சிறுகதை – மதிப்பு!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 39 Second

உள்ளகரம் சிறிய டவுன். அங்கு சிறிய ஆஞ்சநேயர் கோயில். அதையடுத்து ஒரு சிறிய பார்க். அதில் ஒரு பெஞ்ச். அதில் படுத்துக் கொண்ட முத்து அசந்து தூங்கி விட்டார். பேரன் சூர்யா வந்து “வீட்டுக்குப் போகலாம் தாத்தா” என்று எழுப்பிய பிறகு விழித்துக் கொண்டு கையில் பையை எடுத்துக் கொண்டு பேரனையும் கையைப்பிடித்து அழைத்துக் கொண்டு கிளம்பினார் முத்து. பள்ளி விடுமுறை நாட்களில் மாலை வேளைகளில் தாத்தாவும் பேரனும் வாக்கிங் போவது, ஆஞ்சநேயர் கோயிலை பன்னண்டு முறை சுற்றுவது, பேரனைப் பார்க்கில் விளையாட விட்டு விட்டு இவர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, சில சமயம் கையில் எடுத்து வந்த மாத, வார இதழ்களைப் படிப்பது, ஐயனார் விலாஸ் கடையில் வாங்கிக் கொண்டு வந்திருந்த கடலை மிட்டாயைத் தானும் தின்று தன் பேரன் சூர்யாவுக்கும் கொடுத்து, தண்ணீர் குடித்து சூர்யாவுக்கும் கொடுத்து சிரித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் வீட்டுக்கு உற்சாகமாகப் போவார்கள்.

இன்று படிக்க கையில் பத்திரிகை ஏதுமில்லை. எனவே தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தவருக்கு தூக்கம் வந்து அவரை அறியாமலேயே தூங்கி விட்டிருந்தார். இன்று கையில் கடலை மிட்டாய் கூட இல்லை. சூர்யா கூட “ஏன் தாத்தா கடலை மிட்டாய் வாங்கவில்லை? உன்கிட்ட காசு இல்லன்னா எங்கம்மா, அப்பா, யார்கிட்டயாச்சும் கேட்டு வாங்கி இருக்கலாமில்ல?” என்றான். அவர் அதைக் கண்டு கொள்ளாமல் பேச்சை மாற்றுவதற்காக “தாத்தா தூங்கிட்டதால நீ என்ன வௌயாடினன்னு தெரியல செல்லம்.

நீங்க என்ன விளையாடினீங்க?” என்றார்.அதற்குள் வீடு வந்து விடவே சூர்யா குதித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடி விட்டான். முத்துவுக்கு மனதுக்குள் ஆதங்கம். மாசக் கடைசி கையில் பேப்பர் வாங்க, கடலை மிட்டாய் வாங்க காசில்லை. குழந்தை கூட நம் நிலைமை தெரிந்து அம்மா, அப்பா யார்கிட்டயாச்சும் காசு கேட்டு வாங்கி யிருக்கலாமே என்கிறது. ‘பென்ஷன்’ இல்லாததால நம்ம நிலம இவ்வளவு கேவலமாப் போச்சு என நினைத்து வருந்தினார்.

கம்பெனி வேலை என்பதால ‘ரிடையர்மென்ட்’ ஆகும் போது மொத்தமாக வந்த பணத்தில் பெண் அனு கல்யாணத்துக்கு வாங்கிய கடனடைத்தது போக மீதி இருந்த கொஞ்ச பணத்தை ‘பேங்க்’கில் போட்டு அதில் வந்த வட்டியில் குடும்பம் நடத்தி வந்தார். பெண், பிள்ளை யாரையும் எதுவும் கேட்காமலே இருந்து வந்தார். மனைவி மங்களம் ‘சிக்’ஆகி இரண்டு வருடம் படுத்த படுக்கையில் வீழ்ந்திருந்ததால் கைப்பணம் கரைந்து விட்டது. அத்தோடு அவளின் ஆயுளும் முடிந்து விட்டது.

மகன் தாமுவோடு வந்து அவன் வீட்டில் தங்கிக் கொண்டார். மனைவியின் பத்து சவரன் நகைகளை மருமகள் மல்லிகாவுக்கு ஐந்தும், மகள் அனுவுக்கு ஐந்துமாகப் பிரித்துக் கொடுத்து விட்டார். மகன் தங்க இடம் கொடுத்து சாப்பாடு போடுவது, மகள் இன்ஜினியராக வேலை பார்ப்பதால் இவரின் கைச் செலவுக்கு ரூபாய் இரண்டாயிரம் கொடுப்பதாகவும் பேச்சு.

