மூன்று திறன்களை ஒருங்கிணைக்கும் புதிர் விளையாட்டு!! (மகளிர் பக்கம்)
டிஜிட்டல் யுகத்தில் இந்த தலை முறையினர் தங்கள் விளையாட்டுகளையும் டிஜிட்டலுடனே தொடர்பு கொண்டுள்ளனர். ‘ஓடி விளையாடு பாப்பா…’ என்ற பாரதியின் பாடல் வரிக்கேற்ப குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் ஓடி விளையாடிய காலம் போய் தற்போது வீட்டில் செல்போனை கையில் வைத்துக் கொண்டு அதனுடனே முடங்கி உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விளைவு டிவி, செல்போன், வலைத்தளங்கள் என நம்மை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து விட்டது. விளையாட்டுகளுக்கு கூட நிறைய ‘ஆப்கள்’ வந்துவிட்டது. இதனால் இருக்கும் இடத்திலேயே விளையாடுவதால் எந்த ஒரு ஆரோக்கியமான செயல்பாடுகளும் இன்றி அதிலே மூழ்கும் நிலைக்கு அடிமையாகியுள்ளோம். இதற்கு பெரியவர்களும் விதி
விலக்கல்ல.
இது போன்றொரு சூழலில் மக்களை மீண்டும் நேரடி விளையாட்டிற்குள் அழைத்து செல்கிறார்கள் சென்னையை சேர்ந்த செந்தில் – சுபத்ரா தம்பதியினர். வெறும் விளையாட்டோடு மட்டுமின்றி யோசிக்கவும், ஒரு தியான நிலைக்கு மனதை கொண்டு சென்று ஆசுவாசப்படுத்தவும் அமைந்திருக்கிறது இவர்களின் புதிர் வீடு. இடம் முழுக்க ஆங்காங்கே புதிர்கள் மட்டுமில்லாமல் விளையாட்டுகளும் இங்கு கொட்டிக்கிடக்கின்றன.
‘‘நானும் என் மனைவி சுபத்ரா இருவரும் இணைந்து தான் இவ்விளையாட்டுகளுக்கான சூழலை ஆரம்பித்தோம். எம்.பி.ஏ படிப்பை முடித்து வங்கித் துறையில் 12 வருட அனுபவம். சுபத்ரா இஞ்சினியரிங் முடிச்சிட்டு ஒரு வருடம் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின் சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து கடந்த 11 ஆண்டுகளாக வீட்டிலேயே கேக்-சாக்லெட் போன்ற பேக்கரி உணவுகளை செய்து விற்பனை செய்ய ஆரம்பிச்சாங்க. விரும்பி கேட்பவர்களுக்கு ஆர்டரின் பேரில் செய்து கொடுத்து வருகிறோம். இப்படியே போய்க் கொண்டிருந்த போது எனக்கும் ஒரே இடத்தில் வேலை செய்தது கொஞ்சம் அலுப்பு தட்டியது.
காலையில் கிளம்பி போறோம்… அங்கு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை மறுபடியும் மாலை வீடு… இப்படியே ஒரு இயந்திரம் போல் வாழ்க்கை நகர்ந்தது. இது எனக்குள் அவ்வளவு தானா வாழ்க்கை? என்ற கேள்வியினை எழுப்பியது. அந்த சமயத்தில் வேறெதாவது சொந்தமாக தொடங்கலாமா என்று நானும், சுபத்ராவும் ஆலோசித்தோம். இந்தியாவிலேயே இல்லாதது… புதிதாக இருக்க வேண்டும்.
அதே சமயத்தில் அதில் பங்கேற்கும் மக்களும், அந்த நேரத்தில் போன் போன்ற எந்த ஒரு சாதனத்தை தொடாமலும், தன் முழு கவனம் முழுவதும் அதில் மட்டுமே செலுத்த வேண்டும். இதனால் நமக்கு மட்டும் லாபம் இல்லாமல் இங்கு வந்து செல்பவர்களுக்கும் ஏதாவது பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை முதன்மையாக வைத்து என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசித்தோம். அதோடு குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெற்றோர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினருக்குமானதாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தோம். அப்படி எங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதாக இருந்தது புதிர் விளையாட்டுகள்.
இதைத்தான் கொடுக்கப்போகிறோம் என்று முடிவு செய்தாச்சு. ஆனால் எப்படி கொடுக்கலாம்னு திட்டமிட ஆரம்பிச்சோம். புதிர் விளையாட்டுகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு அதைப் பற்றி தெரிந்த நபர்களை அணுகினோம். அவர்களின் ஆலோசனைப்படி 800-900 புதிர் விளையாட்டுகள் மற்றும் வீட்டிற்குள் விளையாடக்கூடிய பரமபதம், தாயம் போன்ற 200-க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களை சேகரித்தோம்” என்ற செந்திலை தொடர்ந்து சுபத்ரா பேச ஆரம்பித்தார்.
‘‘கையில் விளையாட்டுகள் இருக்கு. அதற்கான அரங்கினை அமைத்தோம். நண்பர்கள், உறவினர்கள் மூலமாக இது குறித்து பலருக்கு தெரிய வந்தது. ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல வரவேற்பும் இருந்தது. அப்போது தான் பீச், மால், சினிமா, செல்போன்களை தாண்டி மக்களுக்கு போதாமை இன்னும் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டோம்.
ஆரம்பத்தில் புதிர் விளையாட்டு என்பதால், அது குழந்தைக்கானது என்று பெற்றோர்கள் நினைத்தார்களோ என்னவோ. குழந்தைகளை மட்டும் இங்கு விட்டு செல்வார்கள். அதன் பிறகு அவர்களும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்கள். பெற்றோர்கள் மட்டுமில்லாமல் தாத்தா, பாட்டியையும் குழந்தைகள் அழைத்து வர ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள், பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர் என மூன்று தலைமுறையினரும் விளையாட வர ஆரம்பித்தார்கள்.
