மனசுக்கு பிடித்தவர்களுக்காகவே வந்துவிட்டது கஸ்டமைஸ்டு பரிசுகள்! (மகளிர் பக்கம்)
திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து இப்போது கோயம்புத்தூரில் வசித்து வரும் சபரி கிரிஜா, ரேசின், க்ளே ஆர்ட், நேம்-போர்டுகள், சுவர் கடிகாரம், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஓவியங்கள் என பலதரப்பட்ட கலைப்பொருட்களைப் பரிசுப் பொருட்களாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்.‘‘சின்ன வயசுல இருந்தே எனக்குக் கலை மீது ஆர்வமிருந்தது. முறையான பயிற்சி பெற வேண்டும் என விருப்பமிருந்தாலும், பொதுவாக கலையை பொழுதுபோக்காக மட்டுமே அணுகுவதால், பணம் கொடுத்து எந்த வகுப்புகளிலும் சேரவில்லை. நானே என்னுடைய பள்ளி நேரம் தவிர, மற்ற நேரமெல்லாம் ஓவியம் வரைவது அல்லது வீட்டிலிருக்கும் ஏதாவது ஒரு தேவையில்லாத பொருளை வைத்து கைவினை பொருட்கள் செய்வது என என்னுடைய பள்ளி நாட்களைக் கழித்தேன்.
சென்னையில் முதுநிலை வணிக நிர்வாகம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கல்லூரியில், முக்கிய விழாக்களைக் கொண்டாட, ஸ்டால் வைப்பார்கள். அதில் மாணவர்கள் தாங்கள் தயாரித்த கேக், கலைப் பொருட்கள், உடைகள் போன்றவற்றை காட்சிப்படுத்தி விற்பனை செய்வார்கள். நானும் என்னுடைய ஓவியங்கள், கலைப் பொருட்கள், நகைகளை காட்சிப்படுத்தினேன். இவை அனைத்தும் நானே என் கைகளால் வடிவமைத்தேன். அதில் சில கலைப்பொருட்கள் விற்பனையான போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா இருந்தது.
நாம் தயாரித்த ஒரு பொருளை, மற்றொருவர் இனி அவருடைய பொருளாக அதைப் பத்திரமாகப் பாதுகாப்பார் என நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமாக உணர்ந்தேன். கல்லூரி முடிந்ததும், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வேலை பளுவினால் கலைப் பொருட்கள் செய்ய நேரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் கிடைக்கும் நேரத்தில் க்ளே ஆர்ட் செய்ய பழகிக்கொண்டேன்.
திருமணத்திற்கு பின் கணவருக்கு அமெரிக்காவில் வேலை என்பதால், வேலையை ராஜினாமா செய்தேன். அங்கு வீட்டில் இருக்கும் நேரத்தில் மீண்டும் ஓவியங்கள், கைவினைப் பொருட்களை செய்வதில் முழு மூச்சாக இறங்கினேன். அமெரிக்காவில் நாங்கள் தங்கியிருந்த வீட்டை என் ஓவியங்களாலும், கலைப் பொருட்களாலும் நிரப்பினேன். ஒரு நாள், என் கணவரின் நண்பர்கள் வீட்டிற்கு விருந்திற்காக வந்திருந்தார்கள். அவர்களும் இந்தியர்கள். வீட்டில் இருந்த ஓவியங்கள் மற்றும் கலைப் பொருட்களை பார்த்து ரொம்பவே பாராட்டினார்கள்.
தங்களுடைய குழந்தைகளுக்கும் இதைக் கற்றுக்கொடுக்கும்படி கேட்டனர். முதலில் தயங்கினாலும், சரி பொழுதுபோக்காக இருக்கட்டுமே எனச் சம்மதித்தேன். பின் அதுவே மிகவும் பிடித்துப்போக, நானே நேரடியாக அமெரிக்க பள்ளிக்குச் சென்று, என்னுடைய ஓவியங்களை அவர்களிடம் காட்டினேன். அவர்களுக்கு என்னுடைய ஓவியங்கள் மிகவும் பிடித்துப் போனது. அங்கேயே ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிய ஆரம்பித்தேன்’’ என்றவர் அமெரிக்க வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்பத்துடன் இந்தியாவிற்கு திரும்பிவிட்டார்.
