் குறிப்பிட்ட வைரஸ்களை குதிரைகளுக்குள் செலுத்தி அவற்றுக்கு நோயுண்டுபண்ணி, அவற்றிலிருந்து பிளாஸ்மாவை எடுத்து மனிதருக்குள் செலுத்தும்போது அது வேலை செய்கிறதா என்ற ஆய்வும் நடந்து கொண்டிருக்கிறது. இது மற்றவற்றைவிட சற்று பாதுகாப்பானது.
பொதுவாக ஒரு வைரஸ் புதிதாக பரவத் தொடங்கினால் அதைப்பற்றிய ஆய்வுகள் கடினமாக இருந்திருக்கும். முன்னதாகவே சீனாவிற்குள் வந்துவிட்டதால் ஒரு மாதத்திற்குள்ளாகவே கோவிட் 19 வைரஸுடைய கட்டமைப்பைக் கண்டறிந்து அந்த வைரஸின் துகள்கள் இப்படித்தான் இருக்கிறது என விவரங்களை வெளியிட்டுவிட்டார்கள். அதை வைத்துதான் இப்போது NHS(National Health Institute) அமெரிக்காவுடன் இணைந்து தடுப்பூசி கண்டுபிடிக்கும் சோதனையில் இறங்கியிருக்கிறது. இந்த வைரஸ் துகள்களை தனிமைப்படுத்திவிட்டார்கள்.
இந்த ஆய்வில் புகையிலையின் நிகோடின் மூலமாக வைரஸை கட்டுப்படுத்த முடியுமா என சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆன்டிபாடிகளை உள் செலுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் அவருக்கு கொரோனா தொற்று வருவதற்கான சாத்தியமுண்டா என்ற ரீதியிலும் குரங்குகளிடத்தில் மேற்கொண்ட சோதனை வெற்றி அடைந்திருக்கிறது. இதேபோல நம்நாட்டிலும் வைரஸ் துகள்களை தனிமைப்படுத்தி அவற்றை குதிரைகளுக்குள் செலுத்தி அந்த சீரமை சோதனை செய்து கொண்டிருக்கிறோம். இதுதான் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கிறது.’’
தடுப்பூசி உடனே நடைமுறைக்கு வருமா?
‘‘தடுப்பூசியை எப்படி தயாரிப்பது என்பது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. இதன் செயலாற்றலை நிரூபிப்பதும், தடுப்பூசியை அதிகபட்சமாக உற்பத்தி செய்வதும்தான் அனைவருக்கும் உள்ள சவால். அப்படியே தயாரித்தாலும், விலை கட்டுக்குள் இருக்குமா என்பதும் கூடுதல் சவால். இதனை அரசுகள்தான் கவனிக்க வேண்டும்.’’
தடுப்பூசி கட்டாயம் தேவையா?
‘‘கொரோனா நோய்த்தொற்று ஒருவரைத் தாக்கிய பிறகு, மீண்டும் வராது என்பதற்கான எந்த ஆதாரமும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஒரு வருடத்திற்குப்பின் மீண்டும் வரலாம். திரும்பத் திரும்ப வரும் வாய்ப்பும் இருக்கிறது. ஏனெனில், கொரோனா வைரஸில் மரபணு மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதனால்தான் சீனாவில் 2-வது அலை வீசத் தொடங்கியுள்ளது. மீண்டும் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்கிறார்கள். ஒருவேளை 2-வது வீச்சில் இதன் தாக்கம் வேண்டுமானால் குறையலாம். எப்படி இருந்தாலும் தடுப்பூசி ஆய்வு அவசியம். தடுப்பூசி நடைமுறைக்கு வந்துவிட்டால் டெங்கு, மலேரியா போன்று கொரோனா வைரஸும் மக்களுக்கு சாதாரண பிரச்னையாக மாறிவிடும். மற்றபடி ஆன்டிபாடி சிகிச்சை, பிளாஸ்மா தெரபி எல்லாம் ஊகத்தின் அடிப்படையிலான சிகிச்சைகள் மட்டுமே. இதற்குத் தீர்வு தடுப்பூசி மட்டுமே!’’