சினைப்பை, கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்!! (மருத்துவம்)

Read Time:18 Minute, 45 Second

பெண்களுக்கு தாய்மை என்னும் புனிதமான பேறை பெற்றுத்தரும் ஒரு மகத்தான மற்றும் பெண்களுக்கே உரிய உறுப்பு கர்ப்பப்பை. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கர்ப்பப்பையை உரிய வழிமுறைகளோடு பேணி பாதுகாப்பாக பராமரிக்க தவறுவோமேயானால் கட்டிகளில் தொடங்கி புற்றுநோய் வரையிலான பல உபாதைகள் வர அதுவே வாய்ப்பாக அமைந்துவிடும். கர்ப்பப்பையில் வரக்கூடிய நோய்களுள் அதிமுக்கியமானது கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் மற்றும் சினைப்பை புற்றுநோய்கள்.

21 ஆம் நூற்றாண்டில் கடுமையாகப் பரவி வரும் மிகக் கொடிய சவால்களில் ஒன்றான புற்றுநோய், இப்போது உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலகின் மிக ஆபத்தான கொலைபாதக நோயாக மாறியுள்ளது. புற்றுநோயானது நவீனமயமாக்கலின் காரணமாகவும் கலப்பட உணவு, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் அழுத்தமான மனோநிலையின் காரணமாக
வருகிறது என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது.

இந்தியாவில் ஆண்டுக்கு ஏறக்குறைய பத்து லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் அச்சமூட்டுகிறது. அதிலும், பெண்களில் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் சினைப்பை புற்றுநோய் வேகமாக தாக்கி வருவதாகவும் இந்த புள்ளிவிவரங்கள் அஞ்சவைக்கின்றன. மேலும் இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் பத்து பெண்கள் இத்தகைய புற்றுநோய்களால் இறக்கிறார்கள் என்ற திடுக்கிடும் தகவல் நாம் எந்த அளவு இந்நோயைபற்றி விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று உணர்த்துகின்றன. மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளின் இனப்பெருக்க அமைப்பின் முக்கியமான பெண்பாலின உறுப்பு கர்ப்பப்பை ஆகும்.

கர்ப்ப காலத்தில் கருவானது கர்ப்பப்பையில் உருவாகிறது. கர்ப்பப்பையைப் பாதிக்கும் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உள்ளன. பெண்களை அதிகப்படியாக பாதிக்கும் புற்றுநோய்களில் மிகவும் பொதுவான எண்டோமெட்ரியல் புற்றுநோய் நான்காவதாக உள்ளது. கர்ப்பப்பை வாய் (Cervix) என்பது கர்ப்பப்பையின் கீழ்ப் பகுதியில், பிறப்புறுப்புடன் (வெஜைனாவுடன்) இணையும் இடத்தை குறிக்கிறது, இந்த இடத்தில் வரக்கூடிய புற்றுநோயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்று அழைக்கின்றோம்.

சினைப்பை என்பது கருமுட்டையை உருவாக்கும் பெண் இனப்பெருக்க அமைப்பில் காணப்படும் ஒரு உறுப்பு ஆகும். கர்ப்பப்பையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு சினைப்பை உள்ளது. சினைப்பைகள் மாதவிடாய் சுழற்சி மற்றும் கருவுறுதல் ஆகியவற்றில் பங்கு வகிக்கும் ஹார்மோன்களையும் சுரக்கின்றன. பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில் 2.5 சதவீதம் சினைப்பை புற்று நோய் ஆகும். சுமார் 80 பெண்களில் ஒருவருக்கு சினைப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், பாதிப்புடைய 110 பெண்களில் ஒருவர் இறக்கும் ஆபத்தில் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இத்தகைய கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் மற்றும் சினைப்பையில் ஏற்படும் புற்றுநோய்களானது எளிதில் மற்ற பகுதிகளுக்கும் பரவவும் வாய்ப்பு உள்ளது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மற்றும் ரத்தத்தின் மூலம் நுரையீரல், மூளை, கல்லீரல், எலும்புகளுக்கும் பரவலாம். பெண்களின் இனப்பெருக்க சுரப்புகளில் தோன்றும் இந்த புற்றுநோய் குறித்த அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை முறைகள் குறித்து அவசியம் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய விழிப்புணர்வு முழுமையாக இருந்தாலே புற்று நோய் தாக்கப்பட்டால் ஆரம்ப
கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது எளிதாக இருக்கும்.அனைத்து பெண்களுக்கும் கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் மற்றும் சினைப்பை புற்றுநோயின் அபாயம் உள்ளது என்பதை நாம் உணரவேண்டும், ஆனால் வயதுக்கு ஏற்ப ஆபத்து அதிகரிக்கிறது. பெரும்பாலான இந்த புற்றுநோய்கள் மாதவிடாய் நின்ற பெண்களிலேயே அதிகமாக காணப்படுகின்றன.