ஒரு முறை அனு முத்துவின் ‘அக்கவுண்டில்’ பணம் போட ரொம்ப ‘டிலே’ ஆனது. அப்போது இவர் எதுவும் கேட்கவில்லை. அவளும் இது பற்றி ஏதும் சொல்லவில்லை. அந்த மாதம் அவளுக்கு வைத்திய செலவு ஏற்பட்டதால் அனுப்ப ‘டிலே’ ஆனதாக பிறகு சொன்னாள். அப்போதும் இப்படித்தான் நொறுக்குத் தீனி எதுவும் வாங்கவில்லை.

சூர்யா வீட்டிற்கு வந்து ‘தாத்தா இன்னக்கி எதுவுமே வாங்கித்தரல: நீ எனக்கும், தாத்தாக்கும் சேர்த்து பிஸ்கட் கொடு என்று அம்மாவிடம் கேட்டு இவருக்கும் நாலு பிஸ்கட் கொண்டு வந்து கொடுத்தான்.மகனும் மருமகளும் இருக்கும் ‘பிஸி’யில் முத்துவுக்கு சூர்யாதான் நண்பன், ‘மீடியேட்டர்’ எல்லாம். தொடர்ந்து நாலு நாள் இம்மாதிரி நடந்ததும், மருமகள் உடனே மகன் தாமுவிடம் ‘அனு இந்த மாசம் பணம் அனுப்பவில்லை.

அதனால ஏன் அனுப்பலன்னு கேளுங்க’ என்றதும், “அதெல்லாம் வேண்டாம் மல்லி; எல்லாம் அவளே அனுப்புவாள். நீ ஒரு இரண்டாயிரம் கொடு. அவர் நம்மிடம் கேட்க மாட்டார்” என்றதும், “அதென்ன பழக்கம்? நான் மாசா மாசம் இரண்டாயிரம் ரூபாய் தருகிறேன்னு ஒத்துக் கிட்டுத்தானே கொடுக்கறா? இப்ப எப்படி கொடுக்காம போகலாம். இந்த முறை நாம கொடுத்து பழக்கம் பண்ணினா அவளுக்கு அதுவே ஒரு சலுகை ஆயிடும். அதனால ஒரு வாரம் பாத்துட்டு அப்பவும் அவள் அனுப்பலன்னா நாம தரலாம். நான் ஒண்ணும் ஒங்கப்பாவ பட்டினி போட மாட்டேன். சூர்யாக்கு நொறுக்குத் தீனி கொடுக்கும் போதெல்லாம் தினமும் அவருக்கும்தான் கொடுக்கிறேன்” என்று படபடவென பொரிந்து விட்டுப் போய் விட்டாள்.

யதேச்சையாக இதைக் காதில் வாங்கிய முத்துவுக்கு மனது வலித்தது. “சே, என்ன பிழைப்பு இது? பென்சன் இருந்தாதான் ஒரு மனிதனுக்கு மதிப்பு. அடுத்தவர்களைச் சாராது நாம் சுதந்திரமாக வாழ பணம் மிகவும் முக்கியம். தான் குறைந்த சம்பளத்திலேயே இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தி ‘டூ வீலர்’ கூட இல்லாமல் சைக்கிளில் ஆபீஸ் சென்று வந்ததும், மனைவி மாடு வைத்து வளர்த்து பால் வியாபாரம் செய்து, இரு பிள்ளைகளையும் இன்ஜினியராக்கியதும், அதனால் பணம் சேர்த்து வைத்துக் கொள்ள முடியாமலும், மனை வாங்கி வீடு கட்ட முடியாமல் போனதும், இன்று கையில் காசில்லாமல் சிறுபசி ஏற்படும் மாலை நேரத்தில் வாயில் போட்டு மெல்ல, பத்திரிகை வாங்கிப் படித்து நாலு விஷயம் தெரிந்து கொள்ள, எது ஒண்ணுக்கும் காசுதானே அடிப்படையாக உள்ளது.

