மாறுவானா என் மகன்? (மகளிர் பக்கம்)
அன்புடன் தோழிக்கு,நான் மத்திய அரசில் பணியாற்றுகிறேன். இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கிறேன். இந்த வேலை என் கணவர் இறந்ததால், வாரிசு அடிப்படையில் கிடைத்த வேலை. ஆம். நான் ஒரு விதவை. இளம் வயதிலேயே விபத்து ஒன்றில் கணவரை இழந்தேன். அப்போது எனது குழந்தைகள் ஆரம்ப பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தனர். மூத்தவள் மகள், 2வது மகன். இருவரையும் நன்றாக படிக்க வைத்தேன்.
அப்பா இல்லாத கஷ்டம் தெரியாமல் இருவரையும் பாசமாகவும், பண்புடனும் வளர்த்தேன். நாங்கள் கட்டுப்பாடான, கடவுள் நம்பிக்கை உள்ள குடும்பம். கடவுள்தான் எங்களை வழிநடத்துகிறார். அப்படிதான் நானும் நம்பிக் கொண்டு இருந்தேன். பிள்ளைகள் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். அவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. கை நிறைய சம்பளம். மகள் வேலைக்கு சேர்ந்த 2 ஆண்டுகளில் திருமணம் செய்து வைத்தேன். மாப்பிள்ளை பார்ப்பது முதல் அவளுக்கு தேவையான புடவை வரை எல்லாவற்றையும் நான்தான் தேர்வு செய்தேன். என் சொல்லை எப்போதும் மீற மாட்டாள்.
அவள் இப்போது வெளிநாட்டில் கணவருடன் இருக்கிறாள். மருமகனும் பெரிய நிறுவனத்தில், பெரிய பொறுப்பில் இருக்கிறார். அங்கு சொந்தமாக வீடு, வாகனம் என்று வசதியாக இருக்கிறார்கள். கூடவே 2 பேரப்பிள்ளைகளும் இருக்கின்றனர். இப்போது மகளுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. மகளுக்கும், மகனுக்கும் 3 ஆண்டுகள் தான் வயது வித்தியாசம். இப்போது மகனுக்கு 27 வயதாகிறது. அவனுக்கு திருமணம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதுதான் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுத காரணம்.
முதலிலேயே சொன்னது போல் என் மகன் மிகவும் ஒழுக்கமானவன். அப்படிதான் நான் வளர்த்தேன். என் பேச்சையோ, அவன் அக்கா பேச்சையோ மீறி எப்போதும் நடக்க மாட்டான். தாத்தா, பாட்டி, மாமா என பெரியவர்களிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வான்.
அதிர்ந்து கூட பேச மாட்டான். அப்படி நல்லவனாக இருந்தவன் கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்து இருக்கிறான். அந்த பெண் எங்கள் சாதியில்லை. அதனால் அவன், வீட்டில் சொல்லத் தயங்கி இருக்கிறான். எங்களுக்கு மத நம்பிக்கை இருந்தாலும், சாதி வெறியெல்லாம் கிடையாது. அதை வெளிப்படுத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை. அதனால் நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோமோ என்று தயங்கி உள்ளான்.
அதற்குள் அவர்கள் இருவரும் கல்லூரி படிப்பை முடித்து வேலையில் சேர்ந்து விட்டனர். அந்தப் பெண் வீட்டில் திருமணத்திற்கு அவசரம் காட்டி இருக்கிறார்கள். இவன் தயங்கி இருக்கிறான். அதனால் அந்தப் பெண் தன் காதலை வீட்டில் சொல்ல பயந்து இருக்கிறாள். விவரம் தெரியாததால் பெண் வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை தேடுவதில் இருந்துள்ளனர். அந்தப் பெண் எத்தனை முறை எடுத்துச் சொல்லியும் என் பையன் என்னிடம் பேச பயந்துள்ளான். அதனால் அந்தப் பெண் வீட்டில் பார்த்த வரனையே கல்யாணம் செய்து கொண்டாள். இப்போது அவளும் வெளிநாட்டில்தான் இருக்கிறாள்.
அந்தப் பெண்ணுக்கு திருமணமான பிறகு எனது மகன் மனதொடிந்து போய் விட்டான். எங்களிடம் சரியாக பேசுவதில்லை. எங்களுக்கு அப்போது காரணம் புரியவில்லை. வேலைப்பளு காரணமாக அப்படி சோர்ந்து இருக்கிறான் என்று நினைத்தோம். அவனது நண்பர்கள் சொல்லித்தான் எங்களுக்கு விஷயம் தெரியும். அவன் எங்களிடம் விஷயத்தை சொல்லியிருந்தால், கட்டாயம் அந்தப் பெண்ணையே கல்யாணம் செய்து வைத்து இருப்போம். இளம் வயதில் விதவையான நான், பிள்ளைகளின் சந்தோஷம்தான் முக்கியம் என்று அவர்களுக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அதை உணராத என் மகன், அந்த பெண் நினைவாக இருந்தான். ஒரு கட்டத்தில் குடிக்கவும் ஆரம்பித்தான்.
