ஆரோக்கியமாக இருப்பதே வெற்றிதான்!(மருத்துவம்)
உலகில் எண்ணற்ற செல்வங்கள் இருக்கின்றன. தான் வைத்திருக்க விரும்பும் எந்தவொரு பொருளையும் மனிதன், அவன் அடைந்த செல்வமாக மதிக்கிறான். ஆனால், அதை அனுபவிக்க ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம் என்பதையே இந்தப் பழமொழி உணர்த்துகிறது. அதனால்தான் செல்வங்களிலேயே மிகச் சிறந்த செல்வம் ஆரோக்கியம் என்று இந்த பொன்மொழி உணர்த்துகிறது. ஆரோக்கியம் ஒருவரின் வெற்றியில் எப்படி தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதை உடற்பயிற்சியாளர் சாராவிடம் கேட்டோம்…
‘‘வெற்றியாளர்களை கவனித்திருக்கிறீர்களா… இந்த வயதிலும் எப்படி அவர் சுறுசுறுப்பாக இருக்கிறார் என்று வியப்போம். அவர்களின் இளமை, கவர்ச்சி, பேச்சு, நம்பிக்கை, அறிவு, திறமை அல்லது உள்ளுணர்வு போன்று ஏதோ ஒன்றால் ஈர்க்கப்படுகிறோம். ஆனால், அவர்கள் அனைவரும் தங்கள் வெற்றிக்கான காரணமாக பகிர்பவை, உடற்பயிற்சிமுறை, ஆரோக்கியமான உணவுப்பழக்கம், மனதை பக்குவமாக வைத்துக்கொள்வது மற்றும் தங்கள் உடலைப் பராமரிக்க எடுக்கும் முயற்சிகள் போன்றவைகளாகத்தான் இருக்கும். இவர்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் விஷயங்களாக, நம்ப முடியாத சாதனைகள் மற்றும் அவர்களின் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள்தான் பங்களிக்கும் காரணிகளாகவும் இருக்கும். வெற்றிகரமான வாழ்க்கைமுறையை விரும்பும் எவரும், ஆரோக்கியமாக இருப்பதாலேயே பயனடைவார்கள்.
போட்டிகள் நிறைந்த இந்த உலகில், நம்மைத் தக்க வைத்துக்கொள்ள உச்சபட்ச செயல்திறன் மிகவும் முக்கியமானது. விரைந்து முடிவெடுப்பதற்கும், செயலாற்றுவதற்கும் நம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும். நாம் உடல்நலத்துடன் இருக்கும்போது, அதுவே நம்மை இன்னும் அதிக ஆற்றலோடு இயங்கத் தூண்டும். அதனால்தான் நம் ஆரோக்கியத்திற்கும் வெற்றிக்கும் இடையிலான தொடர்பு மிகவும் முக்கியமானது. ஒரு மனிதன் தனது வாழ்க்கையை அதிகபட்சமாக அனுபவிக்க விரும்புகிறான் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு அவனுக்கு பணம், ஆடம்பரங்கள், தனக்குப்பிடித்த தொழில் அல்லது வேலை, ஒத்த எண்ணம் உடைய நண்பர்கள், வாழ்க்கைத்துணை போன்ற அனைத்து வளங்களும் வேண்டும். அவனுக்கு உடல்நலம் தவிர, இவை அனைத்தும் இருந்தாலும், அவனால் அவற்றை அனுபவிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா… இல்லவே இல்லை! ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும்போதுதான் வாழ்க்கையின் ஆடம்பரங்களை அனுபவிக்க முடியும்.
நோயாளியான கோடீஸ்வரரால், ஆரோக்கியமான தொழிலாளியின் சந்தோஷத்தில் பாதியைக்கூட அனுபவிக்க முடியாது. வாழ்க்கையின் சுவையை தூய ஆரோக்கியத்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். மாறாக ஏராளமான செல்வங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து விடாது. எனவே செல்வத்தை துரத்துவதற்கு முன், முதலில் உங்கள் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றிகரமான வளர்ச்சி என்பது அடுத்த மாற்றத்திற்காக நம்மை தொடர்ச்சியாக தயார்படுத்திக் கொள்வதாகும். நீங்கள் ஒரு தொழில் வல்லுநராக இருந்தாலும், ஒரு பணியாளராக இருந்தாலும் அல்லது வேலை தேடுபவராக இருந்தாலும், அடுத்த மாற்றத்திற்கான திறன்களை வளர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான பழக்கங்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தொழில் வெற்றி உங்கள் இடைவிடாத பழக்கங்களிடமிருந்துதான் தொடங்குகிறது.
நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதையும், சரிவிகித உணவை எடுத்துக் கொள்வதையும் கடைப்பிடிக்காமல், உங்கள் உடலை சரியாக வடிவமைக்க முடியாது. இதனால் மனம், உடல் பாதிக்கப்பட்டு அதுவே உங்கள் வெற்றியையும் நிச்சயம் பாதிக்கும். வெற்றியை அடைவது எளிதான காரியமல்ல; அதற்கு பல ஆண்டுகளாக நம்முடைய நாளையும், உடலையும் செதுக்க வேண்டும். ஒரு வெற்றியாளராக வலம் வருவதற்கு நம் ஆரோக்கியத்தை நாம் கவனித்துக் கொள்ளாவிட்டால் வாழ்க்கை சுலபமாக இருக்காது. நமது உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளை சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் செயல்திறனோடு இயங்க முடியும். வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களே ஒருவரின் தோரணை, மன நிலை, அணுகுமுறை மற்றும் ஆற்றல் ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன. வெற்றி பெற்ற பிரபலங்களாகட்டும், தொழில் வல்லுநர்கள்களாகட்டும்… அனைவரும் மிக முக்கியமான உத்திகளாக கற்பிப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைத்தான்.
ஏன் இன்று பெரும்பாலானவர்கள் உடல்நலப்பிரச்னைகளை சந்திக்கிறார்கள்… இயற்கை கொடுத்த இந்த உடலை பலர் மதிப்பதில்லை. கார், இயந்திரங்கள் பழுதாகும்வரை எப்படி பராமரிக்காமல் விடுகிறார்களோ, அதேபோலத்தான் ஒரு நாள் ஒட்டுமொத்தமாக உடல் முடங்கும்வரை அதை கவனிப்பதே இல்லை. துரதிர்ஷ்டவசமாக மொபைல், கார், விமானம் மற்றும் பிற நவீன உலகின் முன்னேற்றங்கள் காரணமாக, அனைவரும் வசதிக்கு பழகிவிட்டோம். மூளையும், மனமும் இயங்கும் வேகத்திற்கு ஈடாக, உடல் இயங்கவில்லை. உடலுக்கும் இயக்கம் கொடுக்காமல் இருப்பதே அத்தனை உடல்நலப்பிரச்னைகளுக்கும் காரணம். மனிதன் இதற்கு முன் கற்பனை செய்திராத அல்லது அனுபவித்திராத வேகத்துடன் நோய்கள் அதிகரித்து வருகிறது. உடலையும், மனதையும் பராமரிக்காமல் இருப்பதால் தங்கள் இலக்கை அடைய முடியாமல் நோய்வாய்ப்படுகிறார்கள்.
நீங்கள் இப்போது உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவில்லை என்றால், அதன் பக்க விளைவுகளான செயலாற்றலின்மை, உற்சாகமின்மை, மன அழுத்தம் மற்றும் மகிழ்ச்சியற்ற தன்மை, நேரத்தையும் பணத்தையும் வீணாக்குதல், சோம்பல் மற்றும் மனச்சோர்வு அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தை காக்க தினமும் உடற்பயிற்சி செய்வது, யோகா, தியானம் இவற்றோடு சரியான உணவுப்பழக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும். அதோடு 8 மணி நேரம் தூக்கமும் மிக முக்கியம். அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றியை அடைய முடியும். அனைவரின் பார்வையிலும் வெற்றிக்கு வெவ்வேறு அர்த்தம் உள்ளது. ஆனால், ஆரோக்கியம் அனைவருக்கும் பொதுவானது. உடல், மன உறுதி உங்களின் முதல் இலக்காக இருக்கட்டும்.’’
ஆரோக்கியத்துக்கும் வெற்றிக்கும் உள்ள அறிவியல் தொடர்பு
பல அறிவியல் ஆய்வுகளும் ஆரோக்கியத்துக்கும் வெற்றிக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்கின்றன. ஜார்ஜியா பல்கலைக்கழக ஆய்வில், தவறாமல் உடற்பயிற்சி செய்யும் நபர்கள் அதிக நம்பிக்கையுடனும், சிறந்தவர்களாகவும் இருப்பதும், அதிக கவனம் செலுத்துபவர்களாகவும், வாக்குறுதிகளைப் பின்பற்றுபவர்களாகவும், மேலும் இலக்குகளை விரைவில் அடைபவர்களாக இருப்பதை கண்டறிந்துள்ளது. அதிகம் சம்பாதிக்கும் 1,300 பேரிடத்தில் ஆய்வுக்குட்படுத்தியதில், 75 சதவீதம் பேர் தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கான உந்துதலின் ஒரு பெரிய பகுதியாக உடல் தகுதி இருந்ததாக அவர்கள் சொன்னார்கள். பல ஆய்வுகள், தனிப்பட்ட ஒருவரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், வெற்றி மற்றும் சாதனையின் இணைப்பு வலுவாக இருப்பதை கண்டறிந்துள்ளன.