வாங்க ‘thrift’ செய்யலாம்!! (மகளிர் பக்கம்)
‘‘த்ரிஃப்ட் கிளப் தில்லி, மும்பையில் ரொம்ப ஃபேமஸ். சென்னையில் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது. இங்கு நான்தான் முறைப்படி ஒரு நிறுவனமாக பதிவு செய்து செயல்படுத்தி வருகிறேன்’’ என்கிறார் கோடம்பாக்கத்தை சேர்ந்த நட்சத்திரா மூர்த்தி.
தன் வீட்டு மொட்டை மாடியை அழகான ஸ்டுடியோவாக மாற்றி அமைத்திருக்கும் இவர் அதையே தன்னுடைய விற்பனை தளமாகவும் பயன்படுத்தி வருகிறார். த்ரிஃப்ட் என்றால்… என்ற கேள்விக்கு அழகான புன்னகையுடன் பேச ஆரம்பித்தார் நட்சத்திரா. த்ரிஃப்ட் கான்செஃப்ட் என்பது செகண்ட்ஹேண்ட் விற்பனை. கார், பைக், ஃபிரிட்ஜ் என வீட்டுக்குத் தேவையான பொருட்களை ஓ.எல்.எக்சில் விற்கிறோமே அதேபோல் தான் நாம் பயன்படுத்தாத உடைகளை மற்றவர்களுக்கு விற்பனை செய்வது. சின்ன வயசில் இருந்ேத எனக்கு ஃபேஷன் மேல் தனி ஈடுபாடு இருந்தது. படிக்கும் போது கூட புத்தகத்தின் ஓரத்தில் ஏதாவது வரைந்து கொண்டு இருப்பேன்.
அதன் பிறகு எலக்ட்ரானிக் மீடியா படிச்சேன். என்னவோ அது எனக்கு சரியா செட்டாகல. கேமரா, போட்டோகிராபி கற்றுக் கொள்ள தான் சேர்ந்தேன். அதைத் தாண்டி மற்ற பாடங்கள் இருந்ததால் பாதியிலேயே நிறுத்திட்டு டிப்ளமா இன் ஃபேஷன் குறித்து படிச்சேன். அதிலேயும் டிரஸ்சை ெவட்டி தைக்கிறது, அளவு எடுக்கிறது பிடிக்கல. அதில் இருந்தும் பாதியிலேயே வந்திட்டேன். அப்பதான் முடிவு செய்தேன். எனக்கு என்ன தேவையோ அதை மட்டும் தெரிந்து கொண்டு அது சார்ந்த தொழில் செய்ய வேண்டும்ன்னு. எல்லாத்தையும் விட்டுவிட்டு முழுக்க முழுக்க சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தேன். இரண்டு வருஷம் இதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். என்னை நிறைய பேர் பின்பற்ற ஆரம்பிச்சாங்க. நட்சத்திரா மூர்த்திக்கு சமூகவலைத்தளங்களில் ஒரு அடையாளம் கிடைச்சது. இது தான் சரியான நேரம்ன்னு வீடியோ ரீல்களில் இருந்து அடுத்த கட்டமாக ஸ்டைலிங் தளத்தில் குதித்தேன். இதற்கான ஃபோட்டோஷுட் செய்தேன். அதையும் இன்ஸ்டாவில் பதிவு செய்தேன்.
நான் தொடர்ந்து அதில் பதிவு செய்து வந்ததால், சில பிராண்ட் சார்ந்த நிறுவனங்கள் என்னை அணுகி அவர்களின் பொருட்களுக்கு என்னை இன்ஃபுளுவென்சரா இருக்க ெசான்னாங்க. அதாவது அவர்களின் பொருட்களை குறித்த பதிவை நான் இன்ஸ்டாவில் போடணும். இதன் மூலம் எனக்கு ஒரு வருமானம் கிடைக்கும். அதே சமயம் அவர்களுக்கும் ஒரு பிசினஸ் கிடைக்கும். இன்ஃபுளுவென்சரா நான் பார்க்கும் பிராண்ட்களை கூட ரொம்பவே கவனமா தேர்ந்தெடுப்பேன்.