வேலை தேடும் சமயம் ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று நினைத்து கிடைத்த வேலையில் சேர்கிறோம், அரசாங்க வேலை எல்லோருக்குமா கிடைக்கிறது? அது கிடைத்தவர்கள் பாக்யசாலிகள். இறுதி மூச்சுள்ள வரை ‘பென்சன்’ கிடைக்கும். அவர்களுக்கு மரியாதையும் கிடைக்கும். இப்படி யாசகம் வாங்கும் நிலை அவர்களுக்கு இருக்காது. முதுமையே ஒரு சாபம் தான். அதுவும் கையில் காசில்லாத, பென்ஷன் இல்லாத முதுமை இன்னும் பெரிய சாபம்” என தனக்குள்ளேயே பேசிக் கொண்டு இரவு சாப்பாட்டை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது மல்லிகா வந்து ‘மாலை நேரத் தபாலில் அவருக்கு வந்திருந்த கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள்.அவரின் நண்பர் ஆனைமங்கலம் அய்யாக்கண்ணு எழுதியிருந்த கடிதத்தைக் கையில் வாங்கிப் பிரித்துப் படித்த முத்துவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.அய்யாக் கண்ணுவும், முத்துவும், நாகை மாவட்டம் கீவளூர் தாலுகாவைச் சேர்ந்த ஆனை மங்கலம் என்ற கிராமத்தில் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள். சிறு வயதில் ஒன்றாய் அடுத்துள்ள கோகூரில் பள்ளி சென்று படித்தவர்கள். முத்து ஆறாவது முதல் நாகையிலுள்ள தாய் மாமன் வீட்டில் தங்கிப் படித்தார். அய்யாக் கண்ணு ஐந்தாம் வகுப்புடன் நிறுத்தி விட்டு அவர் அப்பாவுடன் வயல் வேலைக்குப் பழகி விட்டார்.

ஆனைமங்கலம் அக்ரஹாரத்தில் முதல் வீடு அய்யாக்கண்ணு வீடு. அடுத்த வீடு முத்து வீடு. முத்து தன் தந்தை காலமானதும், வீட்டை அய்யாக்கண்ணுவிடம் விற்று விட்டு தாய் மரகதம் அம்மாவை அழைத்துக் கொண்டு பட்டணம் வந்து விட்டார். தன் குலதெய்வம் குட்டி ஐயனார் கோயிலுக்கு எப்போதாவது போவார். அப்போது அய்யாக்கண்ணுவின் வீட்டில் தங்கிக்
கொள்வார். முத்துவின் வீட்டின் பின்புறம் உள்ள காளி அம்மன் கோயில் அருகே மூன்று மனைகள் முத்துவின் தந்தை பேரில் இருந்தது.

அதில் முத்து வீட்டில் வேலை செய்த காளியப்பன், முருகையன், வேலைக்காரி அஞ்சுகம் மூவரையும் முத்துவின் தந்தை குமரன் இலவசமாகத் தங்க வைத்திருந்தார். அதில் காளியப்பன் மட்டும் ஏதோ பணம் கொடுத்து அதைத் தன்மேல் கிரயம் செய்து விலைக்கு வாங்கிக் கொண்டு விட்டான். மீதி இருந்த இரு மனைகளும் அவர்கள் தங்களிடம் விலைக்கு வாங்குமளவுக்கு வசதியில்லை என்றும், கூரைமேல் காய்க்கும் சுரை, பூசணி போன்ற காய்களைக் கொடுத்து விட்டுப்போய் விடுவார்கள். முத்துவின் தந்தை குமரனும் “சரி, சரி ஏழை, பாழை அவர்கள் என்ன செய்வார்கள்? இருக்கும் வரை இருந்து விட்டுப் போகட்டும், பின்நாட்களில் அவர்களின் வாரிசு யாரேனும் விலைக்கு வாங்குமளவு வசதிக்கு வராமலா போய் விடுவார்கள்? அப்போது என் வாரிசு விற்று விட்டு போகட்டும்” எனச் சொன்னது இன்னமும் முத்துக்கு நினைவிருக்கிறது.