குடித்து விட்டு வீட்டுக்கு வராமல் வெளியிலேயே தங்க தொடங்கினான். இரவு வேலை என்று நம்பினோம். பல நாட்கள் இப்படி வீட்டுக்கு வராமல் இருந்ததை அவனது நண்பர்களிடம் விசாரித்த பிறகுதான் அந்த உண்மையும் தெரிந்தது. அதனால் அவனை தேடிப்பிடித்து அழைத்து வந்து அறிவுரை சொன்னோம். தான் குடிப்பது வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்து விட்டதாலோ என்னவோ குடித்து விட்டு வீட்டுக்கே வர ஆரம்பித்து விட்டான். ஏதாவது கேட்டால், ஒன்றும் சொல்லாமல் தனது அறைக்கு சென்று கதவை சாத்திக் கொள்வான். காலையில் எழுந்து எதுவும் சொல்லாமல் கிளம்பி விடுவான்.
நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. வீட்டுக்கே வாங்கி வந்து குடிக்க ஆரம்பித்தான். காலையில் வேலைக்கு புறப்படுவான். நான் வேலைக்கு புறப்பட்டதும் வீட்டுக்கு வந்து விடுவான். நாள் முழுக்க குடிப்பான். அதனால் அடிக்கடி வேலைக்கு லீவு போட ஆரம்பித்து, நாளாக நாளாக வேலைக்கு போவதே குறைந்துப்போனது. திறமையானவன் என்பதால் அவர்கள் வேலையில் இருந்து எடுக்காமல் வைத்திருந்தார்கள். ஆனால் என் பிள்ளை குடிக்கு அடிமையாகி விட்டானே என்பதுதான் எனது கவலையாக இருந்தது. குடியை மறக்க மருந்து தரும் இடங்களுக்கெல்லாம் அவனை கெஞ்சி, அழைத்துச் செல்வேன். போய் வந்த சில நாட்கள் சரியாக இருப்பது போல் இருக்கும்.
ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் குடிக்க ஆரம்பித்து விடுவான். ஆனாலும் என் முயற்சியை கைவிடாமல் இருந்தேன். ஏற்கனவே ஒல்லியான உடல்வாகு. ஆனாலும் அழகாக இருப்பான். குடி நோயால் மெலிந்து விட்டான். அவனைப் பார்த்து நான் அழாத நாட்களில்லை. அப்போதுதான் உறவினர் ஒருவர் ‘குடிப்பழக்கத்தை மறக்கடிக்கும் மையத்தில்’ சேர்த்து விட ஆலோசனை சொன்னார்.
அவர் சொன்னபடி எங்கள் நகரத்துக்கு வெளியில் இருக்கும் அந்த மையத்தில் சேர்த்து விட்டேன். அங்கு என்னை ஒரு மாதத்துக்கு வரக்கூடாது என்றார்கள். கூடவே ஆயிரக்கணக்கில் பணம் கட்டச் சொன்னார்கள். அதன்படி கட்டணமும் செலுத்தினேன். ஆனால் பிள்ளையை மட்டும் வாரத்திற்கு ஒருமுறையாவது பார்க்க அனுமதி கொடுங்கள் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பிள்ளை குணமானால் போதும் என்று வந்து விட்டேன்.
இடையில் அந்த மையத்துக்கு அடிக்கடி போன் செய்து மகனின் நிலை குறித்து விசாரிப்பேன். அவர்கள் ‘குணமாகி வருகிறார்’ என்று சொல்லி உடனே போனை வைத்து விடுவார்கள். பிறகு ஒருநாள் அவர்களே போன் செய்து வந்து மகனை அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னார்கள். அங்கு போனபோது மகன் நோயாளி போல் இருந்தான். ‘ஒரு மாதமாக உங்கள் மகன் குடிக்கவில்லை. இனியும் குடிக்கமாட்டான்’ என்று சொன்னார்கள். மகன் அமைதியாக இருந்தான். சரி குணமாகி விட்டானே என்ற மகிழ்ச்சியில் வீட்டுக்கு அழைத்து வந்தேன்.