முதலில் நான் பயன்படுத்திப் பார்ப்பேன். திருப்தி இருந்தா மட்டுமே பதிவு செய்வேன். இல்லைன்னா திருப்பி அனுப்பிடுவேன். நான் சரியான தீர்வு சொல்வதால் என் மேல் ஒரு நம்பிக்கைதன்மை ஏற்பட்டது. அப்பதான் என் மனதில் ஏற்கனவே இருந்த தொழிலை செயல்படுத்தலாம்ன்னு திட்டமிட்டேன். அந்த நேரத்தில் இரண்டாவது லாக்டவுன் போட்டாங்க. நிறைய பேர் வேலை போயிடுச்சுன்னு புலம்பினாங்க. வேலை இல்லைன்னா என்ன நமக்கான வேலையை நாமே தேடிக்கொள்ளலாமேன்னு ஒரு சவாலா எடுத்து இதில் சம்பாதிக்க ஆரம்பிச்சேன். முதலில் ஒரு பிசினஸ் செய்ய இருப்பதாகவும், அதற்கான தனி பக்கத்தினை அமைத்திருப்பதாகவும் தெரிவித்தேன்.
என்னைப் பின்பற்றியவர்கள் என்னுடைய தொழில் சார்ந்த ‘#thrift_club’ பக்கத்தினையும் பின்பற்ற ஆரம்பித்தார்கள். எனக்கு பத்தாத உடைகளை போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் விற்பனைக்கு பதிவு செய்தேன். இது போலியான தளம் இல்லை. நல்ல உடைகளைத்தான் கொடுக்கிறார்கள் என்று என்னை நம்ப ஆரம்பிச்சாங்க. அப்படித்தான் த்ரிஃப்ட் கிளப் உருவாச்சு. நான் செய்வதைப் பார்த்து என்னைப் பின்பற்றுபவர்களும் அவர்களிடம் இருக்கும் உடைகளை எல்லாம் தருவதாக சொன்னாங்க. அவங்களிடம் இருந்தும் உடைகளை
வாங்க ஆரம்பிச்சேன்.
நமக்கு பிடித்த உடைகள் நிறைய இருக்கும். ஆனால் அதை நாம் தொடர்ந்து போட மாட்டோம். அதிக பட்சம் மூன்று நான்கு முறை அணிந்திருப்போம். அதன் பிறகு வேறு புதிய டிரஸ் வாங்குவோம். அதை அணிவோம். இதனால் நமக்கு தெரியாமலேயே நல்ல நல்ல உடைகள் நம்முடைய அலமாரியில் ஒளிந்திருக்கும். அதை வீணாக்காமல் மற்றவர்களுக்கு குறைந்த விலையில் கொடுத்தால், அவர்களுக்கும் ஒரு நல்ல டிரஸ் அணிந்த திருப்தி கிடைக்கும். நாமும் வருமானம் பார்த்த மாதிரி இருக்கும். உடையைப் பொறுத்தவரை மற்றவர் அணிந்த உடையினை அணிய எல்லாரும் யோசிப்போம். அதே சமயம் அந்த உடை நல்ல நிலையில் இருந்தால், ஏன் அதை பயன்படுத்தக்கூடாது என்பது தான் என் எண்ணம்.
என் உடைகளை விற்பனை செய்வது மட்டுமில்லாமல், நானும் இது போல் பல உடைகளை வாங்கி இருக்கேன். இதில் கொடுப்பவருக்கும் லாபம் விற்பனை செய்யும் எனக்கும் லாபம். ஆமாம். இருவரும் அந்த உடைக்கான விலையினை சரிசமமாக பிரித்துக் கொள்வோம். இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம். உடைகள் தரமானதாக இருக்கணும். நிறம் மங்கி, அழுக்கான உடைகளை நான் வாங்க மாட்டேன். அவர்களிடம் வாங்கும் உடையினை நான் மறுபடியும் துவைத்து, இஸ்திரி போட்டு, டிஸ்இன்ஃபெக்ட் செய்த பிறகு தான் விற்பனையே ெசய்வேன். 700 ரூபாய்க்கு இருக்கும் ஒரு உடை ரூ.300க்கு கிடைத்தால் சந்தோஷம் தானே.
என்னுடைய உடைகள் எல்லமே பெரும்பாலும் ரூ.1000த்துக்கு குறைவாக தான் இருக்கும். அதனால் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் பலர் இதனை வாங்குகிறார்கள். இதில் எனக்கு விற்பனைக்கு வரும் உடைகளில் சிலவற்றை நான் போட்டு போட்டோஷூட் செய்வேன். எனக்கு பத்தாததை அப்படியே படம் பிடித்து பதிவு செய்வேன். பெரும்பாலும் எல்லா உடைகளும் உடனே விற்பனையாயிடும். அவ்வாறு போகாத உடைகளை ஆஃபர்… சேல் என்று என்னால் முடிந்த வரை விற்க பார்ப்பேன். அப்படியும் போகலைன்னா சும்மாவே யாருக்காவது கொடுத்திடுவேன்.