அவ்வாறு வரும் குழந்தைகள் குறைந்த பட்சம் இரண்டு மணிநேரமாவது விளையாடுவார்கள். ‘வீட்டுக்கு போகலாமா’ன்னு பெற்றோர்கள் அழைத்தாலும் கூட வர மறுத்து விளையாட்டை தொடர்வார்கள். இங்கு வரும் பெற்றோர்களும் ‘இந்த விளையாட்டுகள் போல் ஏதும் குழந்தைகளை என்கேஜ்டாக வைத்திருக்க முடியாது’ என்பது உணர்வதை எங்களோடு பகிர்வார்கள். இதை அவர்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்களிடம் சொல்லி அடுத்து வரும் போது அவர்களையும் அழைத்து வருவார்கள்.
இங்கு வரும் குழந்தைகள் மட்டுமில்லாமல் விளையாடும் எந்த ஒரு நபரும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு ஒரு விஷயத்தின் மேல் எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் மேம்படுத்துகிறது. சிலருக்கு தியானம் செய்வது கஷ்டமாக இருக்கலாம். ஆனால், இந்த புதிர் விளையாட்டு அவர்களுக்கே தெரியாமல் தியானமாக மாறுகிறது. வெளி உலகத்தை மறந்து அவர்களுக்கான நேரமாக இவ்விளையாட்டு அமைத்துக் கொடுக்கிறது. ஒன்றிலிருந்து ஒன்று சேர்ப்பது, எப்படி வேகமாக செய்வது, நிதானம் எந்த இடத்தில் தேவை என வாழ்க்கைக்கான பாடத்தினையும் மறைமுகமாக கற்கிறார்கள். இந்த மாதிரியான ஓர் அனுபவம் நகரத்தில் எங்கேயுமே இல்லை.
எங்கள் இடத்தில் வந்தும் புதிர் விளையாட்டினை விளையாடலாம்… அல்லது வாங்கி சென்று வீட்டிலும் விளையாடலாம். சிலர் பாதி மட்டுமே முடித்திருப்பார்கள். அவர்களை அதை அப்படியே எடுத்து வைத்து அடுத்த முறை வரும் போது சேர்க்கலாம்.” என்கிறார் சுபத்ரா. இதையே ஆமோதித்து பேசத் தொடங்கிய செந்தில், “விளையாட்டு என்பது மகிழ்விக்கவே. அதே நேரத்தில் யோசித்து விளையாடுவதற்கும் சில விளையாட்டுகள் இருக்கின்றன. ஆனால் ஒரே நேரத்தில் யோசித்து, மகிழ்ச்சியாக விளையாட வைப்பது இது போன்ற விளையாட்டுக்கள் தான் என்று நாங்க உறுதியாக நம்புகிறோம்.
இதையே குழந்தைகள் போன் ஆப் மூலமாக விளையாடுகிறார்கள். அங்கும் தானே யோசிக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். அப்படி போனில் விளையாடும் போது ஒரு பஸிலை தொட்டு, கொஞ்சம் சரியாக அந்த இடம் நோக்கி நகற்றினாலே தானாக சேர்ந்து விடுகிறது. ஆனால், இங்கு அப்படி இல்லை… அதன் அளவு, கோணம் எல்லாம் சரியாக பார்த்து பொறுத்தும் போது தான் இணைக்க முடியும். பொதுவாக ஒரு விளையாட்டில் கை, கண், மூளை மூன்றும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு விளையாடும் போது அவர்களின் மோட்டார் ஸ்கில்ஸ், சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். கவனச் சிதறல் ஏற்படாது. ஆனால் செல்போனில் விளையாடும் போது மூன்றில் ஏதாவது ஒரு திறனை இழக்கிறார்கள்’’ என்றார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்திருக்கும் ‘UNTANGLE’ புதிர் வீட்டில் வாடிக்கையாளர்கள் 3,000 புதிர் விளையாட்டுகள் வரை அடுக்கியுள்ளனர். மூன்று வயது குழந்தை சேர்க்கும் 4 புதிர் துண்டுகளில் இருந்து 32,000 துண்டுகள் கொண்ட புதிர்கள் இங்குள்ளன. இதற்கான கட்டணமாக நபர் ஒருவருக்கு, ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 வாங்குகிறோம். நுழைவுக் கட்டணம் ரூ.200. அதில் 2 மணி நேரத்தில் எவ்வளவு பஸில்ஸ் வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம்.
குடும்பத்தோடு பேக்கேஜாகவும் எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் உண்டு. புதிர்களில் உள்ள சின்னச் சின்ன துண்டுகளை ஒன்றாக இணைத்து ஓர் உருவத்தை கொடுத்து நிறைவடைவது போல், தங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை மறந்து தனக்கான நேரத்தினை முழுமையாக செலவிடும் போது மனசுக்கு நிறைவாக இருக்கும். ‘‘மன நல மருத்துவர்களும் அவர்களின் நோயாளிகளை இங்கு அனுப்பி வைக்கிறார்கள். மனம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு, கஷ்டப்பட்டு மருந்து எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டாக மன அமைதி கொடுப்பதற்கான களமாகவும் எங்கள் அரங்கம் அமைந்திருக்கிறது என்று நினைக்கும் போது மனசுக்கு நிறைவாக உள்ளது” என்கின்றனர் செந்தில், சுபத்ரா தம்பதியினர்.
Average Rating