பாதுகாப்பான வாழ்க்கைக்கு என்ன செய்யலாம்? (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 13 Second

நாம் அனைவருமே ஒரு கட்டத்தில் நம்முடைய தினசரி வேலையிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் நாட்கள் நெருங்க நெருங்க சரியான திட்டமிடல் இல்லாததால் ரிடையர்மென்ட் வயதில் நாம் பல அனுபவங்களை இழக்க வேண்டி இருக்கிறது. இளம் வயதில் சரியாக உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உழைப்பதால் வயதானதும் அதன் எதிர் விளைவுகளாக மூட்டு வலியில் தொடங்கி மாரடைப்பு வரை பல உடல் உபாதைகளை சந்தித்து வயோதிகம் என்றாலே மருந்துகளும் மருத்துவமனையும்தான் என்றாகி விடுகிறது. இது குறித்த முழு விவரங்களை பொருளாதார நிபுணரும், Econfinity எனும் பொருளாதார நிறுவனத்தின் நிறுவனருமான மாஞ்சரி பகிர்கிறார்.

‘‘வயதானவர்களுக்கு ஓய்வூதிய திட்டமிடல் மிகவும் அவசியம். இது அவர்களின் அன்றாட செலவுகள் போக, மருத்துவத்திற்கான முதலீட்டையும் நிச்சயமாக சேர்க்க வேண்டும். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 1961ல் 5.6% ஆக இருந்த முதியோரின் எண்ணிக்கை, 2031ல் 13.2% சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மக்கள் தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதால், ரிடையர் மென்டிற்கான முதலீட்டினை செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் வேலை, பொருளாதார நிலை, ஓய்வு பெறும் நேரம், எதிர்பார்க்கப்படும் வருமானம் போன்ற பல காரணிகள் கொண்டு திட்டங்களை தேர்வு செய்யலாம்.  வயதானவர்களுக்கான சில முக்கிய திட்டங்கள் உள்ளன. அவர்களுக்கு பொருத்தமான ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

* மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS) Account)

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டம். இதில் குறைந்தபட்ச வைப்புத் தொகை 1000 ரூபாய். அதிகபட்சமாக 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் சேர, ஒருவருக்கு 60 வயதாகி இருக்க வேண்டும். அல்லது 55 வயதில் இணைய நினைப்பவர்கள், வாலன்டரி ரிடையர்மென்ட் ஆஃப் சர்வீஸ் (VRS) அல்லது சூப்பர் ஆனுவேஷன் விதிகள் மூலம் முன்கூட்டியே ஓய்வு பெற்றிருக்க வேண்டும். வயதானவர்களுக்கு மாதாமாதம் குறிப்பிட்ட நிலையான தொகை வருமானமாக கிடைக்கும். இதன் வட்டி விகிதங்கள் அரசாங்கத்தால் காலாண்டு அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டாலும், நீங்கள் எந்த திட்டத்தில் இணைந்தீர்களோ அதற்கான வட்டி விகிதம் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.

இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஆனால் படிவம் Bஐ தாக்கல் செய்தால் 3 ஆண்டுகள் வரை திட்டம் நீட்டிக்கப்படலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80-சி-இன் கீழ் இத்திட்டத்துக்கு வரி விலக்கும் கிடைக்கும். இதில் இணைய விரும்புபவர்கள், அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று அல்லது இதேபோன்ற திட்டத்தை வழங்கும் வங்கிகளில் Senior Citizen Savings Scheme (SCSS) கணக்கை திறக்கலாம். ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை, பிறப்புச் சான்றிதழ்/மூத்த குடிமகன் அட்டை மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் இதனுடன் மின்சாரம்/தொலைபேசி கட்டணங்கள் போன்ற அடிப்படை அடையாளச் சான்றுகளை எடுத்துச் செல்லலாம்.

தனியார்/அரசு அலுவலகங்களில் வேலைப் பார்த்து, ஓய்வுக்குப் பின் குறிப்பிட்ட ஒரு தொகையை பெறுபவர்கள் இந்த திட்டத்தில் எளிதில் இணைந்து குடும்பத்திற்கான அவசர கால செலவுகளுக்கு முதலீடு செய்யலாம்.

* பிரதான் மந்திரி வய வந்தனா யோஜ்னா (Pradan Mantri Vaya Vandana Yojna)

இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்த ஓய்வூதிய திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு மாதாந்திர நிலையான வருமானம் கிடைக்கும். 1,50,000 முதல் 7,50,000 முதலீடு செய்யும் பட்சத்தில் மாதாமாதம் குறைந்தது 1000 – 5000 ரூபாய் வருமானம் கிடைக்கும். வைப்புத் தொகையிலிருந்து 8% சதவீத ஓய்வூதியம் கண்டிப்பாக கிடைக்கும். இதன் பாலிசி காலம் 10 ஆண்டுகளிலும் நிலையான 8% வட்டி கிடைக்கும்.

மேலும் இதிலிருந்து கிடைக்கும் ஓய்வூதியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு கணக்கிலும் பெற்றுக்கொள்ள முடியும். ஓய்வூதியம் பெறுபவருக்கு உடல் நிலை சரியில்லாமல் அவசர கால உதவி தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே இந்த கணக்கை பாலிசி காலம் முடிவதற்கு முன்னரே மூட முடியும். அப்போது 98% தொகை திரும்ப அளிக்கப்படும். இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம்… மூன்று வருட பாலிசி காலத்திற்குப் பின், நீங்கள் முதலீடு செய்த தொகையில் 75% கடனாக பெற முடியும்.

