பெற்றோர்களே உஷார்!: Chubby Cheeks பாப்பாக்கள்…!(மருத்துவம்)
நம் வீட்டுக் குழந்தைகள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் சிந்தனை ஆகும். அதனால் குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே ஒவ்வொருவரும் ஒவ்வோர் உணவுகளை, உணவுப் பழக்கங்களை நமக்குப் பரிந்துரைப்பர். நாமும் குழந்தைகள் வயதுக்கு வருவது வரைக்கும் அவர்களின் உணவுப் பழக்கங்களில் சிரத்தை எடுத்து மாற்றங்கள் செய்வோம். இவை அனைத்தும் தவறில்லை என்றாலும், நாம் வெறும் உணவுப் பழக்கங்களில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறோம், உடல் உழைப்பைப் பற்றி யோசிக்க மறந்து விடுகிறோம்.
அதனால் இன்றைய நவீன உலகில் அதிக உடல் உழைப்பும் இல்லாமல் துரித உணவுகளையும் விரும்பி உண்ணும் இக்கால குழந்தைகளின் உடல் எடை என்பது அதிகரித்து வருவதில் ஆச்சர்யம் இல்லை. இப்படியான ‘உடல் எடை அதிகரிப்பு’ குழந்தைகளுக்கு ஏற்பட வேறு என்ன காரணங்கள் இருக்கின்றன, அவற்றால் என்னென்ன பாதிப்புகள் வரக்கூடும் போன்றவற்றையெல்லாம் இக்கட்டுரையின் வாயிலாக நாம் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
குழந்தைகளின் உடல் எடை கணக்கு…
*பொதுவாக நம் உடல் எடை சரியான அளவில்தான் உள்ளதா என்பதை BMI (Body Mass Index) மூலமாக மருத்துவர்கள் கணக்கிடுவார்கள்.
*அதேபோல குழந்தைகளுக்கு உடல்நிறை குறியீட்டெண்ணை (BMI) அளவிட அவர்களின் வளர்ச்சிக்கேற்ப குழந்தையின் பாலினம், எடை மற்றும் உயரம் ஆகியவை கணக்கில் கொண்டு அளக்கப்படுகிறது.
ஆய்வுகளின் தரவுகள்…
*உலகளவில் உடல் பருமன் விகிதம் 1975 ஆம் ஆண்டில் நான்கு சதவீதத்திலிருந்து 2016 வரை 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.
*இந்தியாவில் ஒரு கோடியே 44 லட்சம் குழந்தைகள் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள்.
*சீனாவுக்கு (பதினைந்து மில்லியன் குழந்தைகள்) அடுத்தபடியாக இந்தியாதான் உடல் பருமன் கொண்ட குழந்தைகள் எண்ணிக்கையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
என்ன காரணம்…?
பொதுவாக நம் உணவில் கிடைக்கக்கூடிய ஆற்றல் அனைத்தும் ‘கலோரிகளாக’ சேமிக்கப்பட்டு உடலால் செலவு செய்யப்படும் (புரதம், கொழுப்பு, நார்சத்து என எதை நாம் உண்டாலும் அதில் கலோரிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது). ஆனால், கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளில் அதிக அளவில் கலோரிகள் இருக்கும் என்பதால்தான் இந்த வகை உணவுகளை மிகுதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லப்படுகிறது.அவ்வாறு எடுத்துக்கொண்டால் நிறைய கலோரிகள் உடலில் சேரும். அதனால் அதற்கு ஏற்றார் போல உடல் உழைப்பு செய்து அவற்றை செலவு செய்யவேண்டும். இன்றைய சூழலில் குழந்தைகளது உடல் உழைப்பு குறைந்து வருவதால் சேமிக்கப்படும் கலோரிகள் உடல் எடையை அதிகரித்து உடற்பருமனை உண்டு செய்கிறது.
