ஆதரவற்ற பெண்களுக்கு ஆதரவளிக்கும் கைவினைத் தொழில்!(மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 27 Second

நாம் எவ்வளவுதான் நேர்த்தியாக உடை அணிந்தாலும், முகப்பொலிவிற்கு அலங்காரம் செய்து கொண்டாலும் நம்முடைய தோற்றத்திற்கு முழுமையான அழகு சேர்ப்பது அணிகலன்கள் மட்டுமே… ஆள் பாதி ஆடை பாதி என்று கூறுவார்கள்… ஆனால் இவர் கூறுவது ஆள் பாதி அணிகலன் மீதி என்று தான்…. எவ்வளவு தான் விலை உயர்ந்த வித விதமான உடை உடுத்தினாலும் அணிகலன்கள் இல்லையேல் அதன் அழகு முழுமை பெறாது… அப்படிப்பட்ட அணிகலன்களை விதவிதமான பாசி மணிகள் கொண்டு உடுத்தும் உடைக்கு ஏற்ப மேட்சிங்காக செய்து கொடுக்கிறார் அனுஷா வெங்கடேஷ்.

‘‘நான் பிறந்தது படிச்சது திருமணமாகி செட்டிலானது எல்லாம் சென்னையில் தான். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஐ.டி துறையில் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே கைவினைப்பொருட்கள் செய்வது மேல் தனி ஈடுபாடு உண்டு. அதற்கு என் அம்மா தான் காரணம்’’ என்று கூறும் அனுஷா ஆன்லைன் முறையில் tvesha_hand made_chennai என்ற பெயரில் கைவினைப் பொருட்களை செய்து விற்பனை செய்து வருகிறார்.

‘‘என் அம்மாக்கு கைவினைப் பொருட்கள் செய்வது மேல் தனி ஈடுபாடு உண்டு. அவங்க விதவிதமான பொம்மை, குரோசா, நிட்டிங், டாட்டில், கம்மல், வளையல், கழுத்துக்கு மணி என பலதரப்பட்ட கைவினைப் பொருட்களை செய்வாங்க. அதைப் பார்த்து தான் நான் வளர்ந்தேன். அம்மா கைவினைப் பொருட்களை பின்னும் போது எல்லாம் நான் அவங்க பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருப்பேன்.

அவங்க பின்ற நேர்த்தி மற்றும் அந்த பொருளுக்கு கடைசியா ஒரு உருவம் வரும் போது, ரொம்பவே சந்தோஷமா இருக்கும். ஆனால் அதன் பிறகு படிப்பு வேலைன்னு நான் பிசியாக இருந்தாலும். இதன் மேல் இருந்த ஆர்வம் எனக்கு குறையவே இல்லை. அதுவும் ஐ.டி துறையில் சொல்லவே வேண்டாம். அங்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு இந்த கைவினைப் பொருட்கள் தான் எனக்கு ரிலாக்‌ஸாக இருந்தது. அம்மா செய்யும் போது பார்த்தது மட்டுமில்லாமல், நானும் செய்ய கற்றுக் கொண்டேன்.

அதனால் வீட்டில் இருக்கும் நேரத்தில் மற்றும் விடுமுறை நாட்களில் மன அழுத்தம் குறைவதற்காகவே இவற்றை செய்ய ஆரம்பிச்சேன். நான் வேலைக்கு செல்வதால், என்னுடைய உடைக்கு ஏற்ற மேட்சிங் அணிகலனை நானே செய்து கொள்வேன். அலுவலகத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பார்த்துவிட்டு அவங்களுக்கும் செய்யச் சொல்லி கேட்க ஆரம்பிச்சாங்க. நானும் செய்து கொடுத்தேன்.

சில நண்பர்கள் புதிதாக புடவை அல்லது சுடிதார் வாங்கினா அதற்கு பிளவுஸ் தைக்கிறதுக்கு முன்னாடியே எனக்கு புகைப்படம் எடுத்து அனுப்பிடுவாங்க. அதற்கு நான் பொருத்தமான அணிகலன் செய்து கொடுப்பேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. சிலர் தங்களின் பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல், மற்றவர்களுக்கு பரிசளிக்கவும் வாங்கி செல்ல ஆரம்பித்தார்கள். அதன் பிறகு தான் இதன் மேலிருந்த ஆர்வம் மேலும் அதிகரிச்சது’’ என்றவர் 100 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அணிகலன்களை செய்து தருகிறார்.

‘‘அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டு தனித்து செய்து வந்தாலும், அம்மா இன்றும் எனக்கு சின்னச் சின்ன டிப்ஸ் எல்லாம் சொல்லித் தருவார். அணிகலன்கள் மட்டுமில்லாமல், ஓவியம் வரைவதிலும் எனக்கு ஆர்வம் உண்டு. நேரம் கிடைக்கும் போது ஓவியங்களும் வரைவேன். தற்போது மினியேச்சர் பொருட்கள், விலங்கு பொம்மைகள் மற்றும் விளக்குகளை செய்து வருகிறேன். இவற்றுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இது போன்ற மினியேச்சர் பொருட்களை நவராத்திரி மற்றும் கல்யாண வரவேற்பறையில் அலங்கரிப்பதற்காக நிறைய பேர் ஆர்டரின் பேரில் வாங்கி செல்கிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் செய்து தருகிறேன். ஒரு பக்கம் நமக்கு பிடிச்ச தொழில் செய்வதால், ஒருவித மனநிறைவு ஏற்படுகிறது, மறுபக்கம் ஒரு கணிசமான வருமானமும் இதன் மூலம் பார்க்க முடிகிறது. நான் செய்வது மட்டுமில்லாமல், இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்கள் என 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்து இருக்கிறேன்’’ என்று கூறும் அனுஷா, வேலைக்கு போகும் பெண்களே இருந்தாலும், கைவசம் ஒரு கைத்தொழில் தெரிந்து கொள்வது அவசியம் என்றார்.

‘‘நாம் இந்தாண்டு முதல் கொரோனா என்ற பெரிய போராட்டத்தை சந்தித்து வருகிறோம். இன்னும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. தற்போது ஓரளவு பழையநிலைக்கு திரும்பினாலும், பலரின் வருமானம் சீராக இல்லை. அந்த சமயத்தில் இல்லத்தரசிகள் மற்றும் வேலைக்கு போகும் பெண்களாக இருந்தாலும், இதுபோன்ற கைத்தொழிலை ஏதாவது ஒன்று கற்றுக் கொள்வது அவசியம். நாம் பார்த்து வரும் வேலையை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக விட நேரிட்டாலும், இதன் மூலமாக வருமானம் ஈட்ட முடியும்.

குறிப்பாக ஆதரவற்ற பெண்கள். அவர்கள் யாரையும் சார்ந்து வாழாமல் சொந்தக்காலில் நிற்க ஏதேனும் ஒரு கைத்தொழில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்று பெண்களுக்கு ஆலோசனையும் வழங்கினார் அனுஷா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மணம் கமழும் மூலிகை சாம்பிராணி!(மகளிர் பக்கம்)
Next post செரிமானத்தை சீராக்கும் ஓமம்!(மருத்துவம்)