சினைப்பை, கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பைவாய் புற்று நோயிற்கான காரணங்கள்:

1. அசாதாரண எண்டோ மெட்ரியல் திசுவளர்ச்சி

அளவிற்கு அதிகமான எண்டோமெட்ரியல் (கர்ப்பப்பையின் உட்புற) திசுக்கள் வளர்வதால் கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புண்டு. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் நிறைவிற்கு (Menopause) பின்கூட ரத்தப்போக்கு ஆகியவை காணப்படும்.

2. உடல் பருமன்

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதால் புற்றுநோய் வர வாய்ப்புண்டு.

3. வயதிற்கு முன்னரே பருவம் எய்தல்

12 வயதிற்கு முன்னரே பருவம் எய்தியவர்களுக்கும், 55 வயதிற்கு பின்னரும் மாதவிடாய் ஏற்படுபவர்களுக்கும் மேலும் பிரசவிக்காத பெண்களுக்கும் பிற்காலங்களில் கர்ப்பப்பை புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது. அதிக வயதுக்கு பிறகு குழந்தைப்பேறு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும் கூட இந்த புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

4. ஈஸ்ட்ரோஜன் பயன்பாடு

ஹார்மோன் தெரபி எனப்படும் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது ஈஸ்ட்ரோஜன் மட்டும் எடுத்துக் கொள்பவர்களுக்கும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

5. சில மருந்துகள்

மார்பகப் புற்றுநோய்க்கு வழங்கப்படும் டாமாக்ஸிபென் என்னும் மருந்தானது ஈஸ்ட்ரோஜனை போன்று செயல்படுவதால் அதிக அளவில் பயன்படுத்தும் பொழுது கர்ப்பப்பை புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

6. நோய்த் தொற்று

சில நோய்த்தொற்றுகள் கூட புற்றுநோய் வர காரணமாக அமைகின்றன. அதில் குறிப்பாக தாம்பத்தியத்தின்போது பரவும் ஹெச்.பி.வி வைரஸின் (HPV – Human Papilloma Virus) நோய்த்தொற்று 90 சதவீதமான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உருவாவதற்கு முக்கியமான காரணியாக விளங்குகிறது.

7. கதிரியக்க சிகிச்சை

பெண்களின் இடுப்புப் பகுதியானது கதிரியக்க சிகிச்சை அல்லது எக்ஸ்-ரே ஸ்கேன் முதலிய கதிரியக்க பரிசோதனைகளுக்கு அடிக்கடி உட்படுவதாலும் புற்றுநோய் ஏற்படலாம்.

8. பரம்பரை மற்றும் மரபியல்

தாய்க்கு புற்றுநோய் இருப்பின் வாரிசுகளாக பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படலாம். சில மரபியல் மாற்றங்களாலும் புற்றுநோய்கள் வரலாம்.

9. சர்க்கரை நோயாளிகளுக்கு…

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருவாகலாம்.

10. ஹார்மோன்களின் மாறுபாடு…

முந்தைய கர்ப்பப்பைக்கட்டிகள் அல்லது பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோமால் (PCOD) பாதிக்கப்பட்டவர்களில் ஹார்மோன்களின் மாறுபாடு ஏற்படுவதால் புற்றுநோய் உருவாக வாய்ப்புள்ளது.
சினைப்பை, கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆரம்பத்தில் அறிகுறிகள் தென்படுவதில்லை. வழக்கத்திற்கு மாறான பிறப்புறுப்பு ரத்தப்போக்கு என்பது கர்ப்பப்பை புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறியாகும், குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு (Menopause) ஏற்படும் ரத்தப்போக்கு. தாம்பத்திய சேர்க்கையின் போது பெண்ணுறுப்பிலிருந்து ரத்தம் வெளியேறுதல் கர்ப்பப்பைவாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

பிற பொதுவான அறிகுறிகள்

1)ஒழுங்கற்ற ரத்தப்போக்கு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடையில் அடிக்கடி ரத்தம் வெளிப்படுதல் அல்லது இடைவெளி இல்லாமல் தொடரும் ரத்தப்போக்கு.

