வாழைநார் கம்மல் வளையல்…!! (மகளிர் பக்கம்)
பருத்தி, பட்டு, ரேயான், பாலியஸ்டர் எனப் பல்வேறு துணி ரகங்களில் நெய்யப்படும் சேலைகளைப் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இயற்கையான தாவரங்களின் நார்களைக் கொண்டும் புடவைகள் தயாராகி வருகின்றன. அதுவும் கற்றாழை, சணல், வாழை, புளிச்சை கீரை நார், மூங்கில் நார்கள் என அனைத்து நார் வகை உணவுப் பொருட்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன என்பதைக் கேட்கும்பொழுது நம்மை அறியாமல் ஆச்சரியம் பற்றிக் கொள்ளதான் செய்கிறது.
நூலினால் தயாராகும் சேலைகளுக்கு இருக்கும் அத்தனை அழகும், வனப்பும் நார்களைக் கொண்டு நெசவு செய்யப்படும் சேலைகளிலும் இருக்கின்றன. அந்த சேலைகள் நெய்தது போக மிச்சமிருக்கும் பொருட்களை வீண் செய்யக்கூடாது என்கிற நோக்கில் அதையும் பயன்படுத்தி வாழை நார் நகைகளையும் செய்து வருகின்றனர் சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த சேகர் குழுவினர்.
‘‘அனகாபுத்தூரில் ‘இயற்கை நார் நெசவு மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி குழுமம்’ என்கிற பெயரில் ஒரு குழுவாக இயங்கி வருகிறோம். இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களும் பங்கு வகிக்கிறார்கள். கிட்டத்தட்ட எழுபது பேருக்கு மேல் கூட்டாக சேர்ந்து இதில் ஒன்றிணைந்து நாங்க ஈடுபட்டு வருகிறோம். வாழை நார், மூங்கில், கற்றாழை நார் என கிட்டத்தட்ட 25 வகையான இயற்கை முறையில் எடுக்கப்படும் நார்களைக் கொண்டு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறோம். தற்போது சிறிய அளவில் செய்து வருகிறோம். இதையே பெரிய அளவில் கொண்டு வரவேண்டும் என்பது தான் எங்களின் முக்கிய நோக்கம்” என்கிறார் சேகர்.
பல தேசிய சாதனைகள் புரிந்துள்ள இக்குழுவினர் விருதுகள் பலவும் வென்றுள்ளனர். இயற்கைக்கு தீங்கு விளைவிக்காமல், சுற்றுப்புற சூழலும் கெடாமல் இருப்பதற்கு தங்களது முயற்சியினை மேற் கொண்டு வரும் இவர் தண்ணீர் வளம், மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் தான் இதனை கையில் எடுத்திருப்பதாக கூறுகிறார் சேகர்.
‘‘இயற்கையிலிருந்து கிடைக்கக்கூடிய எந்த ஒரு பொருளையும் வீண் செய்யக்கூடாது.
அதே வேளையில் இயற்கைக்கு முரணாகவும் செயல்படக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில்தான் இதனை குடிசை தொழிலாக செய்து வருகிறோம். எங்களுக்கு இடம் பற்றாக்குறையாக இருப்பதினால், சிறு சிறு பொருட்கள் எல்லாம் பெண்கள் அவர்கள் வீட்டிலேயே இருந்தபடி செய்வதற்கான பயிற்சி அளித்து இருக்கிறோம். அதன்படி தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே பார்த்துக் கொண்டு வருமானமும் ஈட்டி வருகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை என்னைச் சார்ந்து இருக்கும் அனைவரின் வாழ்வும் மேன்மையடைய வேண்டும். ஆனால் பலர் தங்கள் ஆதார வேலைகளை விட்டுவிட்டு அதிக சம்பளம் என ஐ.டி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அதே அளவு இங்கேயும் சம்பாதிக்க முடியும் என தன்னம்பிக்கை கொடுத்து வேலைகள் செய்து வருகிறோம். இனி வரும் காலங்களில் எல்லோரும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை தான் வாழ்ந்து ஆக வேண்டும். அந்த அளவு எல்லாவற்றையும் கெடுத்து வைத்துள்ளோம். அந்த நேரம் இது போன்று இயற்கை சார்ந்த தொழில் மேலோங்கும். இப்போது உயர் தர மக்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களும் இது போன்ற பொருட்கள் வாங்குவதற்கான விழிப்புணர்வு பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே இயற்கை சார்ந்த பொருட்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்கிற சேகர், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சுற்றுலா தளங்களிலும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறார்.
‘‘எங்களின் பொருட்களில் எந்த ஒரு ரசாயன பூச்சும் பயன்படுத்துவதில்லை. எல்லாமே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சாயங்களை தான் பயன்படுத்துகிறோம். புடவை நெய்த பிறகு சில நார்கள் எஞ்சி இருக்கும். நார்களை பிரிப்பது அவ்வளவு சுலபமான வேலை இல்லை என்பதால், அந்த நார்களை தூக்கி எறியவும் எங்களுக்கு மனமில்லை. அதனால் அதில் என்ன செய்யலாம்னு யோசித்த போது பேப்பரில் நகைகள் செய்வது போல் இதைக் கொண்டு வளையல், கம்மல்கள் செய்ய திட்டமிட்டோம்.
