ஆசை ஆசையாய் வீடு கட்டலாம்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 28 Second

தனி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு எதுவாக இருந்தாலும் அதனை உள்ளலங்காரம் செய்யவே அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் இன்டீரியர் டிசைன் என்றால் அதற்கு பெரிய தொகையை தனியாக வைக்க வேண்டும். அந்த பட்ஜெட்டினை சாதாரண நடுத்தர மக்களால் செலவு செய்ய முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ‘‘ஏன் முடியாது. இவர்களின் பட்ஜெட்டில் அடங்கும் விதத்தில் அழகாக இன்டீரியர் செய்து தர முடியும்’’ என்கிறார் கீதா ரமணன்.

2006ம் ஆண்டு கட்டிடக்கலையினை முடித்தவர். கல்லூரியின் இறுதியாண்டு படிக்கும் போதே தன் நண்பர் ஷேசானுடன் இணைந்து கட்டிடக்கலை நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். பத்து வருடமாக மிகவும் சக்சஸாக நிர்வகித்து வந்தவர்கள், 2015ம் ஆண்டு ‘டிசைன் கெஃபே’ என்ற நிறுவனத்தை நடுத்தரவர்க்க மக்களுக்காகவே துவங்கியுள்ளனர்.

‘‘கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு வெளிநாட்டில், மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவில் தான் நான் இருந்தேன். ஆனால் இறுதியாண்டில் கட்டிடக்கலை தொடர்பாக ஒரு போட்டியில் நாங்க இருவரும் பங்கு பெற்றோம். அதுவே ஒரு நிறுவனமாக மாறி இயக்க ஆரம்பித்தோம். பத்து ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டித்தந்தது மட்டுமில்லாமல் இன்டீரியர் வேலைப்பாடுகளும் செய்து கொடுத்திருக்கோம். இவை எல்லாமே கொஞ்சம் பட்ஜெட் அதிகமான வீடுகள் தான்.

ஆனால் ஒரு கட்டத்தில் நடுத்தர மக்களுக்கும் எங்களின் சேவையினை வழங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நானும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள் தான். எனக்கு நல்லா நினைவு இருக்கு. அம்மா வீடு கட்டும் போது எங்களைப் போல் கட்டிடக்கலை நிறுவனத்தை அவங்க நாடவில்லை. மேஸ்தரி தான் வீடு கட்டிக் கொடுத்தார். கார்பெண்டர் தான் எங்க வீட்டிற்கான அனைத்து மரவேலைப்பாடுகளையும் பார்த்தார். அந்த நிகழ்வு தான் எங்களின் எண்ணங்களை மாற்றியதுன்னு சொல்லலாம்.

அதனால் பத்து வருடமாக கட்டிக் காத்த கட்டிடக்கலை நிறுவனத்தை மூடிவிட்டு, 2015ம் ஆண்டு இந்த நிறுவனத்தை துவங்கினோம். பொதுவாக இன்டீரியருக்கு மட்டும் ஒரு கோடி பட்ஜெட்ன்னு நினைக்கிறவங்க டிசைனர்களை நாடுவார்கள். மூன்று லட்சம் தான் எங்களின் பட்ஜெட்டே அதற்குள் எப்படி இன்டீரியர் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு நாங்க பதிலாக இருக்க நினைத்தோம். எங்களின் டார்கெட் இவங்க மட்டும் தான்’’ என்றவர் தங்களின் செயல்பாடு குறித்து விவரித்தார்.

‘‘எங்க நிறுவனத்தில் 250க்கும் மேற்பட்ட டிசைனர்கள் இருக்காங்க. அவங்களின் வேலையே ஒரு வீட்டை வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப எப்படி வடிவமைத்து தரவேண்டும் என்பது தான். ஒருவர் தங்களின் வீட்டை உள்ளலங்காரம் செய்ய வேண்டும் என்றால் முதலில் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அதன் பிறகு அவர்களின் வீட்டின் அமைப்பு குறித்து தெரிந்து கொள்வோம். ஒரு வீட்டினை நுழைவாயில் முதல் சமையல் அறை, படுக்கையறை, குழந்தைகளின் அறை, பாத்ரூம் என அனைத்து அறைகளுக்கான பலவித அமைப்புகளை நாங்க டிஜிட்டல் முறையில் பதிவு செய்திருக்கிறோம்.

