கோவில்பட்டி முறுக்கு… இது பாட்டி சுட்ட முறுக்கு! (மகளிர் பக்கம்)
சுமார் 40 வருடங்களுக்கு முன் 1981ல் நெருநல்வேலி, தச்சநல்லூரில் ராஜம்மாள் பாட்டி தன் வீட்டில் சுட்ட அச்சு முறுக்கை வாசலில் விற்க தொடங்கினார். அச்சு முறுக்குடன் இனிப்புக்காக அதிரசமும் சேர்த்து கொடுத்தார். அந்த இரண்டு பலகாரங்கள் ஐந்தாகி, இப்போது ஐம்பதாக வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 30க்கும் அதிகமான கிளைகளுடன் ராஜம்மாள் பாட்டி ஆரம்பித்த கோவில்பட்டி முறுக்கு கடை அதே மணமும் சுவையும் மாறாமல் அவருடைய செய்முறை படியே தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. இதை மூன்றாவது தலைமுறையாக இப்போது ராஜம்மாள் பாட்டியின் பேரன் ஸ்டீபன் மணி நிர்வகித்து வருகிறார்.
“பொதுவாக அனைவரது வீடுகளிலும் பாட்டிகள் தங்களது கைப்பக்குவத்தில் வீட்டு குழந்தைகளுக்கு அச்சு முறுக்கு, சீடை, அதிரசம் போன்ற பலகாரங்களை செய்து கொடுப்பது வழக்கம். என்னுடைய ஆச்சியும் அவரே உருவாக்கிய சமையல் குறிப்பிலிருந்து ஐந்து விதமான முறுக்கு வகைகளை செய்வார். அதை எங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கூட கொடுப்பார். அவரது கைப்பக்குவத்தின் சுவை அனைவருக்கும் பிடித்துப் போனது. கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு விசேஷங்களுக்கு ராஜம்மாள் பாட்டியின் முறுக்கை அனைவரும் கேட்க ஆரம்பித்தனர்.
சில நாட்களில், என் பாட்டி வீட்டிலேயே தன்னுடைய பலகாரங்களை அடுப்பறையில் தயாரித்து, அதை அப்படியே வாசலில் ஒரு கடை போல அமைத்து விற்க ஆரம்பித்தார். திருமண நிகழ்ச்சிகளில் ஆர்டர்கள் கிடைத்தன. அப்போது ஆச்சி அவருடைய அத்தை சின்ன தாயம்மாளின் உதவியுடன் முறுக்கு, தட்டை, தேன் குழல் பலகாரங்களை தயாரிக்க ஆரம்பித்தார்.
இந்த முறுக்கு வியாபாரமும், திருமண ஆர்டர்களும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. 18 ஆண்டுகளாக வெறும் வீட்டிலேயே தயாரித்து வீட்டிலேயே விற்ற பலகாரங்களை, வாடிக்கையாளர்கள் வெளியே கடையாக தொடங்கலாமே என கேட்கத் தொடங்கினர். அப்போது தான் என்னுடைய அப்பா ராஜி, அவருடைய அம்மா ராஜம்மாள் பாட்டி முறுக்கை, ஸ்டார் முறுக்கு கடையாக 1995ல் திருநெல்வேலியில் ஆரம்பித்தார்.
பின் 1999ல்தான் கோவில்பட்டியில் அதே பெயரில் எங்களுடைய முதல் முறுக்கு கடை ஆரம்பிக்கப்பட்டது. கோவில்பட்டியில் முறுக்கு கடைகளே கிடையாது. அங்கு கடலை மிட்டாய் போன்ற ஐட்டங்கள் மட்டுமே பிரபலம். நாங்கள்தான் அங்கு முறுக்கு வகைகளுக்கு பிரபலமான பலகாரக் கடையை ஆரம்பித்தோம். அப்போது கோவில்பட்டி ஸ்டார் முறுக்கு கடை என்ற பெயரில் ஆரம்பமான எங்கள் பயணம் இன்று முப்பதுக்கும் அதிகமான கடைகளுடன் வளர்ந்து நிற்கிறது. ஆரம்பக் காலத்தில் என்னுடைய பாட்டியின் உழைப்பினால் எங்கள் பலகாரம் நிகரில்லாத சுவையும் தரமும் பெற்றது. பின் என் தந்தையின் முயற்சி மூலம் விற்பனையில் வளர்ந்து நின்றது. நாகர்கோவிலில் ஏழு எட்டு கடைகள் ஆரம்பித்தோம்.
