கிரியேட்டிவிட்டி இருந்தால் கை நிறைய வருமானம் பார்க்கலாம்!(மகளிர் பக்கம்)
கல்லிலே கலை வண்ணம் கண்டார் என்ற பழமொழிக்கு ஏற்ப பெண்கள் கையில் இருக்கும் பொருட்களை வைத்து கலை நயமிக்க பொருட்களை உருவாக்குகின்றனர். பேரிடர் காலங்களில் பல்வேறு மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து தவிக்கும்போது வாய்ப்புகளை தேடாமல் அதனை உருவாக்கி பல்வேறு தடங்கல்களை தாண்டி இன்று வீட்டில் இருந்தபடியே ஹோம் மேட் சாக்லெட் தயாரிப்பு தொழிலில் வெற்றியும் கண்டிருக்கிறார் மதுரை மேலூரைச் சேர்ந்த பிரேமா பாலசந்தர்.
‘‘லாக் டவுன் நாட்களில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளுவும் மன அழுத்தமும் மிக அதிகமாக இருப்பதாக ஆய்வில் கிடைத்த
தகவல்கள் தெரிவிக்கின்றன. சாக்லெட் செய்வது மன அழுத்தத்தை குறைப்பதுடன் கவனம் மற்றும் பொறுமையும் கற்று தரும்’’ என்று மகிழ்ச்சியுடன்கூறும் பிரேமா ‘பார்பி’ஸ் கேண்டி கிட்சென்’ என்ற பெயரில் வீட்டில் இருந்தே சாக்லெட் தயாரித்து விற்பனையும் செய்து வருகிறார். ‘‘சிறுவயதில் இருந்தே எனக்கு உணவுப் பொருட்கள் தொடர்பான வியாபாரம் செய்வதில் ஆர்வம் இருந்தது ஒரு உணவை சாப்பிட்டு பார்த்தே அதில் என்னென்ன சேர்த்து செய்திருக்கிறார்கள் என்று கண்டுப்பிடித்துவிடு வேன். டி.வி மற்றும் யூடியூப் வீடியோவை பார்த்து புது புது சுவைகளில் செய்ய ஆரம்பித்தேன்.
ஒரே முயற்சியில் எதுவும் கிடைக்காது. பலமுறை செய்து பார்த்து, முந்தைய முயற்சியில் என்ன தவறு நடந்தது என்பதை குறித்து கொள்வேன். இப்படி வீட்டுக்குள் மட்டும் சமைத்துகொண்டிருந்தேன். ஒருநாள் கொடைக்கானல் சென்ற போது அங்கு ஹோம் மேட் சாக்லெட்கள் பேமஸ். அதனால் அதை வீட்டுக்கு வாங்கும் போது அதை சுவைத்தும் பார்த்தோம். அப்போது என் கணவர், ‘நீ தான் வித விதமாக சமைக்கிறாயே ஏன் நீ சாக்லெட் பிசினஸ் செய்யக் கூடாது’ன்னு கேட்டார். அந்த யோசனை என்னுடைய மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. ஒரே வாரத்தில் கணவருடன் இணைந்து சாக்லெட் பிசினஸ் செய்யலாம்ன்னு முடிவு செய்து எங்க இருவரின் பெயரை இணைத்து பார்பி ‘ஸ் கேண்டி கிட்சன் என்று தொடங்கினோம்.
கடைகளில் கிடைக்கும் சாக்லெட் போல் இருக்கக் கூடாது, இதன் சுவை வித்தியாசமாகவும் சுவையாகவும் மேலும் மார்க்கெட்டில் இல்லாத பிளேவராக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். ஆரம்பத்தில் சாக்லெட் மார்க்கெட்டிங் செய்த போது வேண்டாம் உடம்புக்கு கேடு என்று சிலர் கூறினர். அவர்களிடம் டார்க் சாக்லெட்டின் நன்மைகள் குறித்து கூறினோம். ஒரு முறை சாப்பிட்டு பார்த்து விட்டு கடைகளில் கிடைக்கும் சாக்லெட்டை விட சுவை அதிகமாக இருப்பதாக கூறினர். அது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தது.
நிறைய சுவைகளில் செய்ய ஆரம்பித்தோம். இனிமேல் குழந்தைகள் சாக்லெட் சாப்பிடுகிறார்கள் என்று பயப்பட வேண்டாம். காரணம் நாங்க எந்த வித ரசாயனப் பொருட்களும் சேர்ப்பதில்லை. எல்லாமே ஆரோக்கியமான சாக்லெட்கள் தான், அதாவது சத்து மாவு சாக்லெட், ஆளி விதை சாக்லெட், பாதாம் வால்நட் பேரீச்சம்பழம் போன்ற அனைத்து சத்துள்ள பொருட்களை கொண்டு தயாரிக்கிறோம். மேலும் குழந்தைகளுக்காக ஃப்ரெஷ் பழங்கள் மற்றும் காய்கறி சாக்லெட், குல்கந்து, சீஸ் போன்ற சாக்லெட்கள் உள்ளன. வீட்டில் இருந்தபடியே பிடித்த வேலை செய்வதால் மனநிம்மதியோடு வருமானமும் கிடைக்கிறது.
தற்போது இந்தியா முழுதும் எங்களின் சாக்லெட் விற்பனையில் உள்ளது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமும் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கிறோம். சாக்லெட் செய்வதற்கு பொறுமை மிகவும் அவசியம். விடா முயற்சியுடன் கொஞ்சம் கிரியேட்டிவ் ஆக யோசித்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். முதலீடும் குறைவு, ஆனால் மாதம் 15000 வரை லாபம் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்றது மற்றும் வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம்’’ என்று கூறும் பிரேமா சாக்லெட் மட்டுமில்லாமல், சான்றிதழ் பயிற்சி வகுப்பு களும் எடுத்து வருகிறார்.
‘‘என க்கு தெரிந்த கைத்தொழிலை மற்ற பெண்களும் கற்றுக் கொண்டு ஒரு வருமானம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இரண்டு நாட்கள் கட்டண வகுப்புகளை ஆரம்பிச்சேன். இதில் துணி பொம்மை தயாரித்தல், சாக்லெட் செய்வது மற்றும் ஆர்ட் மற்றும் கிராஃப்ட் குறித்த பயிற்சி அளித்து வருகிறேன். கொரோனா காலத்தில் ஆன்லைன் முறையில் பயிற்சி அளித்து வந்தேன்’’ என்று கூறும் பிரேமா நான்கு முறை சர்வதேச அளவில் விருது பெற்றுள்ளார். மேலும் கலை மற்றும் கலாச்சாரத் துறையில் கெளரவ டாக்டர் பட்டம் பெற உள்ளார்.