ஆபத்துக் காரணிகள்…
*பேக்கிங் (Baking) செய்யப்பட்ட உணவுகள்,
*பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள்,
*ஐஸ்கிரீம்,
*சாக்லேட் மற்றும் மற்ற இனிப்பு வகைகள்,
*துரித உணவு வகைகள்,
*குழந்தைகளின் அன்றாட ஆற்றல் செலவு ஆகாமல் ஓரிடத்தில் உட்கார்ந்தபடி வீடியோ கேம்ஸ் விளையாடுவது,
*தினமும் சராசரியாக 5 முதல் 6 மணி நேரம் வரை தொலைபேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி, கணினி பார்ப்பது (இப்படி பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்திலும் குழந்தைகளின் உடல் பருமன் 2 சதவீதம் வரை அதிகரிப்பதாக சொல்கிறார்கள்),
*இவற்றோடு மரபணுவையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பக்க விளைவுகள்…
*குழந்தையாக இருக்கும்போது மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும் இவர்களை உடற்பருமன் பாதிக்கிறது.
*இதயம் தொடர்பான பிரச்சினைகள், மூட்டு வலி, கருப்பை பாதிப்பு (ஆண் பிள்ளைகளுக்கு ஆண்மைக் குறைபாடு), புற்றுநோய், தூக்கமின்மை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இளம் வயதிலேயே வரத் தொடங்கும்.
*அதிக உடற்பருமன் உள்ள குழந்தைகளுக்கு நினைவாற்றல் குறைய வாய்ப்பு உள்ளது.
*மிகுந்த கவனச் சிதறலுக்கும், மனச் சோர்வுக்கும் தள்ளப்படுவர்.
வராமல் தடுக்க…
*வீடியோ கேம், செல்போன் பார்த்தபடி சாப்பிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.
*வீட்டில் இருந்தாலும் நேரத்திற்கு சாப்பாடு உண்பதற்கு கொடுக்க வேண்டும்.
*சரியான நேரத்திற்கு உறங்க வைக்க வேண்டும்.
*நொறுக்குத்தீனிகளை குறைக்க வேண்டும்.
*அதிகளவில் காய்களையும், பழங்களையும் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
*வீடியோ கேம், தொலைக்காட்சி பயன்பாட்டு நேரத்தை குறைக்க வேண்டும்.
*ஆறு வயது முதல் அடிக்கடி கடற்கரை, கோயில் போன்ற இடங்களில் நடக்க வைக்க வேண்டும்.
*பத்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளை ஏதேனும் கற்றுத்தரும் மையங்களுக்கு அனுப்பலாம். உதாரணமாக, கராத்தே, நீச்சல் பயிற்சி, நடனம், சிலம்பம், மற்ற வெளி விளையாட்டுகள் ஆகியவை.
*பதிமூன்று வயது முதல் தினமும் நடக்கச் சொல்லலாம், வீட்டில் முழுவதுமாக ஒரு வேலையை பிரித்துக் கொடுக்கலாம். உதாரணமாக, வீடு பெறுக்குவது, பாத்திரங்களை கழுவுவது போன்றவை.
*பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வீட்டில் சிறுசிறு வேலைகள் (காய்கறி எடுத்து வருவது, கழுவிய பாத்திரங்களை எடுத்து வைப்பது) கொடுக்கலாம்.
*மேல் சொன்ன இவைதான் தீர்வுகளும்.
முப்பது வருடங்களுக்கு முன்பும் சரி, அதற்கு முன்னாலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுதான் மையமானப் பிரச்சினையாக இருந்தது. ஆனால் இப்போது அதன் நேர்மாறு பிரச்னையான உடற்பருமன் இருக்கிறது.
மொத்தத்தில் இந்த துருவமும் இல்லாமல், அந்த துருவமும் இல்லாமல் நடுநிலையாக நல்ல ஆரோக்கியத்துடன் நம் பிள்ளைகள் அனைவரும் பெரியவர்கள் ஆவதற்கான வாழ்வியல் சூட்சுமத்தை நாம்தான் அறிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டியது மிக அவசியமாகிறது.
Average Rating