பின், என் சித்தப்பா சேலத்தில் புதிய கடைகளை திறந்தார். இப்போது மூன்றாம் தலைமுறையில், நாங்கள் சென்னையில் கோவில்பட்டி முறுக்கு கடையை சுமார் ஐம்பது வகை பலகாரங்களுடன் நடத்தி வருகிறோம். முறுக்கு, தட்டை, சீடை, அதிரசம், ஜாங்கிரி, அல்வா, மைசூர் பாக், வாழைப்பழ கேக் என அனைத்து வகைகளையும் நாங்களே தயாரித்து நேரடி விற்பனை செய்கிறோம். கோவில்பட்டி முறுக்கு கடை எத்தனை கிளைகளாக விரிந்தாலும், இன்றும் எங்கள் ராஜம்மாள் பாட்டியின் சமையல் குறிப்பை பின்பற்றித்தான் பலகாரங்கள் செய்கிறோம். நாங்கள் வேலைக்கு நியமிக்கும் சமையல் கலைஞர்களுக்கும் பாட்டியின் கைப்பக்குவத்தை சொல்லிக் கொடுத்து அதே தரத்தில் சுவை மாறாத பல
காரங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறோம்.
எங்கள் பலகாரங்களை எந்த ரசாயன பொருட்கள் கொண்டும் பதப்படுத்தாமல் தினமும் புதிய பலகாரங்களை தயாரித்து அதை இரவுக்குள் விற்றுவிடுவோம். பொதுவாக பலகார விற்பனையாளர்கள், மாவை அப்படியே வாங்கி அதில் பலகாரங்கள் செய்வார்கள். ஆனால் நாங்கள் எங்களுடைய பிரத்யேக விநியோகரிடமிருந்து, இரண்டு நாட்களுக்கு முன்னரே நயமான பச்சரிசி வாங்கி அதை ஊறவைத்து அரைத்து மாவு தயாரிப்போம். வீட்டில் பொதுவாக உங்கள் பாட்டி முறுக்கு தயாரிக்கும் அதே செயல்முறையைத் தான் நாங்கள் இன்றும் பின்பற்றி வருகிறோம்.
கோவில்பட்டி முறுக்கு கடைகளில் வாடிக்கையாளர்கள் பலகாரங்களை ருசி பார்த்து பிடித்து இருந்தால் வாங்கலாம். அதனால் பல ரெகுலர் கஸ்டமர்ஸ் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்கள். பொதுவாகவே எந்த உணவுப்பொருள் விரைவில் கெட்டுப் போகிறதோ அதுதான் உண்மையில் தரமான ஆரோக்கியமான உணவு. எங்கள் பலகாரங்கள் மூன்று நாட்களுக்குள் அதன் சுவையும் மணமும் மாறிவிடும். ஒரு வாரத்தில் அந்த பலகாரங்கள் கெட்டே போய்விடும்.
அதனால் தைரியமாக குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக நிச்சயம் கொடுக்கலாம். அரிசியில் செய்த பலகாரங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும், எங்கள் ஆச்சி குழந்தைகள் முறுக்கு சீடை போன்ற நொறுக்கு தீனிகளை நன்கு கடித்து சாப்பிட்டால் பல்லையையும் தாடையையும் பலமாக்கும் என்றும் சொல்லுவார். அதே போல எண்ணையும், இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்துவது கிடையாது. பயன்படுத்திய எண்ணெயை அப்படியே பையோ டீசல் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுப்பிவிடுவோம்.
பொதுவாக நாம் குழந்தைகளாக இருக்கும் போது ஸ்நாக்ஸ் என்றாலே முறுக்கு, தட்டை, சீடை, அதிரசம், சோமாஸ், பூந்தி போன்ற வகைகளை தான் பெரியவர்கள் கொடுப்பார்கள். இப்போது பாக்கெட் ஸ்நாக்ஸ் அதிகரிக்க, நோய்களின் வகைகளும் அதிகரித்துவிட்டது” என்கிறார்.சென்னையில் மட்டும் இவர்களுக்கு 10 கிளைகள் உள்ளன. இது தவிர, கோவில்பட்டி முறுக்கு கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் 95% பெண்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட், சிப்ஸ் போன்ற உணவுகளை கொடுப்பதை முழுவதுமாக தடுக்க முடியாது. ஆனால் பாரம்பரியமாக நம் வீட்டில், நாம் சாப்பிட்டு வளர்ந்த ஆரோக்கியமான பலகார வகைகளை இன்றைய குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவோம்.
Average Rating