ஒரு சிலர் விலை பட்டியல் கூட பிரித்திருக்க மாட்டாங்க. அதேபோல் பிராண்டட் உடைகள் மற்றும் ஒரே உடை பல சைஸ்களில் இங்கு இருக்காது. இருப்பது ஒரு உடை. அது யாருக்கு பிடிக்குதோ வாங்கிக் கொள்ளலாம். ஒரு வேளை அவர்களுக்கு அந்த உடை பத்தவில்லை என்றால் நான் எப்படிக் கொடுத்தேனோ அதே போல் நல்ல கண்டிஷனில் கொடுத்தால் எடுத்துக் கொள்வேன்’’ என்றவர் சில உடைகளை நேரில் கடைக்கு சென்று வாங்கி அதையும் விற்பனை செய்து வருகிறார்.
‘‘த்ரிஃப்டில் இன்னொரு வகை ஹிட்டன் ஜெம்ஸ். டெக்ஸ்டைல் வார்த்தையில் சர்ப்பிளஸ் உடைகள்னு சொல்வாங்க. அதாவது இந்த உடைகளில் கண்ணுக்கு தெரியாத சின்ன பிரச்னை இருக்கும். துணியின் பிராண்ட் பெயர் கட்டாகி இருக்கும். சிலவற்றில் மெல்லிய இழை விட்டு இருந்தாலும் தரமானதாக இருக்கும். அந்த உடைகளை தேடிப்பிடித்து வாங்கி விற்பனை செய்கிறேன்.
இதற்காக நான் திருப்பூர், தில்லி, மும்பை, பாங்காக், சென்னையில் தி.நகர், ஸ்பென்சர் பிளாசா… இன்னும் பல இடங்களில் உடைகளை வாங்குகிறேன். இவை எல்லாமே நானே செலக்ட் செய்வதால், துணியின் தரம் முதல் டிசைன் என அனைத்தும் பார்த்து பார்த்து வாங்குவேன். என்னைப் பொறுத்தவரை டிரஸ் நல்லா இருக்கா அவ்வளவுதான். பிராண்ட் எல்லாம் நான் பெரிசா பார்க்க மாட்டேன். சாதாரண உடைகூட சில சமயம் பிராண்டட் உடைகளை விட நல்ல தரமா இருக்கும் என்பது என்னுடைய பாலிசி’’ என்று கூறும் நட்சத்திராவிற்கு நம் பாரம்பரியம் மாறாமல் உடைகள் அணிய விருப்பமாம்.
‘‘என்னதான் நாம் தலைமுறை மாறினாலும் நம்முடைய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் நம் உடலில் கலந்திருக்கு. அது இன்னும் மாறவே இல்லை. பெரிய கடைகளில் குட்டையான உடைகள் இருந்தாலும், பலர் அதை தேர்வு செய்வதில்லை. அதனாலேயே நான் மாடர்ன் உடைகளை தேர்வு செய்யும் போது மற்றவர்கள் முகம் சுளிக்காத உடைகளை தேர்வு செய்கிறேன்.
நான் ஃபேஷன் டிசைனிங் படிச்சிருந்தாலும், துணியை தைத்து, அதை தயார் செய்து கொடுக்க விருப்பமில்லை. அதை செய்ய நிறைய பேர் இருக்காங்க. இது போன்ற விஷயம் சென்னைக்கு புதுசு. தில்லி, மும்பையில் எல்லாம் த்ரிஃப்ட் கலாச்சாரம் ஃபேமஸ். இங்க இப்பதான் கொஞ்சம் ெகாஞ்சமா பிக்கப்பாகுது. ஒரு சிலர் மத்தவங்க போட்ட உடையை எப்படி போடுவதுன்னு யோசிப்பாங்க. அவங்கள நான் டார்கெட் செய்யல. பிடிச்சிருக்கிறவங்க வாங்கலாம். இப்போ ஆன்லைன் மூலமாதான் விற்பனை செய்கிறேன். என்னுடைய ஸ்டுடியோவிலேயே சின்னதா ஒரு ஸ்டோர் அமைச்சு உடைகளை டிஸ்பிளே செய்யும் எண்ணம் உள்ளது’’ என்றார் நட்சத்திரா.
Average Rating