அவனை குளிக்க வைக்கும் போது உடல் முழுவதும் காயங்கள்…. நெருப்பில் சுட்ட வடுக்கள் இருந்தன. அதைப் பார்த்து அழுது விட்டேன். என் மகனை ஒருமுறை கூட நான் அடித்ததில்லை. காதலும், குடிப்பழக்கமும் என் மகனை சித்ரவதைக்கு ஆளாக்கி விட்டதே என்று வேதனைப்பட்டேன். கொஞ்ச நாள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் வேலைக்கு போக ஆரம்பித்தான். குடிப்பழக்கமும் இல்லாமல் இருந்தது. உடலையும் கொஞ்சம் கொஞ்மாக தேற்றினேன். மகன் மாறிவிட்டான்… தேறி விட்டான் என்று நம்பினேன்.
எல்லாம் சில மாதங்கள்தான். மீண்டும் குடிக்க ஆரம்பித்து விட்டான். தடுத்தால் என்னிடம் சண்டை போடுகிறான். மீண்டும் வேலைக்கு சரியாக போவதில்லை. உடல் நலமும் பாதித்து வருகிறது. குடிப்பதால் மருந்து மாத்திரைகள் வேலை செய்யவில்லை என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். வெறும் 27 வயதில் தோற்றம், பொலிவு இழந்து வயதானவன் போல் இருக்கிறான். அவனுக்கு திருமணம் செய்து வைத்து வாரிசுகளுடன் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழ்வதை பார்க்க ஆசைப்பட்டேன்.
இப்போது எல்லாம் தலைகீழாகி வருகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை தோழி. அடிக்காமல், உதைக்காமல் என் மகனை குணப்படுத்த முடியுமா? குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க முடியுமா? அவனை திருத்தி குடும்ப வாழ்க்கைக்கு கொண்டு வர ஏதாவது வழி இருக்கிறதா? என் மகனை பழையபடி அறிவாளியாக, அழகானவனாக, கம்பீரமானவனாக பார்க்க ஆசைப்படுகிறேன். அவனுக்கு திருமணம் செய்து வைத்து, பேரப் பிள்ளைகளை கொண்டாட விரும்புகிறேன். முடியுமா தோழி? அதற்கு நீங்கள் எனக்கு சரியான வழியை காட்டுவீர்களா? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் தோழி? என்னை உங்கள் தாயாக நினைத்து எனக்கு உதவி செய்வீர்களா தோழி?
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
நட்புடன் தோழிக்கு,
வணக்கம்.உங்களின் அவலநிலையை எண்ணி மிகவும் வருந்துகிறேன். குடும்பம், பேரக் குழந்தைகள் என உற்சாகமாக வாழ வேண்டிய வயதில் உங்கள் மகன் வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது வேதனையான விஷயம். அதே நேரத்தில் உங்கள் கணவர் இறந்த பிறகு யாருடைய ஆதரவுமின்றி தனி ஆளாக நின்று, பல்வேறு சவால்களுக்கு இடையே பிள்ளைகளை சிறப்பாக வளர்த்து ஆளாக்கி உள்ளீர்கள். அதற்காக முதலில் உங்களுக்கு பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும்.
ஒற்றை தாயாக நீங்கள் தைரியமாகவும், விடா முயற்சியுடனும் இருந்திருப்பதும் போற்றுதலுக்குரியது. பிள்ளைகள் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வருவதற்கும் நீங்கள்தான் முழு முதற்காரணம். இடையில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை தற்காலிகமானதுதான். ஆனால் யாருடைய ஆதரவுமின்றி, இத்தனை உயரத்துக்கு தங்களை வளர்த்த தாயின் உழைப்பை, அன்பை உங்கள் மகன் உணராதது துரதிர்ஷ்டவசமானது. அதுதான் இன்றைய பிரச்னைகளுக்கும் காரணம். தன் காதல் விஷயத்தை உங்களிடம் சொல்லியிருந்தால் கட்டாயம் ஏற்றுக் கொண்டு இருப்பீர்கள் என்பது புரிகிறது. ஆனால் உங்கள் மகனுக்கு புரியாமல் போனதுதான ஆச்சர்யம்.
ஒருவேளை சிறு வயதில் இருந்தே அவர்கள் தங்கள் விருப்பங்களை உங்களிடம் சொல்லாமலே அவர்கள் வளர்ந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதனால் சொல்லத் தயங்கி இருக்கலாம். அவர்கள் ஏதும் சொல்லாததால், அவர்களுக்கு என்று தனி விருப்பம் இருந்ததா என்பது உங்களுக்கு தெரியாமலே போயிருக்கலாம்.அந்த தயக்கம் கூட, தனது காதலை, அந்த பெண்ணைதான் திருமணம் செய்து கொள்வேன் என்பதை உங்களிடம் சொல்ல முடியாமல் போயிருக்கலாம். வெளிப்படையாக பேசியிருந்தால் இன்று இப்படி கடிதம் எழுதும் சூழலே எழுந்திருக்காது. சிறுவயதில் இருந்து மனம் விட்டு பேசும் பழக்கம் குடும்பத்தில் இருந்திருந்தால் விருப்பங்களை சொல்ல தைரியம் இருந்திருக்கும். எனினும் பழையதை எண்ணி வருத்தப்படுவதில் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. வாழ்க்கை இன்னும் முடிந்து விடவில்லை. நீங்கள் சொல்வது போல், அவருடைய மது போதையில் இருந்து மீண்டு சரியான வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுத்து கொள்வதுதான் எல்லாவற்றுக்கும் சரியான தீர்வாக இருக்கும்.