2) வெள்ளைப்படுதல் பிரச்சனை அதிகமாக இருத்தல், சில நேரங்களில் துர்நாற்றத்துடனும், சிலநேரங்களில் சிறிது ரத்தத்துடனும் வெளிவரலாம். மாதவிடாய் நிறைவுக்கு (Menopause) பின் வெள்ளைப்படுதல்.

3) அடிவயிறு, இடுப்பு, தொடைப் பகுதியில் பொதுவான வலி.

பிற இதர அறிகுறிகள்

1) சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் சிரமம்
2) விவரிக்க முடியாத எடை இழப்பு
3) வயிறு உப்புசமாக உணர்தல், மலச்
சிக்கல், உடற்சோர்வு, பசியின்மை.

இந்த அறிகுறிகள் மற்ற காரணங்களால் ஏற்படலாம் என்றாலும், தக்க மருத்துவரை அணுகி சரிபார்த்துக்கொள்வது நல்லது.

சிகிச்சை

ஆயுர்வேதம் என்பது இந்திய துணைக் கண்டத்தில் வரலாற்று வேர்களைக் கொண்ட வாழ்க்கை அறிவியல் ஆகும். இது இயற்கையான மருந்துகளைப் பயன்படுத்தி பல்வேறு கட்டிகளைத் தடுப்பதற்கும், அடக்குவதற்கும் பல நூறு வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது நாம் அறிந்த உண்மையே. மேலும் தற்கால விஞ்ஞானிகள் புற்றுநோயை நிர்வகிப்பதற்கான மாற்று மருத்துவம் பற்றிய ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மும்பையில் உள்ள புகழ்பெற்ற டாடா மெமோரியல் மருத்துவமனை தனது புற்றுநோய் ஆராய்ச்சியில் ஆயுர்வேத மருந்துகளை கொடுத்து அதன் பலன்களை பரிசோதித்துக்கொண்டு வருகிறது என்ற செய்தியிலிருந்தே ஆயுர்வேதம் இன்றைய காலகட்டத்திலும் கூட மிகச்சிறப்பாக சிகிச்சைப்பலன் அளிக்கிறது என்பதை நாம் உணரலாம்.

‘சரக சம்ஹிதை’ மற்றும் ‘சுஷ்ருத சம்ஹிதை’ ஆகிய பழங்கால ஆயுர்வேத கிரந்தங்களில் புற்றுநோயானது ‘கிரந்தி’ (சிறிய கட்டிகள்) அல்லது ‘அர்புதம்’ (பெரிய கட்டிகள்) என்ற தலைப்புகளில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. முக்குற்றங்கள், எழு உடற்கட்டுகள் (திசுக்கள்) மற்றும் மனோ குணங்கள் ஆகியவற்றின் நீண்டகால ஏற்றத்தாழ்வு நிலைகளே ‘கிரந்தி’ மற்றும் ‘அர்புதம்’ ஆகிய நோய்களுக்கு வழிவகுக்கின்றன என்று ஆயுர்வேதம் வரையறுக்கிறது.

புற்றுநோய்க்கான மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு, ஆயுர்வேதத்தில் எந்தவிதமான தீவிரமான, உடலை வறுத்தக்கூடிய செயலாக்கங்களும் இல்லை. ஆயுர்வேதம் உடலின் சுய-குணப்படுத்தும் திறன்களைத் தூண்டுகிறது மேலும் உடல் திசுக்களை சுத்தப்படுத்தவும் ஆதரிக்கவும் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் புற்றுநோயின் வளர்ச்சியை தாமதப்படுத்தவும் உதவுகின்றது. எல்லா சிகிச்சைகளும் திரிதோஷத்தையும் திரிகுணத்தையும் சமநிலைப்படுத்துவதிலேயே சுழல்கின்றன.

எந்த நிலையில் புற்றுநோய் கண்டறியப்பட்டாலும் கூட, ஆயுர்வேதம் மூலம் விரிவான சிகிச்சை உத்திகள் திட்டமிட முடியும். கீமோதெரபி அல்லது கதிரியக்க சிகிச்சையின் போதுகூட, ஆயுர்வேதம், அந்த சிகிச்சைகளின் பக்கவிளைவுகளைக் குறைக்க உதவுவதோடு, உடலை மீட்டெடுப்பதிலும் உதவுகிறது.