இப்போது அய்யாக்கண்ணுவும் அதையே தான் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இன்னொரு புதிய காரணமும் அவர் எழுதி இருந்தார். அதாவது ‘கல்கி’ அவர்கள் எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ என்ற சரித்திர நாவலில் ராஜ ராஜ சோழன் பற்றி வருகிற இளமைப் பருவ நிகழ்வுகளை விவரிக்கின்றபோது நாகப்பட்டிணம், புத்தவிஹாரம் இவையெல்லாம் பற்றி எழுதியிருக்கின்ற ஏதோ ஒரு பகுதியில் நமது ஊராகிய ‘ஆனைமங்கலமும்’ இடம் பெற்றிருக்கிறது. இது சரித்திரத்தில் இடம் பெற்ற ஊர்.

இதை நினைக்கையில் எனக்குப் பெருமையாக உள்ளது. என்று எழுதி மேலும் நீ முப்பது வருடம் முந்தி பார்த்த ஊர் இப்போதில்லை. தார்ரோடு, மினிபஸ், மின்சாரம், பள்ளிக்கூடம், ரைஸ்மில், பால் டெப்போ என்று பலவிதங்களில் நம் ஊர் முன்னேறி விட்டதால் மனை, நிலம் இவற்றின் விலையும் உயர்ந்து விட்டது. எனவே அஞ்சுவின் பேரன் துபாய் போய் சம்பாதித்து அவன் இருக்கும் மனை, அடுத்த மனை இரண்டையும் இருபது லட்சத்துக்கு வாங்க ரெடியாக இருப்பதால் ‘நீ உடனே கிளம்பிவா’ என்று எழுதியிருந்தார்.

முத்துவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.இதை மகன், மருமகள், மகள் எல்லோருக்கும் சொன்னார்.இந்த நல்ல செய்தியைக் கேட்டதும் அவர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது. மகன் தாமு ‘அப்பா, நீங்கள் தனியாகப் போக வேண்டாம். நாங்களும் வருகிறோம். அனு குடும்பமும் வரட்டும். எல்லோருமாகப் போய் அந்த ஊர் குட்டி ஐயனாரையும், பிற கோயில்களையும் தரிசித்து, அபிஷேக, ஆராதனைகள் செய்து கொண்டு, ரெஜிஸ்ட்ரேஷனையும் முடித்துக் கொண்டு பணத்துடன் வருவோம்” என்றான்.

உடனே அனுவும் “ஆமாப்பா, எப்பவோ ஒரு முறை அய்யாக்கண்ணு வீட்டு விசேஷத்துக்குப் போய்விட்டு அவசர அவசரமாகத் திரும்பி வந்தோம். இப்போது நான்கு நாள் லீவில் போய் ஆனைமங்கலம் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள சில தலங்களுக்கும் போய்விட்டு வருவோம். ‘ஒரு ஜாலி ட்ரிப்’ அடிப்போம். செலவெல்லாம் அப்பாவோடது. இல்லையா தாமு?” என்றதும், முத்து உடனே “அதுக் கென்னம்மா செலவழிச்சா போச்சு” என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சூர்யா, “ஐ, தாத்தாக்கு நெறைய காசுவரப் போகுது. எனக்கு நெறைய கடலை மிட்டாய் வாங்கித் தருவாரு; இனிமே அனு ஆன்ட்டி காசு தரவேண்டாம். எங்க தாத்தாவே பணக்காரராயிட்டாரு” என்றதும், “முதலில் எல்லோரும் ‘ஹார்லிக்ஸ்’ குடிங்க அப்புறம் பேசிக்கலாம்” என மல்லிகா எல்லோருக்கும் ‘ஹார்லிக்ஸ்’ கொடுத்ததும், “மாமாக்கு மொதல்ல நல்லதா நாலு சட்டை நான் வாங்கித்தாரேன்.

ஊருக்குப் போவதற்கு முன்பு” என அனுவின் கணவன் ரவி சொன்னதும். “இந்தாங்க மாமா, நல்ல ஹேண்ட்பாக், இதுல ஒங்க ட்ரெஸ்ஸ வச்சுக்குங்க” என்று மல்லிகா கொடுத்ததும், “என் வாட்ச்சை நீங்க கட்டிக்குங்க அப்பா” என்று தாமு சொன்னதும், முத்துவுக்கு இந்த உலகத்தில் மனிதர்களை விட பணத்துக்கே மதிப்பு என்பது புரிந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புத்தாண்டு ஸ்பெஷல் கேக்ஸ் !! (மகளிர் பக்கம்)
Next post கலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…!! (அவ்வப்போது கிளாமர்)