காதலியின் பிரிவுக்கு பிறகு, அவர் மனச்சோர்வுக்குச் சென்றுள்ளது தெரிகிறது. அந்த நேரத்தில் அதிலிருந்து தற்காலிகமாக விடுபட மாற்று வழியை தேடி உள்ளார். அவரது நண்பர்கள் வழிகாட்டினார்களோ, அவராகவே திரைப்படங்களை, நாடகங்களை பார்த்து தேர்வு செய்தாரோ தெரியவில்லை. மது அருந்துவதுதான் மனச்சோர்வில் இருந்தும் நம்மை மீட்கும், காதலியை மறக்க உதவும் என்று நினைத்திருக்கலாம். அது மோசமான முடிவு என்று அவர் உணரவில்லை.
அந்த தற்காலிக தீர்வு இன்று அவரையே தீர்க்கப்பார்க்கிறது. தாயான நீங்கள் விழித்துக் கொண்டதால் அவரை சரியான திசைக்கு திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளீர்கள். உங்கள் விருப்பப்படி அவரை மது பழக்கத்தில் இருந்து விடுவிக்க சரியான வழியை தேர்வு செய்ய வேண்டும். நிறைய போலியான மறுவாழ்வு மையங்கள் ‘போதை நோயாளிகளுக்கு உதவுகிறோம்’ என்ற போர்வையில் நோயாளிகளை அடித்து உதைப்பது வருத்தத்திற்குரியது.
மனநல மருத்துவத்தின் முக்கிய அடிப்படையே அனுசரணையான பேச்சு, ஆதரவான நடவடிக்கைகள், மாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஆகியவைதான். அந்த நம்பிக்கையை நோயாளிகளிடமிருந்தும், அவர்களது குடும்பத்தினரிடமிருந்தும் தொடங்க வேண்டும். மற்றபடி மனநல மருத்துவர்களோ, மனநல ஆலோசகர்களோ வெறும் உதவியாளர்கள்தான். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை வழிக் காட்டுபவர்கள். மாற்றம் உங்களிடமிருந்து தான் ஆரம்பிக்கவேண்டும். என் ஆலோசனை என்னவென்றால்… உங்கள் முயற்சிகளை கைவிடாதீர்கள். மகனிடம் உட்கார்ந்து பேசுங்கள். அவர் பேசாவிட்டாலும் நீங்கள் அன்பாக பேசுவதை, அனுசரணையாக நடந்து கொள்வதை குறைக்காதீர்கள். நிச்சயம் புரிந்து கொள்வார்.
பிறகு தேர்ந்த மனநல மருத்துவரை அணுகுங்கள். அவரின் ஆலோசனைகளும், மருந்துகளும் உங்கள் மகனை போதையில் இருந்து மீட்க உதவும். மனநல மருத்துவர் மூலமாகவோ, நீங்களாகவோ மதுபோதையில் சிக்கியவர்களை மீட்க உதவும் சுய உதவிக்குழுக்களை அணுகலாம். நிறைய நல்ல குழுகள் இருக்கின்றன. நிறைய பேரை போதையில் இருந்து மீட்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன். உங்கள் மகன் விஷயத்தில் நீங்கள் கட்டாயம் கடை பிடிக்க வேண்டிய பொறுமை. உங்கள் மகனை பழைய நிலைமைக்கு மாற்ற காத்திருக்க வேண்டி இருக்கும்.
அந்த நிலைமை கட்டாயம் வரும். ஒரு போதும் நம்பிக்கை இழக்க வேண்டாம். இடையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். சரியாகும். மனநல மருத்துவரின் ஆலோசனைகளையும், மருந்துகளையும் சரியாக கடைபிடிப்பதின் மூலம் எல்லாம் சரியாகும். கூடவே ஆதரவும், அரவணைப்பும் தொடர்வது மிக அவசியம். அப்படி செய்வதின் மூலம் உங்கள் எண்ணங்கள் கட்டாயம் ஈடேறும். வாழ்த்துகள்.
Average Rating