இதற்கு வரி விலக்கு உண்டு என்றாலும், இந்த திட்டத்திலிருந்து கிடைக்கும் வட்டி பணத்தை வருமானமாக கருதி அதற்கு வரி விதிக்கப்படலாம். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின், குறிப்பிட்ட ஒரு பெரிய தொகையை கையில் பெறுபவர்கள், இந்த திட்டத்தில் முதலீடு செய்து நிலையான வருமானத்தை பெறலாம். மேலும், இதில் கடன் வாங்கும் வசதியும் உண்டு என்பதால், அவசர தேவைக்காக ஒரு பெரிய தொகையை பெற நினைப்பவர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.

* தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் (Post office Monthly Income scheme)

பயனாளர்களுக்கு மாதாந்திர வருமானத்தை கொடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திட்டம்.  இந்த திட்டத்தில் பத்து வயதைத் தாண்டிய இந்திய குடிமக்கள் அனைவரும் சேரலாம். 2021ன் படி, இத்திட்டம் 6.6% சதவீத வட்டியை வழங்குகிறது. கணக்கு துவங்கிய ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இது மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு திட்டங்களிலிருந்தும் குறைந்த வட்டியை மட்டுமே கொடுத்தாலும், இதன் உச்சகட்ட வயது வரம்பு பத்து தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதன் குறைந்தபட்ச வைப்புத் தொகை 1500ல் ஆரம்பிக்கிறது. தனி கணக்கில் குறைந்தபட்ச முதலீடு 1500 ஆகவும், அதிகபட்சமாக 4.50,000 வரை சேமித்து வைக்கலாம். கூட்டுக்கணக்கில் (Joint account) 9,00,000 வரை முதலீடு செய்யலாம். மாதாமாதம் நிலையான வட்டி வருமானம் பயனாளியின் சேமிப்புக் கணக்கிற்கு நேரடியாக மாற்றப்படும்.

* மூத்த குடிமக்கள் நிலையான வைப்பு திட்டம்   (Senior citizen Fixed Deposit)

மூத்த குடிமக்களுக்கு நிலையான வருவாயை தரக்கூடிய மிகவும் பாதுகாப்பான திட்டம்தான் இந்த நிலையான வைப்பு திட்டம் (Senior citizen Fixed Deposit). இதன் வட்டி விகிதம் 3% – 7% சதவீதம் வரை கிடைக்கும். மேலும் பொதுவாக மூத்த குடிமக்களுக்கு 0.5% கூடுதல் வட்டியும் உண்டு. மூத்த குடிமக்களுக்கு டெபாசிட் காலம் 7 ​​நாட்கள் முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கும். மத்திய வங்கியின் கீழ் ஆரம்பத்தில் டெபாசிட் செய்யப்படும் வைப்புத் தொகை ஐந்து லட்சம் வரை காப்பீடு செய்யப்படுகிறது. 5 வருட முதலீட்டிற்குப் பிறகு, முதலீட்டாளர் 80Cயின் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரி விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே நல்ல வருமானம் இருக்கும் மூத்த குடிமக்கள், தங்கள் நிதியை பாதுகாக்க விரும்பும் பட்சத்தில் இந்த திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

* மியூச்சுவல் ஃபண்டு மற்றும் வரி இல்லாத பத்திரங்கள் (Mutual Funds and Tax free bonds)

மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் பலதரப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை திரட்டி அதை பல்வேறு சொத்துக்களில் முதலீடு செய்ய முடியும். முன்பு வழங்கிய நிலையான வருவாய் திட்டங்களை காட்டிலும், இதில் அதிக வருமானத்தை குறைந்தபட்ச காலத்திலேயே ஈட்டிவிட முடியும். ஆனால் அதே சமயம் இதில் ஆபத்துக்களும் அதிகமே. வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும், சிலர் பெரிய ஆபத்துக்களை எடுக்க விரும்பமாட்டார்கள். ஆனால் சிலர் குறைந்தபட்ச ஆபத்தை சந்திக்கலாம் என தைரியமாக இறங்குவார்கள்.

மூத்த குடிமக்களுக்கு ஹைப்ரிட் ஃபண்டுகள் நல்ல தேர்வாக இருக்கும். உங்களுடைய பணம் டெப்ட் ஃபண்ட் மற்றும் ஈக்விட்டி ஃபண்ட் என இரண்டிலுமே முதலீடு செய்யப்பட்டு நல்ல லாபத்தைக் கொடுக்கும். வரியில்லா பத்திரங்கள் 10 வருட காலவரையறை கொண்ட பாதுகாப்பான முதலீடாகும். வரிச் சேமிப்பை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இத்தகைய பத்திரங்கள் அரசு மற்றும் தனியார் சேர்ந்து நடத்தும் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுவதால் இது மிகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. விலைகள் சாதகமாக இருக்கும் போது முதலீட்டாளர் சந்தையில் இந்த பத்திரத்தை விற்கலாம்.

இது குறித்து அறிவிப்பு வரும் போது ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் வாங்கிக்கொள்ள முடியும். இதை வாங்க வழக்கமான அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் வங்கி விவரங்கள் மட்டுமே தேவைப்படும். நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் மூத்த குடிமக்களுக்கு இது பொருந்தாது. இதில் ஆபத்தும் உண்டு என்பதால், ஏற்கனவே சில வழிகளில் நிலையான வருமானத்தை ஈட்டுபவர்கள் மட்டும் ஆபத்தை அறிந்து கொண்டு இதில் முதலீடு செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல்வரின் பிறந்தநாள் கேக்கை உருவாக்கியவர் இவர்தான்! (மகளிர் பக்கம்)
Next post எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுண்டு!