உதாரணத்திற்கு ஒரு அலமாரி அமைக்கும் போது அதில் மூன்று முக்கிய விஷயங்கள் இருக்கணும். துணிகளை மாட்ட ஹேங்கர், துணிகளை அடுக்கி வைக்க இடம் மற்றும் லாக்கர் அமைப்பு. இதனை நாம் எப்படி வேண்டும் என்றாலும் மாற்றி அமைக்கலாம். அதாவது கணவன்-மனைவி இருக்கும் அறை என்றால், அவர்கள் பயன்படுத்தும் உடைகளுக்கு ஏற்ப இடத்தை ஏற்படுத்தி தரலாம். அதேபோல் ஒவ்வொரு அறைக்கான பலதரப்பட்ட டிசைன்கள் நாங்க ஏற்கனவே வடிவமைத்திருக்கிறோம். அதில் உள்ள டிசைன்களை வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். இரண்டு மூன்று டிசைன்களையும் ஒருங்கிணைத்து வடிவமைத்து தருகிறோம்.

பொதுவாகவே இப்போது எல்லாரும் வீட்டில் நிறைய பொருட்களை அடைக்க விரும்புவதில்லை. அதே சமயம் வீட்டில் இருக்கும் அனைத்து இடங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்காகவே பல டிசைன்களை அமைத்திருக்கிறோம். மூன்று அறை வீட்டில் பெற்றோர்கள் மற்றும் ஒரு குழந்தை என்றால், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அறை மற்றும் ஒரு அறையினை அவர்கள் படிக்கும் அறையாக மாற்றி அமைத்திருப்பார்கள். ஆனால் பத்து நாட்கள் மட்டும் விருந்தாளி வரும் போது அவர்களுக்கு ஒரு அறையினை ஒதுக்கிக் கொடுப்போம். பத்து நாட்கள் வந்து தங்குபவர்களுக்கு ஒரு கட்டிலைப் போட்டு அந்த அறையினை அடைக்க வேண்டும் என்ற அவசியம் இல்ைல.

அதற்கு பதில், ஸ்லைடிங் கட்டில் அமைக்கலாம். இதனை வேண்டும் போது விரித்துக் கொள்ளலாம். தேவையில்லாத போது சுவற்றோடு பொருத்திவிடலாம். இதேபோல் வீட்டு சுவற்றின் கீழ்ப் பகுதியில் ஒரு சிறிய டைல்ஸினை பட்டி போல் போட்டு இருப்போம். அந்த இடத்தையும் சின்ன கப்போர்டாக மாற்றி அமைக்கலாம். தனி வீட்டில் முதல் மாடிக்கு செல்ல வீட்டிற்குள் படிக்கட்டுகள் இருக்கும். அந்த படிக்கட்டின் கீழ் உள்ள இடத்தையும் நம் விருப்பம் போல் அமைக்கலாம். இப்படி பல டிசைன்கள் மற்றும் சிந்தனையுடன் தான் ஒவ்வொரு வீட்டையும் நாங்க வடிவமைத்து தருகிறோம். அதுமட்டுமில்லாமல் வீட்டின் சுவர் அலங்காரம் மற்றும் கர்டெயின்கள், சுவர் வண்ணங்கள் அனைத்திற்கான ஆலோசனை வழங்கி வருகிறோம்.

கடைசியாக வாடிக்கையாளர்கள் தங்களின் வீட்டின் அமைப்பினை தேர்வு செய்த பிறகு அவர்கள் வீடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே வர்சுவல் முறையில் பார்க்கலாம். அப்போதும் ஏதாவது மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைத்தாலும் மாற்றங்கள் செய்து கொள்ள முடியும். காரணம் கட்டில், அலமாரி மற்றும் மாடுலர் கிச்சன் என அனைத்து அமைப்புகளும் செய்ய எங்களுக்கென தனிப்பட்ட தொழிற்சாலை உள்ளதால், ஒவ்வாரு பர்னிச்சர்களுக்கும் தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

எங்களைப் பொறுத்தவரை ஒரு பெரிய பிராஜெக்ட் செய்வதைவிட இது போன்ற சின்னச் சின்ன பிராஜெக்ட்கள் பத்து செய்தாலும் மனசுக்கு நிறைவாக இருக்க வேண்டும். தற்போது பெங்களூர், மும்பை, சென்னை, ஹைதராபாத், தானே மற்றும் பூனாவில் எங்களின் நிறுவனம் இயங்கி வருகிறது. இதனை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது’’ என்றார் கீதா ரமணன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்தில் மிடில்கிளாஸ் கனவை நிறைவேற்றுகிறோம்!! (மகளிர் பக்கம்)
Next post சினைப்பை, கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்!! (மருத்துவம்)