அவசர வைத்தியம்!!! (மருத்துவம்)
தேள் கொட்டிய விரலை உப்புக் கரைசல் நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் வலி குறையும். முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சை காய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வேப்பம் பூவில் ரசம், பச்சடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
வெயில் சூட்டினால் வயிற்று வலி வரும். இதற்கு கசகசாவை மிக்சியில் அரைத்து கொதிக்க வைத்து, பாலோடு சேர்த்து, துளி சர்க்கரை போட்டு சாப்பிட, வயிற்று வலி பறந்துவிடும். ரோஜா இதழ்களுடன் பனை வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் சூடு குறையும். வாய் மணக்கும்.
இரவில் அரை டம்ளர் மோரில் சிறிது வெந்தயம் ஊற வைத்து, அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு குறையும். கடைந்தெடுத்த மோரில் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து, சிறிது வெங்காயச் சாறு, பெருங்காயம் சேர்த்துக் குடிக்க உடல் சோர்வடையாது, அதிகமாக வியர்த்தாலும் களைப்பு தெரியாது. மாவிலை வயிற்றுப் போக்கையும், மாம்பூ வெள்ளை வெட்டை நோயையும் நீக்கும்.
மாம்பழம், மாம்பழச்சாறு உடலுக்கு ஊட்டச்சத்தையும் வன்மையையும் தரக்கூடியது. பட்டுப் புடவையைத் துவைத்த பிறகு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து தண்ணீரில் கடைசியாக ஒரு முறை அலசி எடுக்கவும். புடவை புதிது போல பளபளப்பாகும். புடவையில் ஒரு நறுமணமும் வரும். வைட்டமின் ஏக்குத் தனியாக ஒரு மரியாதை உண்டு. வைட்டமின் ஏ உள்ள பப்பாளி, கேரட், முருங்கைக்கீரை, அகத்திக்கீரை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால், என்றும் மாறாத இளமைப் பொலிவு உண்டாகும்.
வெப்பத்தால் வரும் வயிற்றுவலிக்கு ஒரு டம்ளர் மோரில் சிறிது உப்பு, சமையல் சோடா அரை கரண்டி கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும். உணவில் முள்ளங்கி அதிகம் சேர்த்துக் கொள்ள, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் வராது. வேர்க் கடலையை வெல்லத்துடன் சாப்பிட வேண்டும். உணவுப் பொருட்களால் ஏற்படும் தீங்கை இன்னொரு பொருளைச் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.
மண்பாத்திரத்தில் காய்ச்சிய நீரை உணவுக்குப் பின் சாப்பிட்டால் புளியேப்பம், காய்ச்சல் நீங்கும். காலை எழுந்தவுடன் முதலில் கண்ணாடியைப் பார்ப்பது நல்லது. தன் பிம்பத்தையே பார்ப்பது மகிழ்ச்சியானது. மாரடைப்பைத் தடுக்க, கொழுப்புச் சத்து மிக்க பொருட்களை சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். பாமாயில், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். மது, புகைப் பழக்கத்தைக் கைவிடவேண்டும். உணவில் உப்பின் அளவு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் என்ற அளவில் இருக்கவேண்டும்.
காதில் சேரும் அழுக்கை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காதுகளில் உள்ள சிறு மயிர்க்கால்களால் அழுக்கு வெளியேற்றப்படும். காது அழுக்கை எடுக்கிறேன் என்று சும்மா காதைக் குடையக் கூடாது.
மூக்கின் வழியாக வெளிப் பொருட்கள் நுழைந்தால் அவற்றை வெளியேற்றக்கூடிய அனிச்சை செயல்தான் தும்மல். மற்றபடி ராசியான தும்மல், ராசி இல்லாத தும்மல் என்று எதுவுமில்லை.
கடலை மாவு, செம்பருத்தி, வெள்ளரிக்காய், ஆரஞ்சுத்தோல் முக அழகிற்கு ஆரோக்கி யமானவை. செயற்கைப் பொருட்களை விட இயற்கையாகக் கிடைப்பவை சிறந்தது. தீராத இருமல் இருந்தால், மிளகைப் பொடி செய்து வெல்லத்துடன் கலந்து, சிறிது நேரம் தொண்டையில் வைத்திருந்து அந்தச் சாறை விழுங்கினால் சட்டென்று இருமல் நிற்கும்.
2 ஸ்பூன் கடலை எண்ணெயுடன் அரை மூடி அளவு எழுமிச்சைச் சாறு, அரை ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை வாரம் ஒருமுறை உடல் முழுவதும் தேய்த்து குளிப்பதால் தோல் சுருக்கம் வராமல் பாதுகாக்கும். கடலை எண்ணெயை உணவின் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்துகிறோம். பாதாம் எண்ணெயை விட மிகுந்த சத்துக்கள் உடையது. உணவுடன் சேர்த்துக் கொண்டால் நல்ல கொழுப்பு கிடைக்கும். உஷ்ணத்தை தருவதுடன் தோலுக்கு பளபளப்பை கொடுக்கும். கடலை எண்ணெயில் வைட்டமின் இ சத்து அதிகம் உள்ளது.
தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சீரகம், மிளகுப்பொடி கால் ஸ்பூன் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு வராது. எள்ளில் இருந்து கிடைக்கக் கூடியது நல்லெண்ணெய். இதை தலைக்கு தேய்த்து குளிப்பதால் பொடுகு இல்லாமல் போகும். கொழுப்பு சத்து நிறைந்தது. உள் உறுப்புகளுக்கு பலம் கொடுக்கக் கூடியது. வெறும் வயிற்றில் தினமும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிடுவதால் உடல் எடை கூடும்.
நல்லெண்ணெயில் வாய் கொப்புளிப்ப தால் பற்கள் ஆரோக்கியம் பெறும். கன்னம் பலம் அடையும். முக வசீகரம் ஏற்படும். நல்லெண்ணெய் உணவுக்கு பயன்படுவதோடு, சனிக்கிழமைதோறும் உடலுக்கு தேய்த்து குளிப்பதால் தோல் ஆரோக்கியம் பெறும். தோல் நோய்கள் இல்லாமல் போகும்.
தேங்காய் எண்ணெயுடன், கறிவேப்பிலையை நீர்விடாமல் பொடித்து சேர்க்கவும். தைலப்பதத்தில் காய்ச்சி தலைக்கு தடவுவதால் முடி கருப்பாகிறது. பொடுகு இல்லாமல் போகிறது. இளநரை தடுக்கப்படுகிறது. தலைக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. தலைமுடி நன்றாக வளரும்.
Average Rating