மரப்பாச்சி பொம்மைகள்!! (மகளிர் பக்கம்)
குழந்தைப் பிராயத்தில் நாம் விளையாடிய மரப்பாச்சி பொம்மைகளும், ஓலைக் கொட்டானில் சேகரித்து விளையாடும் சொப்பு சாமான்களும் நினைவில் வர, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை மரத்தினால் வண்ணமயமாக தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்யும் Biblu Box நிறுவனத்தின் செயல்பாட்டாளரும், அதன் உரிமையாளருமான கல்பனா சேகரிடம் பேசியபோது…
‘‘பி.இ. முடித்து வேலூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் எம்.பி.ஏ. முடித்த கையோடு இரண்டு ஆண்டுகள் தனியார் நிறுவனம் ஒன்றின் புராடெக்ட் மற்றும் பர்ச்சேசிங் துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்தேன். திருமணம் முடிந்து குழந்தை என்றான பிறகு பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் இடைவெளி என் வாழ்க்கையிலும் ஏற்பட, அந்த நான்கு ஆண்டு இடைவெளியில், என் குழந்தைக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்களை தேடித்தேடி வாங்கிக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களின் தரம் குறித்த கேள்வி எனக்குள் இயல்பாய் எழுந்தது’’ எனும் கல்பனா ஆன்லைனில் Biblu box எனும் வெப்தளத்தை நிர்வகிக்கிறார்.
‘‘நாம் வாங்கிக்கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களை குழந்தைகள் வாயில்தான் முதலில் வைத்து கடித்து விளையாடுவார்கள். விளையாட்டுப் பொருட்களில் இருக்கும் பிளாஸ்டிக் துணுக்குகள் குழந்தைகளின் வாயில் நுழைவதோடு, அதில் இருக்கும் ரசாயன வண்ணமும் இணைந்தே உடலில் கலக்கிறது. இந்த சிந்தனை எதார்த்தமாய் எனக்குள் தோன்ற குழந்தைகளுக்கான டாய்ஸ் குறித்த கள ஆய்வில் இறங்கினேன். அதுவே என் தொழிலாகிப் போனது” என்கிறார் புன்னகைத்து.
‘‘குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் பிளாஸ்டிக் இன்றி மரப் பொருட்களால் ஏன் இருக்கக்கூடாது என யோசித்தபோது, பழைய முறையிலான மரப்பாச்சி பொம்மைகளைத் தேடி ஊர் ஊராக அலைந்தேன்” என்கிறார் கல்பனா. ‘‘கோவையில் இருந்து தொடங்கிய என் தேடல் சென்னை, பெங்களூர், டெல்லி, பாம்பே என விரிவடைந்தது. அப்போது என் தோழி ஒருவர் விற்பனைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவரும் இந்த டாய்ஸ் பிஸினஸில் 3 ஆண்டுகளாக இருந்து வருவது எனக்குத் தெரியவரவே என் தோழி ஷர்மியுடன் கைகோர்த்தேன். நானும் ஷர்மியும் இணைந்தே உட்டன் டாய்ஸ்க்கான தேடுதலில் இறங்கினோம். இதற்காக வெளிநாட்டுப் பயணங்களையும் செய்தோம்.
நம் நாட்டைவிட வெளிநாடுகளில் கிடைக்கும் உட்டன் விளையாட்டுப் பொருட்கள் ரொம்பவும் தரமானவையாக இருந்தது. ஆனால் விலை அதிகமானதாக இருக்க, அவற்றை மாதிரியாகக் கொண்டு விலை குறைவாக அதே தரத்துடன் விளையாட்டுப் பொருட்களை நாங்களே தயாரிக்கும் முயற்சியில் இறங்கினோம். விளைவு இந்த Biblu Box ஆன்லைன் விற்பனை தளம். எங்களின் தயாரிப்பு எல்லாமே ஆன்லைன் சேல்ஸ்தான். இதற்கென கடை எதுவும் கிடையாது. Biblu Box இணைய பக்கத்தில் தயாரிப்புகளை வயதுக்கு ஏற்ப வகைப்படுத்தியும், காட்சிப்படுத்தியும் விலை நிர்ணயம் செய்து வைத்துள்ளோம்.
6 மாதக் குழந்தையில் துவங்கி 6 வயதுக் குழந்தைவரை, 50 ரூபாயில் இருந்து 1500 ரூபாய் வரை எங்களிடம் விளையாட்டுப் பொருட்கள் விற்பனையில் இருக்கிறது. விற்பனையைத் தொடங்கிய முதல் மாதமே இருபதாயிரம் வரை லாபம் கிடைத்தது. இப்போது மாதம் 2 முதல் 3 லட்சம் வரை விற்பனை இலக்கை எட்டி இருக்கிறோம். எங்கள் தயாரிப்புகளுக்கு குழந்தைகளின் அம்மாக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்கள் இணைய பக்கத்தை தேடி வந்து விளையாட்டுப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் வாடிக்கையாளர்கள் எங்களுக்கு அதிகம்’’ என புன்னகை பூக்கிறார் கல்பனா.
‘‘ஒரு குழந்தைக்கு என்ன தேவையோ அதை ஒரு தாயின் பார்வையில் அணுகி, அதை அப்படியே எங்கள் தயாரிப்பில் முழுமையாகக்
கொடுக்கிறோம். இதில் குழந்தைக்கு விளையாட்டும் இருக்கும் கற்றலும் இருக்கும். இந்த முறையினை பெற்றோர்கள் ரொம்பவே விரும்புகிறார்கள். நீடித்து உழைக்கும் தரமான மரத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்காத வண்ணங்களை பயன்படுத்தியும் தயாரிக்கிறோம். விற்பனைக்காக அமேசான் நிறுவனத்தோடும் கைகோர்த்திருக்கிறோம்” என முடித்தார்.