‘‘இங்கு வந்த பிறகும் என்னுடைய கலைப்பொருட்கள் செய்வதை நான் நிறுத்தவில்லை. க்ளே, ரேசின் ஆர்ட், மினியேச்சர் மேக்னட்ஸ், ஓவியம் எனப் பல விதமான கலைப்பொருட்களை செய்ய ஆரம்பித்தேன். கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் சபா ஆர்ட் ஹவுஸ் (Saba Art House) எனும் பக்கத்தை ஆரம்பித்து, அதில் வீட்டு அலங்காரங்கள், பரிசுப் பொருட்கள், கீ செயின், மொபைல் போன் பாப் சாக்கெட் எனப் பல விதமான பொருட்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து ெகாடுத்து வருகிறேன்.
பல கலைஞர்கள் தனித்துவமாக மினியேச்சர் ஆர்ட் அல்லது ரேசின் ஆர்ட், ஓவியம், க்ளே என ஒரே கலையில் பிரத்யேகமாக ஈடுபடுவார்கள். ஆனால் நான் எல்லா கலையையும் கற்று அதில் பரிசுப் பொருட்களைச் செய்து வருகிறேன். ரெசின் ஆர்ட் மற்றும் க்ளேவை இணைத்து நான் உருவாக்கும் பரிசுப் பொருட்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் ரொம்பவே ஃபேமஸ். பீச் போன்ற அமைப்பை ரேசின் ஆர்ட்டில் பின்னணியாக அமைத்து, அதில் படகு அல்லது உருவங்களை க்ளேவில் செய்வேன். அதே போல, சிலர் மரப்பலகையில் உருவங்களை ஓவியங்களாக வரைவார்கள். நான் அதே மரப் பலகையில் உருவங்களை க்ளேவில் உருவாக்குவேன். இது 3டி போன்ற அமைப்பைக் கொடுக்கும்.
இப்போது புது வருடத்திற்காக பிரத்யேகமான கஸ்டமைஸ்டு காலண்டர்கள் செய்துள்ளேன். ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் முக்கிய நாட்களான திருமண நாள், பிறந்த நாள், காதலர்கள் முதலில் சந்தித்து கொண்ட தினம் போன்ற நாட்களைப் பிரத்யேகமாகக் குறிப்பிட்டு தயாரித்துள்ளேன். அடுத்ததாக பரிசுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் என்னுடைய கலைப் பொருட்களை விற்பனைக்காக வைக்க இருக்கிறேன். வாடிக்கையாளர்கள் நேரடியாக அந்த கடைகளிலிருந்தும் வாங்கிக் கொள்ளலாம். அதன் விவரங்களை என் சமூக வலைத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் வீட்டு அலங்காரப் பொருட்களை விற்பனை செய்வதுடன் வீட்டை அலங்கரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். நான் பொதுவாகவே என் கலைப் பொருட்கள் மூலம் என் வீட்டை நிரப்பி அதை அழகாக அலங்கரிப்பேன். அதை சமூக வலைத்தளத்திலும் பதிவிடுவேன். அதனால் சிலர் தங்கள் பால்கனி அல்லது ஹாலை மட்டும் அலங்கரித்துக் கொடுக்க கேட்டுள்ளனர். சிறிய தொகையில் ஆரம்பித்து முழு வீட்டையும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் பட்ஜெட்டில் டிசைன் செய்து கொடுக்க என் கணவருடன் சேர்ந்து செயல்படுத்த திட்டமிட்டிருக்கேன். என்னுடைய பக்கபலமே அவர்தான். இதை தவிர, ஏற்கனவே கஃபே, பார்கள் போன்ற இடங்களுக்கு என்னுடைய ரேசின் கலைப்பொருள், ரேசின் ஆர்ட் பொருத்திய மேசைகள் போன்ற அலங்காரங்களையும் செய்து கொடுத்து வருகிறேன்’’ என்ற சபரி கிரிஜா ரேசின் ஆர்ட் குறித்து பயிற்சியும் அளித்து வருகிறார்.
தற்போது பண்டிகை காலம் என்பதால், அதை சார்ந்து வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுப் பொருட்களை உருவாக்கி வருகிறார். மேலும் திருமண அழைப்பிதழ்களையும் மணமக்களின் விருப்பப்படி பிரத்யேகமாக தன் கைப்பட அமைத்து அதை டிஜிட்டலைஸ் செய்து தருகிறார். விரைவில், சொந்தமாக ஒரு கலைக்கூடம் உருவாக்கி அதில் தன் மொத்த கலைப் பொருட்களையும் வைத்து, பல மாணவர்களுக்கு தன் கலையை சொல்லித் தரவேண்டும் என்பது தான் சபரின் கனவாம்.
Average Rating