சிகிச்சை

கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய்களுக்கு ‘குல்ம சிகிச்சை’, ‘வாதானுலோமன சிகிச்சை’ செய்ய நல்ல பலன் தரும். மேலும் கர்ப்பப்பை மற்றும் பிறப்புறுப்பில் சில சிகிச்சைகள் செய்ய நோய் நன்றாகக் கட்டுப்படும். அவை,

A) யோனிபிச்சு: (மருந்து கலந்த எண்ணெய் அல்லது நெய்யில் தோய்த்து பெண் பிறப்புறுப்பின் பின்பகுதியில் வைக்கப்படும் பஞ்சு) குடுச்யாதி தைலம், ஜாத்யாதி தைலம், உதும்பராதி தைலம், சைந்தவாதி தைலம் போன்ற தைலங்களுடன் யோனிபிச்சு செய்யலாம்.

B) யோனிவர்த்தி: (பெண் பிறப்புறுப்பில் (சபோசிடரி) மருந்தை வர்த்திவாக உள்நோக்கி வைத்தல்) ஆர்க்காதி வர்த்தி, பிப்பல்யாதி வர்த்தி, நிம்பாதி வர்த்தி, பலாஷாதி வர்த்தி மூலம் யோனிவர்த்தி சிகிச்சை செய்யலாம்.

C) யோனி பிரக்‌ஷாலனம் (பெண் பிறப்புறுப்பு பகுதியைக் கழுவுதல்) நயக்ரோதாதி, கதிராதி, தசமூலம், திரிபலா, பஞ்சவல்கலம்,புஷ்யானுகச்சுர்ணம் ஆகியவற்றால் செய்யப்பட்ட கசாயத்தைக்கொண்டு பிரக் ஷாலனம் செய்யலாம்.

D) கர்ப்பப்பை உத்தர வஸ்தி: ஜீவனியத்ரவ்ய தைலம், குடஜபாலை நெய், பஞ்சவல்கல கஷாயம், குடுச்சியாதி கஷாயம் போன்றவற்றுடன் உத்தர வஸ்தி செய்யலாம்.

E) யோனி பூரணம்: மருந்துப் பசையுடன் பசுநெய், பிருகத் சதாவரி நெய், திரிபாலாதி நெய், ஆடாதொடா நெய் சேர்த்து பிறப்புறுப்பை பேக்கிங் செய்யலாம்.

உள் மருந்துகள்

மேலும் உள்மருந்துகளாக கசாய மருந்துகளான சுகுமார கசாயம், திக்தக கசாயம், திராயந்தியாதி கசாயம், ந்யக்ரோத கசாயம், பத்ராதி கசாயம் நோய் அறிகுறிகளுக்கேற்ப தான்வந்தர குளிகை, சிவ குளிகை, சந்திர பிரபா வடி போன்ற மாத்திரைகளுடன் பயன்படுத்தலாம். சுகுமார லேகியம், கல்யாண குலம் புஷ்யானுக சூரணம் போன்ற மருந்துகளை நோய்த்தன்மைக்கேற்ப பயன்படுத்தலாம்.

சினைப்பை புற்றுநோய்களில் சப்தசார கசாயம், சித்ரக கிரந்தியாதி கசாயம், புனர்னவாதி கசாயம், வரனாதி கசாயம் கொடுக்க நல்ல பலன் தரும். சிவ குளிகை, சட்தரண குளிகை, திரிபலா குக்குலு, அம்ருதா குக்குலு, காஞ்சனார குக்குலு முதலிய மாத்திரைகளை பயன்படுத்தலாம். சிவதை சூரணம், குக்குலு பஞ்சபல சூரணம், புஷ்யானுக சூரணம் போன்ற மருந்துகளை நோய்த்தன்மைக்கேற்ப பயன்படுத்தலாம். உடற்சோர்வு இருப்பின் குமாரியாசவம், உசிராசவம் கொடுக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசை ஆசையாய் வீடு கட்டலாம்!! (மகளிர் பக்கம்)
Next post வயிற்று கடுப்பை குணப்படுத்தும் மாதுளை!! (மருத்துவம்)