செய்து பார்த்த போது அருமையாக இருந்தது. மக்களும் விரும்பி வாங்க ஆரம்பித்தார்கள். இப்போது பனை ஓலையில் ஹேண்ட் பேக், கம்மலும் செய்கிறோம். இந்த பைகளை லெதர் பைகளின் தரத்தில் கொண்டு வந்திருக்கிறோம். எங்களின் ெபாருட்கள் மற்ற பொருட்களை விட கொஞ்சம் விலை அதிகம் தான். இதில் எங்கள் அனைவரின் உழைப்பு இருக்கிறது. அரசு ஆதரவு கொடுத்தால் கண்டிப்பாக சலுகை விலையில் கூட எங்களின் பொருட்களை விற்பனை செய்ய முடியும்.
எல்லாவற்றையும் விட எங்க குழுமம் இயங்க இடம் கொடுத்து ஊக்குவித்தால், அதில் பொது சேவை மையம் அமைத்து இன்னும் அதிகமான இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர முடியும். இதனால் விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஓர் வருமானம் கிடைக்கும்” என்கிறார் சேகர்.
சணல் புடவைகள்
காய்கறிச் செடிகளின் தோல்களிலிருந்து தயாரிக்கப்படும் தங்கநிற நார்களால் மிகவும் நேர்த்தியாகத் தயாரிக்கப்படுபவையே சணல் புடவைகள். முற்றிலும் மக்கக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய சணலினால் உருவாக்கப்படும் இந்த ஆர்கானிக் புடவைகளில் செய்யப்படும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் இதன் அழகை மேலும் கூட்டுகின்றன. விழாக்களுக்கு இந்த புடவைக்கு ஏற்ற நகை அலங்காரத்துடன் அணியும் பொழுது அனைவரின் கவனமும் உங்களைச் சுற்றியே இருக்கும். மலர்கள் மற்றும் செக்ட் பிரிண்ட்டுகளுடன் வரும் இந்தப் புடவைகளின் அழகை வெல்ல வேறு புடவைகள் இல்லை என்று சொல்லலாம்.
மூங்கில் பட்டுப் புடவைகள்
மூங்கிலின் உட்புறமிருக்கும் பகுதியிலிருந்து எடுக்கப்படும் நார்களைக் கொண்டு இந்தப் புடவைகள் நெசவு செய்யப்படுகின்றன. பாராட்டத்தக்க உறிஞ்சுதல் திறனுடன், வெப்பத்தை மூழ்கடித்து, கோடை காலத்தில் அணியும் பொழுது குளிர்ச்சி தரக்கூடிய மூங்கில் இழைகளால் ஆன புடவைகள், பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலையும் கொண்டவையாக இருப்பதால் இவை புதிய யுகத்தின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த மூங்கில் நார்களும் பட்டு நூல்களைப் போலவே மென்மையாக இருப்பதால் அவை இரண்டையும் இணைத்து மூங்கில் பட்டுப் புடவைகளை உருவாக்குகிறார்கள். பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் கைகளினால் அச்சிடப்பட்டு வருகிறது இந்த மூங்கில் புடவைகள். பாரம்பரிய அச்சிடு மற்றும் சிறந்த ஜரி அலங்காரங்களுடன் வரும் மூங்கில் புடவைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் அணியக் கூடிய சிறந்த தேர்வாகும். கனமான பார்டர்கள் மற்றும் விரிவான புட்டாக்களுடன் வரும் மூங்கில் பட்டுப்புடவையை நீங்கள் அணியும் பொழுது அவை உங்கள் பெண்மைக்கு ஒரு தனித்துவமான பிரமாண்டத்தைக் கொடுக்கும்.
கற்றாழை நார் புடவைகள்
மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் மட்டுமே பயன்பட்டு வந்த கற்றாழையானது இப்பொழுது வண்ணப் புடவைத் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளன. நூல்களின் விலையேற்றத்தால் அவற்றிற்கு மாற்றாக வந்த கற்றாழை நார்ச் சேலைகளுக்கு இப்பொழுது மக்களிடையே ஏக வரவேற்பு இருப்பதினால் அதன் தேவை மிக அதிக அளவில் இருக்கின்றது. பச்சையாக இருக்கும் நார்களை மொத்த விலைக் கடைகளிலிருந்து வாங்கி வந்து அவற்றை எளிமையான பிளீச்சிங் மூலம் சுத்தம் செய்து அதிலிருக்கும் கொழுப்புகளை அகற்றி பிறகு மென்மையான முறையில் ஒற்றை ஒற்றை நார்களாக பிரித்தெடுத்து பின்பு அந்த நார்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.
கற்றாழை நார்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எழிலான புடவைகளின் விலையானது பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் புடவைகளின் விலையை விடக் குறைவாகவே உள்ளது. மேலும் இதுபோன்று இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்களின் நார்களினால் உருவாக்கப்படும் இவ்வகைச் சேலைகளினால் சுற்றுச் சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. இவை ஆர்கானிக் புடவைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் புடவைகள் என்று பெயர் பெற்ற சணல், வாழைநார், மூங்கில், காட்டுபட்டு மற்றும் கற்றாழை நார் கொண்டு நெசவாளர்களின் புத்திசாலித்தனமான கைவினைத் திறனைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படும் இவ்வகை சேலைகள் செயற்கை இழைகளால் தயாரிக்கப்படும் புடவைகளைக் காட்டிலும் நீண்ட ஆயுளைக் கொண்டவையாக அறியப்படுகிறது.
Average Rating